மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும்! - 17

குடி குடியைக் கெடுக்கும்! - 17
பிரீமியம் ஸ்டோரி
News
குடி குடியைக் கெடுக்கும்! - 17

#BanTasmac தொடர்பாரதி தம்பி, படங்கள்: வி.சிவக்குமார், தே.சிலம்பரசன்

‘எதிர்வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும். ஏழை நடுத்தரக் குடும்பங்களைச் சூறையாடும் மதுக் கடைகளை மூடவேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று இது செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக உள்நாட்டு மதுபானத்துக்குத் தடை விதிக்கப்படும். ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகளுக்கும் தடை விதிக்கப்படும். இந்தத் தடையின்போது மதுவிலக்கு முழுமையாக அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க தனிப் படைகள் அமைக்கப் படும். அதையும் தாண்டி, எங்கேனும் மதுபானங்கள் விற்கப்படுவது தெரிந்தால், மக்கள் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மக்கள் பெரும் இயக்கமாகத் திரண்டு இதை நிகழ்த்த வேண்டும். தேவைப்பட்டால், மதுபான ஆலைகளை அழிக்கவும் பெண்கள் தயங்கக் கூடாது’ -  இது தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித் தலைவி, அம்மா அவர்கள் பேசியது அல்ல... பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் கடந்த வாரம் பேசியது. பீகாரில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மதுவிலக்கு அமலுக்கு வரவிருக்கும் நிலையில், அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் சாத்தியங்கள் குறித்து, அந்த மாநில அரசு முழு வீச்சில் ஆய்வுசெய்து வருகிறது. தேர்தலுக்கு முன்னர் ஓட்டு வாங்குவதற்காக பெயர் அளவுக்கு அறிவித்து விட்டு, தேர்தலுக்குப் பிறகு ‘ஆந்திராவைப் பார், பாண்டிச்சேரியைப் பார்... அங்கு மதுக் கடைகள் இருக்கும்போது இங்கு மட்டும் எப்படி மூட முடியும்?’ என வியாக்கியானம் பேசாமல், சொன்னது சொன்னபடி தேர்தல் வெற்றிக்குப் பிறகு ‘முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு’ என நிதீஷ்குமார் செயல்படுத்திக் காட்டிவிட்டார்.

குடி குடியைக் கெடுக்கும்! - 17

இதில் முக்கியமானது, ‘தேவைப்பட்டால், மது ஆலைகளை அழிக்கவும் மக்கள் தயங்கக் கூடாது’ என ஒரு முதலமைச்சரே சொல்கிறார். அவர் பெயர் அளவுக்குச் சொல்கிறாரா, உண்மையிலேயே சொல்கிறாரா, உள்ளூர் சாராய முதலைகளை சாதாரண மக்கள் எதிர்கொள்ள முடியுமா என்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், ஒரு சமூகத் தீங்கை அழித்து அப்புறப்படுத்தும் கடமையில் மக்களும் பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் அழைப்புவிடுக்கிறார். ‘அரசு உங்கள் பக்கம் இருக்கும்’ என நம்பிக்கை தருகிறார். அப்படியே தமிழ்நாட்டு நிலைமையை ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். எங்கேனும் டாஸ்மாக் வாசலில் நான்கு பேர் சேர்ந்து முழக்கம் எழுப்பினாலே பத்து, இருபது போலீஸ்காரர்கள் பதறியடித்துப் பாதுகாப்புக்கு ஓடிவருகிறார்கள். சில மாதங்களுக்கு முந்தைய டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களின்போது தமிழ்நாட்டு டாஸ்மாக் வாசல்களில் காக்கிச் சட்டைகள் பாதுகாப்புக்கு இருந்த கண்கொள்ளாக் காட்சியை மறக்க முடியுமா? சென்னையில் ஒரு டாஸ்மாக் கடையின்மீது கல் எறிந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் மண்டையை உடைத்து, ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து உள்ளே தள்ளினார்கள். தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக்கை மூடக் கோரிப் போராடிய நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவுசெய்தார்கள். சமீபத்தில் ஜெயலலிதா பேனர்களை அப்புறப்படுத்திப் போராடியவர்கள் மீதும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாகத்தான் வழக்கு பாய்ந்தது. பீர் பாட்டிலும் பொதுச் சொத்து, ஜெயலலிதா பேனரும் பொதுச் சொத்து... எனில் மக்களின் உயிர் மட்டும்தான் அனாமத்தா?

குடியின் மூலம் 200 வகையான நோய்கள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. அவர்கள் சொல்வது உண்மையான மதுவுக்குத்தான் பொருந்தும். தமிழ்நாட்டு டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, விஸ்கியின் பெயரால் நேரடி எரிசாராயமே விற்பனை செய்யப்படுகிறது.

‘‘சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தயாரித்த பிறகு கிடைக்கும் மொலாசஸ் கழிவுகளில் இருந்து எரிசாராயம் (ஸ்பிரிட்) தயாரிக்கப்படுகிறது. இந்த எரிசாராயத்தைப் பயன்படுத்தி பீர், விஸ்கி, பிராந்தி, ரம் என பல்வேறு மது வகைகளைத் தயாரிக்கின்றனர். ஆனால், இந்த மதுபானத் தயாரிப்புக்கு உரிய எந்த நடைமுறையும் முறையாகப் பின்பற்றப் படுவது இல்லை. நடப்பது எல்லாம் தேவையான அளவு ஸ்பிரிட்டுடன் இதர கெமிக்கல்களைச் சேர்த்து, பாட்டில்களில் அடைத்து அனுப்பிவிடுகின்றனர். இது கிட்டத்தட்ட நேரடி சாராயம்தான். அரசு டாஸ்மாக் கடைகளில் விற்பதே நேரடி கள்ளச் சாராயம்தான்’’ என்கிறார் மதுபான ஆலைகளைப் பற்றி நன்கு அறிந்த அரசுத் துறை அதிகாரி ஒருவர்.

இது உண்மைதான் என்பதை அறிய பெரிய ஆய்வுகள் தேவை இல்லை. தேர்ந்த குடிகாரர்களே இந்த உண்மையை ஒப்புக் கொள்கின்றனர். சென்னை பட்டினம்பாக்கத்தில் சந்தித்தப் பெண்மணி ஒருவர், ‘‘பத்து, பதினஞ்சு வருஷத்துக்கு முன்னயும் எங்க ஆளுங்க குடிக்கத்தான் செஞ்சாங்க. குடிச்சுட்டு வந்து, பாட்டுப் பாடுவாங்க; டான்ஸ் ஆடுவாங்க; சாப்பிட்டுத் தூங்கிடுவாங்க. உடம்புக்குப் பெருசா நோவு எதுவும் வராது. ‘பாவம், உடம்பு நோக வேலைபார்க்கிறாங்க, நிம்மதியாத் தூங்கட்டும்’னு நினைப்போம். ஆனா, இப்போ இவங்க குடிக்கிறது சாராயமே இல்லை. அதுல வேற என்னமோ இருக்கு. குடிச்சதும் ஆளே மாறிடுறாங்க. கொஞ்ச நேரத்துலயே சுருண்டு விழுந்துடுறாங்க. குடிச்சே ஆகணும்கிற நிலைமை வந்திடுது. ஒரு சில வருஷம் குடிக்கிற ஆளுங்க, உடம்பு தொங்கிப்போய் விதவிதமா நோய் வந்து செத்துப்போயிடுதுங்க. டாஸ்மாக் சாராயத்துல என்னமோ பிரச்னை இருக்கு’’ என்று சொன்னார்.

தமிழ்நாட்டில் 6,823 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. 11 மதுபான ஆலைகள் சாராய உற்பத்தியில் ஈடுபடுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் சாராயத்தின் தரம் குறித்து ஆய்வுசெய்ய, டாஸ்மாக் நிர்வாகத்திடம் எந்த முறையான அமைப்புகளும் இல்லை. அப்படியே இருந்தாலும் மிடாஸ் நிறுவனத்தில் ஓர் அரசு அதிகாரி ஆய்வுசெய்துவிட முடியுமா என்ன?

நிதீஷ்குமார் மதுவிலக்கு குறித்துப் பேசிய அதே கடந்த வாரத்தில் தமிழ்நாட்டின் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், ‘தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமே இல்லை’ என மீண்டும் ஒருமுறை உறுதியுடன் சட்டமன்றத்தில் அறிவித்தார். ‘சாராயம் விற்காமல் இருப்பது சாத்தியமே இல்லை’ எனப் பேசும் அமைச்சரின் துறை பெயரில் எதற்கு மதுவிலக்கு? முதலில் அந்தப் பெயரை விலக்கிக்கொண்டு, `மதுபானத் துறை அமைச்சர்’ என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் பொருளாதார இழப்பை மத்திய அரசு ஈடுகட்டும் என்றால்,  மதுவிலக்கு கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கலாம்’ என்கிறார் அமைச்சர். இந்த வாதம் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது.

பொறியாளர்கள் சங்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட பல தரப்பினரும், டாஸ்மாக் வருவாயை வேறு எந்த வகையில் எல்லாம் ஈடுகட்ட முடியும் என பல்வேறு ஆய்வறிக்கைள் தந்துள்ளனர். அதில் முக்கியமானது இலவசத் திட்டங்கள் மற்றும் மானியத் திட்டங்களைக் குறைப்பது. 2015-16ம் ஆண்டில் இலவசங்கள் மற்றும் மானியங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 59,185 கோடி ரூபாய். இது மாநில பட்ஜெட்டில் 40 சதவிகிதம். சில அடிப்படை இலவசங்கள் மற்றும் மானியங்களை மற்றும் தொடர்ந்து கொண்டு மற்றவற்றை நிறுத்திவிடலாம் என ஆலோசனை சொன்னார்கள். மிக்ஸி, கிரைண்டர், ஆடு-மாடு, தாலிக்குத் தங்கம், லேப்டாப் உள்ளிட்ட இலவசங்களை நிறுத்தினால், ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3,500 கோடி ரூபாய் மிச்சப்படுத்த முடியும் என்கிறார்கள். இதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய செலவீனம், இலவசப் பொருட்களை விநியோகிக்கவும் பராமரிக்கவும் ஆகும் செலவுதான். கடந்த 5 ஆண்டுகளில் இந்த வகையில் ஆகியிருக்கும் செலவு 42,441 கோடி ரூபாய். சராசரியாக ஆண்டுக்கு 8,488 கோடி ரூபாய்.

இப்படி செலவுகளைக் குறைப்பதற்கான யோசனைகள் ஒருபக்கம் என்றால், புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்குவது குறித்த ஆலோ சனைகளும் சொல்லப்பட்டன. தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்தப் பொறியாளர்கள் சங்கத்தில் இருந்து, 5 லட்சம் கோடி ரூபாய்க்கு வருவாய் மற்றும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைத் தரும் திட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. 1. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஏரி, கண்மாய், குளங்களின் வண்டல் மண்ணைத் தூர்வார வெளிப்படையாக ஏலம் விடுவதன் மூலம் ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் கிடைக்கும்; நிலத்தடி நீர்வளமும் பெருகும். 2. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களுக்குச் சொந்தமான விளைநிலங்களிலும், வாடகை இடங்களிலும் முறையாக வரி/வாடகை வசூலித்தாலே, ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் கிடைக்கும். 3. பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை மிகக் குறைந்த தொகைக்குக் கொடுக்கும் கொள்கை முடிவில் மாற்றம் செய்தால், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். இப்படி பல்வேறு சாத்தியங்கள் அதில் முன்வைக்கப்பட்டிருந்தன.

குடி குடியைக் கெடுக்கும்! - 17

இப்படி எல்லாம் ஆலோசனைகள் வழங்குவது தனிப்பட்ட நபர்களின்/அமைப்புகளின் நல்லெண்ண வெளிப்பாடு. ஆனால், நாம் புரிந்துகொள்ளவேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது. இந்த அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என முடிவெடுத்து, அதன் மூலம் ஏற்படும் வருவாயை எப்படி ஈடுகட்டுவது, அதற்கான வழிமுறைகள் என்ன எனத் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கவில்லை. சொல்லப் போனால் ‘டாஸ்மாக்கை மூடு’ என்ற கோரிக்கையை எந்தப் பரிசீலனையும் இல்லாமல் நிராகரிக்கிறது அன்புச் சகோதரியின் அரசு. மக்கள் ஒவ்வொரு நாளும் மதுவால் செத்துக்கொண்டிருந்தாலும், மற்ற அரசியல் கட்சிகள் ‘இந்த வாக்குறுதியைத் தந்தால் தேர்தலில் வாக்குகளைப் பெற முடியும் போல’ என நினைத்து டாஸ்மாக்கை மூடுவோம் என அறிவித்தாலும் ஜெயலலிதா அசைந்துகொடுக்க வில்லை. எனவே, வருவாய்க்கான மாற்று வழிகள் குறித்த யோசனைகள் இந்த அரசுக்குத் தேவைப்படவே இல்லை. தேவையே இல்லாத இடத்தில் நமது பரிந்துரைகள் பொருளற்றவை என்பதுடன், டாஸ்மாக்கை மூடுவதற்கு அதன் வருவாய் இழப்பு மட்டுமே தடை என்ற போலி பிரசாரத்துக்குத் துணைபோவதாகவும் ஆகிவிடும். மேலும், டாஸ்மாக்கை மூடினால் வருவாய் இழப்பு ஏற்படும் என்றால், அதற்கு உரிய  திட்டங்களைத் தீட்டவேண்டியது மக்களின் வேலை அல்ல; அது அரசின் பொறுப்பு. அதற்குத்தானே இந்த அரசு என்ற சிஸ்டம் இருக்கிறது? அதற்குத்தானே ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மக்கள் பணத்தில் ஊதியம் வாங்குகிறார்கள்? ‘டாஸ்மாக்கை மூடுகிறோம்’ என கொள்கை முடிவு எடுக்கவேண்டிய அரசு, அந்த முடிவை எடுக்காமல், ‘எடுக்க மாட்டோம்’ என உறுதியாக அறிவிக்கவும் செய்து விட்டு, அதைச் செயல்படுத்துவதில் ஏற்படும் சிக்கல் குறித்து மட்டும் கவலைப்படுவது அப்பட்டமான கபட நாடகம்.

குடி குடியைக் கெடுக்கும்! - 17

வருவாய் இழப்பு என்பது பிரச்னையின் ஒரு பகுதி. அதுவே சிக்கலின் முழுமை அல்ல. அவ்வாறு மீண்டும், மீண்டும் நம் முன்னால் விவரிக்கப்படுகிறது. அப்படியானால் டாஸ்மாக்கின் வருகைக்கு முன்பு இந்த அரசு இயங்கவே இல்லையா? அப்போது எங்கிருந்து வருவாய் வந்தது? உழைக்க வேண்டியவர்கள் குடித்துவிட்டு முடங்குவதால் ஏற்படும் உற்பத்தி இழப்பின் பண மதிப்பைக் கணக்கிட்டால், அது டாஸ்மாக் வருவாயைத் தாண்டாதா? இந்த அளவுக்கு மது வருவாய் இல்லாத மற்ற மாநிலங்களில் எப்படிச் சமாளிக்கிறார்கள்? எனவே, வருவாய் இழப்பு என்பது நம் முன்னால் காட்டப்படும் ஜிகினா. உண்மையில் டாஸ்மாக்கை மூடினால், அதற்கு மதுபானங்கள் விநியோகிக்கும் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படும். அதனால்தான் இவர்கள் மூட மறுக்கிறார்கள்.

- போதை தெளிவோம்...