Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 18

குடி குடியைக் கெடுக்கும் - 18
பிரீமியம் ஸ்டோரி
குடி குடியைக் கெடுக்கும் - 18

#BanTasmac தொடர்பாரதி தம்பி, படங்கள்: எல்.ராஜேந்திரன், ரா.ராம்குமார்

குடி குடியைக் கெடுக்கும் - 18

#BanTasmac தொடர்பாரதி தம்பி, படங்கள்: எல்.ராஜேந்திரன், ரா.ராம்குமார்

Published:Updated:
குடி குடியைக் கெடுக்கும் - 18
பிரீமியம் ஸ்டோரி
குடி குடியைக் கெடுக்கும் - 18

மிழ்நாட்டின் மிதமிஞ்சிய குடிக்கு மிகப் பெரிய காரணம், டாஸ்மாக் பார்கள். இவை, வாங்கிய சரக்கை வைத்து குடிக்க இடம் தேடி அலையும் ‘துன்பத்தில்’ இருந்து குடிகாரர்களை விடுதலைசெய்கின்றன. குறிப்பாக, பள்ளி - கல்லூரி மாணவர்கள் அதிகம் குடிப்பதற்கு இந்த பார்களே காரணமாக இருக்கின்றன. பார் இல்லை என்றால், சரக்கு அடிக்க ஓர் இடம் தேட வேண்டும். அதற்கு நான்கு பேரைக் கூட்டுச் சேர்க்க வேண்டும். ‘எதுக்கு அந்தத் துன்பம்? வாசல்ல சரக்கு, கொள்ளப்பக்கம் பார்’ என டாஸ்மாக் கடைதோறும் பார்களைத் திறந்து வைத்திருக்கிறது அரசு.

எந்த நேரம் வேண்டுமானாலும் தங்குதடையின்றி குடிப்பதற்குரிய மன உந்துதலை இந்த பார்கள் வழங்குகின்றன. ‘தனியா போய் என்னத்தைக் குடிச்சுக்கிட்டு’ என யாரும் நினைக்கவேண்டியது இல்லை. பாட்டிலும் கையுமாக பாருக்குள் நுழைந்தால், அங்கு எப்படியும் பத்து பேராவது இருப்பார்கள்.

ஒரு வாடிக்கையாளர், `ஒரு பொருளை வாங்க வேண்டும் அல்லது ஒரு சேவையை அனுபவிக்க வேண்டும்' என நினைத்தால், அந்த நினைப்பு மாறுவதற்குள் அவரைச் செயலுக்குள் தள்ள வேண்டும். அதற்கு நிறுவனங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதைப்போலவே ஒரு குடிமகனுக்கு, `குடிக்க வேண்டும்' என்ற எண்ணம் வந்தால், அதைச் செயல்படுத்துவதற்குரிய அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ‘சரக்கு வாங்கிடலாம். எங்கே வெச்சுக் குடிக்கிறது?’ என்ற எண்ணத்தில் இருக்கும் அவர் காசுக்குப் ‘பழம் வாங்குவோம், பருப்பு வாங்குவோம்’ என அவர் திசைமாறிவிடக் கூடாது. அதனால்தான் போர்க்கள வீரர்களைப்போல டாஸ்மாக் பார்கள் எந்த நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

டாஸ்மாக் பாரையும் போர்வீரனையும் ஒப்பிட்டாலும், உண்மையில் டாஸ்மாக் பார் ஒவ்வொன்றும் துர்நாற்றம் பிடித்த சாக்கடையை விடவும் கீழாகவே இருக்கின்றன. அந்தப்பக்கம் குடித்துக்கொண்டிருப்பார்கள்; இந்தப் பக்கம் சிறுநீர் கழித்துக்கொண்டிருப்பார்கள். இடது பக்கம் வாந்தி எடுத்துவைத்திருப்பார்கள்; வலது பக்கம் `சியர்ஸ்' சொல்வார்கள். பான்பராக் எச்சில், சிதறிய உணவுப் பண்டங்கள், பல வருடங்களாகச் சுத்தப்படுத்தப்படாத தரை, மலைபோல் குவிந்துகிடக்கும் சிகரெட் துண்டுகள்... என டாஸ்மாக் பாரைப்போல அருவருப்பான ஓர் இடத்தைப் பார்க்கவே முடியாது. ஆனாலும் ஏறப்போகும் போதைக்காக அவ்வளவு துர்நாற்றத்தையும் சகித்துக்கொள்கிறார்கள் குடிகாரர்கள்.

குடி குடியைக் கெடுக்கும் - 18

சரியாகச் சொல்வதானால், குடிகாரர்கள், மோசமாக ஏமாற்றப்படுகின்றனர். வேறு எந்தத் தொழில் துறையைக் காட்டிலும் அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித்தருவது டாஸ்மாக்தான். அப்படி வருமானம் தரும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த அரசு எத்தகைய வசதிகளைச் செய்து தந்திருக்க வேண்டும்? இதைக் கிண்டலாகக் கருத வேண்டாம். அரசு சாராயம் விற்கிறது; அதை ஒரு தொழிலாகச் செய்கிறது. அதுவும், 10 சதவிகிதம் விற்பனை குறைந்தால், நிபுணர் படை அமைத்து, விற்பனை குறைவுக்கான காரணத்தை ஆராயும் அளவுக்கு அந்தத் தொழில் மீது பற்றுடன் இருக்கிறது என்றால், அதற்குரிய நேர்த்தியுடன் அதைச் செய்ய வேண்டாமா?

8 ரூபாய் கொடுத்து டீ குடிக்கும் கடையை, அந்தக் கடை முதலாளி எவ்வளவு தூய்மையாக வைத்துக்கொள்கிறார்? 50 ரூபாய் கொடுத்து தோசை சாப்பிடும் ஹோட்டலின் சுத்தம் எப்படிப் பராமரிக்கப்படுகிறது? 8 ரூபாயில் டீக்கடைக்காரருக்கு ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்தான் லாபம் கிடைக்கும். டாஸ்மாக்கில் குடிமகன்கள் கொடுப்பதோ பல மடங்கு லாபம். அதில் சில ரூபாய்கூட பார்களைப் பராமரிப்பதற்காகச் செலவிடப்படுவது இல்லை. ‘டாஸ்மாக் கடைகளைத்தான் அரசு நேரடியாக நடத்துகிறது. பார்களை, தனியார்தான் ஏலம் எடுத்து நடத்துகிறார்கள்’ எனச் சொல்லப்படலாம். ஆனால், அந்தத் தனியார் பார்களின் தரத்தை, சுகாதாரத்தைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத் துவதும் அரசின் கடமை அல்லவா?

ஒரு பார் நடத்த, 23 ஒப்பந்த விதிகளை டாஸ்மாக் நிர்வாகம் வகுத்துள்ளது. சுத்தம், சுகாதாரம், காற்றோட்டம் எனப் பல விதிகள் அதில் இருக்கின்றன. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களை மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும்; உயிருள்ள பொருட்களைச் சமைத்து விற்பனை செய்யக் கூடாது என்பது அதில் ஒரு விதி. அடுப்பு வைத்து சமைக்கக் கூடாது. இந்த ஒரு விதியின் கீழ் டாஸ்மாக் பார்களை மதிப்பிட்டால் முக்கால்வாசி பார்கள் காலியாகிவிடும். பார்களில் சிகரெட் விற்கக் கூடாது என்பது இன்னொரு விதி. சிகரெட் விற்காத பார் ஏது? தண்ணீர் பாக்கெட், சிப்ஸ்... என எதுவாக இருந்தாலும் ஐ.எஸ்.ஐ முத்திரையிடப்பட்டதாக இருக்க வேண்டும்.

எம்.ஆர்.பி விலையில்தான் விற்க வேண்டும் என்பது மற்றொரு விதி. இவை எந்த பாரிலும் கடைப்பிடிக்கப்படுவது இல்லை என்பதற்கு ஆதாரமே தேவை இல்லை. அவ்வளவு வெளிப்படையான உண்மை அது. டாஸ்மாக் பார்கள் இந்த விதிமுறைகளின்படிதான் செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, சான்றிதழ் தரவேண்டியது சுகாதாரத் துறையின் வேலை. எங்கேனும் ஆய்வுசெய்ததாகத் தகவல் ஏதும் உண்டா? இல்லை. இவர்களால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது. ஏனெனில், டாஸ்மாக் பார்களை நடத்துவது வேறு யாரோ அல்ல; ஆளும் கட்சியின் அதிகாரம்மிக்கப் புள்ளிகள்தான் பார்களின் ஏலதாரர்கள்.

குடி குடியைக் கெடுக்கும் - 18

டாஸ்மாக் பார்களுக்கான ஏலம், ஆண்டுதோறும் நடக்கிறது. ஒரு டாஸ்மாக் கடையின் ஆண்டு சராசரி வருமானத்தில் 2.5 சதவிகிதம்தான் குறைந்தபட்ச ஏல கேட்புத் தொகை. உதாரணமாக, ஒரு கடையில் மாதத்துக்கு 30 லட்ச ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது என்றால், ஆண்டுக்கு 3.60 கோடி ரூபாய். இதில் 2.5 சதவிகிதம் கணக்கிட்டால் 9 லட்சம் ரூபாய் வருகிறது. இதுதான் அந்த பாருக்கான ஆரம்பக் கேட்புத் தொகை. ஏலம் கேட்பவர்கள் இதைவிட அதிகமாகக் கேட்கலாம். அதிக லாபம் ஈட்டக்கூடிய ஒரு தொழிலுக்கு அதிகம் பேர் போட்டிப்போடுவதும், ஏலத் தொகை அதிகரிப்பதும் இயல்பாக நடக்கும். இங்கும் அப்படித்தானே நடக்க வேண்டும்? ஆனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பார்களுக்கு குறைந்தபட்ச கேட்புத்தொகை என்னவோ, அதுதான் அதன் இறுதி ஏலத் தொகையாகவும் இருக்கும். ஏனெனில், பார்களின் ஏலத்தில் அத்தனை சிண்டிகேட் விளையாடுகிறது.

ஆளும் கட்சியினரின் செல்வாக்கு, எல்லையைத் தாண்டி ஒரு பார்கூட இன்னொருவருக்குப் போகாது. ‘அதுதான் வெளிப்படையாக அறிவிப்புக் கொடுத்து ஏலம் நடத்துகிறார்களே?’ எனக் கேட்கலாம். அறிவிப்பு வரும். ஆனால், அதற்கான விண்ணப்பத்தை வாங்க முயற்சித்துப் பாருங்கள்... ம்ஹூம், கிடைக்கவே கிடைக்காது. இணையத்தில்கூட டெளன்லோடு செய்ய முடியாது. சம்பந்தப்பட்டவர்களே, வெவ்வேறு பெயர்களில் இரண்டு ஏல விண்ணப்பங்களைப் போடுவார்கள். ஒன்றில் குறைந்தபட்சத் தொகையும், இன்னொன்றில் அதைவிட 100 ரூபாய் அதிகமாகவும் இருக்கும். அதிகத் தொகைக்கு ஒதுக்கீடு செய்வதுதானே முறை? ஆகவே, எல்லாம் முறைப்படி நடத்தி முடிக்கப்படும். இப்படி, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரின் செல்வாக்கு எல்லையைத் தாண்டி எங்கும் செல்வது இல்லை. பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சி புள்ளி, பாரை வாங்கி வேறு ஒருவருக்குக் கைமாற்றிவிடுவார். அவர் இன்னொருவருக்கு மாற்றிவிடுவார். இப்படியாக இரண்டு, மூன்று கை மாறி பார் நடத்துவோர் அநேகம் பேர். பெரும்தொகை கொட்டிக்கொடுத்து ஏலம் எடுத்த பாரில் இருந்து போட்ட பணத்தை லாபத்தோடு திருப்பி எடுக்க வேண்டாமா? எனவே, அவர்கள் முடிந்த வரை பணம் பார்க்க நினைக்கிறார்கள்.

இதில் இன்னொரு முக்கியமான செய்தியும் இருக்கிறது. தமிழ்நாடு மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் சமர்ப்பித்தப் புள்ளி விவரங்களின்படி, 2015-16ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கை 3,877. இதற்கு முந்தைய 2014-15ம் ஆண்டில் இருந்த டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கை 4,271. அதாவது, ஒரே ஆண்டில் 394 பார்கள் குறைந்திருக்கின்றன. அப்படிக் குறைந்திருப்பதாக நத்தம் விசுவநாதன் கணக்குச் சொல்கிறார். ஆனால், அது பொய்க் கணக்கு. உண்மையில், அனைத்து பார்களும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், சட்டப்படி அல்ல; சட்டத்துக்குப் புறம்பாக. அதன் லைசென்ஸுகளை சட்டப்படி ம்யூட் செய்துவிட்டு, வழக்கம்போல இயங்கச்செய்வதன் மூலம் கொள்ளை அடிக்கும் தொகையை இன்னும் பன்மடங்கு உயர்த்திக்கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் 4,000 பார்களில், கழிவறை வசதி உள்ள பார்கள் சரிபாதிக்கூட இருக்காது. கழிவறை எனத் தனியே ஒன்று தேவையில்லாத அளவுக்கு, ஒவ்வொரு பாருமே கழிவறையாகத்தான் இருக்கிறது என்ற உண்மை ஒரு பக்கம் இருந்தாலும், நூற்றுக்கணக்கானோர் எப்போதும் ஒரு திரவத்தைக் குடித்துக்கொண்டே இருக்கும் இடத்தில் கழிவறை வசதி என்பது எத்தனை அத்தியாவசியமானது? அது இல்லாததால் பார் உள்ள பகுதிகளைச் சுற்றி சிறுநீர் கழித்து, அந்தப் பகுதியையே துர்நாற்றம் எடுக்கவைக்கிறார்கள். ஒரு தண்ணீர் பாக்கெட் 5 ரூபாய், நான்கு காராசேவ் 5 ரூபாய், ஒரு பிளாஸ்டிக் கப் 2 ரூபாய் எனக் குடிக்க வருபவர்களிடம் இவர்கள் செய்வது பச்சையான வழிபறி. சைட்-டிஷ் என்ற பெயரில் பார்களில் விநியோகிக்கப்படும் உணவுப் பண்டங்கள் எவ்வளவு கேவலமாக இருக்கும் என்பதை, குடிப்பவர்கள் அத்தனை பேரும் அறிவார்கள். கொடுத்த காசுக்கு உரிய சேவை கிடைக்காத ஒரு நுகர்வோராக, குடிகாரர்கள் அத்தனை பேருமே டாஸ்மாக் பார்கள் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடுக்க முடியும். இது எல்லாம் போதாது என, பார்களை ஏலம் எடுப்பவர்கள் போலி மதுபானங்களையும் விற்பனை செய்கிறார்கள். காலை 9 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்குப் பிறகும் சரக்குக் கிடைக்கும் கடைகள் ஏராளம். இரவு 2 மணிக்குப் போனாலும் சரக்கு வாங்க முடிகிற கடை எது எனக் குடிமகன்கள் ஒரு ரகசியப் பட்டியலே வைத்திருக்கிறார்கள்.

டாஸ்மாக் கடைகளின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அரசுக்கு வருவாய் வருகிறது என்றால், டாஸ்மாக் பார்களிலும் பெருந்தொகை புரள்கிறது. அப்படியானால், டாஸ்மாக் வருமானம் என நாம் இதுவரை சொல்லிக்கொண்டிருக்கும் தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பார்களில் செலவிடப்படுவதும் குடிமகன்களின் பணம்தான். ஒருவர் குடிப்பதற்காக 300 ரூபாய் செலவிட்டால், சைட்-டிஷ், சிகரெட் என இதர வகைகளுக்காக 100 ரூபாய் செலவிடுகிறார். இதையும் சேர்த்தால் டாஸ்மாக்கின் வருமானம் 35 ஆயிரம் கோடியைத் தாண்டிவிடும்.

- போதை தெளிவோம்...