Published:Updated:

‘இங்க இருக்கான்டா தமிழன்!’

 ‘இங்க இருக்கான்டா தமிழன்!’
பிரீமியம் ஸ்டோரி
‘இங்க இருக்கான்டா தமிழன்!’

கதிர்பாரதி, படம்: தி.குமரகுருபரன்

‘இங்க இருக்கான்டா தமிழன்!’

கதிர்பாரதி, படம்: தி.குமரகுருபரன்

Published:Updated:
 ‘இங்க இருக்கான்டா தமிழன்!’
பிரீமியம் ஸ்டோரி
‘இங்க இருக்கான்டா தமிழன்!’

பாரதியார் இறந்த பிறகு சில காலம் அவரது படைப்புகள் மீது ஒரு செயற்கை இருள் படர்ந்திருந்தபோது, பட்டிதொட்டி எங்கும் பாரதியார் படைப்புகளைப் பரப்பியவர்களில் முக்கியமானவர்கள்... பாவேந்தர் பாரதிதாசன், எழுத்தாளர் வ.ரா., கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், திருலோக சீதாராம். முதல் மூன்று பேரும் தமது மேடைப்பேச்சுக்கள் மூலம் பாரதியைக் கொண்டுபோய்ச் சேர்த்தவர்கள் எனில், பாரதியார் கவிதைகளை ஏறக்குறைய கதாகாலட்சேபம் செய்வதுபோல மேடையில் முழங்கியும் இசைத்தும் வந்தவர் திருலோக சீதாராம். அவ்வளவுதானா அவர்?

தமிழ் இலக்கிய உலகில் அதிகம் அறியப்படாத ஆளுமைகளில் முக்கியமானவர். 25 வருடங்களுக்கு மேலாக `சிவாஜி’ இலக்கியப் பத்திரிகையை நடத்தியவர்; நோபல் பரிசுபெற்ற ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேவின் `சித்தார்த்தன்’ புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்; மனுதர்மக் கருத்துக்களில் முழுமையாக உடன்பாடு இல்லாதபோதும், அதை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர்; மூன்று கவிதைப் புத்தகங்களின் ஆசிரியர்... இந்த அடையாளங்களை முன்னிருத்தாமல், தன்னை `பாரதியாரின் ஆன்மிகப் புத்திரன்’ என அழைத்துக்கொள்வதில் ஆனந்தம் அடைந்தவர்.

`ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை’, திருலோக சீதாராம் பற்றி `திருலோகம் என்றொரு கவி ஆளுமை’ என்ற ஆவணப் படத்தைத் தயாரிக்க, அதை எழுதி இயக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன். திருலோக சீதாராமின் ஆளுமை பற்றி பேசியிருக் கிறார்கள் அவரது நெருக்கமான நண்பர்கள்...

 ‘இங்க இருக்கான்டா தமிழன்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ஒருமுறை சீதாராமின் தம்பி கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். சீதாராமுக்கு தம்பி மீது அதீத பாசம். அவர் வீடு திரும்பும் வரை கிட்டத்தட்ட 18 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த சீதாராம், பாரதியார் பாடல்களைத் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்துகொண்டே இருந்தார். பாரதியாரின் அத்தனை பாடல்களும் அவருக்கு அத்துப்படி. இது அவர் செய்த தபஸ் என்றே சொல்ல வேண்டும். `பாரதியாரின் பாடல்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்தது தான் என் சொத்து’ என்று சொல்லி மகிழ்வார்’  என்கிறார் அவரது சீடரும் தமிழறிஞருமான தி.ந.ராமச்சந்திரன்.

