மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 20

குடி குடியைக் கெடுக்கும் - 20
பிரீமியம் ஸ்டோரி
News
குடி குடியைக் கெடுக்கும் - 20

#BanTasmac தொடர்பாரதி தம்பி, படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ப.சரவணகுமார்

டாஸ்மாக்கில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதல் விலை வைத்து விற்பதைப் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். மிகவும் குறைந்த ஊதியம் வாங்கும் டாஸ்மாக் ஊழியர்கள், கூடுதல் விலை வைத்து சரக்கை விற்பதன் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் தொகைதான் மாத சம்பளம் போல வருவதாகவும் சொல்கிறார்கள். அதேநேரம், அந்தப் பணத்தில் பல்வேறு அரசுத் துறை அதிகாரி களுக்கும் பங்கு உண்டு.

நாள் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு கடையில், ஒவ்வொரு மாதமும் மாவட்ட மேலாளருக்கு 5,000 ரூபாய், முதுநிலை மண்டல மேலாளருக்கு 2,500 ரூபாய், கலால் துறை அதிகாரிகளுக்கு 1,000 ரூபாய், காவல் துறைக்கு 1,000 ரூபாய் என மாமூல் கொடுக்கப்படுவதாகச் சொல்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள். மொத்தமாக 9,500 ரூபாய். இந்த மாமூல் தொகை, நாள் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை ஆகும் கடைகளுக்குத்தான் பொருந்தும். பெரும்பான்மையான கடைகளின் ஒருநாள் சராசரி விற்பனை, இரண்டு லட்ச ரூபாய்க்கும் அதிகம். அந்தக் கடைகளுக்கான மாமூல் இன்னொரு மடங்கு அதிகம்.

சராசரியாக, ஒரு கடைக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் மாமூல் செல்கிறது என வைத்துக்கொள்வோம். தமிழ்நாட்டில் இப்போது 6,000 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. 6,000 X 10,000 = 6,00,00,000. அதாவது ஒவ்வொரு மாதமும் டாஸ்மாக் கடைகளில் இருந்து மாமூலாகச் செலுத்தப்படும் பணம் மட்டும் 6 கோடி ரூபாய். ஆனால், இந்தக் கணக்கு மிகமிகக் குறைவு என்கிறார்கள் ஊழியர்கள்.

‘‘மாமூல் மட்டுமே அவர்களுக்குப் போதாது. அவ்வப்போது திடீர், திடீரென ரெய்டு வருவார்கள். ‘எம்.ஆர்.பி விலையில் சரக்கு விற்கவில்லை’ எனச் சொல்லி, ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் பிடுங்கு வார்கள். டாஸ்மாக் ஊழியர்கள், பல்வேறு காரணங் களுக்காக அடிக்கடி சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். அவர்கள் மறுபடியும் பணியில் சேர்வதற்கு, பணம் கொடுத்தால்தான் முடியும். கடையின் வியாபாரத்தைப் பொறுத்து இதற்கான லஞ்சத் தொகை 50 ஆயிரம் ரூபாய் வரை போகிறது. இந்த மொத்த மாமூல் பணத்தில் உள்ளூர் அதிகாரிகள் தொடங்கி, அமைச்சர் வரையிலும் பங்கு உண்டு’’ என்கிறார்கள்.

குடி குடியைக் கெடுக்கும் - 20

டாஸ்மாக் ஊழியர்கள் இப்படிச் சொன்ன போதிலும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக விலை வைத்து விற்றுக்கொள்ளலாம் என்ற வாய்வழி அனுமதியின் மூலம் மட்டுமே, ஒவ்வொரு நாளும் 2,000 ரூபாய் வரை இவர்களுக்குக் கிடைக்கிறது. அதனால்தான் பெரும்பான்மை யானோர் டாஸ்மாக்கின் பிரச்னைகள் குறித்து வெளியில் பேசுவது இல்லை. டாஸ்மாக் ஆரம்பித்த புதிதில் 34,800 தொழிலாளர்கள் இருந்தார்கள். இன்று இருப்பது சுமார் 25 ஆயிரம் பேர்தான். சுமார் 9 ஆயிரம் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. கடைகளின் எண்ணிக்கையோ, ஆரம்பத்தில் இருந்ததைவிட இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. வாடிக்கையாளர்களும், கையாளும் சரக்கின் அளவும் பன்மடங்கு கூடியிருக்கின்றன.

ஒரு டாஸ்மாக் கடையில் இரண்டு விற்பனையாளர்களும் ஒரு மேற்பார்வையாளரும் இருப்பார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இரண்டு விற்பனையாளர்களால் கூட்டத்தைச் சமாளிக்கவே முடியாது. இருப்பினும், ஏன் இதைச் சகித்துக்கொள்கிறார்கள் என்றால், வருமானம் கிடைப்பதால்தான். கூடுதல் விலை வைத்து விற்பதால், அவர்களுக்கு கூடுதல் வருவாய். ஊழியர் எண்ணிக்கை அதிகரித்தால், இதைப் பங்கு போட்டுக்கொள்ள இன்னும் சிலர் வந்துவிடுவார்கள். அதனால்தான் அவர்கள் குறைந்த ஊழியர்களைக்கொண்டு சமாளிக்கிறார்கள். இது வருவாய் அதிகம் உள்ள கடைகளுக்குத்தான் பொருந்தும்.

டாஸ்மாக் கடைகளை, நல்ல விற்பனை, ஓரளவு விற்பனை, சுமார் விற்பனை என மூன்றாகப் பிரிக்கலாம். முதல் இரண்டு வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். இங்கு பணிபுரிபவர்கள், பெரும்பாலும் செல்வாக்கு இல்லாத... அதிகாரிகளால் தண்டிக்கப்பட்டு தூக்கி அடிக்கப்பட்டவர்கள்தான்.

‘‘ஒரு கடையை நடத்துறதுக்கு, மாசத்துக்கு குறைஞ்சது 15 ஆயிரம் ரூபாய் தேவை. உடையும் பாட்டில், கிழியும் அட்டைப்பெட்டி, வாரத்துக்கு ரெண்டு முறை வர்ற சரக்கு பாட்டிலை இறக்குறதுக்கான கூலி, கடையில் ஏதாச்சும் ரிப்பேரானா அதைச் சரிசெய்யும் செலவு எல்லாம் எங்களோடதுதான். `கடையின் மின்சாரக் கட்டணத்தை, அரசு 40 சதவிகிதமும் பார் உரிமையாளர் 60 சதவிகிதமும் கட்டணும்'னு விதிமுறை சொல்லுது. ஆனா, பெரும்பாலான கடைகள்ல நாங்கதான் முழுத் தொகையையும் செலுத்துறோம். வருமானம் உள்ள கடைகள்ல இதை ஈஸியா கட்டிருவாங்க. எங்களை மாதிரி உள்ள கடைகள்ல என்ன செய்யுறது?’’ என்று கேட்கிறார் நெல்லையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை விற்பனையாளர். அங்கு மட்டும் 200 கடைகள் இருக்கின்றன.

குடி குடியைக் கெடுக்கும் - 20

டாஸ்மாக் கடையைத் தொடங்கியபோது ஒரு சீலிங் ஃபேனும், ஒரு பிளாஸ்டிக் நாற்காலியும், சரக்குகளை அடுக்கிவைப்பதற்கான ஸ்டாண்டும் கொடுத்துள்ளனர். அதன் பிறகு இந்த 13 வருடங்களில் வேறு எந்த ஃபர்னிச்சரும் தரவில்லை. அவற்றையும் ஊழியர்கள்தான் வாங்கிக்கொள்ள வேண்டும். அன்றாடம் குடிகாரர்களையே எதிர்கொள்ளும் இவர்களுக்கு, உரிய இன்ஷூரன்ஸ் வசதிகூட கிடையாது. டாஸ்மாக் தொழிலாளர்களின் உடல் பிரச்னைகளைச் சரிசெய்ய, இதுவரை ஒரு மருத்துவ முகாம்கூட நடத்தப்பட்டது இல்லை.

‘‘சரக்கு வாங்க வர்றவங்க, எங்களைத் திட்டுறதை எல்லாம் உங்களால காதுகொடுத்துக் கேட்க முடியாது. ஆனா, நாங்க பழகிட்டோம். தமிழ்ல மோசமான எந்தக் கெட்ட வார்த்தையைச் சொல்லித் திட்டினாலும், சொரணையே இல்லாம அதைக் கேட்டுக்கிறோம். வர்றவன், தொழில்முறை கிரிமினலா இருப்பான். அவன்கிட்ட எதிர்த்துப் பேசினா, உடனே ரகளை பண்ணுவான். நாலு பாட்டில் உடைஞ்சாலும், அதுக்கு நாமதான் கட்டணும். அந்த டென்ஷன்ல 100 ரூபாய் கொடுத்தவனுக்கு 500 ரூபாய்க்கு சில்லறை கொடுத்துடுவோம். எதுக்கு இதெல்லாம், அப்படியே எருமை மாடு மாதிரி போயிடுறது’’ என்கிறார் ஒரு விற்பனையாளர்.

இவை எல்லாவற்றையும் கடந்து, இவர்கள் மரணங்களை கண் முன்னால் பார்க்கிறார்கள். சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரியும் தொழிலாளி விவரித்த கதை இது...
‘‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே அந்த இளைஞர் எங்கள் கடைக்கு வரத் தொடங்கினார். பார்ப்பதற்கு 30 வயது தோற்றம் இருக்கும். எப்போதும் டிப்டாப்பாக டிரெஸ் அணிந்திருப்பார். தோளில் ஒரு பேக் தொங்கும். பார்ப்பதற்கு, படித்து வேலைக்குச் செல்லும் தோற்றத்தில் இருப்பார். சரியாக மதியம் 1 மணிபோல வந்து ஒரு குவார்ட்டர் பாட்டில் வாங்கிக்கொண்டு உள்ளே செல்வார். அரை மணி நேரத்தில் இன்னொரு குவார்ட்டர். அதையும் முடித்துவிட்டு வெளியில் செல்வார். சாப்பிடப் போகிறாரா, எங்கு செல்கிறார் எனத் தெரியாது. ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து மறுபடியும் வந்து இன்னொரு குவார்ட்டர் அடிப்பார். ஆரம்பத்தில் குடிக்கும்போது சிகரெட் பிடிக்க மாட்டார். நாளாக, நாளாக சிகரெட்டும் சேர்ந்துகொண்டது.
 
அவர் குடிக்கிற குடிக்கு, ஒரு நாளைக்கு எப்படியும் 1,000 ரூபாய் செலவு ஆகும். எங்களுக்கு அதிர்ச்சி யாகவும் பாவமாகவும் இருக்கும். பேச்சு கொடுத்தாலும் பேச மாட்டார். ஒருகட்டத்தில் அவர் எங்கள் கடையே கதி எனக் கிடந்தார். ஆள் உருக்குலைந்துபோனார். எத்தனையோ குடிகார நோயாளிகளை தினந்தோறும் பார்க்கும் எங்களுக்கு, அவர் பெரிய அதிர்ச்சியைத் தரவில்லை. கடைசி ஒரு வருடத்தில் மேலும் மோசமாக மாறினார். கடை மூடும் வரை குடித்துக்கொண்டிருப்பார். பார் ஆட்கள் அவரை இழுத்து வெளியே போடும் அளவுக்கு நிலைகுலைந்து போனார். கடைசியாக, நான்கு மாதங்களுக்கு முன்னர் கல்லீரல் கெட்டுப்போய்,  மஞ்சள்காமாலையால் செத்துப்போனார். கட்டுக்கோப்பான ஓர் இளைஞனாக நாங்கள் பார்த்த ஒருவர், எங்கள் கண் முன்னாலேயே குடித்துக் குடித்துச் செத்துப்போனார். அவருக்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டரை எங்கள் கடைக்கு எதிரிலேயே ஒட்டியிருந்தார்கள். வேதனையாக இருந்தது’’ என்றார்.

இப்படி ஒவ்வொரு டாஸ்மாக் தொழிலாளியும், பல்லாயிரக் கணக்கான மனித உயிர்கள் மடிந்து போவதன் நேரடிச் சாட்சியங்களாக இருக்கிறார்கள். இதற்கு, அவர்கள் காரணம் அல்ல. எனினும், ‘இப்படி மனித உயிர்களைக் காவுவாங்கும் மோசமான வேலையைச் செய்ய வேண்டி இருக்கிறதே’ எனக் கருதும் டாஸ்மாக் தொழிலாளர்கள், இதன்பொருட்டு அடையும் மன உளைச்சல் அவர்களை நிம்மதி இழக்கவைக்கிறது. இதனாலேயே சிலர் வேலையைவிட்டு ஓடியிருக்கிறார்கள். அதேபோல, ஏராளமான டாஸ்மாக் தொழிலாளர்களும் குடிக்கு அடிமையாகி மரணம் அடைந்துள்ளனர்.

குடி குடியைக் கெடுக்கும் - 20

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஊரைச் சேர்ந்த முருகன் என்பவர், அங்கேயே உள்ள கடையில் விற்பனையாளராக இருந்தார். குடிப்பழக்கம் இல்லாத அவர், மெதுவாகக் குடிக்கப் பழகி, குடிக்கு அடிமையானார். கடையில் நுழைந்ததுமே குடித்துவிட்டுத்தான் வியாபாரத்தை ஆரம்பிப்பார். சில நேரங்களில் குடித்துவிட்டு கடையிலேயே விழுந்துகிடப்பார். ஒவ்வொரு நாளும் கடையில் சில ஆயிரங்களில் பணம் குறையும். இதனால் இவரை அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்குப் பணிமாறுதல் செய்தார்கள். அங்கும் குடித்தார். கடைசியாக, இவரை கூடங்குளம் டாஸ்மாக் கடைக்கு மாற்றினார்கள். அது, கூடங்குளம் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம். மக்கள் அணு உலையை முற்றுகையிடுவதற்காகக் கிளம்பிச்சென்ற நாளில், ஊரில் உள்ள மொத்தக் கடைகளும் மூடப்பட்டன. டாஸ்மாக் கடையும் மூடப்பட்டிருந்தது. அதாவது அதன் வெளிப்புறக் கதவு மூடியிருந்தது. ஆனால், தமிழ்நாட்டின் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நடப்பதைப்போல உள்ளே உள்ள பாரில் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. அங்கு அமர்ந்து முருகன் குடிக்கத் தொடங்கினார். மோசமாகக் குடித்து, கடை வாசலில் மயங்கி விழுந்து அங்கேயே செத்துப்போனார்.

ஒரு மாவட்டத்துக்கு 100 டாஸ்மாக் தொழிலாளர்களேனும் இப்படி இறந்துபோயிருப்பதாகச் சொல்கிறார்கள். அதே களக்காடு ஊரைச் சேர்ந்த மற்றொரு டாஸ்மாக் தொழிலாளி, குடிக்கு அடிமையாகி, `ஹாலுசினேஷன்' எனப்படும் மனச்சிதைவுக்கு ஆளானார். சில மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் குடித்துவிட்டு, களக்காடு வழியே சென்ற ரயிலில் பாய்ந்து செத்துப்போனார்.

‘‘எல்லோரும் எங்களை வைத்து அரசியல் செய்வதில்தான் குறியாக இருக்கிறார்கள். கடந்த தி.மு.க ஆட்சியில் நாங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியபோது, ‘டாஸ்மாக் தொழிலாளர்கள் எனது ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்பதற்காகப் பழிவாங்கப்படுகிறார்கள்’ என அறிக்கைவிட்டார் ஜெயலலிதா. இப்போது அவரது ஆட்சிக்காலம் முடிந்து, தேர்தலும் வந்துவிட்டது. இவர் என்ன செய்தார்? எதுவும் செய்யவில்லை. இவர்கள் தங்களின் பினாமி சாராய ஆலைகள் மூலம் சம்பாதிக்கவும், அரசியல் செய்து ஓட்டு வாங்கவும் எங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், அவ்வளவுதான்’’ என மனம் வெதும்பிச் சொல்கிறார்கள் தொழிலாளர்கள்.

- போதை தெளிவோம்...