Published:Updated:

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

சிறுகதை /எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியம்/எஸ்.இளையராஜா

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

சிறுகதை /எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியம்/எஸ்.இளையராஜா

Published:Updated:

தான் ஒரு தலைப்புச் செய்தியாகப் போகிறோம் என்று கோகிலவாணி ஒரு நாள்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்! ஆனால், அது நடந்தேறியது. அந்தச் செய்தி வெளியான நாள் செப்டம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை, 1998. அப்போது அவளுக்கு வயது இருபத்துமூன்று. 

கோகிலவாணியை இப்போது யாருக்கும் நினைவிருக்காது. ஒருவேளை நீங்கள் தினசரி பேப்பரைத் தவறாமல் படிக்கிறவராக இருந்தால், உங்கள் நினைவின் ஏதாவது ஒரு மூலையில் அவள் பெயர் ஒட்டிக் கொண்டி ருக்கக்கூடும். ஆனால், தினசரி செய்திகளை யார் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அவை சாலை விபத்துகளைக்கூட சுவாரஸ்யமான நிகழ்வுகளாக மாற்றிவிடுகின்றன. ரத்தக்கறை படியாத நாளிதழ்களே இல்லை.

விபத்தில் இறந்த உடல்களின் புகைப்படங்களை ஏன் நாளிதழ்கள் இவ்வளவு பெரியதாக வெளியிடு கின்றன? யார் அதைக் காண்பதற்கு ஆசைப்படுவது? ஒருவேளை வன் முறையின் களியாட்டத்தை நாம் உள்ளூர விரும்புகிறோமோ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோகிலவாணியை தலைப்புச் செய்தியாக்கியதற்கு நாம் காரணமில்லை என்று ஒதுங்கிக் கொள்ளமுடியாது. அவள் நம்மைக் குற்றம் சொல்லவில்லை. ஆனால், அவள் நம்மைக் கண்டு பயப்படுகிறாள். நம் யாவரையும் விட்டு விலகிப் போயிருக்கிறாள்.

இன்றைக்கும் அவளின் கால்கள் சாலையில் நடப்பதற்கு பயப்படுகின்றன. கைகள் தன்னை அறியாமல் நடுங்குகின்றன. யாராவது அருகில் வருவதைக் கண்டால், கண்கள் காற்றிலாடும் அகல் விளக்கின் சுடரைப்போல தத்தளிக்கின்றன. இவ்வளவு ஏன்... அவளுக்கு உறக்கத்தில் கூட நிம் மதியில்லை. குரூரக்கனவுகளால் திடுக்கிட்டு அலறுகிறாள்.

அவள் சாகவாசமாகப் புழங்கித் திரிந்த உலகம், ஒரு நாளில் அவளிடமிருந்து பிடுங்கி எறியப்பட்டது. தோழிகள், குடும்பம், படிப்பு, வேலை... என்று அத்தனையும் அவளிடமிருந்து உதிர்ந்து போய்விட்டது. களிம்பு மருந்துகளும் டஜன் கணக்கில் மாத்திரைகளும் ரணசிகிச்சையும் அவளது அன்றாட உலகமாகியிருக்கிறது. அழுதழுது ஓய்ந்து ஒடுங்கிப் போயிருக்கிறாள். பல நேரம் தன்னைக் கழிப்பறை மூலையில் வீசி எறியப்பட்ட, பாதி எரிந்த தீக்குச்சி போலவே உணர்ந்திருக்கிறாள்.ஒரு சம்பவம் என்று எளிதாக நாளிதழ் களால் விவரிக்கப்பட்ட அந்த துயர நிகழ்வு, இப்படியாகத்தான் செய்தித்தாளில் வெளியானது.

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

'சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் கோகிலவாணி என்ற 23 வயது பெண் மீது, துரை என்ற வாலிபர் ஆசிட் வீசினார். இது குறித்து கிண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் துரை என்பவர் கோகிலவாணியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், கோகிலவாணியோ மகேஷ் என்ற கல்லூரி மாணவனைக் காதலித்து வந்திருக்கிறார்.

தனது காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ஆசிட் ஊற்றிவிடுவேன் என்று கோகிலவாணியை துரை பல முறை எச்சரித்திருக்கிறார். ஆனால், துரையின் காதலை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமான துரை, தன் நண்பர்களான ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோருடன் கூடிப் பேசி, கோகிலவாணியின் முகத்தில் ஆசிட் வீச தம்புசெட்டி தெருவில் உள்ள ஒரு கடையில் 'சல்பியூரிக்’ ஆசிட்டை வாங்கியிருக்கிறார். மறுநாள் காலை கிண்டி ரயில்நிலையத்துக்குச் செல்லும் பாதையில் கோகிலவாணியை வழிமறித்து ஆசிட்டை ஊற்றிவிட்டு துரை தப்பியோடினார்.

இதனால் கோகிலவாணி சம்பவ இடத்தில் அலறியபடியே மயங்கி விழுந்தார். அவரைப் பொதுமக்கள் சேர்ந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 60 சதவிகித அளவுக்கு முகம்வெந்துபோய்க் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். துரை மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து. விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

பதினைந்து வயதிலேயே காதலிப்பது பற்றிய கற்பனைகள் கோகிலவாணிக்குள் புகுந்துவிட்டன. பள்ளி நேரத்தில் அதைப்பற்றியே அவளும் தோழிகளும் ரகசியமாகப் பேசிக் கொள்வார்கள். காதலைப்பற்றி பேசும்போதெல்லாம் பனிக்கட்டியை உள்ளங்கையில் வைத்துக் கொண்டிருப்பதைப் போல, அவள் உடலில் கிளர்ச்சி உருவாவதை உணர்ந்திருக்கிறாள்.

சாலையில்... பயணத்தில், பொது இடங்களில் தென்படும் பதின்வயது இளைஞர்களைக் காணும் போதெல்லாம் இதில் யார் தன்னைக் காதலிக்கப் போகிறவன் என்று குறுகுறுப்பாக இருக்கும். அவள் காதலிக்கப்படுவதற்காக ஏங்கினாள். யாராலோ காதலிக்கபடுவதற்காகக் காத்துக் கொண்டேயிருந்தாள். அதைப்பற்றி தனது நோட்டில் நிறையக் கிறுக்கி வைத்திருக்கிறாள். கவிதைகள் கூட எழுதியிருக்கிறாள்.

அவளுக்கு திவாகர் என்ற பெயர் பிடித்துப் போயிருந்தது. இவ்வளவுக்கும் அந்தப் பெயரில் ஒருவரையும் அவளுக்குத் தெரியாது. ஆனால், ஏனோ அந்தப் பெயர் பிடித்திருந்தது. 'அந்தப் பெயரிலே ஒருவனைக் காதலிக்க முடிந்தால்... எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று கூட அவளுக்குத் தோன்றியது. ஆனால், அது நடக்குமா என்ன?

அந்தப் பெயரை தனது பெயரோடு சேர்த்து, 'திவாகர் கோகிலவாணி’ என்று ரகசியமாக எழுதிப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். ஒரு நாள் தோழி இந்திரா அவளிடம் யாருடி அந்த திவாகர் என்று கேட்டதற்கு, 'பக்கத்து வீட்டில் இருக்கிற பையன் அவனை நான் லவ் பண்ணுகிறேன்!’ என்று பொய் சொன்னாள்.

அந்தப் பொய்யை இந்திரா நம்பிவிட்டதோடு, அந்தக் காதல் எப்படி ஆரம்பித்தது... எவ்வளவு நாளாக நடக்கிறது... என்று கேட்கத் துவங்கினாள். அவளுக்காகவே கோகிலவாணி நிறையக் கற்பனை செய்து திவாகரை பற்றிக் கதைகதையாகச் சொல்வாள்.

அதைக் கேட்டதில் இருந்து இந்திராவும் யாரையாவது காதலிக்க விரும்பினாள். ஆனால், எப்படிக் காதலிப்பது என்று பயமாக இருந்தது. அவர்கள் டியூஷன் படிக்கப் போகிற வீட்டில் இருந்த முரளியிடம் இந்திரா தயங்கித் தயங்கி, தான் அவனைக் காதலிப்பதாகச் சொன்னாள். அவன் தானும் அவளைக் காதலிப்பதாகச் சொல்லி மாடி அறைக்கு வரச்சொல்லியிருந்தான்.

பயமும் ஆர்வமுமாக மாடிக்குப்போன இந்திரா, கத்தி அலறியபடியே கிழே இறங்கி ஓடிவந்தாள். 'என்னடி... என்ன ஆச்சு?’ என்று கோகிலா கேட்டபோது இந்திரா பதில் சொல்லாமல், அழுதாள். வீடு திரும்பும்போது பேருந்தில் வைத்து, 'லவ் பண்றேனு சொல்லிட்டு கிஸ் குடுத்து உதட்டைக் கடிச்சிட்டான்டி... அசிங்கமாக இருக்கு!’ என்று சொல்லியபடியே கண்ணீர் விட்டாள் அவள்.

கோகிலவாணிக்கு, 'நல்லவேளை நாம் யாரையும் காதலிக்கவில்லை!’ என்று தோன்றியது. மறுநாள் முழுவதும் இந்திரா லவ் பண்ணுவது தவறு என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள். உள்ளூர அதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும்... இந்திராவுக்காகத் தானும் திவாகரை லவ் பண்ணுவதை விட்டுவிட்டதாகச் சொன்னாள் கோகிலவாணி. ஆனால், மனதுக்குள் பலவந்தமாக கிஸ் பண்ணாத நல்ல பையனாகப் பார்த்து லவ் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டேயிருந்தது

கோகிலவாணி எட்டாவது படிக்கும்போது ருதுவெய்தினாள். பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்துக் கொண்டு சில மாதங்கள் அருகில் இருந்த எஸ்.டி.டி. பூத்தில் வேலை செய்தாள். அங்கே வரும் இளைஞர்களில் ஒருவன் கூட அவளை கண்டுகொள்ளவேயில்லை. கறுத்துப்போய் மெலிந்த உடலோடு இருப்பதால்தான் தன்னை எவருக்கும் பிடிக்கவில்லையோ என்று நினைத்துக் கொள்வாள். அவளிடம் இரண்டே இரண்டு நல்ல சுடிதார்கள் இருந்தன. அதையே மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டு வேலைக்குப் போவாள். சம்பளப் பணத்தில் மஞ்சளும் சந்தனமும் கலந்த டர்மெரிக் கிரீம் வாங்கி உடல் முழுவதும் பூசிப் பார்த்தாள். 'ஃபேர்' உத்தரவாதம் தந்த கிரீமை வாங்கி ரகசியமாக உபயோகித்துப் பார்த்தாள். பாலில் குங்குமப்பூ போட்டுக் குடித்து அழகை மேம்படுத்த முயன்றாள். அப்படியிருந்தும் அவள் மீது யாருக்கும் ஈர்ப்பு ஏற்படவேயில்லை.

எஸ்.டி.டி. பூத் நடத்தும் சொக்கநாதன் தினசரி அவளை அனுப்பி சிகரெட் வாங்கி வரச்சொல்வான். அவள் ஒரு பெண் என்றுகூடக் கருதாமல் காதுபட பச்சைபச்சையாக போனில் பேசிக் கொண்டிருப்பான். தன்னை ஒரு பெண்ணாகக்கூட அவன் மதிக்கவில்லையே என்ற ஆதங்கம் கோகிலவாணிக்கு நிறைய இருந்தது.

தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும்போது தனக்கு மட்டும் ஏன் கழுத்து எலும்புகள் இப்படித் தூக்கிக் கொண்டிருக்கின்றன... தாடை ஒடுங்கிப்போயிருக்கிறது என்று ஆத்திரமாக வரும். தன்னை எப்படியாவது அழகாக்கிக் கொண்டுவிட வேண்டும் என்று புதுசு புதுசாக சோப்பு வாங்கிப் பார்த்தாள். தலைமயிரை சுருளவிட்டுப் பார்த்தாள். மூன்று மாதம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்புக்குக்கூட போய்வந்தாள். ஆனாலும் யாரும் அவளைக் காதலிக்கவேயில்லை

ஒரு மாலைநேரம் போன் செய்யவந்த ஜீன்ஸ் மற்றும் வெள்ளைக்கோடு போட்ட சட்டை அணிந்த இளைஞன் ஒருவன் அவளிடம் வேண்டும் என்றே சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவளது பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு போனான். அந்த நிமிஷமே அவன் மீது காதல் உருவாக ஆரம்பித்தது. அவன் மறுபடி எப்போது வருவான் என்று காத்துக் கொண்டேயிருந்தாள். பெயர் கூடத் தெரியாமல் அவனை மனதுக்குள் காதலித்தாள்

ஆனால், ஒரு நாள் அந்தப் பையன் பைக்கில் ஓர் இளம்பெண்ணைப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சினிமா தியேட்டர் பக்கமாக போகையில்... அவளைக் கையை காட்டி ஏதோ சொல்லிவிட்டுப் போனதை கண்டதும் அவன் மீது ஆத்திரமாக வந்தது.

காதலிக்கத் துவங்கும் முன்பே காதல் தோல்வியடைந்துவிட்ட கோபத்தில் அவள் இரண்டு மூன்று நாட்கள் மதியச்சாப்பாடை சாப்பிடாமலே தூக்கி எறிந்தாள். ஆனால், பசியை அவள் காதலால் வெல்ல முடியவில்லை.

சில வேளைகளில் கடற்கரைக்குப் போகையில் இவ்வளவு பேர் எப்படிக் காதலிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கும். கடலை வேடிக்கை பார்ப்பதை விடவும், காதலர்களையே பார்த்துக் கொண்டிருப்பாள். அவளைவிட சுமாராக உள்ள பெண்கள் கூட காதலிக்கிறார்கள். 'தன்னை ஏன் ஒருவரும் காதலிக்கவில்லை?’ என்று ஆதங்கமாக இருக்கும். அதை நினைத்து நிறையக் கவலைப்பட்டிருக்கிறாள். அதிகமாக சம்பளம் வாங்கும் பெண்ணாக இருந்தால் காதலிப்பார்கள் என்று இந்திரா சொன்னது தாங்கமுடியாத வருத்தமாக இருந்தது. காதல் மட்டும்தான் அவள் வாழ்க்கையின் ஒரே பற்றுக்கோல் போல நினைத்துக் கொண்டிருந்தாள்

மாம்பலத்தில் சொக்கநாதன் புதிதாகத் துவங்கியிருந்த ஜெராக்ஸ் கடைக்கு அவளை இடம் மாற்றியபோது தினசரி மின்சார ரயிலில் போய் வரவேண்டியது அவசியமானது. அப்படித்தான் மகேஷை சந்தித்தாள். இரண்டு நாட்களில் பேசிப் பழகிவிட்டான்.

மகேஷ் அவளை விட ஒல்லியாக இருந்தான். பெரும்பாலும் நீல நிற பேன்ட்தான் அணிந்துவருவான்.  ஏதோ ஓரியண்ட் சலூனில் வேலை செய்து கொண்டிருப்பதாக சொன்னான். மகேஷை அவளுக்குப் பிடித்துப் போனது. தினமும் மகேஷ் அவளுக்காக டிபன் பாக்ஸில் ஏதாவது ஒரு உணவு கொண்டுவருவான். ரயிலில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டால்கூட அவன் கை அவள் மீது படாமல் பார்த்துக் கொள்வான். அவளது தண்ணீர் பாட்டிலை வாங்கிக் குடிக்கும் போதுகூட அண்ணாந்துதான் குடிப்பான். அதை விடவும் அவள் புது உடையோ, பாசியோ, பொட்டோ, ஹேர்கிளிப்போ... எது அணிந்து வந்தாலும் இது உனக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது என்று பாராட்டுவான். அதனால், தான் ஒரு நல்லவனைக் காதலிப்பதாக பெருமை கொண்டாள் கோகிலவாணி

ஒரு நாள் மாலை மகேஷ் வருவதற்காக மாம்பலம் ரயில் நிலையத்தின் அருகில் காத்திருந்தபோது கால் வலிக்கிறது என்று ஒரு பைக்கில் சாய்ந்து நின்றிருந்தாள். எதிர்க் கடையில் இருந்து ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னைப் பார்க்கிறான் என்று உணர்ந்த மறு நிமிஷம் தனது துப்பட்டாவை சரிசெய்துவிட்டு தலையைக் குனிந்து கொண்டாள் கோகிலவாணி. அந்த இளைஞன் ஒரு சிகரெட்டை பற்றவைத்துவிட்டு அவளைப் பார்த்துக் கொண்டே புகையை ஊதிக் கொண்டிருந்தான். மகேஷ் வருவதற்குத் தாமதமாவது ஆத்திரமாக வந்தது. அவன் சிகரெட்டை அணைத்துவிட்டு அருகில் வந்து நின்று, ''இது என் பைக். வேணும்னா ஏறி உட்காந்துகிடலாம். இல்லை எங்கே போகணும்னு சொல்லுங்க... நானே கொண்டுபோய்விடுறேன்!'' என்று சொல்லிச் சிரித்தான்.

அதை பவ்யமாக அவன் சொன்னவிதம் அவளுக்குச் சிரிப்பாக வந்தது. அடுத்து அந்த இளைஞன் பைக் சாவியை எடுத்து, ''நீங்களே வேணும்னாலும் ஓட்டிக்கிட்டு போகலாம்'' என்றான். கோகிலவாணி வேண்டாம் என்று மறுத்துவிட்டுச் சிரிப்போடு நகர்ந்து நின்று கொண்டாள். அந்த இளைஞன் அவளிடம், ''வீடு எங்க?'' என்று கேட்டான். அவள் பதில் சொல்லாமல் ஸ்டேஷனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தனது பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலையை வாரிவிட்டபடியே ஒரு பபிள்கம்மை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அவள் விடுவிடுவென ரயில்நிலையத்தின் உள்பகுதியை நோக்கி நடந்து போகத் துவங்கினாள். அவன் சிரிப்பது கேட்டது. மகேஷ் வந்து சேரும் வரை அவள் திரும்பிப் பார்க்கவேயில்லை. மகேஷிடம் அந்த இளைஞனைப் பற்றிச் சொல்லவா... வேண்டாமா என்று தயக்கமாக இருந்தது. ஆனால், சொல்லவேயில்லை.

இரண்டு நாட்களுக்குப் பின்பு அந்த பைக் இளைஞனை மறுபடியும் ரயிலில் பார்த்தாள். அவன் நெருங்கி அருகில் வந்து நின்று அவளையே பார்த்தபடி வந்தான். கோகிலவாணி அவனை ஓரக்கண்ணால் பார்க்கும் போது அவன் உதட்டைக் கடிப்பதும் உள்ளங்கையில் ஐ லவ்யூ, யுவர்ஸ் துரை என்று தன் பேனாவில் எழுதிக்காட்டுவதும், கள்ளச் சிரிப்புடன் கையசைப்பதுமாக இருந்தான்.

ஒரு வாரத்தின் பிறகு ஒரு நாள் காலையில் அவள் ரயிலை விட்டு இறங்கி நடக்கும்போது அருகில் வந்து, ''உனக்காகத் தான் தினம் தாம்பரத்துல இருந்து இதே ரயில்ல வர்றேன்...'' என்றான். கோகிலவாணி அவனிடம் பேசவேயில்லை

அவனோ நெடுநாள் பழகியவன் போல அருகில் வந்து, ''படத்துக்குப் போவமா?'' என்று கேட்டான். அவளுக்கு அதைக் கேட்டபோது பயமாக வந்தது. அதைக்காட்டிக் கொள்ளாமல். ''எனக்கு இதெல்லாம் பிடிக்காது!'' என்றாள்.

துரை சிரித்தபடியே, ''அப்போ நீ என்னை லவ் பண்ணலையா?'' என்று கேட்டான். கோகிலவாணி கோபத்துடன். ''நான் எதுக்கு உன்னை லவ் பண்ணணும்?'' என்று கேட்டாள்.

அப்போ, ''அன்னிக்கு மட்டும் சிரிச்சே... தினம்தினம் லுக் விட்டயே... அது எதுக்கு?'' என்றான் துரை.

''நான் ஒண்ணும் உன்னை லவ் பண்ணலே. நான் மகேஷை லவ் பண்றேன். பிரச்னை பண்ணாமப் போயிடு!'' என்றாள்.

உடனே துரை பச்சைபச்சையாக அவளைத் திட்டியதோடு, ''நீ என்னை லவ் பண்ணித்தான் ஆகணும். நான் டிசைட் பண்ணிட்டேன்...'' என்றான். அவனுக்கு பயந்து கொண்டு சில நாட்கள் பஸ்ஸில் வரத்துவங்கினாள்.

ஒரு நாள் மகேஷிடம் ஒரு பையன் தன்னை பின்னாடியே துரத்துவதாகச் சொன்னாள். மகேஷ் சற்றே கலக்கத்துடன். 'நான் பேசிப்பாக்குறேன்’ என்று ஆறுதல் சொன்னான். இரண்டு நாட்களுக்கு பிறகு மகேஷைப் பார்க்கவே முடியவேயில்லை. அவனைத் தேடி ஓரியண்ட் சலூனுக்குப் போனபோது மகேஷின் முகத்தில் அடிவாங்கிய வீக்கம் இருந்தது.