பாரதியாரின் கவிதைகளை அவர் முன்பு பாடிக்காட்ட, திருலோக சீதாராமுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், பாரதிதாசன் கவிதைகளை அவர் முன்பு பாடிக்காட்டி அவரைப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறார். ஆனால், அதே பாரதிதாசனோடு சீதாராம் கோபித்துக்கொண்ட நிகழ்வும் உண்டு. அது பாவேந்தருக்கு மணிவிழா ஆண்டு. கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையிலான மணிவிழா குழுவில் திருலோக சீதாராம் செயலாளர். திருச்சியில் நடைபெற இருந்த மணி விழாவுக்கு குறித்த தேதியில் பாரதிதாசன் வரவில்லை. விழா ரத்தாகிவிட்டது. சேகரித்த மணிவிழா நிதியோடு பாரதிதாசனைச் சந்திக்கப் போனார் சீதாராம். விழா ரத்தான கோபத்தில் இருந்த பாரதிதாசன்,  `விழா நடத்தாம என்னை அவமதிச்சிட்டீங்க. இது மட்டும் எதுக்கு?’ என்றார். சீதாராமுக்குக் கடும்கோபம்.

 ‘இங்க இருக்கான்டா தமிழன்!’

`அய்யா கவிஞரே... நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை. ஆனால் உங்கள் பாடல்கள், எங்களுக்குத் தேவை; இந்தச் சமூகத்துக்குத் தேவை' எனச் சத்தமாகப்  பேசியிருக்கிறார்.

உட்கார்ந்திருந்த பாரதிதாசன் எழுந்து விறுவிறுவென வந்து, பக்கத்தில் இருந்தவர்களிடம் சீதாராமைக் காட்டி, `பார்டா...  `நீ வேணாம்... உன் பாட்டுதான் வேணும்'னு சொல்றான். இங்க இருக்கான்டா தமிழன்’ என நெகிழ்ந்தாராம்.

 ‘இங்க இருக்கான்டா தமிழன்!’

தான் நடத்திய `சிவாஜி’ இதழின் 17-ம் ஆண்டு மலருக்கு பாவேந்தரிடம் சீதாராம் கவிதை கேட்க, அவரோ சீதாராமைப் பற்றி கவிதை எழுதிக்கொடுத்துவிட்டார். இவருக்கு அதிர்ச்சி.
`என்ன... நான் மலருக்கு கவிதை கேட்டா... நீங்க என்னைப் பற்றி எழுதிக்கொடுத்திருக்கீங்க?’ என சீதாராம் கேட்டார்.

‘டேய்... உனக்கு என்ன பஞ்சம் தெரியுமா? புகழ் பஞ்சம். உன் அருமை உனக்குத் தெரியலை. அதான் நான் கவிதையா எழுதி, என் கையெழுத்தும் போட்டிருக்கேன். பரவாயில்லை, மலர்ல இந்தக் கவிதையை போடு’ என்று சொல்லியிருக்கிறார் பாவேந்தர்.

சீதாராமின் கவிதை வாழ்வின் கஷ்ட ஜீவனத்தை உணர்ந்து, `உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்... என்ன வேண்டும்?’ என ஜி.டி.நாயுடு கேட்டபோது, தனக்கென எதுவும் கேட்காமல், `திருச்சி சீதாலட்சுமி ராமசாமி காலேஜுக்கு ஒரு பஸ் கொடுங்க’ என கேட்டு வாங்கி, அதை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது சீதாராமின் ஈர உள்ளத்துக்கு உதாரணம். இந்தக் குணத்தை தன் படைப்புலகம் வரை நீட்டியிருந்தார். தான் மொழிபெயர்த்த `சித்தார்த்தன்’ புத்தக ஆசிரியர் ஹெர்மென் ஹெஸ்ஸே ஜெர்மனியில் இறந்தபோது, தமிழ்நாட்டில் இருந்த சீதாராம், `பிரம்மரிஷி ஹெர்மன் ஹெஸ்ஸே இறந்த செய்தி கேட்டேன். அவருக்காக தீட்டு காக்கவில்லை என்றாலும், ஒரு முழுக்கு போட்டேன்...’ என தான் துக்கம் அனுஷ்டித்ததை எழுதியிருக்கிறார்.

தன் வாழ்நாள் எல்லாம் பாரதி, பாரதிதாசன் பாடல்கள் மற்றும் தனது கவிநண்பர்களின் கவிதைகளை மேடைகளில் பாடிப் பரப்பிய திருலோக சீதாராம் என்கிற கானக் குயிலின் கடைசி நாள் பற்றி ஆவணப் படத்தில் இப்படிச் சொல்கிறார் தமிழ் அறிஞர் தி.ந.ராமச்சந்திரன்...

`மாதாமாதம் தன் பதிப்புத் தொழிலின் கணக்குகளை எழுதி பேலன்ஸ் ஷீட் போடுவதில் மகா கெட்டிக்காரர் திருலோக சீதாராம். அவர் எழுதும் கணக்குகளில் அவ்வளவு துல்லியம் இருக்கும். அவர் இறந்த தினத்தன்றும் கணக்குப் பார்த்து முடித்தவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்... `என் கணக்கு தீர்ந்தது என்றுதான் அடுத்த சில மணி நேரங்களில் அவர் இறந்தும்போனார்’ என்கிறார் கலங்கிய கண்களுடன்.

இப்படி உருக்கமும் நெருக்கமுமான தகவல்களோடு, தமிழ் இலக்கிய வரலாற்றில் திருலோக சீதாராமின் பங்கைச் சுட்டிக்காட்டியபடியே விரிகிறது இந்த ஆவணப் படம். பாரதிதாசனின் பாடலுக்கு ஓவியர் மருது வரைந்த ஓவியங்களை அனிமேஷன் செய்து காட்சிப்படுத்தியிருப்பது ஆவணப் படத்தில் புது முயற்சி. சுவாரஸ்யத் தகவல்களுக்கு இணையாக, பின்னணி இசையும் இடையிடையே பாரதி, பாரதிதாசன் பாடல்களும் ஆவணப் படத்தை மேலும் சிறப்பாக்குகின்றன.

 ‘இங்க இருக்கான்டா தமிழன்!’

``எங்கள் காவிரி பூமியான திருவையாறுதான் சீதாராமுக்கு பூர்வீகம் என்றாலும், பெரம்பலூருக்கு அருகில் தொண்டமாந்துறையில் தாய்மாமா வீட்டில் வளர்ந்தவர். இலக்கிய மேடைகளில் நவீனக் கவிதைகள் பற்றி பேசியும், இசையமைத்துப் பாடியும் வரும் என்னை, சீதாராம் வாழ்க்கை ஈர்த்ததில் ஆச்சர்யம் இல்லை. பாரதி கவிதைகள் மீது மட்டும் அல்ல... அவரது குடும்பம் மீதும் சீதாராமுக்கு அதிக ஈடுபாடு உண்டு. பாரதி மனைவி செல்லம்மா பாரதியின் இறுதிகாலத்தில், அவரோடு மூன்று மாதங்கள் தங்கி, அவருக்குப் பணிவிடை செய்தார் சீதாராம். செல்லம்மாவின் உயிர் பிரிந்தது, தன்னை பாரதியின் ஆன்மிகப் புத்திரன் என்று அழைத்துக்கொண்ட திருலோக சீதாராம் மடியில்தான். சீதாராம், தன் கவிதை களாலும் இசையாலும் உருவாக்கியது ஒரு சௌந்தர்ய உலகத்தை. தேர்ந்த கணக்காளரான இவரது வாழ்வின் லௌகீகக் கணக்குகள் மட்டும் கடைசி வரை டேலி ஆகாமலே இருந்தது துயரம்தான். இவரைப் போன்ற எத்தனையோ ஆளுமைகள் சேர்த்துக்கொடுத்த இலக்கிய வளம் மூலம்தான் இன்றைக்கு தமிழின் பண்பாடும் பெருமையும் தெரியவந்தன. சீதாராம் போன்ற ஆளுமை களை ஆவணப்படுத்துவது இன்றையச் சூழலில் மிக முக்கியம். பிப்ரவரி மாதம் 18-ம் தேதி இந்த ஆவணப் படத்தை வெளியிட நினைத்திருக்கிறோம். அதன் பிறகு திருலோகம் என்னும் கானக்குயில் இலக்கிய ஆர்வலர் களின் காதுகளில் கூவும்’’ என்கிறார் ஆவணப் பட இயக்குநர் கவிஞர் ரவிசுப்பிரமணியன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism