இரவில் தூரமாகும் ஊர்
கோவில்பட்டியிலிருந்து
புளியங்குளம் கிராமத்திற்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இரவில் போவதென்றால்
பத்துக்கண் பாலத்தில் ஒரு பேயையும்
ஒற்றைப் பனைமர முனியையும்
மஞ்சனத்தி மரத்தில் இருக்கும் ஆவியையும்
தாவு பால வெள்ளைப் பிசாசையும் கடந்தே
இன்றுவரை ஊர் வழக்கத்தில்
வெகுதூரம் பயணிக்கிறோம்.
பகலில் போவதென்றால்
காலேஜ் தாண்டியதும்
ஒத்தக்கடை நிறுத்தத்தில்
வலது பக்கம் திரும்பினாலே
ஊர் வந்துவிடுகிறது.
- ஆண்டன் பெனி

முக்காடு
புழுவுக்குள் முள் இருப்பதை
அறிந்துகொண்ட மீன்களை
கண்காணித்தவாறு
திடீரென அந்தரத்தில் இருந்து
பொத்தென நீருக்குள் குதித்து
வெடுக்கெனக் கவ்விச் சென்றப் பிறகு
வெகுநேரமாக விழுந்துகிடந்தது
மீன்கொத்தியின் நிழல்
தூண்டில்காரனின் தலைமேல்
ஒரு முக்காடென.
-சசி அய்யனார்
சூரியனில் விழுந்த திரை
அதிகாலை நெடுஞ்சாலைப் பயணத்தில்
நேர்க்கோட்டு மின்மரங்களின் மஞ்சள் பூச்சிதறல்கள்
யாரோ இட்ட கட்டளையில் நொடிப்பொழுதில்
ஒளிந்துகொண்டதைப் போலவே,
சற்றைக்கு முன் ஆவிபறக்க
அம்மா கட்டித்தந்த இட்லிகளையொத்த நிலா
தானும் மறைந்துகொண்டது.
சாலையோர மரங்களின் பரவசத் தலையசைப்பில்
பனிபடர்ந்த வெள்ளை இருளைத் துளைத்து
பேருந்தின் சாளரம் தழுவும்
செந்நிற சூரியக்கீற்றுகள் சுகமாக இருந்தது...
ஜன்னலோர இருக்கைக்காரர் அதன் மீது
திரையைப்போடும் வரை.
- தர்மராஜ் பெரியசாமி
அக்பர் டீ ஸ்டால்
முருகேசனுக்கும் பழனிச்சாமிக்கும் இடையே
பெஞ்சில் அமர்கிறேன் நானும்.
எட்டு ரூபாய் டீ ரெண்டு ரூபாய் பிஸ்கட் இவற்றோடு கணக்கு முடியவில்லை எனக்கும்.
ஒன்றாய்ப் படித்த சிராஜுதீன்
எனக்கு மச்சானானபோதும்
இலை வியாபாரம் செய்த பசீரண்ணன்
என் குடும்பத்தில் ஒருவராகியபோதே
நியாஸ் அகமதுவும் புஹாரி ராஜாவும்
எனக்குச் சகோதரர்களாகிவிட்டனர்.
பொங்கல் லீவுக்கு ஊருக்குப் போகையில்
அசந்து தூங்கி, ஊர் தாண்டி
சொக்கலிங்கபுரத்தில் இறங்க,
ஆறு மணி முதல் வண்டிக்கான
அக்பர் டீ ஸ்டால் காத்திருப்பில்
'ஒருநாள் மதினா நகரினிலே...’ என
என்னை இப்போதும் தாலாட்டுகிறார்
நாகூர் ஹனீபா தாத்தா.
- விக்னேஷ் சி செல்வராஜ்