மகேஷ் தலையைக் குனிந்தபடியே, ''அந்த ரௌடிப்பய துரை என்னை அடிச்சிட்டான் கோகிலா. நாம ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்தா கொன்னுருவேன்னு சொல்றான். என்ன செய்றதுனு தெரியலை. சலூன் ஓனர்கிட்டே யோசனை கேட்டேன். லவ் எல்லாம் எனக்கு சரிப்படாதுனு சொல்றார். இப்போ என்ன செய்றதுனு தெரியலை. ஒரே குழப்பமா இருக்கு...'' என்றான். கோகிலவாணி அங்கேயே அழுதாள். மகேஷ் சலூன் ஓனரிடம் சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு போய் அருகிலுள்ள தேநீர்க் கடையில் ராகிமால்ட் வாங்கித்தந்து நிறைய அறிவுரைகள் சொல்லி அனுப்பி வைத்தான்.

அதன் பிறகு மகேஷ் அவளைப் பார்க்க வரவேயில்லை. ஆனால், கோகிலாவால் காதலைவிட முடியவில்லை. திரும்பவும் ஒரு நாள் மகேஷைக் காண சலூனுக்குப் போனாள். அப்போது சலூனில் யாருமே இல்லை. மகேஷ் மட்டும் தனியே அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்தவுடன் சலூன் நாற்காலியில் உட்காரச் சொன்னான். எதிரில் உள்ள கண்ணாடியில் அவள் முகம் தெரிந்தது. மகேஷ் சிரிப்போடு, 'உனக்கு முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணிவிடவா?’ என்று கேட்டான்.

கோகிலவாணி ஆத்திரத்துடன் அவனைத் திட்டினாள். பிறகு ஆவேசமானவள் போல அவனைக் கட்டியணைத்து இறுக்கமாக முத்தம் கொடுத்தாள். அதன் பிறகு இருவரும் நெடுநேரம் பேசிக் கொண்டேயிருந்தார்கள். ஒன்றாக அன்று வீடு திரும்பினார்கள். கோகிலவாணி மறுபடியும் காதலிக்கத் துவங்கினாள்.

ஆனால், அவர்களை ஒன்றாக உதயம் தியேட்டரில் பார்த்த துரை, ''நான் மட்டும்தான்டி உன்னை லவ் பண்ணுவேன். வேற யாரு உன்னை லவ் பண்ணினாலும் நீ செத்தே. உன் மேல ஆசிட் ஊத்திருவேன். பாத்துக்கோ...'' என்று கடுமையாகத் திட்டினான். கோகிலவாணிக்கு அது உண்மையாகப் போகிறது என்று அப்போது தெரியாது.

அதன் பின் இரண்டு நாட்களுக்கு பிறகு துரை நிறையக் குடித்துவிட்டு அவளது ஜெராக்ஸ் கடைக்கு வந்து, ''நீ என்னை லவ் பண்றயா இல்லையானு இப்பவே தெரியணும்... சொல்லுடி!'' என்று மிரட்டினான். கோகிலவாணி அவனிடம் பேசவேயில்லை. அவன் அசிங்கமாகக் கத்தினான். அவனுக்கு பயந்து சில நாட்கள் வேலைக்கு போகாமலும் இருந்தாள். ஆனால், அவன் விடவேயில்லை. வீட்டின் முன்பு வந்து நின்று கொண்டேயிருந்தான். குளியல் அறையை ஒட்டிய சந்தின் இடைவெளியில் வந்து நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருப்பான். அவளுக்கு பயமாகவும் நடுக்கமாகவும் இருந்தது

துரை அவள் மீது ஆசிட் ஊற்றுவதற்கு முந்திய நாள் காலையில் கோகிலவாணியின் அப்பாவிடம் யாரோ அவள் மகேஷைக் காதலிக்கிறாள் என்பதை பற்றிச் சொல்லியிருந்தார்கள். அதற்காக அப்பா தன் காலில் போட்டிருந்த செருப்பைக் கழற்றி அவள் முகத்தில் மாறிமாறி அறைந்து, மகேஷின் சாதியைச் சொல்லிக் கேவலமாகத் திட்டியதோடு அவள் தன் மகள் என்பதையும் மறந்து ஆபாசமான வசைகளைப் பொழிந்தார்.

அவர் கூடவே செல்வம் அண்ணனும் சேர்ந்து கொண்டு, ''அவன் மட்டும் இல்லைப்பா... துரைனு இன்னொரு பையனும் இவ பின்னாடி சுத்துறான். ஒரே நேரத்தில ரெண்டு பையன்ககூட சுத்துறா...'' என்று ஏற்றிவிட்டான்.

அப்பா அவள் தலைமயிரைப் பிடித்து இழுத்து சுவரோடு முட்டவைத்து, மறுபடியும் ஏச ஆரம்பித்தார். அம்மா அவரது பலமான பிடியில் இருந்து கோகிலாவை விடுவித்து, சோற்றுக் கரண்டியால் காலிலும் புட்டத்திலும் அடித்தாள். கோகிலவாணி காதலுக்காகத்தான் அடிபடுகிறோம் என்பதால் அழுது கத்தவேயில்லை

ஆசிட் ஊற்றப்படப் போகும் நாளன்று காலையில் துரை அவள் முன்னால் வந்து நின்றபோது எப்படியாவது அவனிடம் கெஞ்சிப்பேசி தான் மகேஷை காதலிப்பதைப் புரிய வைத்துவிட வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் கோகிலா.

