Published:Updated:

மகளெனப்படுபவள்

கவிதை: கரிகாலன், ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையபாரதி

பிரீமியம் ஸ்டோரி

களெனப்படுபவள் 

தாயோடு சேர்ந்து

தந்தையை வெறுப்பேற்றுபவள்

அவனது ஆடைகளின் நிறத்தேர்வை

ஆங்கில உச்சரிப்பைக்

கேலிசெய்து மகிழ்பவள்

மகனோடு எடுக்கும் செல்ஃபியைக்

கெடுக்கத் திட்டமிடுபவள்

கடைசி வரை...

முகம் பார்க்கும் கண்ணாடியை

ஊறுகாய் ஜாடியை

ஹார்லிக்ஸ் பாட்டிலை

உடைத்தது அவன்தானென

மகளெனப்படுபவள்

குடும்ப உறுப்பினர்களை

நம்பவைப்பவள்

அமேசானிலிருந்து

உள்ளூர் சூப்பர் மார்க்கெட் வரை

லிஸ்ட் கொடுத்து

திகீர் கிளப்பியும்

திருப்தியடையாமல்

அவித்த பனங்கிழங்கை

விடியற்காலையில் கேட்டு

தந்தைப் பாசத்துக்கு

டெஸ்ட்வைப்பவள்

ஒரு சோப்ளாங்கித் தகப்பனை

நாக்குதள்ளவைத்து

எப்போது ஹாஸ்டலுக்குப்

போவாளென

சிந்திக்கவைப்பவள்

விடுமுறை முடிந்து

இருள் பிரியா ஒரு காலையில்

பேருந்திலேற்றி கையசைத்துத்

திரும்பியவனை

வீட்டுக்குள் நுழைந்ததும்

கவிந்திருக்கும் வெறுமையை

விரட்ட முடியாது

கட்டிலில் குப்புறப் படுத்து

குலுங்கிக் குலுங்கி

கண்ணீர்விடவைப்பாளே

அவளே...

அந்தச் செல்ல ராட்சசியே

மகளெனப்படுபவள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு