Published:Updated:

பச்சை றெக்கைக்குள் உறையும் மஞ்சள் பற்கள்!

பச்சை றெக்கைக்குள் உறையும் மஞ்சள் பற்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பச்சை றெக்கைக்குள் உறையும் மஞ்சள் பற்கள்!

கவிதை: நரன், ஓவியம்: செந்தில்

ம்மா முன்பு நமக்கு முதுகு இருந்ததா? 

ஆம் மகளே...

ஆனால் அது நிமிர்ந்திருந்தது.

அம்மா முன்பு நமக்கு கரங்களிருந்தனவா?

ஆம் மகளே...

ஆனால் அவை நம் தோளில் தொங்கின

நெஞ்சின் குறுக்காய்க் கட்டப்பட்டிருக்கவில்லை.

அம்மா முன்பு நமக்கு புட்டமிருந்ததா?

ஆம் மகளே...

ஆனால் பிரம்புகளில்லை.

பச்சை றெக்கைக்குள் உறையும் மஞ்சள் பற்கள்!

இந்த மலையைப் போன்ற மார்புகளிருந்ததா?

ஆம் மகளே...

ஆனால்

மரபீரோவின் உருண்டை கைப்பிடியைப்போல

அதைப் பற்றித் திருகும்

முரட்டு ஆண் கரங்களில்லை.

குழந்தையாலோ உணவாலோ நிரப்பப்பட்ட உப்பலான வயிறு இருந்ததா?  

ஆம் மகளே...

ஆனால் அது அந்நியர்களாலும்

அந்நியப் பயிர்களாலும் நிரப்பப்படவில்லை.

நம் உடலின் மீது உடைகள் தரிக்கப்பட்டிருந்ததா?

ஆம் மகளே...

அவை செங்குத்தாகவோ இட வலமாகவோ கழட்டவல்லவை

கிழிக்கப்பட்டவை அல்ல.

நம்மிடையே நெல் இருந்ததா?

ஆம் மகளே...

ஆனால் பெயரிடப்படவில்லை.

நிலம், ஆறுகள்..?

ஆம் மகளே...

முன்பு நிலத்தில் மண்ணும்

ஆறுகளில் நீரும் ஓடின.

இப்போதுதாம்

வலது காலணிகளை நாம் இடது காலில் அணிகிறோம்.

சில நேரம் இரு கால்களிலும் இடது இடது இல்லையேல் வலது வலது.  

அம்மா முன்பு நமக்கு வாயிருந்ததா..?

நாக்கு... பற்கள்... சிரித்தோமா..?

ஆம்... மகளே

காட்டு மக்காச்சோளத்தின் மேல் பச்சை றெக்கைகளை உரித்துப்பார்.

இப்போதும் சிரித்தபடி தெரியும்

நம் பழைய மஞ்சள் பற்கள்.