ஆனால், துரை ஒரு வார்த்தைகூட அவளிடம் பேசவில்லை. பேசவிடவும் இல்லை. பேன்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுப்பது போல சிறிய பாட்டில் ஒன்றை வெளியே எடுத்தான். தொலைவில் மின்சார ரயில் வரும் ஓசை கேட்டது. அவள் ரயில் நிலையத்தின் படியை நோக்கி நடப்பதற்குள் அவள் முகத்தில் ஆசிட்டை ஊற்றினான்.

கொதிக்கும் நெருப்பினுள் முகத்தை நுழைத்தது போல எரிய ஆரம்பித்தது. காது... முகம்... நாசி... கன்னம் என்று அத்தனையும் உருகியோடுவது போல தாங்கமுடியாத வலி பீறிட்டது. கோகிலவாணி அலறினாள். கூட்டத்தை விலக்கிக்கொண்டு துரை ஓடுவது தெரிந்தது. அவள் முன்னிருந்த உலகம் மெள்ளப் புகைமூட்டம் கொண்டு மங்கத் துவங்கியது.

கோகிலவாணி ஆறு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாள். வலது பக்க முகம் முற்றிலும் எரிந்து போயிருந்தது. காதின் நுனி சிதைந்து போனதால் பாதிக் காதே மிச்சமாக இருந்தது. ஆசிட் முகத்தில் பட்டதோடு பின்னந்தலை வரை பரவியிருந்த காரணத்தால் அவளது தலைமயிரையும் பாதி கத்தரித்து இருந்தார்கள். அவளது தோற்றத்தை காண அவளாலே சகிக்கமுடியவில்லை.

அவள் மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவள் அப்பாவும் அம்மாவும் உறவினர்களும் மாறிமாறி அவளை மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டேயிருந்தனர்.

கோகிலவாணியின் எரிந்த முகத்தைக் கண்ட அப்பா ''அப்படி என்னடி உனக்கு லவ்வு கேட்குது? செத்துப் போயிருந்தா சனியின் விட்டுச்சினு தலைமுழுகிட்டுப் போயிருப்பேன். இனிமே உன்னை எவன் கட்டிக்கிடுவான். உன்னை எங்கே கொண்டு போய் தள்ளுறது...'' என்று தன் முகத்தில் மாறிமாறி அடித்துக் கொண்டு அழுதார்.

'எதற்காகக் காதலிக்க ஆசைப்பட்டோம். காதல் என்பது இதுதானா? ஏன் துரை இப்படி தன் முகத்தில் ஆசிட் ஊற்றினான்?’ அவளுக்கு நினைக்க நினைக்க அழுகையும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது.

அவள் கூடப் படித்த மாணவிகள், தெரிந்தவர்கள், தோழிகள் எவரும் அவளைப் பார்க்க வரவேயில்லை. ஆசிட் அடிக்கப்பட்டவளின் தோழி என்று யார் சொல்லிக் கொள்ள ஆசைப்படுவார்கள். மகேஷ் கூட அவளைப் பார்க்க வரவேயில்லை.

பெண் மருத்துவர் அவள் முகத்தைத் துடைத்தபடியே, 'உனக்கு எத்தனை லவ்வர்டி?’ என்று நக்கலாகக் கேட்டார். கோகிலவாணி பதில் சொல்லவேயில்லை.

மருந்தாளுனரும் அவள் முகத்தில் உள்ள காயத்தைத் துடைத்தபடியே. ''இனிமே உன்னை ஒரு பையனும் திரும்பிப் பார்க்கமாட்டான். நீ எங்கே வேணும்னாலும் போகலாம். எந்த நேரம் வேணும்னாலும் வீட்டுக்கு வரலாம். உன்னை யாரு ஃபாலோ பண்ணப் போறாங்க...'' என்றார். கோகிலவாணிக்கு ஆத்திரமாக வரும். ஆனால், வாய் திறந்து பேசமாட்டாள். 'இப்படி அவமானப்பட்டு வாழ்வதற்கு பதிலாகப் பேசாமல் அப்பா சொன்னது போல செத்துப்போயிருக்கலாம். எதற்காக பிழைத்துக் கொண்டோம்? மிச்சமிருக்கும் வாழ்க்கையை எப்படி கடத்தப்போகிறோம்?’ அந்த வலி ஆசிட்டின் கொதிப்பைவிட அதிகமாக இருந்தது

கோகிலவாணி அந்த வழக்குக்காக இருபத்தாறு முறை கோர்ட்டுக்கு சென்று வர நேர்ந்தது. ஒவ்வொரு முறையும் அவளது காதலை யாராவது பரிகாசம் செய்வார்கள். எரிந்த முகத்தைக் காட்டி அவளது கதையை சொல்லிச் சிரிப்பார்கள். விசாரணைக்கு மகேஷ் வரமறுத்து விட்டதுடன். 'தான் அவளை ஒருபோதும் காதலிக்கவேயில்லை’ என்று காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறான். துரையோ, 'அவள் தன்னை பல மாதங்கள் காதலித்து ஏமாற்றிவிட்டதாக’ போலீஸில் வாக்குமூலம் தந்திருந்தான். கோகிலவாணி. 'தான் யாரையும் காதலிக்கவில்லை. துரை தன்னை காதலிக்கும்படியாக மிரட்டினான்...’ என்றே சொன்னாள். வழக்கறிஞர். 'அவள் யாரோடாவது பாலுறவு கொண்டிருக்கிறாளா... ஆண் நண்பர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?’ என்று துருவித்துருவிக் கேட்டார். கோகிலவாணி நீதிமன்றத்தில் நிறைய முறை அழுதிருக்கிறாள். ஆனால், யாரும் அவளைத் தேற்றவேயில்லை. முடிவில் துரை தண்டிக்கப்பட்டான்.

பாதி எரிந்த முகத்துடன் எலிவால்முடி போல கொஞ்சம் தலைமயிருடன் கோகிலவாணி வீட்டுக்குள்ளாகவே அடைந்து கிடந்தாள். டி.வி. பார்ப்பதோ... தலையில் பூ வைத்துக் கொள்வதோ... கண்ணாடி பார்த்துத் திருநீறு வைத்துக் கொள்வதோகூட கிடையாது. இரண்டு முறை அவளுக்குக் கல்யாணப்பேச்சு துவங்கியது. ஆனால், எவரும் அவளை கட்டிக்கொள்ள முன்வரவேயில்லை. கோகிலவாணி தனிமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டில் இருந்தபடியே காளான் வளர்த்து விற்பனை செய்யத் துவங்கினாள். தினமும் அம்மாவும் அப்பாவும் அவளை வாய்க்கு வாய் திட்டினார்கள். வீட்டின் எந்த விசேஷத்திலும் அவள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவேயில்லை. சிரிப்பை மறந்தவளாக கோகிலவாணி ஒரு நடைப்பிணம் போலவே வாழ்ந்தாள்.

உபாசனா என்ற தன்னார்வ நிறுவனம் அவளை தஙகள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டபோது, அவளுக்கு வயது முப்பத்திரண்டைக் கடந்திருந்தது. அது பார்வையற்றவர்களுக்காக சேவை செய்யும் நிறுவனம். பார்வைக் குறைபாடு கொண்டவர்களே அங்கு பெரும்பாலும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அதனால் யாரும் அவளை கேலி செய்வார்கள் என்ற பயமின்றி அவள் வேலைக்கு போய்வரத் துவங்கினாள். அங்குள்ள நூலகத்தில் இருந்து நிறையப் புத்தகங்களை எடுத்து வந்து படித்துக் கொண்டேயிருப்பாள்.

சில சமயம் அவள் அறியாமல் உடலின்பம் பற்றி மனது நாட்டம் கொள்ளத் துவங்கும். அப்போது விரலால் முகத்தைத் தடவிக் கொள்வாள். மின்சாரத்தில் கைபட்டது போல மனது உடனே அந்த நினைவில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ளும்.

சென்ற வருடத்தில் ஒரு நாள் கடற்கரையில் தற்செயலாக துரையைப் பார்த்தாள். அவனுக்குத் திருமணமாகிப் பெண் குழந்தையிருந்தது. இரண்டு வயதான அந்தக் குழந்தை ஒரு வண்ணப்பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. மணலில் உட்கார்ந்தபடியே துரையின் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தாள். நல்ல நிறம். ஆரஞ்சு நிறப் புடவை கட்டியிருந்தாள். கையில் ஒரு ஹேண்ட்பேக். கழுத்தில் நிறைய நகை போட்டிருந்தாள். துரையும் முழுக்கைச் சட்டை அணிந்து தலையை படிய வாரியிருந்தான்.

ஏனோ துரையின் மனைவியிடம் போய்ப் பேச வேண்டும் போலிருந்தது. அந்தக் குழந்தையை ஒரு முறை கொஞ்சலாமா என்றுகூடத் தோன்றியது. அவள் தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதை துரை கவனித்தவுடன் மனைவியிடம் ஏதோ சொன்னான். அவர்கள் எழுந்து கொண்டார்கள்.

'நாம்தானே துரை மீது கோபமும் வெறுப்பும் கொள்ள வேண்டும்? அவன் ஏன் தன்னைப் பார்த்தவுடன் எழுந்து ஓடுகிறான்... பயமா? கடந்தகாலத்தின் நினைவுகள் எதுவும் தன்முன்னால் வந்து நின்றுவிடக்கூடாது என்ற பதைபதைப்பா?’ என்ற யோசனையுடன் அவர்கள் போவதையே கோகிலவாணி பார்த்தாள்.

ஒரு பெண் மீது ஆசிட் அடித்தவன் என்று அவனைப் பார்த்தால் யாராவது சொல்வார்களா என்ன? அவனுக்கு ஆசிட் வீசியது என்பது ஒரு சம்பவம். ஆனால் தனக்கு..? கண்ணில் இருந்து துரை மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கடற்கரையெங்கும் காதலர்கள் நிரம்பியிருந்தார்கள். இவர்களில் ஏதோவொரு பெண் தன்னைப் போல முகம் எரிந்து போகக்கூடும். அல்லது வன்கொலை செய்யப்படவும் கூடலாம். வசை, அடி, உதை, எரிப்பு, கொலை இவைதான் காதலின் சின்னங்களா? காதல் வன்முறையில்தான் வேர் ஊன்றியிருக்கிறதா?

அவள் கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். இருட்டும் வரை வீட்டுக்குக் கிளம்ப வேண்டும் என்று தோன்றவேயில்லை

உலகம் தன்னைக் கைவிட்டு யாருமற்ற நிர்கதிக்கு உள்ளாக்கி வைத்திருப்பதை உணர்ந்து கொண்டவள் போல நீண்ட நேரத்த்துக்குப் பிறகு ரயில் நிலையத்தை நோக்கித் தனியே நடக்க ஆரம்பித்தாள்.

ரயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்திருந்தபோது ஏனோ தனக்கு முப்பத்தாறு வயது முடிந்துவிட்டது என்பது நினைவுக்கு வந்தது.

ரயிலில் செல்லும்போது வீசிய கடற்காற்று, தழும்புகள் நிறைந்த முகத்தில் பட்டதும் மனது தானே காதலைப்பற்றி நினைத்துக் கொள்ளத் துவங்கியது. உடனே மனதுக்குள்ளிருந்து இத்தனை வருஷங்களாகியும் மறையாத திராவகத்தின் எரி மணமும் திகுதிகுப்பும் பீறிட்டுக் கிளம்பியது. தன்னை மீறிய உள்ளார்ந்த வலியை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை

கோகிலவாணி திரும்பி பார்த்தாள். எதிர்ஸீட்டில் ஓர் இளம்பெண் ஒரு இளைஞன் மடியில் சாய்ந்து கொண்டு ரகசியமான குரலில் பேசியபடியே காதலித்துக் கொண்டிருந்தாள்.

கோகிலவாணி அவர்களைப் பார்க்காமல் வெளியே இருட்டையே பார்த்தாள். இருட்டில் பறந்த மின்மினிப் பூச்சி ஒன்று முகத்தை உரசிக் கொண்டு போனது.

காதல் ஜோடி பேசிச் சிரிப்பதைக் கேட்கக் கேட்க... கோகிலவாணி தன்னை அறியாமல் விசும்பத் துவங்கினாள். 'தன் காதலை உலகம் ஏன் ஏற்க மறுத்தது? எதற்காக தனக்கு இவ்வளவு குரூரமான தண்டனை வழங்கப்பட்டது?’ என்பதை நினைத்து அவள் அழுதாள்.

ரயிலின் கூடவே மின்மினிகள் பறந்து வந்து கொண்டேயிருந்தன. அது இருட்டுக்குக் கண்கள் முளைத்து அவள் அழுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே இருந்தது.

சிரிப்பு  மன்றம்:

பாரதி பாஸ்கர்:

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

விழுப்புரம் பக்கத்துல திருக்கோவிலூரில் பட்டிமன்றம் முடிஞ்சதும் விழுப்புரம் வந்து ரயில் புடிச்சு சென்னைக்கு திரும்பத் திட்டம். ஆனா, எங்க டீம்லே இருந்த உமையாள் முத்து, 'இப்ப வேண்டாம், காலையிலே சென்னைக்குப் போகலாம்’னு பிடிவாதம் பிடிக்குறாங்க. ரொம்ப நேரம் போராடி அவங்களை சமாதானப்படுத்தி கிளம்பினோம். விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துக்கிட்டிருந்தோம். திடீர்னு அந்த ஏரியா முழுக்கக் கலவரம். ஊரைத் தாண்டி நடுவழியிலே ஒரு கூட்டம் தீப்பந்தத்தோடு எங்க காரை வழி மறிச்சு, 'பேசாம திரும்பிப் போயிடுங்க... இல்லைன்னா காரைக் கொளுத்திடுவோம்’னு மிரட்டுறாங்க. பயந்துபோய் நாங்க காரைத் திருப்பச் சொல்றோம். ஆனா, கிளம்பி வரவே முடியாதுனு அடம் பிடிச்ச உமையாள் முத்துவோ, 'நம்மைத் திரும்பிப் போகச் சொல்ல அந்த ஆள் யாரு.... நாம விழுப்புரம்தான் போகணும். காரைத் திருப்பாதீங்க’னு டிரைவர்கிட்டே சத்தம் போடுறாங்க. மறுபடியும் உமையாள் முத்துவைக் கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்த வேண்டியதாகிப் போச்சு.

லியோனி:

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

ஒரு கிராமத்துல எங்க பட்டிமன்றம் நடந்துக்கிட்டு இருந்தது. எங்க டீம்ல குண்டா இருக்கிற வதிலை ராஜா எழுந்து பேச ஆரம்பிக்கவும், பூகம்பம் வந்தது மாதிரி என் முன்னாடி இருந்த மைக், டீப்பாய் எல்லாம் நகர்ந்து போக ஆரம்பிச்சது. என்னமோ, ஏதோன்னு நாங்க பதறும்போதே மேடையும் ரெண்டா பிரிஞ்சுடுச்சு. இந்த மேடையில ஒரு அணியும் எதிர் மேடையில இன்னொரு அணியுமா ரெண்டு பக்கமா பிரிஞ்சு நிக்கிறாங்க. அப்புறம்தான் தெரிஞ்சுது.... கூட்டம் ஏற்பாடு பண்ணினவங்க டிராக்டர் டிரெய்லரை மேடை மாதிரி தயார் பண்ணி இருக்காங்க. டிரெய்லரோட டயருக்கு அடியில கல் வெச்சு முட்டுக் கொடுக்காம விட்டதால வந்த செயற்கை பூகம்பம் இது. 'ஏன்யா ரெண்டு அணியும் எதிரெதிரா பிரிஞ்சு நின்னு மோதுனா சுவாரஸ்யம் என்பது நிஜம்தான்.. அதுக்காக இப்பிடி மேடையை ரெண்டா உடைச்சா எப்படி’னு மைக்லயே பேசி சமாளிச்சேன்.

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism