Published:Updated:

கனவுகளின் எடை கூடாதிருக்கட்டும்!

கனவுகளின் எடை கூடாதிருக்கட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
கனவுகளின் எடை கூடாதிருக்கட்டும்!

கவிதை: சம்யுக்தா மாயா, ஓவியம்: ஹாசிப்கான்

ரு சின்னத் திடுக்கிடலோடுதான் 

எதிர்கொள்ளவேண்டியிருந்தது நாம்

கருநீல அலைகள் நம் காலடியில் அதைச்

சிறு எள்ளலுடன் கொண்டுசேர்த்தபோது

கனத்த ஓட்டிற்கு கீழ் பிதுங்கிய

உப்புநீரில் உப்பிய உடல்

பெருகும் இருளில் வெளிறிக்கொண்டிருந்தது

இனி எத்திசைக்கும் பயனிலாத

துடுப்புக் கால்கள் துவண்டுவிட்டிருந்தன

அசைவற்ற அதன் கண்களுக்காய்

ஒரு துளி கண்ணீர் திரள்கையில்

என் கரங்களை அழுத்தமாகப் பற்றிக்கொள்கிறாய்

தன்னுடன் புன்னகையுடன் புகைப்படம்

எடுத்துக்கொள்கிறவர்களைப் பற்றிய

எந்தப் பிரக்ஞையுமற்று முற்றிலுமாய்

மரணித்துவிட்டிருக்கிறது அது

கனவுகளின் எடை கூடாதிருக்கட்டும்!

எடை கூடிய எதுவாயினும் உயிரற்றதும்

கடல் கரை ஒதுக்கிவிடும் என்கிறாய்

முன்னமே சொல்லியிருக்கலாம் நீ

சற்று முன்னர்தான் நம்மைப் பற்றிய

நிறைவேறாத கனவுகளை

நடுக்கடலுக்கு அனுப்பிவிட்டிருந்தேன்

உன் விரல்களுக்கிடையில் என் உள்ளங்கை

வியர்க்கத் தொடங்குகிறது

இந்த அப்பாவி கடல் ஆமை போல்

நாளை கரை ஒதுங்காதிருக்கட்டும் அவை.