Published:Updated:

சொல்வனம்!

சொல்வனம்!

##~##

மோன தவம்

'வரம் போல வாய்த்திடும்
தனிமையிது’ என்றார்
'தனிமைக்குள் மௌனமுண்டா?
கேட்டுச் சொல்’ என்றார்
பறவைகளின் பாடல் கேட்டு
'மெல்லிசையிது’ என்றேன்
மெல்லிசைக்குள் தனிமை கண்டு
மௌனமாகி நின்றேன்.

- நீ.ஸத்யநாராயணன்

தொண்டைப் பந்து

அலைபேசியில்
வைத்திருக்கவும் முடியாமல்
நீக்கவும் மனமின்றி
அவஸ்தையாய் இருக்கிறது

சொல்வனம்!

அகால மரணமடைந்த
ஆத்ம நண்பனின்
தொடர்பு எண்.

- நா.அருள் ஜோதியன்

 கார்ட்டூன் கதாபாத்திரமாய்...

தொலைக்காட்சியின் முன்
வெகு நேரம் அமர்ந்து
கார்ட்டூன் படம்
பார்க்கும் மகனைத்
திட்டுகிறேன்
கார்ட்டூன் கதாபாத்திரங்கள்
அவன் மூளையைத் தின்றுவிடும்
நேரத்தைக் கொன்றுவிடும்
என்று உரத்த குரலில் எச்சரிக்கிறேன்
தலையைத் திருப்பியவன்
இன்னொரு கார்ட்டூன் கதாபாத்திரமாய்
பார்க்கிறான் விழிகளை மூடாமல்
வெகு நேரமாய் என்னை.

- நாச்சியாள்

அழிப்பான்களைத் தொலைக்கும் சிறுமி

விதவிதமான அழிப்பான்கள்
உள்ளன
பக்கத்து வீட்டுச் சிறுமியிடம்

ஆங்கில எழுத்துகள், காய்கள்
பழங்கள், பருப்பு வகைகள் அவை

கண்காட்சி செல்கையில்
பத்து ரூபாய்க்கு மூன்றெனத்
தவறாது வாங்கி வருகிறாள்

பள்ளி செல்லும் அழிப்பான்கள்
மாலை வீடு திரும்புவதில்லை
ஏன் என அதட்டுகிறாள் தாய்

அவளின் பொய்க் கோபமும்
அழிப்பான் தொலைத்த
சிறுமியின் முகமும்
மஞ்சள் வெயிலைக் காட்டிலும்
மிக அழகாக.

- சுமதி ராம்

ஒற்றை நட்சத்திரம்

வருடத்தின் முன் பகுதியில்
வாய்த்துவிடுகிறது
மொட்டை மாடி உறக்கம்
நடுவில்கிடக்கும் மகளுக்கு
நட்சத்திரங்களைப்
பட்டியலிடும் பணி
ஒன்று... இரண்டு...
எட்டு... பதினாறென்று
விரல் நீட்டிச் சித்திரம் வரைகிறாள்
நிமிட நீட்சியில்
நிஜம் நழுவிய கணம்
எதுவென்ற கேள்வி
எதுவும் இல்லாமல்
கால்கள் பரப்பிக்கிடக்கிறாள்
எந்த எண்ணிக்கையில்
விட்டாளென்று தெரியவில்லை
அவளுக்கும் எனக்கும்
காலையில் எழுப்பி
எண்ணுவதற்குச் சுலபமாக
இருக்கிறதென்று
கன்னக் குழி விழச் சிரிக்கிறாள்
சூரியனைக் காட்டி.

- பழ.தங்கராஜ்

சொல்வனம்!