Published:Updated:

டைகர் மாமா - சிறுகதை

பட்டுகோட்டை பிரபாகர், ஓவியங்கள்:நடனம்

பிரீமியம் ஸ்டோரி

நான் கனடாவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். மனைவி லலிதா, இங்கே பரதநாட்டியம் சொல்லித் தருகிறேன் என்று பல பெண்களுக்குத் தொல்லை தருகிறாள்.

டைகர் மாமா - சிறுகதை

எங்களுக்குக் குழந்தை இல்லை. அக்காவும் அவள் கணவரும் ஒரு விபத்தில் காலமானபோது, அவர்களின் ஒரே மகள் சுகிர்தாவுக்கு எட்டு வயது. அன்றிலிருந்து அவளுக்கு நாங்கள்தான் எல்லாம். திருமணமாகி லாஸ் ஏஞ்சலீஸில் வாழும் சுகிக்கு உறவில் நாங்கள் மாமா, அத்தை என்றாலும், அப்பா, அம்மா என்றுதான் எங்களை அழைக்கிறாள்.

டைகர் மாமா, எனக்கு மாமா முறை. எப்படி மாமா முறை என்றால், திருவாரூரில் என் தம்பியுடன் இருக்கிற என் அம்மா நீண்ட விளக்கம் சொல்லி மூச்சு வாங்குவாள். அப்படியும் புரியாது. ஏதோ ஒரு வழியில் மாமா.

டைகர் மாமாவை விடுதலைப் புலிகளோடு தொடர்புபடுத்தி வீரமாக யோசித்துவிட வேண்டாம். பெயர்க் காரணம் வேறு.

டைகர் மாமா இப்போது கனடாவில். ஆனால், பிறந்து வளர்ந்தது எல்லாம் காட்டுமன்னார்கோவிலில். அங்கே மளிகைக் கடை சாயலில் ஒரு கடை ஆரம்பித்தார் மாமா. பன், ரஸ்க், தேன் மிட்டாய், பளிங்கு, பம்பரம் என்று சகலமும் கிடைக்கும். படித்த பேப்பரையே பத்து முறை படிக்கிற அளவுக்குக் கடையில் நேரம் பொங்கி வழிந்ததால், புலி மார்க் சீயக்காய்த் தூள் ஏஜென்சி எடுத்தார். சைக்கிள் மிதித்து, சுற்றுப்பட்டு கிராமங்களின் பெட்டிக் கடைகளுக்கு சப்ளை செய்தார்.

கடையும் ஏஜென்சியும் இரண்டே வருடங்களில் இழுத்து மூடப்பட்டது. கடனுக்குப் பொருள் வாங்கிய பாதிப் பேர் பணம் கொடுக்காததால், வர்த்தக முயற்சியைப் பெட்டியில் போட்டுப் பூட்டிவிட்டு, அரசாங்க வேலைக்கு போன டைகர் மாமா, இன்றும் அந்த நாணயமற்ற மனிதர்களைக் கெட்ட வார்த்தையால் திட்டுவார். தமிழில் திட்டிய வார்த்தையை கனடாவில் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்.

அவர்கள் மட்டும் நஷ்டப்படுத்தாமல் இருந்திருந்தால், இவர்தான் இன்றைக்கு இந்தியாவில் அம்பானி இடத்தில் இருந்திருப்பாராம்! அந்தத் தொழில் அவருக்கு லாபம் தரவில்லை என்றாலும், பெயரைக் கொடுத்துவிட்டது. எல்லோருக்கும் அவர் 'டைகர் மாமா’ ஆகிவிட்டார். அவர் பெயர் சம்பூரணம் என்பது அவருக்கே மறந்துபோய், 'இப்படிக்கு, டைகர் மாமா’ என்றுதான் தனது கடிதத்தை முடிக்கிறார்.

வீடு வாங்க வேண்டுமா? டைகர் மாமாவைக் கேளு! உத்தியோகம் வாங்க வேண்டுமா? டைகர் மாமாவைப் பிடி! கல்யாணம், கருமாதி என்று அனைத்துக்கும் அனைவருக்கும் டைகர் மாமாதான் ஆலோசகர்.

திருவாரூரில் என் தம்பி தன் தென்னந்தோப்பில் எந்த உரம் போட வேண்டும் என்று டைகர் மாமாவிடம் ஸ்கைப்பில் பேசித்தான் முடிவெடுக்கிறான். யாருக்கு ஜாதகம் எடுத்தாலும், டைகர் மாமாவுக்கு மெயிலில் ஒரு காப்பி அனுப்பிவிட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்!

