Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

படம்: அசோக் அர்ஸ்

நெல் வயலின் மகசூலை அதிகரிப்பவள் 

கம்மாயில் நீர் இறைப்பவர்கள்

பிடித்து கரையில் போட்டிருந்த

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெண் கெண்டைமீன்களைக்

கொத்திப் பறந்த நாரை

நீ களை பறித்த வயலின்

வரப்பில் அமர்ந்தபோது

தலையுயர்த்திப் பார்த்தாய்.

மடை மாற்றி நீர் பாய்ச்ச

அதே வரப்பில் காத்திருந்த நான்

வாய்க்காலில் ஓடும் சிறு மீன்களென

உன் கண்களைச் சந்தித்தேன்.

பச்சைப் பயிர்களுக்கிடையே

ஊடாடும் உன் கைகளில்

மரகதப்பச்சை வளையல்களின் சிணுங்கல்கள்.

சலசலவென நீர் பாயும் பாத்திகளில்

கெண்டைக்கால் வரை சகதியில் மூழ்க

களையெடுப்பில் முந்திப் போகிறாய்.

உன் உரசல் கசியவிடும் சுகத்தில்

பொன்னியின் மகசூல் கூடும் என்பதை

கண்ணெட்டும் தூரம் வரை

பசேலென இருக்கும் வயலுக்கு

யாரும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

அறுவடைக் காலத்தில்

நீ களை பறித்த வயலைப் பார்ப்பவர்கள்

குமைந்துபோய் நிற்பதை

வயலின் உரிமையாளன்

என்னவென்று புரிந்துகொள்வானோ!

- மௌனன்

சொல்வனம்

யானை நிறத்தவள்

ஒரு பயணத்தின்போது உடனிருந்த அவள்

தூய இருளைப் போலிருந்தாள்

ஆதிக் கருவறையின் நினைவூட்டினாள்

போட்டான்கள் பிறந்தே இருக்காத

பெருவெடிப்பின் முந்தைய நொடியவள்

இரவுக்கடலின் வெள்ளிக் கப்பல்களாய்

அகண்ட இமைகளில் பொதிந்த கண்கள்

வேட்டை விலங்கின் தோலுரிக்கும்

வலிமையான கரங்கள் அவளுக்கு

ஒளியை விழுங்கிச் செரித்திருக்கும்

துங்கக் கரியின் தூய நிறத்தவள்

அதீதமான உதடுகள் உதிர்த்த

அதிர்ந்த சொற்களில் அலட்சிய பாவம்

அழகுப் போட்டிகள் நிராகரிப்பதை

காதல் கவிஞர்களின் புறக்கணிப்பை

திரைப்படங்களின் தீரா அவமதிப்பை

விளம்பரங்கள் விலக்கிவைப்பதை

திருமணங்கள் தள்ளிப்போவதை

மின்னும் பற்களிடையே நிறையப் பேசினாள்

ஒரு கருமாரி அம்மன் கோயில் நிறுத்தத்தில்தான்

இறங்கி கண் நிறைந்துபோனாள்.

- ஷான்

ஓ... கேண்டி க்ரஷ் பெண்ணே!

வார்த்தைகளை இனிப்பாக்கிக்

கொஞ்சம் வாசமும் சேர்த்துவிடுகிறாள்

பன்னீர் இதழ்கள்கொண்டு

புள்ளிகளுக்குப் பதிலாக

முத்தங்களைத் தூவுகிறாள்

சோகம் இழையோடும் ஸ்டேட்டஸ்களுக்கு

மாற்றாக நேசம் கிளறும் கவிதைகளை

டிஸ்பிளே பிக்சர் ஆக்குகிறாள்

சொர்க்கத்தின் நிறத்தை அப்புகிறாள்

ரிப்ளைகளின் வழியாக

சுவாசங்களின் சத்தங்களைப்

பாடலாகப் பதிவுசெய்கிறாள்

அவ்வப்போது புன்னகைக்கும்

புகைப்படங்களும்கூட தரவிறங்குகிறது

வனாந்திர நிலமாகிக் கிடந்த

எனது வாட்ஸ்அப்

ஸ்மைலிகளின் கூடாகிறது

ஓ... கேண்டி க்ரஷ் பெண்ணே

உன்மீது இப்படித்தான் நான்

காதல்கொண்டேன்!

 -  விக்னேஷ் சி செல்வராஜ்