Published:Updated:

``தாக்குவதற்கு வீரம் தேவையில்லை. தாங்குவதற்குதான் வீரம் தேவை!'’ - விமர்சகர்களுக்கு வைரமுத்து பதில்

``தாக்குவதற்கு வீரம் தேவையில்லை. தாங்குவதற்குதான் வீரம் தேவை!'’ - விமர்சகர்களுக்கு வைரமுத்து பதில்
``தாக்குவதற்கு வீரம் தேவையில்லை. தாங்குவதற்குதான் வீரம் தேவை!'’ - விமர்சகர்களுக்கு வைரமுத்து பதில்

``தாக்குவதற்கு வீரம் தேவையில்லை. தாங்குவதற்குதான் வீரம் தேவை!'’ - விமர்சகர்களுக்கு வைரமுத்து பதில்

``நான் கறுப்பாகப் பிறந்ததால் கர்வப்பட்டிருக்கேனே தவிர, ஒருநாளும் கவலைப்பட்டதில்லை. ஏனென்றால், கறுப்பு... உச்சி சூரியனின் கீழ் வியர்வை சிந்த வேலைசெய்யும் தமிழனின் நிறம்'' என வைரமுத்து பேசியதும், கூட்டத்தில் கைதட்டல் ஆர்ப்பரித்தது. வெற்றித் தமிழர் பேரவை சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த நிகழ்வில், வைரமுத்து இப்படி பேசினார். ஆண்டாள் கட்டுரை தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு வைரமுத்து எழுதி அரங்கேற்றும் கட்டுரை என்பதால், காமராஜர் அரங்கம் மிகுந்த பரபரப்புடன் காட்சியளித்தது.

வைரமுத்து எழுதிய ஆண்டாள் குறித்த கட்டுரை, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜா ஆண்டாள் குறித்த கட்டுரையை விமர்சித்து வைரமுத்துவை பொதுமேடையில் கடுமையான வார்த்தைகளால் தாக்கிப் பேசினார். வைரமுத்து  ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என இரண்டுமுறை ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார். அந்தக் கட்டுரையை வெளியிட்ட தினமணி பத்திரிகை ஆசிரியர் வைத்தியநாதன், ஆண்டாள் கோயிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்டார். இப்படிப் பல சம்பவங்கள் அரங்கேறி முடிந்த நிலையில், நேற்று தனது `தமிழாற்றுப்படை'யின் 14-வது கட்டுரையான மறைமலையடிகள் குறித்த கட்டுரையை வைரமுத்து மேடையில் வாசித்தார்.

``இது தமிழுக்காகச் சேர்ந்த கூட்டம்'' என்று பேசிய அவர், ``நான் சென்னையில் இன்று கூட்டம் நடத்தப்போவதாகச் சொன்னவுடன், என் நண்பர்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர். `அன்று மகாசிவராத்திரி. மக்கள், தங்கள் குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுவிடுவர்; கூட்டத்துக்கு எப்படி வருவார்கள்?' என்றனர். அதற்கு இந்த `மக்கள் கடல்' பதில் சொல்லியிருக்கிறது. ஆம், குலதெய்வக் கோயிலுக்குத்தான் வந்திருக்கிறார்கள். என் மக்களின் குலதெய்வம் `தமிழ்' என்பதால்தான் இவர்கள் இங்கு கூடியிருக்கிறார்கள்.

`தமிழ்' என்பது தமிழனின் அதிகாரம். பெருமையும் அதிகாரமும் பெறாத எந்த ஒன்றும் அழிந்துபோகும். எனவேதான் நான் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி வேண்டும் எனப் போராடினேன். தமிழ் மொழியை நாம் இழந்துவிட்டோம் என்றால், நம் நிலப்பரப்பையே இழந்துவிடுவோம். ஆரம்ப ஆய்வுகள், `லெமூரியா கண்டம் ஆஸ்திரேலியாவிலிருந்து மடகாஸ்கர் வரையில் தமிழன் வாழ்ந்தான், தமிழ்மொழி பேசியிருக்கிறான்' என்கிறது. அதன்பிறகு சிந்துசமவெளி நாகரிகம், `நம் தேசமெங்கும் தமிழ்மொழி பேசினார்கள்' என்றது. அதன் பிறகாக `தென்னிந்தியர் மட்டும் தமிழ் பேசினார்கள்' என்றது. தற்போது இந்த எண்ணிக்கை சுருங்கி 1,30,058 சதுர கி.மீ மட்டும்தான் தமிழ் பேசும் நிலபரப்பு உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

படிக்காதவர்கள், தங்கள் குழந்தைக்குத் தமிழில் பெயர் சூட்டுகிறார்கள். படித்தவர்கள்தான் தங்கள் குழந்தைக்குத் தமிழில் பெயர் சூட்டாமல் வெவ்வேறு மொழிகளில் பெயர் சூட்டுகிறார்கள். `சிவபெருமான் தனது கையில் உள்ள உடுக்கையை ஒருபுறம் அடித்தார், தமிழ் வளர்ந்தது. மறுபுறம் அடித்தார், சம்ஸ்கிருதம் வளர்ந்தது' என்பார்கள். சிவபெருமானே தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் சமம் என்கிறார். எனவே, இதை நம்பாதவர்கள் சிவனை நம்பாதவராவர். 

என்னிடம் சிலர் `வீரம் என்பது என்ன?' என்று கேட்டார்கள். `வீரம் என்பது வலிமையுடையவன் பொறுமையாக இருப்பது' என்றேன். `தாக்குவதற்கு வீரம் தேவையில்லை. தாங்குவதற்குதான் வீரம் தேவை' என்றார் காத்திரமாக. மறைமலையடிகள், மொழிப் பெருமை காக்கப் போய் இனப்பெருமை காத்தவர்; சங்க இலக்கியங்கள் முழுமையும் படித்து அதிலுள்ள பிறமொழிக் கலப்பைக் கண்டறிந்த முதல் ஆள்; தனித்தமிழ் இயக்கம் தொடங்கிய பெருமைக்குரியவர். தந்தை பெரியாரிடம் பாராட்டு பெறுவது கடினம். ஆனால், பெரியாரே `மறைமலையடிகள், தனது வலதுகரம் போன்றவர்' எனச் சொல்லியிருக்கிறார். வேதாச்சலம் என்ற தனது பெயரை `மறைமலையடிகள்' என வைத்துக்கொண்டவர். நாமும் அதுபோல தூயத் தமிழில் நமது குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட வேண்டும். அனிச்சம், ஆதிரை, ஈழச்செல்வி, ஊஞ்சல் நிலா போன்ற பெயர்களை பெண் குழந்தைகளுக்கும், அன்பன், ஆதவன், இனியன் போன்ற பெயர்களை ஆண் குழந்தைகளுக்கும் சூட்டுங்கள்.

ஓசை நயம்கொண்ட தமிழ் மொழியில் பெயர் சூட்டினால், அது அவ்வளவு நயம் கொடுக்கும். அப்போதுதான் தமிழ் வளரும். உலகமே இன்று தாய்மொழிவழிக் கல்விக்கு மாறும் எனக் கல்வியைப் பற்றிய ஆய்வு சொல்கிறது. நாம் எல்லா மொழிகளையும் கற்றுக்கொள்வோம். ஆனால், தமிழை விட்டுவிடாமல் பாதுகாப்போம். `முத்துக்குளிக்கச் சென்று மூச்சைவிட்ட கதையாகிவிடக் கூடாது' வேதாச்சலங்கள்தான் மறைமலையடிகளாக மாற வேண்டுமே தவிர, மறைமலையடிகள் வேதாச்சலமாக மாறக் கூடாது'' எனத் தமிழ் மொழியில் பெயர் சூட்டுவது குறித்து வைரமுத்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகசாமி, முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் கலந்துகொண்டு பேசினர். இயக்குநர் பாரதிராஜா, சீமான், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த கட்டுரைக்கு