மாமாவுக்குச் சகலமும் தெரியும். பரதமும் ஆடுவார்; பாரிலும் ஆடுவார். கிருஷ்ண ஜயந்திக்கு, உள்ளங்கைக்குள் விரல்களை மடக்கி, மாவில் தோய்த்து, தரையில் குத்திக் குத்திக் குட்டிக் குட்டிப் பாதங்கள் பதிப்பார். சீடை உருட்டுவார். கோயிலுக்குப் போனால் கும்பிட்டுவிட்டு வருவதோடு நிறுத்திக்கொள்ளாமல், குருக்களை அழைத்து, சுவாமி அலங்காரத்தில் தப்பு இருக்கிறது என்று வியாக்கியானம் செய்து, கதறடித்துவிடுவார். சுனாமி ஏன் ஏற்படுகிறது என்று முப்பது நிமிடம் ஒரு கெட்-டு-கெதரில் லெக்சர் கொடுக்க... பாதிப் பேர் தூங்கிவிட்டார்கள்.

கனடாவுக்கு இந்தியாவில் இருந்து இஷ்டமித்திர பந்துக்களும் ஜந்துக்களும் வந்தால், நயாகரா அழைத்துச் சென்று போட்டோ எடுத்துக் கொடுப்பார். ஒரே ஒரு நிபந்தனை... விமான நிலையச் சோதனையை ஏமாற்றி, எப்படியாவது இலந்தை வடை கொண்டுவர வேண்டும். எப்படி செக்கிங்கை ஏமாற்றுவது என்று அதற்கும் ஒரு செய்முறை விளக்கம் வைத்திருக்கிறார்.

டைகர் மாமா ரிடையரான பிறகு, கனடாவில் தன் பையன் வீட்டுக்கு வந்து செட்டிலாகி பத்து ஆண்டுகளாகிவிட்டன. நிழல் மாதிரி டைகர் மாமியும்! டைகர் மாமி ஆமாம் சாமி அல்ல. மாமாவின் மனச்சாட்சி மாதிரி. அருகில் யார் இருக்கிறார்கள், இல்லை என்று பார்க்காமல், மாமாவின் அசட்டுத்தனங்களை பகிரங்கமாகப் போட்டு உடைத்துவிடுவாள்.

''அன்னிக்குப் பாருங்கோ... கம்ப்யூட்டருக்கு என்ன பாஸ்வேர்டு குடுத்தோம்னு மறந்துட்டு, மண்டையப் பிச்சுக்கறார். என்ன பெரிய பர்சனல்! இவருக்கு எதுக்கு பாஸ்வேர்டுங்கறேன்? அறுபத்து நாலு வயசுல ஃபேஸ்புக்ல சாட்டிங் கேக்கறது மாமாவுக்கு. அன்னிக்கு ஒரு பொம்மனாட்டிக்கு அவ ப்ரொஃபைல் போட்டோவுக்கு 'யுவர் ஹேர்ஸ்டைல் இஸ் ப்யூட்டிஃபுல்’ன்னு இவர் கமென்ட் போட்டார். அதுக்கு, 'அது என் போட்டோ இல்ல. புதுசா நடிக்க வந்திருக்கிற நஸ்ரியா போட்டோ’னு அவ பதில் கமென்ட் போட்டா! தேவையா இவருக்கு? அன்னிக்கு இப்படித்தான்...'' என்று தொடரும் மாமியை...

''ஏண்டி... நாய் பாரு கத்திண்டே இருக்கு. அதுக்கு பெடிகிரி வெச்சியோ?'' என்று அப்புறப்படுத்த பிரயத்தனப்படுவார் மாமா.

இந்த சுகி இருக்காளே... அதான் எங்க செல்லமான வளர்ப்புப் புத்திரி... இவள் திருமணமாகிப் போன ஒரே மாதத்தில் அவள் மாமனார் ஹார்ட் அட்டாக்கில் போய்ச் சேர்ந்தார். பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்த மாப்பிள்ளைக்கு வேலை போய், சுமார் நிறுவனத்தில் சுமார் வேலையில் சேர்ந்தார். சுகி ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இரண்டாயிரம் டாலர் செலவு மற்றும் காவல் துறைக்குக் கட்டிய அபராதம் வேறு!

திருமணமாகி ஆறு வருடமாகியும் இன்னும் வயிற்றில் புழு, பூச்சி இல்லை என்று சம்பந்தியம்மா சொல்லிக் காட்டிக்கொண்டிருக்கிறார். இவள் நிஜமாகவே ஒரு பூச்சியைப் பெற்றெடுத்தால் வாரிசாக ஏற்பாரா என்று நான் ஒருமுறை கேட்டேவிட்டேன்... மனசுக்குள்!

என் பத்தினி லலிதாதான் டைகர் மாமாவை நினைவுபடுத்தினாள். சுகியின் ஜாதகத்தை டைகர் மாமாவிடம் காட்டி கன்சல்ட் செய்தால் என்ன என்றாள்.

ஒரு சுபயோக சுப தினத்தில், டைகர் மாமாவை கன்சல்ட்டுக்காக என்று சொல்லி அழைப்பது நாகரிகமில்லை என்பதால், 'பார்த்து நாளாச்சே! ஒரு டின்னருக்கு வரப்படாதா?’ என்று வருந்தி அழைத்து வரவழைத்தோம்.

டைகர் மாமா இரண்டு லார்ஜ் விஸ்கி அருந்தி, முந்திரி கொரித்தபடி, சிரியா விவகாரத்தில் ஒபாமா என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று லெக்சர் கொடுத்து என்னைப் படுத்தி எடுக்க... இடுப்பில் கிள்ளிய என் திருமதி கொட்டாவி மென்றாள்.

''ஏண்டி லலித், பாரு... நேக்கு இதுவரைக்கும் தோணவே இல்லையே..! டைகர் மாமாவைக் கேட்டுப் பாக்கலாமோல்லியோ?'' என்று துவங்கினேன்.

''என்னடா ப்ராப்ளம்?''

''இல்ல மாமா... நம்ம சுகி இருக்காளோல்லியோ...''

எல்லாம் சொல்லி முடித்ததும், எதிர்பார்த்தது போலவே, ''அவ ஜாதகம் இருக்கா?'' என்று கேட்டார்.

நான் லேப்டாப்பில் ஃபைல் திறந்து நீட்ட... வாங்கிப் பார்த்து எல்லா விரல்களின் கோடுகளையும் தொட்டுக் கணக்குகள் போட்டார். நியூஸ் பேப்பர் ஓரத்தில் எண்களைக் கூட்டிக் கழித்தார்.

''மாப்பிள்ளை ஜாதகம் ஓகே-டா..! இவளுக்குத்தான் கொஞ்சம் பஞ்ச்சர்! மேரேஜுக்கு முன்னாலயே என்னாண்ட வந்திருந்தா, இந்த எடம் வேணாம்னிருப்பேன்.''

''தப்புதான் மாமா. அப்போ நீங்க திருவாரூர்ல ஒரு நிலம் விக்கப்போயி, ஆறு மாசம் அங்கயே இருந்துட்டேள்.''

''ஓ! நன்னா ஞாபகம் இருக்கு. சரி, வுடு! எல்லாத்துக்கும்தான் பரிகாரம் இருக்கோன்னோ... அதைப் பண்ணிப்பிட்டா வம்சம் தழைச்சு சுபிட்சமா இருப்பாடா! நீ வொர்ரி பண்ணிக்காதே! என்னாண்ட விட்ரு! நான் பாத்துக்கறேன்.''

''இப்பதான் மாமா நேக்கு நிம்மதியா இருக்கு. என்ன மாமா செய்யணும்?''

''நீ ராமேஸ்வரம் போயிருக்கியோ?''

''இல்லையே மாமா!''

''ஒண்ணு செய். நீ, லலிதா, சுகி, மாப்பிள்ளை நாலு பேருமா ராமேஸ்வரம் போங்கோ...''

''போயி..?''

''சுகி அங்க பரிகாரம் பண்ணணும். அவளுக்கு பித்ரு தோஷம் இருக்குடா. ராமேஸ்வரம் போய், அங்கே சீனிவாச சாஸ்திரின்னு இருக்கார். நெட்லயே அவரைப் பிடிச்சிடலாம். பித்ருதோஷ பரிகார ஹோமம் பண்ணணும்னு சொன்னா, அவர் பட்ஜெட் குடுப்பார். எல்லாத்தையும் அவரே பார்த்துப்பார். செஞ்சுட்டு, ராமநாத சுவாமியை திவ்யமா சேவிச்சுட்டு வாங்கோ! ஒரு மாசத்துல குட் நியூஸ் சொல்வேள்!''

''ரொம்ப தேங்ஸ் மாமா!'' என்றோம் கோரஸாக.

விசாரித்ததில், டைகர் மாமா சொன்ன சாஸ்திரிகள் ஆறு வருஷம் முன்பு அகாலமாக காலமாகிவிட்டதாகத் தகவலும், அப்பு சாஸ்திரிகள் என்பவரைப் பற்றிய சிபாரிசும் கிடைத்தது. டைகர் மாமாவை ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு, அப்பு சாஸ்திரிகளையே தோஷ நிவர்த்தி ஹோமத்துக்கு ஃபிக்ஸ் செய்தோம்.

கண் தானம், ரத்த தானம் நீங்கலாக சகலவிதமான தானங்கள் சேர்த்து, இந்தியன் ரூபாயில் முப்பத்திரண்டாயிரத்துக்கு பட்ஜெட் கொடுத்தார். வங்கிக் கணக்கு இல்லை என்றும், ரொக்கம் மட்டுமே ஏற்கப்படும் என்று சொல்ல, திருவாரூரில் இருந்து என் தம்பி மகன் ராமேஸ்வரம் நேரில் சென்று கட்டி, ரசீதை கிளிக்கி இ-மெயிலில் அனுப்பிவைத்தான்.

கனடா டு சென்னை, சென்னை டு ராமேஸ்வரம் மற்றும் நாடு திரும்ப விமான, ரயில் டிக்கெட்டுகளும், ஆங்காங்கே தங்க, பயணிக்க, ஹோட்டல், டிராவல்ஸ் என்று சகலமும் நெட் மூலம் புக் செய்து முடித்தால்... அந்தத் தேதிகளில் மாப்பிள்ளைக்கு லீவு கிடைக்காது என்று பூதம் கிளம்பியது.

குடும்ப சமேதராக மாப்பிள்ளையின் ஹெச்.ஆரை அவரின் வீட்டில் சென்று சந்தித்து, பிச்சைக் கெஞ்சல் கெஞ்சியதில், 'ஒரு வாரமா?! நோ! நான்கு நாட்கள் மட்டுமே’ என்று இறங்கி வந்தார் அவர்.

திருவாரூர், மதுரை என்று இடைச்செருகலாக வைத்திருந்த குறும்பயணத் திட்டங்களை ரத்துசெய்து நான்கே நாட்களுக்கு ராமேஸ்வரப் பயணத்தை மாற்றி அமைத்ததில் கேன்சலேஷன் செலவுகள் கொஞ்சம். அது பெரிதாகத் தெரியவில்லை. நோக்கம் முக்கியமாயிற்றே!

டொரன்ட்டோ ஏர்போர்ட்டில், ஏர்கனடாவின் ஜம்போவில் உட்கார்ந்ததும், போன் செய்தபோது, டைகர் மாமா 'ஆல் தி பெஸ்ட்’ சொல்லி, இலந்தை வடை நினைவூட்டினார்.

இந்தப் பயணத்தில் மாப்பிள்ளைக்கு அத்தனை சம்மதம் இல்லை. 'பிரச்னையை மருத்துவ ரீதியாகச் சந்திப்பதை விடுத்து, இதென்ன கடல்  தாண்டி, மலை தாண்டி தோஷப் பரிகாரப் பயணம்...’ என்று சுகி வழியாக முனகல்! பலதும் சொல்லி, சுகி வழியாகவே சமாதானப்படுத்தியிருந்தாலும், பயணம் முழுக்க டூ விட்ட நண்பன் போலத்தான் அவர் முகத்தை வைத்திருந்தார்.

சென்னையில் இறங்கியபோது பேய் மழை! விமானம் தரை இறங்கியும், நாங்கள் இறங்க முக்கால் மணி நேரம் கழித்துதான் அனுமதி.

அறை புக் செய்திருந்த ஹோட்டலில் முதல் சொதப்பல்! நான் கேன்சல் செய்த தேதியை கன்ஃபர்ம் செய்து, கன்ஃபர்ம் செய்த தேதியை கேன்சல் செய்திருந்த அழகான அறிவுகெட்ட ரிசப்ஷனிஸ்ட் செமத்தியாகத் திட்டு வாங்கினாலும், புன்சிரித்தபடி, ''ஸாரி சார்! இப்போது எந்த அறையும் இல்லை. வாட் டு டூ?'' என்று கடுப்பேற்றினாள்.

22 மணி நேர பயண அலுப்போடு அலைந்து திரிந்ததில், ஒரு லொக்கடா லாட்ஜில் ஒரே ஒரு டபுள் பெட்ரூம் கிடைக்க... இரண்டு எக்ஸ்ட்ரா பெட் வாங்கிக்கொண்டு அட்ஜஸ்ட் செய்து படுத்தோம்.

இடி, மின்னலுடன் மழை தொடர... மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது அரசு. மரம் விழுந்து எந்தெந்த ரயில்கள் ரத்து என்கிற பட்டியலில் எங்கள் ரயிலும் இருக்க... வேறு வழியில்லாமல் இன்னோவா புக் செய்தோம்.

வண்டியோ பழசு. டிரைவரோ சிடுசிடு. சூழலோ மழை! எரிச்சலான பயணத்தில், மழையால் மேலும் மேலும் தாமதமாகி, நினைத்த நேரத்தில் இருந்து ஆறு மணி நேரம் தாமதமாக, நள்ளிரவு அல்லது அதிகாலை இரண்டு மணிக்கு ராமேஸ்வரம்.

தூக்கக் கலக்கமாக ஹோட்டலில் சாவி எடுத்துக் கொடுத்தார்கள்.

காலை ஆறு மணிக்கு கோயிலில் தோஷப் பரிகார ஹோமம்! நாங்கள் வந்துவிட்டோம் என்று சொல்ல, அப்பு சாஸ்திரிகளுக்கு போன் செய்தால்... ஸ்விட்ச்டு ஆஃப்! அவரின் உதவி ஆசாமி எண் இருந்தது. அவரை அழைத்தால்...

''என்ன சார் இப்ப வந்து டிஸ்டர்ப் செய்றீங்க?'' என்று கத்தினார்.

''கனடாலேர்ந்து வந்துட்டோம்னு சொல்லத்தான் கூப்பிட்டேன். காலைல ஹோமத்துக்கு எல்லா ஏற்பாடும் ரெடியா?''

''எல்லாம் ரெடி சார்! சுத்தபத்தமா குளிச்சிட்டு ஆறு மணிக்கு வந்துடுங்க...''

நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து ஒவ்வொருவராகக் கொட்டாவியுடன் குளித்துத் தயாராகி... மாப்பிள்ளைக்கு வேட்டி கட்டிவிட்டு, டிரைவரை எழுப்பி, கோயிலுக்கு வந்தோம்.

அப்பு சாஸ்திரிகள் சங்கராபரண சாஸ்திரிகள் மாதிரி இருந்தார். பிரகாசமாக வரவேற்றார். ஹோமத்துக்கு எல்லாம் தயாராக இருந்தன. நான்கு உதவியாளர்கள் கலசம் வைப்பது, நவதானியம் வைப்பது, ஓம குண்டம் அமைப்பது என்று சுறுசுறுப்பாக இயங்கினார்கள்.

''உக்காருங்கோ. கனடால என்ன பண்றேள்?''

சகஜமாகப் பேசினார். காபி குடித்தால் தப்பில்லை என்று எல்லோரையும் காபி குடிக்க வைத்தார்.

''சொல்லுங்கோ... யாருக்கு பித்ரு தோஷப் பரிகாரம் பண்ணணும். உங்களுக்கா?''

''இல்லை, நேக்கில்லை'' என்றேன்.

''உங்க மாப்பிள்ளைக்கா?''

''இல்லை. என் பொண்ணுக்கு. அவ ஜாதகத்துலதான் பித்ரு தோஷம் இருக்காம்.''

அப்பு சாஸ்திரிகள் முகத்தைச் சுருக்கிப் பார்த்தார்.

''வெளாடாதீங்கோ சார்!''

''என்ன விளையாட்டு இதிலே?''

''உங்க பித்ருக்களுக்கு நீங்க இருக்கறப்போ, உங்க டாட்டர் எப்படிச் செய்ய முடியும்? உங்களுக்கப்பறம் வேணா... அப்பக்கூட உங்க புள் ளையாண்டான்தான் சுவாமி செய்ய முடியும்!''

''இருங்கோ. இவ எங்க டாட்டர் மாதிரி. ஆக்சுவலா, என் சிஸ்டர் பொண்ணு. அப்ப ஓ.கே-தானே?''

''கல்யாணம் ஆயிடுத்தோன்னோ?''

''ஓ... இதோ, இவர்தான் இவளோட ஹஸ்பண்ட்!''

''பின்ன வெவரமில்லாம பேசறேளே! உங்காத்துப் பொண்ணு எப்ப கல்யாணமாகி அவா ஆத்து மருமகளாப் போய்ட்டாளோ, அப்பவே அவளோட கோத்திரம் மாறிடறதோண்ணோ! அப்பறம் அவ எப்படி அவளோட பித்ருக்களுக்கு தோஷப் பரிகாரம் பண்ண முடியும்?''

''எல்லா ரூல்ஸுக்கும் ஒரு விதிவிலக்கு வெச்சிருப்பேளே..! எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிப் பண்ணிடுங்கோ, சுவாமி!''

''அப்படில்லாம் பண்ணப்படாது. பண்ணவும் முடியாது. எந்த மடையன் சொன்னான் இப்படி ஒரு யோசனையை?''

''டைகர் மாமான்னு... ஒரு மாமா..!''

''நீங்க போன்ல பித்ரு தோஷத்துக்குப் பரிகாரம்னேள்! யாருக்குன்னு வெவரமா சொல்லிருந்தேள்னா போன்லயே டீட்டெய்ல்ஸ் சொல்லிருப்பேனே...''

''நேக்கு இதெல்லாம் பரிச்சயமில்லை. டைகர் மாமாதான்...''

''அடப் போங்க சார்... இவ்வளவு ஏற்பாடு பண்ணிட்டேனே! இவ்வளவு தூரம் நாலு பேரும் மெனக்கெட்டு ஃபிளைட்லாம் பிடிச்சு வந்திருக்கேளே...''

''ஏன் சார்... மாப்பிள்ளை செய்யமுடியுமா?''

''செய்யலாம். ஆனா, அவர் அவரோட பித்ருக்களுக்குத்தான் செய்ய முடியும். ஆத்துக்காரியோட பித்ருக்களுக்குச் செய்ய முடியாதே!''

''சரி... வந்தது வந்துட்டோம். அவரோட பித்ருக்களுக்கே பண்ணிடுங்கோளேன்.''

''இந்த ஹோமம்... தோஷம் இருந்தாதான் சுவாமி பண்ணணும்! காய்ச்சல் இல்லாதவாளுக்கு மருந்து கொடுப்பாளா யாராவது?''

''அப்ப, என்னதான் பண்றது?''

''பித்ருக்களுக்கு திதி, தர்ப்பணம்கூட இப்ப செய்ய முடியாது. அததுக்கு ஒரு நாள் இருக்கு. ஒண்ணு பண்ணுவமா? சும்மா உம்ம குடும்பத்தோட ஒட்டுமொத்த க்ஷேமத்துக்கு கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், நவக்ரஹ ஹோமம், சுதர்சன ஹோமம் இதெல்லாம் பண்ணிக் குடுத்துடறேன். என்ன சொல்றேள்?''

எங்களுக்கு வேறு வழி?

மாப்பிள்ளை என்னை முறைக்க, நான் லலிதாவை முறைத்து, ''ஏண்டி, டைகர் மாமாவுக்கு இதெல்லாம் நன்னா தெரியும்னு நீதானேடி சொன்னே?'' என்றேன்.

''எல்லாத்துக்கும் டைகர் மாமா, டைகர் மாமாம்பேளே... இதுவும் அவருக்குத் தெரியும்னு நினைச்சுண்டேன். தெரிஞ்ச மாதிரிதானே அவரும் சொன்னார்?''

''எதைத்தாண்டி அவரு தெரியாதுன்னு சொல்லியிருக்கார்?''

விமானத்தில் அமர்ந்ததும், நான் கால்குலேட்டரில் கணக்குப் போடுவதைப் பார்த்து, ''என்ன... தண்டச் செலவு கணக்கா? ஏழெட்டு லட்சம் தாண்டுமே! நீங்க பாத்துக்கோங்கோ, நேக்குச் சொல்லாதிங்கோ. வயிறு எரியும்!'' என்றாள் லலிதா.

கனடா திரும்பி, டைகர் மாமாவின் வீட்டுக்குப் போய் இதமாக ஆரம்பித்து, எல்லாம் சொல்ல... ஹைடெசிபலில் குதிக்கத் துவங்கினார் டைகர் மாமா.

''அவன் கெடக்கறாண்டா! பொம்மனாட்டிகள் தங்களோட பித்ருக்களுக்கு தோஷப் பரிகாரம் பண்ணப்படாதுன்னு சொல்றது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை இல்லியோ? கோத்திரம்தான் மாறிடுத்தே... எதுக்குடி அப்பன் சொத்துல பங்கு கேக்கறேன்னு கேக்க முடியுமா? சட்டம் எதுக்கு சொத்துரிமை குடுத்தது? வொய் திஸ் டிஸ்பேரிட்டி? இதென்ன ஜஸ்டிஸ்? இதப்பத்தி என் ப்ளாகுல எழுதறேன்.''

டைகர் மாமா - சிறுகதை

''மாமா... இதெல்லாம் ஆயிரம் பேசலாம். நடைமுறையில் இருக்கிற சம்பிரதாயம் உங்களுக்கு சரியா தெரியாதுன்னா, அதைச் சொல்லிருக்கலாமே?''

''யாரு... நேக்கா சம்பிரதாயம் தெரியாது? அந்த சாஸ்திரி நம்பர்... யாரவன், அப்புவா குப்புவா? அவனோட அட்ரஸ் கொடு. கேஸ் போடறேன். நானாச்சு அவனாச்சு..! நீ என்ன பண்றே... சேஷாசலம்னு நேக்கு நன்னா தெரிஞ்ச வக்கீல் இருக்கான். உடனே அவனைப் போய்ப் பார்க்கறே...''

''போதும் மாமா... இதுல இதுக்கும் மேல செலவு பண்ண என்னால முடியாது. வர்றோம்'' என்று கும்பிடு போட்டுவிட்டு நான் புறப்பட...

டைகர் மாமி எங்களை வாசலுக்கு வந்து வழியனுப்பும்போது, ''இப்பல்லாம் மாமாவுக்கு எதுக்கெடுத்தாலும் முணுக்குன்னா கோபம் வந்துடறது! அவர் ஜாதகத்தை ஒரு நல்ல ஜோசியராண்ட காட்டணும். யாராச்சும் நல்ல ஜோஸியரா தெரிஞ்சா சொல்லுங்களேன்'' என்றாள்.

''ஃபிளைட் பிடிச்சு ராமேஸ்வரம் போய் அப்பு சாஸ்திரிகள்ட்ட காட்டுங்கோ'' என்றாள் லலிதா கடுப்பாக, காரின் கதவை அறைந்து சார்த்தி.

நான் காரை ரிவர்ஸ் எடுத்தபோது, ஜன்னல் கண்ணாடி வழியாகப் பார்க்க... டைகர் மாமா போனில் யாரிடமோ கோர்ட் சீன் போல விரலை ஆட்டி ஆட்டிக் கத்திக்கொண்டிருந்தார். ஒருவேளை, நெட்டில் அப்பு சாஸ்திரிகளின் எண்ணைப் பிடித்திருக்கலாம்.

டைகர் மாமா - சிறுகதை

 வாடகைக்கு ஒரு முகம்

டைகர் மாமா - சிறுகதை

உரிய கட்டணம் செலுத்தினால் பஸ், ரயில் எல்லாவற்றிலும் விளம்பரங்கள் செய்யலாம். சில ஊர்களில் உரிய வாடகையைப் பெற்றுக்கொண்டு தங்கள் கார்களிலும் விளம்பரம் செய்ய அனுமதிக்கிறார்கள். ’இந்தப் பட்டியலில் எனது முகத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த 'ஊவே ட்ரோச்செல்' . இவருக்கு நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அதனால், நாய்களுக்காக ஒரு மியூசியம் நிறுவ நினைத்தார். ஆனால், அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார். தன் முகத்தின் மீது விளம்பரங்களைப் பச்சை குத்திக்கொள்ளத் தீர்மானித்தார். தனது முகத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு விலையை  அதாவது, நெற்றியில் விளம்பரம் செய்ய சுமார் 50,000 யூரோ; மூக்கின் மீது என்றால் 2000 யூரோ; ஒரு கன்னத்தில் மட்டும் என்றால் 20,000 யூரோ; மொத்தமாக முகம் முழுவதையும் வாடகைக்கு எடுத்தால் 100,000 யூரோ என்று நிர்ணயம் செய்திருக்கிறார். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு