Published:Updated:

பட்டப் பெயர்

பட்டப் பெயர்
பிரீமியம் ஸ்டோரி
பட்டப் பெயர்

ஆர்.அம்பிகைராமன், ஓவியங்கள்: நன்மாறன்

பட்டப் பெயர்

ஆர்.அம்பிகைராமன், ஓவியங்கள்: நன்மாறன்

Published:Updated:
பட்டப் பெயர்
பிரீமியம் ஸ்டோரி
பட்டப் பெயர்

‘‘உஷ்... உஷ்... எல்லோரும் சைலன்ட்டா இருங்க” என்றான் விக்னேஷ்.

பள்ளிக்கு அருகே, ஆலமரத்தடியில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ். பள்ளி முடிந்து சற்று நேரம் ஆகியிருந்தது.

‘‘என்ன விக்னேஷ்?’’ எனக் கேட்டான் பரத்.

‘‘அங்கே பாரு’’ எனச் சொல்ல,  பள்ளிக்கூட வாசலில் ஸ்கூட்டரில்  வந்தார் கணக்கு ஆசிரியர் தமிழரசன்.

தமிழரசன் சற்று குள்ளமாகவும் குண்டாகவும் இருப்பார். அதனால், விக்னேஷ் அவருக்கு ‘குள்ளமணி’ எனப் பட்டப் பெயர் வைத்திருந்தான். வகுப்பில் ஓய்வாக இருக்கும் நேரத்தில், தமிழரசன் சார் எப்படி நடந்து வருவார், நாற்காலியில் எப்படி அமர்வார் என்பதை நடித்துக் காட்டுவான்.

பட்டப் பெயர்

ஒருநாள், அவரது ஸ்கூட்டர் இருக்கையின் மீது ஈர சாக்பீஸால் ‘குள்ளமணி குண்டுமணி’ என்று எழுதியவாறு, ‘‘செய்யுள் சரியா சொல்லலைனு அடிச்சார்ல, அதுக்குத்தான் இது’’ என்றான்.

“போன வாரம் நடந்ததுக்கு இப்போ ஏண்டா எழுதுறே’’ என்றான் ரஞ்சித்.

‘‘அடிச்ச அடுத்த நாளே எழுதி இருந்தா, ‘இது யார் வேலையா இருக்கும்?’னு யோசிப்பார். அதில் மாட்டிக்குவேன். இப்போ, எழுதினா நம்மள மறந்திருப்பார்ல” என கெத்தாகச் சொன்னான் விக்னேஷ்.

‘‘சரி, ஹேண்ட்ரைட்டிங்கை வெச்சு கண்டுபிடிச்சுட்டா?’’ எனக் கேட்டான் சந்தோஷ்.

‘‘அதுக்குத்தானே லெஃப்ட்ல எழுதினேன்’’ என்றான்.

‘‘இந்தப் புத்திசாலித்தனத்தை படிப்பில் காட்டலாமே’’ என முணுமுணுத்தான் பரத்.

‘இப்போது என்ன செய்யப்போகிறான்? எதற்காக எல்லாரையும் சைலன்ட்டா இருக்கச் சொல்றான்’ எனப் புரியாமல் பார்த்தார்கள் நண்பர்கள்.

‘‘எல்லாரும் மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கங்க. சீக்கிரம் சீக்கிரம்’’ என மேலும் குழப்பினான் விக்னேஷ்.

நண்பர்களுக்கு உதறலாக இருந்தாலும், என்னதான் செய்யப்போகிறான் என அறியும் ஆர்வமும் இருந்தது. அந்தப் பெரிய ஆலமரத்தின் பின்னால் தங்களை மறைத்துக்கொண்டார்கள். விக்னேஷும் வந்து மறைந்துகொண்டான்.

தமிழரசன் சாரின் ஸ்கூட்டர் சாலையில் கடந்து செல்லும்போது, ‘‘மிஸ்டர் குள்ளமணி’’ எனச் சத்தம் போட்டான்.

நண்பர்களுக்கு பகீர் என்றானது. ஸ்கூல் பெல் போல இதயம் அடித்துக்கொண்டது. தமிழரசன் சாரின்  ஸ்கூட்டர் அதே வேகத்தில் சென்றுவிட்டது.

‘‘டேய் விக்னேஷ், இதெல்லாம் ரொம்ப ஓவர்டா. சார் திரும்பி வந்திருந்தா என்ன ஆகியிருக்கும்” எனப் பதறினான் பரத்.

‘‘அப்படி எல்லாம் வர மாட்டார். வண்டிச் சத்தத்துல நான் என்ன சொன்னேன்னு சரியா கேட்டிருக்காது” என்றான் விக்னேஷ்.

“இதெல்லாம் ரொம்பத் தப்புடா. நான் கிளம்பறேன்” என்றபடி கிளம்பிவிட்டான் பரத்.

அடுத்த நாள்... வீட்டில் இருந்தபோது, ‘‘விக்னேஷ், கடைக்குப் போய் வெண்டைக்காய் வாங்கிட்டு வா’’ என்றார் அம்மா.

தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த விக்னேஷ், ‘‘சே... லீவுல இருந்தா இது ஒரு தொல்லை’’ எனச் சளிப்புடன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

மளிகைக் கடையில் நின்றிருந்தபோது, “டேய், நீ கறுப்பன் பையன்தானே?’’ எனக் குரல் வர, திடுக்கிட்டுப் பார்த்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்டப் பெயர்

பின்னால் ஒருவர் நின்றிருந்தார். விக்னேஷின் அப்பா ஒரு எலெக்ட்ரீஷியன். வீடுகளுக்கு எலெக்ட்ரிக் செய்வது, எலெக்ட்ரிக் பொருளை ரிப்பேர் செய்வது அவரது வேலை. ஆள் உயரமாக, கறுப்பாக இருப்பார். அத்தனை பேருக்கும் முன்பு அப்படி கேட்டதும் சட்டெனக் கோபம் வந்தது. ‘‘அ... அவர் பேரு கறுப்பன் இல்லே, சு... சுந்தரம்’’ என்றான்.

‘‘அட, அப்பனை மாதிரியே ரோஷத்தைப் பாருடா. இந்த ரோஷம், செய்ற வேலையிலும் இருக்கணும். ரெண்டு நாள்ல கொடுக்கிறேன்னு வாங்கிட்டுப் போன ஃபேனை, பத்து நாள் ஆகியும் ரிப்பேர் பண்ணல. போன் பண்ணினாலும் எடுக்கல. என்ன நினைச்சுட்டு இருக்கான்’’ எனக் கேட்டார் அவர்.

அப்போது, ‘‘ஹலோ மிஸ்டர், என்ன பிரச்னை?’’ என அதட்டலாகக் குரல் வந்தது.

அது, தமிழரசன் சார். அவரும் இங்கேதான் இருந்திருக்கிறார். யாருமே இல்லாத தீவில், ஒரு துணை வந்ததுபோல தைரியம் பெற்றான் விக்னேஷ்.

‘‘வேலையைச் செஞ்சு கொடுக்கலைனா, அதை அவர்கிட்டேதான் கேட்கணும். அப்படியே இவன்கிட்டே விசாரிச்சாலும் இப்படியா கேட்கிறது? சின்னப் பசங்க நம்மைப் பார்த்து நாலு நல்ல விஷயத்தைக் கத்துக்கிற மாதிரி நடந்துக்கணும்’’ என்றார்.

அவர் தலையைக் குனிந்தவாறு வேகமாகச் சென்றுவிட்டார். தமிழரசன் சார், விக்னேஷின் தலையைக் கோதியவாறு, ‘‘விடு விக்னேஷ். சிலர் இப்படித்தான், ஆள் வளர்ந்தும் அறிவு வளராம இருப்பாங்க. இதை உன் அப்பாகிட்டே சொல்லாதே. தேவையில்லாத சண்டையாகும்’’ என்றார்.

விக்னேஷுக்கு அவரை நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாக இருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism