Published:Updated:

நட்பு வரிசை!

நட்பு வரிசை!

அ.செ.நாகராஜன் ஓவியங்கள்:ஸ்யாம்

நட்பு வரிசை!

அ.செ.நாகராஜன் ஓவியங்கள்:ஸ்யாம்

Published:Updated:
நட்பு வரிசை!

செயற்கை வெளிச்சங்களை வென்று  உலகுக்கு வெளிச்சம் தரும் முழு நிலவும், காற்றின் அசைவில் கேட்கும் தென்னை ஓலைகளின் இசையும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தமிழரசனை கொஞ்சமும் சலனப்படுத்தவில்லை. வகுப்புத் தோழன் பிரணவ் முகமே, மனம் முழுக்க இருந்தது.

‘நண்பன் எப்போது நம்மிடம் பழையபடி பேசுவான்? ஒரு சிறிய விஷயம் இவ்வளவு பெரிய பிரச்னையாக வளருமா?’

நட்பு வரிசை!

தமிழரசனும் பிரணவும் மூன்று வருடங்களாக நெருங்கிய நண்பர்கள். எங்கே சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.வகுப்பில் நான்காவது வரிசையில், ஒன்றாக அமர்வார்கள். சில நாட்களாக, தமிழரசனுக்கு கரும்பலகையில் எழுதிப் போடும் எழுத்துகள் சரியாகத் தெரியாமல்போனது. மருத்துவரிடம் சென்று,மூக்குக்கண்ணாடி அணிந்துகொண்டான். முதல் வரிசை இருக்கையில் அமர்ந்துகொள்ள ஆசிரியரிடம் அனுமதி வாங்கினான்.

‘‘பிரணவ், நான் நாளையில் இருந்து ஃபர்ஸ்ட் பெஞ்ச்ல உட்கார்ந்துக்கிறேன்டா’’ என்றான்.

‘‘இது சுதந்திர நாடு. நீ எங்கே வேணும்னாலும் உட்காரலாம். ஏன் என்னிடம் பெர்மிஷன் கேக்கிற?” எனக் கிண்டலாகச் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான் பிரணவ். அன்றிலிருந்து தமிழரசனைப் புறக்கணிக்கவும் தொடங்கிவிட்டான்.

சக நண்பர்கள் பிரணவிடம் பேசிப் பார்த்தார்கள். அதற்கு, ‘‘தமிழ், முன்னாடி பெஞ்சுக்குப் போனதுகூட பெரிய விஷயம் இல்லைடா. ஆனா, என்னோட எதிரி ராஜேஷ் பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டு சிரிச்சுச் சிரிச்சுப் பேசுறான். இனி,் அவனோட பேசவே மாட்டேன்’’ என்று சொல்லிவிட்டான்.

அந்த ராஜேஷ்தான் கிளாஸ் லீடர். ஆசிரியர் இல்லாத நேரத்தில், பிரணவ் ஏதாவது பேசிக்கொண்டும் கிண்டல் செய்துகொண்டும் இருப்பதால், பல முறை ஆசிரியரிடம் சொல்லி இருக்கிறான். அதனால், ராஜேஷை, பிரணவ் எதிரியாகவே நினைப்பான்.

தமிழரசனின் வருத்தத்தை உணர்ந்த ராஜேஷ், ‘இந்தப் பிரச்னையை நான் முடிவுக்குக் கொண்டுவர்றேன்’’ என ஆறுதல்படுத்தினான்.

சில நாட்கள் கழித்து, தமிழரசனையும் பிரணவையும் ஓய்வு அறையில் இருந்த வகுப்பு ஆசிரியர் அழைத்தார். இருவரும் தயக்கத்துடன் சென்றார்கள்.

‘‘வாங்க, உங்க நட்பு பற்றி பள்ளிக்கே தெரியும். இருவரும் சேர்ந்து, பள்ளி ஆண்டு விழாவில் நடத்திய நாடகம் பற்றி இன்று வரை பேசுகிறார்கள். ஒற்றுமையைப் பற்றி நாடகம் நடத்திய உங்களுக்கு நான் அறிவுரை சொல்லப்போவது இல்லை.  இருவரும் இங்கே அமர்ந்து, உங்களது நட்பு நாட்களை நினைத்துப் பாருங்கள். மனம்விட்டுப் பேசுங்கள். அதன் பிறகும் உங்கள் முடிவில் மாற்றம் ஏற்படாவிட்டால், உங்கள் பிரச்னையில் நான் தலையிடவில்லை” என்ற ஆசிரியர், வெளியே சென்றுவிட்டார்.

சரியாக 10 நிமிடங்கள் கழித்து, ஒற்றுமையாக கைகோர்த்தபடி இருவரும் வெளியே வந்தார்கள். அவர்கள் முகத்தில் புன்னகை.

‘‘சார், என் மேல்தான் தவறு. நண்பனின் உடல் பிரச்னைக்கு நான்தான் உதவி இருக்கணும்’’ என்றான் பிரணவ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நட்பு வரிசை!

‘‘இல்லை சார், நானும் ஈகோவோடு இருந்துட்டேன். உடனடியாகப் பேசி இருந்தால், இப்படி ஆகி இருக்காது. இனி, ஒற்றுமையாக இருப்போம். நன்றி சார்” என்றான் தமிழரசன்.

‘‘உங்கள் நன்றியை ராஜேஷிடம் சொல்லுங்கள். அவன்தான் இந்த யோசனையைச் சொன்னான்” என்றார் ஆசிரியர்.

வகுப்புக்கு வந்த பிரணவ், ராஜேஷ் கரங்களைப் பற்றி, ‘‘ஸாரி ராஜேஷ், இவ்வளவு நாளா உன் மனசைப் புரிஞ்சுக்காம இருந்துட்டேன்’’ என்றான்.

பின்னாலே வந்த ஆசிரியர், ‘‘இது அருமையான நாள். தமிழரசனோடு மீண்டும் நண்பன் ஆனதோடு, இவ்வளவு நாளா எதிரியாக நினைத்திருந்தவனை நண்பனாக்கி இருக்கே. இனி, உங்க நட்பு அலைவரிசை மாறக் கூடாது. மூன்று பேரும் முதல் வரிசையில் உட்காருங்க” என்றார்.

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, புன்னைகைத்துக்கொண்டார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism