Published:Updated:

மலர்விழியும் புது சுடிதாரும்!

மலர்விழியும் புது சுடிதாரும்!
பிரீமியம் ஸ்டோரி
மலர்விழியும் புது சுடிதாரும்!

ஓவியம்:ஸ்யாம்

மலர்விழியும் புது சுடிதாரும்!

ஓவியம்:ஸ்யாம்

Published:Updated:
மலர்விழியும் புது சுடிதாரும்!
பிரீமியம் ஸ்டோரி
மலர்விழியும் புது சுடிதாரும்!

லர்விழியின் அம்மா அந்த அலமாரியைத் திறந்து, அடுக்கியிருந்த துணிகளில் இருந்து மலர்விழியின் துணிகளை எடுத்துக் கொடுத்தார்.

‘‘மலர், ஸ்கூலுக்குப் போகிறப்ப துணிகளை அயர்ன் பண்ணக் கொடுத்துரு. ரெண்டு டவலா எடுத்துக்கோ.’’

‘‘அம்மா, இதையே ரெண்டு நாளா சொல்லிட்டிருக்கே. நான் சின்னப் பொண்ணு இல்லை, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். சரியா செஞ்சுப்பேன். நீங்க கவலைப்படாதீங்க’’ என்றாள் மலர்விழி.

“இப்பவும் சொல்றேன். ஜெயிச்சுட்டு வரணும்னு மனஅழுத்தத்தோட போக வேண்டாம். ரிலாக்ஸா விளையாடு. வீட்டையே நினைச்சுட்டு இருக்காதே’’ என்றார் அம்மா.

சதுரங்கம் விளையாடுவதில் மலர்விழி கெட்டிக்காரி. மாவட்ட அளவில் பல பரிசுகளை வென்றவள், இப்போது மாநில அளவிலான ஒரு போட்டிக்காக சென்னைக்குச் செல்கிறாள்.

சதுரங்கம், அவள் அப்பா கற்றுக்கொடுத்தது. அப்பா என்றதும் எந்த நேரமும் புன்னகை தவழும் அவரின் முகம்தான் நினைவுக்கு வரும். ஒரு வயது குழந்தையாக இருக்கும்போதே, அப்பாவின் மடியில் உட்கார்ந்தவாறு எதிரே இருக்கும் சதுரங்க அட்டையிலிருந்து ஒரு குதிரையை எடுத்து வாயில் வைத்திருப்பது போன்ற புகைப்படம், வீட்டை அலங்கரிக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அவர் இறந்துவிட்டார்.

துணி அலமாரியை மூடும் முன்பு அந்தப் புடைவையைக் கையில் எடுத்தார் அம்மா. அவர் கண்கள் மெள்ளக் கலங்கின. ‘‘இதுதான் மலர், உன் அப்பா எனக்கு முதல்முதலா வாங்கிக் கொடுத்த பட்டுப்புடைவை. என்கிட்டே இருக்கும் ஒரே பட்டுப் புடைவையும் இதுதான். உன் அப்பா ஞாபகமா இருக்கும் பொக்கிஷம்” என்றார்.

மலர்விழியும் புது சுடிதாரும்!

இதையும் அம்மா பல முறை சொல்லிவிட்டார். “இந்தப் புடைவையைப் பார்க்கும் போதெல்லாம் உங்க முகத்துல  சந்தோஷம் தெரியுதுமா” என்றாள் மலர்விழி.

“நாளைக்கு உனக்குப் பிறந்தநாள் வருது. போன வருஷம் வேற செலவு வந்துட்டதால, நீ கேட்ட சுடிதார் வாங்க முடியல.  இந்த வருஷம் வாங்கித் தரணும்னு பார்த்தேன். நீ விளையாட்டுப் போட்டிக்குப் போகும் செலவு வந்துருச்சு” என்றார் குற்ற உணர்ச்சியுடன்.

‘‘பரவாயில்லைமா, அடுத்த வருஷம் வாங்கிக்கலாம். நான் ஸ்கூலுக்குப் போய்ட்டு மதியமே வந்துருவேன். துணிகளை அப்புறம் எடுத்துவெச்சுக்கிறேன்’’ எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

பள்ளியில் தலைமையாசிரியர்  வாழ்த்திவிட்டு, ‘‘நீ நிச்சயம் ஜெயிச்சிட்டு வருவே. உன் செலவுக்குக் கொடுக்க, ஸ்போர்ட்ஸ் அலார்ட்மென்ட்ஸ் எதுவும் இப்போ இல்லை. அதுதான் வருத்தமா இருக்கு” என்றார்.

இதுபோன்ற வார்த்தைகள் மலர்விழிக்குப் பழகிவிட்டது. எதுவும் பேசாமல் வகுப்புக்குச் சென்றாள்.

மதியம் சீக்கிரமே வீட்டுக்கு வந்தாள். அம்மா வேலைக்குச் சென்றிருந்தார். மலர்விழியின் கண்களில் வியப்பு. அவளது பயணப் பையின் அருகே,  ஒரு புதுப் பை?

திறந்து பார்த்தாள்.  போன பிறந்தநாளில் ஆசையா கேட்ட சுடிதார்.

‘‘பிறந்தநாள் அதுவுமா போட்டியில் கலந்துக்கப்போறே? உனக்குப் புது டிரெஸ் வாங்கிக் கொடுக்கலைனா எப்படி?’’னு நேற்று இரவே அம்மா வருத்தப்பட்டார்.

இப்போது யாரிடமோ  பணம் கேட்டு, இந்தச் சுடிதாரை வாங்கி இருக்கிறார் போல என நினைத்த மலர்விழிக்கு கஷ்டமாக இருந்தாலும், புது சுடிதாரைப் பார்த்த மலர்ச்சியும் முகத்தில் தோன்றியது.

‘அம்மா டவல் ரெண்டு எடுத்துக்கச் சொன்னாங்களே’ என அலமாரியைத் திறந்தாள்.

டவலை எடுத்துக் கொண்டு மூடும் முன்பு திடீர் சந்தேகம். அலமாரியில் ஏதோ குறைவது போல இருந்தது. என்னவாக இருக்கும்?

கண்கள் சுழன்றன. அம்மாவின் பட்டுப் புடைவையைக் காணவில்லை. அங்கும் இங்கும் தேடியபோது, குப்பைக் கூடையில் அந்தச்  செய்தித்தாளின் விளம்பரம் இருந்தது.

‘பழைய பட்டுப் புடைவைகளுக்குப் பணம் கொடுக்கப்படும். திருமால் கல்யாண மண்டபம், தூத்துக்குடி’ என்றிருந்தது.

புது சுடிதாரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அம்மா உள்ளே நுழைந்தார். ‘‘வந்துட்டியா மலர், பெர்மிஷன் போட்டுட்டுக் கிளம்பற நேரத்துலதான் முக்கியமான வேலை வந்துருச்சு. ஸாரி” என்றவரை ஓடிப்போய் கட்டிக்கொண்டாள்.

குலுங்கிக் குலுங்கி அழுதவளை, ‘ஏன் அழுகிறே?’ என அம்மாவும் கேட்கவில்லை, மகளும் சொல்லவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலர்விழியும் புது சுடிதாரும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism