Published:Updated:

பிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்!

பிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்!
பிரீமியம் ஸ்டோரி
பிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்!

சிறுகதை: கி.ராஜநாராயணன் ,ஓவியங்கள்/ஹரன்

பிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்!

சிறுகதை: கி.ராஜநாராயணன் ,ஓவியங்கள்/ஹரன்

Published:Updated:
பிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்!
பிரீமியம் ஸ்டோரி
பிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்!

ந்த ஊர் மங்கம்மா சாலைக்கும் பக்கத்தில் அமைந்திருந்தது. ஏழு ஊர் களுக்கு அது தாய் கிராமம். சாலை வழி போகிறவர்களுக்குப் பனை மரங்களாகத் தெரியும். நாலு சக்கர வாக னங்கள் வராத காலம். அந்தக் கப்பிச்சாலை வழி நடந்து போகிறவர்களும், நாட்டு வண்டி, கூடார வண்டி, வில்வண்டி என்று போகவும் வரவுமாக இருக்கும். சம்சாரிகள் (விவசாயிகள்) நிறைந்த இந்த ஊரில் ஒரு பெரிய பல சரக்குக் கடை இருந்தது. பக் கத்து, சுத்துப்பட்டி ஊர்மக்களும் வந்து சாமான்கள் வாங்கிப் போவதால் வியா பாரம் அமோகமாய் அமைந்துவிட்டது. 

மூன்று தலைமுறைகளாய் ஒரு செட்டியார் குடும்பந்தான் அந்தக் கடையை நடத்தி வந்தது. மக்கள் அந்தக் கடையை 'சுப்பஞ்செட்டிக் கடை’ என்பார்கள்.

தனது பாட்டனார் சுப்பஞ்செட்டியார் துவங்கியதால் இப்போது கடை நடத்தி வருகிறவருக்கும் அந்தப் பெயர்தான். இப்போதயவர் ஆசாரசீலர், பக்திமான். கல்யாணமே வேண்டாம் என்று தீர்மானித் துவிட்டார். அது மாத்திரமல்ல, இப்போதே தனக்காக சமாதியையும் கட்டி வைத்துவிட்டார்! (இதற்கு அங்கே 'ஒடுக்கம்’ என்றும் ஒரு பெயர் உண்டு) அந்த ஊர்ப் பக்கங்களில் இப்படிச் சிலர் ஏற்பாடு செய்து வைத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நாலு ஏக்கர் தோட்ட நிலத்தின் ஓரத்தில் அந்த சமாதி அமைந்து இருந்தது. அந்த நிலத்தின் நாலுபக்க எல்லைகளிலும் சுற்றியும் உயர்ந்த ஆரோக்கியமான பனை மரங்கள். அவற்றில் ஒரு மரம் மட்டும் உயரமாக வளர்ந்திருந்தது. அதைக் கோயில் மரம் என்பார்கள். அதை, முதலில் விதையிட்டு - குலதம்பிரானை நினைத்து - உரமிட்டு வளர்த்ததாக இருக்குமோ... தெரியவில்லை.

'இது மட்டும் ஏம் இப்படி உயரமாக இருக்கு?’ என்று கேட்பவர்களுக்கு, இது கோயில் மரம் என்பது மட்டும் பதிலாக இருந்தது. அந்தக் குடும்பத்தார் - முக்கியமாக இவர் - அதன் பக்கத்தில் வரும்போதெல்லாம் அந்தக் கோயில் மரத்தின் தூர் பக்கம் குனிந்து தரைமண்ணைக் கிள்ளி நெற்றியில் நிலக்காப்பாக இட்டுக்கொள்வார்கள். அந்த மரத்தின் பக்கத்தில் - கொஞ்சம் சற்றுத்தள்ளி - ஒரு வேப்பஞ்செடி தானாக முளைத்தது. அது இப்போது மரமாக நிற்கிறது. அதன் பக்கத்தில்தான் இவர் தனக்கான சமாதி இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.

பிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்!

ரொம்ப இடங்களில் இப்படி சமாதி கட்டிக் கொண்டவர்களுக்குச் சாவு சீக்கிரம் வருவதில்லை. பல சமாதிகள் மண் உதிர்ந்து கற்கள் சரிந்து போய்க் கிடப்பதைப் பார்க்கலாம். சமாதி கட்டிய செட்டியாருக்கு இப்போது நடு வயசுதான் ஆகிறது. இவருக்குக் கல்யாண ஆசை கிடையாது அல்லது  இதுவரையிலும் வரவில்லை. ஒரே ஒரு ஆசைதான், காசிக்குப் போய் வரணும்; தன்னை வளர்த்த அப்பா காசிக் குப்போனவர்; போனவர்தான். வளர்த்த அம்மாவும் அவரோடு போனவரே.

போகும்போது அவர்கள் சொல்லிவிட்டுப் போனது, ''தம்பீ நாங்கள் திரும்பிவருவோமா என்று தெரியாது. அங்கேயேதான் எங்களுக்குப் போட்டிருக்கு!'' என்றுதான் சொல்லிவிட்டுப் போனார்கள். நடந் தேதாம் போவார்களாம். அப்படிப் போய் வந்துவிட்டால் காசிச் செட்டியார் என்ற பட்டம் கிடைத்துவிடும்.

இவரை வளர்த்த அப்பா அம்மாவுக்கு மிக நீண்ட காலமாகக் குழந்தையே பிறக்கவில்லை. ஒரு குழந்தைக்காக அவர்கள் அப்படி ஏங்கினார்கள். அப்படி இருக்கும் போதுதான் ஒரு நாள் அந்திக்கருக்கலில் பனைமரங்கள் அடர்ந்த பனந்தோப்புக்குள் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது சுப்பஞ்செட்டியாருக்கு. திகைத்து நின்றார். அவர் அறிய அந்தப் பனந்தோப்புக்குள், தெற்குப் பகுதியிலிருந்து வந்து கட்டு குத்தகைக்கு பனைசீவிப் பிழைக்கும் பனை ஏறிகள் குடும்பம் இங்கே வந்து குடிசை போட்டு, இருப் பார்கள். பருவகாலம் முடிந்ததும் அவர்கள் வாழும் ஊருக்குப் போய்வருவார்கள்.

இதற்குள் அவர்கள் பருவம் (சீஸன்) முடிந்து போயிருக்கணுமே. இருந்தால், நம்ம கடையில வந்துதானெ அவர்கள் பத்துவழிக்குச் சாமான் சட்டு வாங்குகிறதே. இந்தக் குழந்தை அழுகிற தினுசைப் பார்த்தால் பெத்ததாய் அதன் பக்கத்தில் இல்லை என்று தெரிகிறதே; போய் பார்ப்போம் என்று போனார். எடுத்துத் தடவிப்பார்த்தார்.

ஆம்பளைக் குழந்தை! முத்துக்குட்டி போலெ. (பெண் குழந்தையாக இருந்தால் லஷ்மிதேவி கிடைத்தாள் என்று நினைத்திருப்பார்)

என்ன காரணமாகவும் இருந்தூட்டுப் போ குது; உடையவர்கள் வந்து கேட்டால், தந்து ருவோம். யாரும் வரல்லெ என்றால் நமக்கு கடவுளாப் பாத்துத் தந்த புதையல்.

பதனமாக எடுத்துத் தோளில் சாத்திக் கொண்டார். அழுது அலுத்துப் போயிருந்ததால் உடம்புக் கதகதப்பில் அப்படியே தூங்கி விட்டது.

ஊருக்குள் அவர் நுழையும்போது, ஊர் அடங்கி விட்டிருந்தது. மூடிய வீட்டின் கதவை மெள்ளத் தட்டினார். கதவு திறந்தவுடன் உள்ளே வராமல் படிக்கு வெளியவே நின்று கொண்டிருந்தார். கண் நிதானத்தில் அந்த இளம் இருட்டில் பார்த்தபோது, இவர்தான் என்று நிதானமானது; என்றாலும் வராமல் வெளியே நிற்பதன் காரணம் புரியவில்லை.

மெதுவாகச் சொன்னார்: ''ஆரத்தி தயார் செய்து கொண்டா...''

''பொதையல் கொண்டாந்திருக்​கியிளா!''

''பொதையல்தான்; பொதையல்தான்!'' என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவர், ''மடியை ஏந்தி வாங்கிக்கொ...'' என்றார். குழந்தை மடியில் விழுந்ததும், ''முருகா... சம்முகா... சுப்பையா!'' என்றாள் அந்த அம்மா.

''அந்த சுப்பையாதான் வந்திருக்காம் நம்ம வீட்டுக்கு!'' என்றார் சுப்பஞ்செட்டியார்.

வேகமாக அரங்கு வீட்டுக்குள் போ னார்கள்.  இருட்டை விரட்ட மாடக் குழியில் சிறிய விளக்கு எரிந்து கொண் டிருந்தது. குத்துவிளக்கை ஏற்றினார்கள்.

குழந்தை, பாலுக்கு அழுதது. 'குழந்தைக்குப் பசி போலிருக்கே...’ என்று மார்போடு அணைத்துக் கொண்டபோது, அவளுடைய வெற்று மார்பில் முகம் புதைத்துக் காம்பை, முகத்தால் தேடினான் குழந்தை. சிரிப்பு வந்தது இருவருக்கும்.

''பாலுக்கு நீ அழுதெ; ஒன் அம்மை எங்கோ பால் கட்டி வலியால் அழுகுறா​ளோ...'' என்று சொல்லிக்கொண்டே, வீட்டுப்பாலைப் புகட்டிப் பசி அமர்த்தினாள்.

குழந்தையைக் கொஞ்சும் போதெல்லாம்... 'கண்டெடுத்த சுண்டு முத்தே!’ என்றும், 'தேடி எடுத்தத் திரவியமே...’ என்றெல்லாம் கொஞ்சுவாள்.

மறுநாள் அவ்வூர் மக்கள் செட்டியார் வீட்டில் குழந்தையைக் கண்டதும், ''விருந்தாடி யாராவது வந்திருக்கிறார்களா?'' என்று விசாரித்தார்கள்.

''யாரும் இல்லெ எங்க அப்பன் சுப்பையாதாம் குழந்தையா எங்க வீட்டுக்கு வந்திருக்காம்!''

சும்மா விளையாட்டுக்குத்தான் இப்படி சொல்றா​ளாக்கும் என்றுதான் நினைத்​தார்கள்.

''பெறகென்னெ; தவிட்டுக்கு வாங்கி​னோம்னு நினைச்சீட்டீளாக்கும்?''

சந்தோசமாகச் சிரித்துக்கொண்டே   வந்த அம்மா கேட்டது, 'இது நிசமே இல் லை!’ என்பது போலத்தான் தெரிந்தது.

பிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்!

''எங்களுக்குத் தெரியப்படாதாக்கும்?'' என்று உரிமையோடு கோவித்துக் கொண்டவர்களுக்கு, சொல்லாமல் எப்படி இருக்க என்று,

''அம்மா, ஒங்கள்டெ சொல்லாம என்னெ... நேத்து அதிகாலையில, முத்தந் தெளிக்க சாணி எடுக்க வீட்டுக்குப் பெறத் தாலெ இருக்கும் மாட்டுத் தொழுவுக்குப் போனோம். திரும்பி வந்து பாத்தா... வீட்டு உள்திண்ணையில, ஆரு கொண்டாந்து விட்டாகளோ... (குழந்தையைக் காட்டி) இந்த ராசா படுத்திக்கிடக்காரு! சரீ, உடையவுகளுக்கு என்ன அவசரமோ, வரட்டும்னு காத்திருந்தோம். எவ்வளவு நேரம்தாம் காத்திருக்கது? அழுதது, குழந்தெ. பெத்த தாயெக் காணலயே, நாமாவது பசி அமத்துவோம்னு பாலெக் காச்சினோம். இவரு வீட்டுக்குள்ளெ படுத்து இருந்தவரு, 'என்னெ குழந்தெ அழுற சத்தம்?’னு ஓடி வந்தாரு.

'கோமதி, யாரு வந்திருக்கா?’ன்னு கேக்காரு! என்னத்தெச் சொல்ல; சித்தெ பிள்ளெயெப் படியுங்கோன்னு அவரிட் டெக் குடுத்தா பக்குனு அழுகைய நிறுத்திட்டது! விவரத்தெச் சொன்னதும், 'இருக்கட்டும்; எல்லாம் நல்லதுக்குத்தாம் இருக்கும்’னார். பிள்ளெயத் தேடி யாரும் வல்லெ. என்ன சொல்லுததுன்னும் தெரி யலெ. ஆசைக்கு பிள்ளெய வளத்து, வளந்த பிறகு இது எம்பிள்ளெதாம்னு யாரும் கேக்கவந்தா?''

எல்லாரும் ஆறுதலாகச்

சொன்னார்கள்:

''ஊரா வீட்டுப் பிள்ளெ என்னத்துக்கு நம்ம வீட்டுக்கு வருது; இது நம்ம வீட்டுப் பிள்ளை, நம்ம வீட்டுக்கு வந்துருக்கு. தைரியமா இருங்கொ என்று தைரியம் சொல்லிப் போனார்கள்.

அதே சுப்பையான்னு பெயர் வைத்து வளர்த்து வந்தார்கள்.

''வீடு தேடி பிள்ளெ வந்திருக்கெ! யோகந்தாம்'' என்று பேசிக் கொண் டார்கள்.

காலம் வேகமாய்ப் போய்விட்டது.

  இந்த சுப்பஞ்செட்டியாருக்கு இப்பொ நாப்பது வயசு நெருங்கப் போகுது. ஆனா பார்த்தா அப்படித் தெரியாது. அது காபிப் பழக்கம் இல்லாத காலம். படுக்கையை விட்டு எழுந்திருந்ததும் வாயைக் கொப்பளித்துவிட்டு, நீராகாரம் குடித்துவிட்டு பனைமரத்துத் தோட்டத்தைப் பார்த்து நடந்தால் கம்மாய் கரை பக்கம் பரந்து விரிந்த ஆலமரம் வரும். பல்லைத் தேய்க்க ஆலங்குச் சியைத் தயார் பண்ண அங்கே ஒரு இடத்தில் வைத்திருக்கும் பனங்கருக்கை எடுத்து, நேற்று விட்ட விழுதில் மீதியை அறுத்து எடுத்துக் கொண்டு, அந்தக் கருக்கை அதே குறிப்பிட்ட இடத்தில் பத்திரப்படுத்திவிட்டு, குச்சியின் நுனியை மென்றுகொண்டே நடை போவார்.

அந்தப் பனங்கருக்கை தயார் செய்து வைத்துக்கொள்ளத்தான் அவர் அந்தப் பனை ஏறியிடம் போனார். முதலில் இவர் சொன்னது அவனுக்குப் புரியவில்லை.

''என்ன உபையோகத்துக்கு?'' என்று விசாரித்தான். சொன்னதும், ''அப்படியா...'' என்று சொல்லி ஒரு பச்சை மட்டையை வெட்டி எடுத்து, இரண்டு விரல் அகலத்தில் ஒருச்சாண் நீளத்தில் பனங்கருக்கைச் சீவி சரி செய்து, ஒரு நாலு பனங்கருக்குகளைத் தந்தான்.

இந்த வாய்ப்பழக்கத்தில் அவன், ''பதநீ சாப்பிடுங்க முதலாளீ'' என்று கேட்டுக் கொண்டான். 'சாப்பிடலாமா... வேண் டாமா?’ என்று யோசித்தார். அவருடைய தயக்கத்தை சம்மதம் என்று நினைத்து பட்டையைத் தயார் செய்தான். சாண் அகலம் கொண்ட பச்சோலையை எடுத்துத் துடைத்து, சுத்தப்படுத்தி அதன் தலைப்பகுதியைத் தனது இடைவாரில் ஊன்றி, பச்சோலையின் நரம்புகளை அழுத்தி, மடக்கிக் குழியாக்கி, வால்பகுதி இலையின் ஒரு நுனியை பெருவிரல் நகத்தால் பதனமாகக் கீறி ஒரு சுற்றுப் போட்டு சுருக்காமுடிச்சியிட்டு இவரிடம் நீட்டினான். பட்டையை அவன் தயார் செய்த லாகவத்தில் மயங்கியவர் குழந்தை போல் வாங்கிக் கொண்டார்.

அப்போதுதான் வடிகட்டி சுத்தப்​படுத்திய சிறிய கைக் குடுவையிலிருந்து அவர் நீட்டிய பட்டையில் பதநீர் வார்த்தான். வாய் அருகே கொண்டு வரும் போதே ஒரு திவ்யமான மணம். இந்தப் பச்சைப் பனையோலைக்கு இப்படி ஒரு மணமா! அந்த மணத்தோடு இந்தப் பதநீரின் மணமும் சேர்ந்தால் இன்னொரு மணம். ஒரு சிறிய்ய உறுஞ்சுதல்; அடடா, என்ன தித்திப்பு! சித்தெறும்புகளைப் போல் பனையடிகளில் மக்கள் ஏன் கூடுகிறார்கள் என்பது அப்போதுதான் விளங்கிற்று. இன்னொரு வாய் உறுஞ்சினார்.

''இது எந்த மரத்துப் பதநியப்பா?'' என்று கேட்டார்.

''நம்ம கோயில் மரந்தாம் முதலாளீ...''

'ஒரு மரம், தன்னிடம் இப்படி ஒரு தித்திப்பை ஒளித்து வைத்திருக்கிறதா; எப்படி!

உணவின் ருசிக்கு உப்பு சேர்ப் பைப்போல பனைநீருக்கு அளவோடு சுண்ணாம்பு சேர்க்கப்படும். சுண்ணாம்பு சேர்க்காமல் இருந்தால் முதல் ருசியில் அது பனம்பால். நேரம் ஆக ஆக அதுவே கள் ஆகிவிடும்.

வாடிக்கையாளர்களுக்கு, ஒவ்வொரு மரத்தின் பானமும் ஒவ்வொருவருக்குப் பிடிக்கும். அந்தந்த மரத்தடியில் போய் காத்திருப்பார்கள். சிலர்  மடியில் எலுமிச்சம் பழம் வைத்துக் கொண்டிருப்பார்கள். சுண்ணாம்பு கூடிவிட்டால் கடுந்துவர்ப்பாகிவிடும். நாலு அல்லது ரெண்டு சொட்டு எலுமிச்சஞ்சாறு விட்டால் ஏற்பட்ட இன்சுவைக்கு வந்துவிடும். ஒரு நாள் இவர் பதநீருக்கு வந்து நின்று கொண்டிருந்தார். மரத்தின் மேலிருந்து இறங்கி வந்த இவனுடைய முகம் சினப்பாக இருந்தது.

''முதலாளி, அடுத்த முறை நீங்க டவுனுக்குப் போனா, வரும்போது கொஞ்சம் பச்சநாவி வாங்கியாருங்க...'' என்றான்.

''எதுக்கப்பா?'' என்றார் கொஞ்சம் அதிர்ச்சியுடன்.

''திருட்டுப் பயபுள்ளெக வந்து, ராத்திரியோட ராத்திரியா பதநீயை இறக்கிக் குடிச்சிட்டு போயிறதுக. சுண்ணாம்பு தேய்க்கிறது மாதிரி, அதுல கொஞ்சம் பச்சநாவியத் தேச்சி வச்சிட்டா...     செத்து ஒழிஞ்சி போயிருவாங்கயில்லெ...'' என்றான்.

சாந்தமான அவனுடைய மனசுக்குள்ளெ இப்படி ஒரு கோபம் ஒளிஞ்சிருக்கே என்று நினைத்துக் கொண்டார்.

மறுநாள் காலையில் இவர், நடையைக் கொஞ்சம் கூட்டிச் சுற்றி, சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அந்தப் பெண் சாலை ஓரம் கிடந்த ஒரு கல்லின் மேல் ஒயிலாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். இவருடைய சுபாவப்படி எந்தப் பெண்ணையும் கவனித்துப் பார்ப்பதில்லை. திரும்பியும் பார்ப்பதில்லை. அன்று பார்க்கும்படி இருந்தது; கவனிக்கும்படியும் இருந்தது. அவளுடைய பக்கத்தில் ஒரு கறுப்புநிற மண் குடத்தில் பதநீரும் சிறிய பச்சோலைக் கட்டும் இருந்தது. பதநீர் விற்கும் பெண். சாலை வழி போவோர் வருவோர் வாங்கிக் குடிப்பார்கள்.

இவர் அவளைப் பார்த்துக் கொண்டே போய் பக்கத்தில் நின்றார். உடனே அவள் எழுந்து நின்றாள். வைத்த கண்ணை இவரால் வாங்க முடியவில்லை. 'ஈஸ்வரா... என்ன சோதனை!’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டார்.

பிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்!

முதலில் அவர் பார்த்தது அவள் உட்காந்து கொண்டிருந்த சித்திரத்தை. நிற்கும்போது அவள், இவரைப் பார்த்தது இன்னொரு மாதிரி.

புன்னகை தெரியாத புன்னகையில் ''பய்நீ சாப்பிடுதீகளா?'' என்று கேட்டது இன்னொரு நிலை. அந்தப் பற்கள், இன்னும் பார்க்க வேண்டும் போல இருந்தன.

'சர்வேச்வரா...’ என்று மனசுக்குள் திரும்பவும் சொல்லிக்கொண்டார்.

அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று தோன்றியது; முடியவில்லை. மேனகையைப் பார்த்ததும் விஸ்வாமித்திரருக்கும் இப்படித்தான் தோன்றியதாம். அவராலும் ஓட முடியவில்லை; இவராலும் ஓட முடியவில்லை.

இவரைக் கேட்காமலேயே ஒரு பதநீர்ப்பட்டையைத் தயாரித்து இவரிடம் நீட்டினாள். அவருடைய கைகள் தானா கவே வாங்கிக்கொண்டன. போகிணியை எடுத்து பானைக்குள் மொண்டு, எடுக்கும் போது மூன்று விரல்கள் பதநீர்க்குள் இருக்க, பெருவிரலும் சிறுவிரலும் போக ணியின் வெளிப்பக்கம் இருக்க, அவர் ஏந்திய பட்டையில் வார்த்தாள். அந்த விரல்களைப் பார்த்தார். இளம் ரோஜா நிறத்தில் உள்ள நகங்கள். அந்த விரல்களி லிருந்தான் பதநீரே வருகிறதோ என்று தோன்றுகிறது. பாதியை ஊற்றி, மீதியைக் குடித்த பிறகு ஊற்றலாம் என்று காத்தி ருந்தாள்.

உட்கார்ந்து சாப்பிட்டால் சரியாக இருக்குமோ என்று தோன்றியது. அதை அறிந்து கொண்டது போல், ''குத்தவச்சிப் பொறுமயாக் குடியிங்கோ...'' என்றாள். அந்தக் ''கோ...''வின் நீட்டலில் தெற்கத்தி மொழியின் லாகவம் தொனித்தது.

உட்கார்ந்து பட்டைபிடிப்பவர்கள் குடிப்பதற்கு முன்னால் அது பதநீராக இருந்தாலும் பனம் பாலாக இருந்தாலும் விரலால் தொட்டு பூமியின் மண்ணுக்கு ஒரு சொட்டு சுண்டிவிட்டுத்தான் குடிக்க ஆரம்பிப்பார்கள். இவரும் அப்படிச் செய்யக் கூடியவர்தான்; இப்பொ மறந்துவிட்டார்.

மீதிப் பதநீரைப் போகணியிலிருந்து ஊற்றும்போதும் அந்தச் சிவந்த விரல்களையும் ரோசா நிற நகங்களையும் பார்த்தார். அவருடைய அன்றைய நேரம் ஏதோ ஆகிவிட்டது என்று மட்டும் தெரிந்து கொண்டார்.

அவருடைய தியானம், மன அடக்கம் எதுவும் உதவி செய்வதாகத் தெரியவில்லை. வெறுமனே உள்வாய் மட்டும், ''ஈஸ்வரா... ஈஸ்வரா...'' என்று புலம்பிக் கொண்டிருந்தது.

எச்சிப் பட்டையைத் தூர வீசக் கை ஓங்கியபோது ''பட்டையை நெறிச்சி வீசுங்கோ...'' என்றாள். அப்படிச் செய்துவிட்டு, மடியிலிருந்து  எடுத்த திருநீற்றுப் பையின் இன்னொரு பக்கம் - உள்பையிலிருந்து - ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டினார்.

''சில்லறை இல்லையே...'' என்றாள்.

''இருக்கட்டும்; பதநீர் குடிக்க வரும்போது வாங்கிக்கிடலாம்.''

அந்த ஒரு ரூபாயிக்குள் பதினாறு அணாக்கள் உண்டு. இன்னும் பதினைந்து முறை பதநீர் குடிக்கலாம்.

கை தொட்டுவிடாமல் பதனமாக அந்தக் கையில் ரூபாயை வைத்தார்.

கோயில் பனைமர உச்சியில் உட்கார்ந்திருந்த பனையேறி இதையெல்லாம் பார்த்துக் கொண் டேதான் இருந்தான். அந்த மரத்தின் உச்சியில் இருந்துகொண்டே சற்று ஆசுவாசம் கொள்ளவும் சுற்றிலும் தூரத்திலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும் முடியும். அந்த மட்டை களிலிருந்த இரு பக்கக் கருக்குகளையும் அறக்கி விட்டிருப்பதால், பிடித்து ஏறவும் ஏறி உட்கார்ந்து கொள்ளவும் குப்புறப் படுத்துகொண்டே பாளை களைச் சீவி கலயங்களைக் கட்டவும் வசதி.

பனையேறிகள் எப்பவாவது பாடும் சோக கீதங்களுக்கு ஏற்ப பனை மரங்கள் முன்னும் பின்னும் தலையை உடம்போடு ஆட்டும். அந்தப் பனைகளை ஆட்டுவிக்கும் காற்று, பாடல்களை ரொம்பத்தூரம் கொண்டு போகும்.

இந்தப் பனை ஏறியின் தொழில் அக்கறை போலவே தனது மகளையும் கவனித்துக் கொண்டான் அந்த மரத்தின் மேலிருந்து.

மறுநாள் செட்டியாரின் வரத்து கொஞ்சம் சீக்கிரம் போல அவருக்கே தெரிந்தது. அப்போது பனை ஏறி மரத்தடியிலேயே இருந்தான்.

'இங்கயே போவமா... அங்கெ போவமா’ என்று ஒரு சின்னத் தயக்கம். 'சரி; இங்கயே குடிப் போம்!’ என்று நின்றார்.

நின்றதை கவனித்த அவன், பச்ச ஓலை எடுத்து மடக்கி பட்டை செய்து தந்து பதநீர் ஊற்றினான். குடித்து முடித்து, பட்டையை நெறித்து வீசிவிட்டு, மடியிலுள்ள திருநீற்றுப் பையைத் தொட்டதும், ''நேத்து மககிட்டெத் தந்த ரூபாயிலயே மிச்சம் இருக்கெ...'' என்றான். சரி என்றுவிட்டுத் திரும்பினார்.

யாரிடமும் அவர் பற்றுவழி வைக்க மாட்டார். அன்றாடம் கணக்கைப் பைசல் செய்து விடுவார். அவருடைய துட்டுதான் மற்றவரிடம் நிற்கும். 'வானத்துல போட்ட கல்லாவது கீழேவிழாமல் நிற்கலாம்; செட்டியாருடைய துட்டு வராமல் நிற்காது’ என்பது மக்கள் வழக்கு. அந்த செட்டி    மக்கள் வரவு செலவுகளில் அப்படி நடந்து கொள்வார்கள்.

தொடர்ந்து இவர் இங்கேயும் அங்கேயும் என்று சந்தர்ப்பம் ஏற்பட்டபடி பதநீர் குடித்து வந்தார்.

அவருடைய குடும்பத்தார் அவரிடம் ஏற்பட்டு வரும் ஒரு மாற் றத்தைக் கவலையுடன் கவனித்துக் கொண்டு வந்தார்கள்.

முதலில் இவர் பேச்சை ரொம்பவும் சுருக்கினார். கேட்டால் மட்டும் பதில்வரும்; அதுவும் சுருக்கமாக. இரண்டு வேளை உணவை ஒருவேளை ஆக்கினார். இப்பொவெல்லாம் கடைக்கல்லாவில் உட்காருவதே இல்லை. திடீரெண்டு அரங்கு வீட்டுக்குள் போய் உட்காந்து விடுவார். அந்தக் குறைந்த வெளிச்சம் அவருக்கு வேண்டிய திருந்தது. கண்கள் மூடியபடியே இருக்கும்; தியானத்தில் அமர்ந்தபடி. தூக்கம் போய்விட்டது. அல்லது உட்கார்ந்தபடி தூங்குவாரோ தெரியாது.

அவருக்கென்ன, பொண்டாட்டியா... பிள்ளை குட்டியா... பிரியப்படி இருந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்கள். தாடி மட்டும் வளர்ந்து விட்டால், சாமீ  என்று கூப்பிடத் தயாராக இருந் தார்கள்.

  பெரிய செட்டியார் காசிக்குப் போறதுக்கு முன்னால், வெளியூரிலிருந்து தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைக் கொண்டு வந்து இங்கே குடி வைத்தார், தனது வளர்ப்பு மகனுக்குத் துணையாக.

பெரிய செட்டியார் தனியாக இருக் கும்போது, வந்தவர்களில் ஒரு பெரியவர் கேட்டார், ''என்னவே இவம் முகத்துல நம்ம இனத்தானுடைய முகக்களையே காணலயே...'' பெரிய செட்டியாருக்குச் சிரிப்புத்தாம் வந்தது.  ''பாத்துக்கிட்டே இரியும்; பழகப் பழக முகக்களை தானாவே தெரியும்!'' என்றார்!

  சில நாட்களுக்கு மதியச் சாப்பாட்டுக்கும் அவர் வீட்டுக்கு வருவ தில்லை. காலைப் பதநீரோடும் அந்திப் பதநீரோடும் சரி. பதநீரில் நொங்கு கலந்து சாப்பிடுவதால் பசியில்லை போலிருக்கு என்று நினைத்துக் கொள்வார்கள்.

பிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்!

சில நாட்கள் சமாதியினுள்ளேயே போய்ப் படுத்துக்கொள்வார். அதுவும் சரிதான் என்று சொல்லிச் சிரித்துக் கொள்வார்கள்.

ஆடு மாடு மேய்க்கிற பையன்கள், திடீரென்று மழை பிடித்துக் கொண்டால் மட்டும்தான் அந்தச் சமாதியில் ஒதுங்குவர்கள். மற்றபடி அதுக்குள் போக ஒருவித பயமாகத்தான் இருக்கும்.

வீட்டிலும் அவர் இல்லை, சமாதியிலும் காணோம் என்றால், கோயில் குளம் என்று எங்கேயாவது தலயாத்திரை போயிருப்பார் என்று நினைத்துக் கொள்வார்கள்.

அவர் இப்போது செய்வதெல்லாம் சமாதியில் இருந்துகொண்டு இவர்களைப் பார்த்துக் கொண்டே இருப்பதுதான். பனையேறியும் பனைமேல் இருந்து கொண்டும் மற்ற நேரங்களில் தரையில் இருந்து கொண்டும் இவரையும் கவனித்துக்கொள்வான்.

பதநீர் மிஞ்சிப் போனால் அவர்கள் கருப்பட்டி காய்ச்சுவார்கள். அதையும் பார்த்துக் கொண்டே இருப்பார். ஒன்று மட்டும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது; அவர்களைப் பார்க்காமல் இருக்கவே முடியாது என்பதை; முக்கியமாக அவளை.

என்னவெல்லாமோ மனசுக்குக் கடிவாளம் போட்டுப் பார்த்தார்; கடிவாளக் கயிறுகள் அற்றுப் போனதுதான் மிச்சம்.

பதநீர் காய்ச்சும்போது திடீரென்று பொங்க ஆரம்பிக்கும். அதைத் அடக்கித் தணிக்க, நொறுக்கி வைத்திருக்கும் ஆமணக்கு விதைத் தூளிலிருந்து கொஞ்சம் எடுத்து வீசிப் போட்டால் கொதி அடங்கி சமன் நிலைக்கு வந்துவிடும் என்பதைப் பார்த்தார். மனசு அடங்காமல் பொங்கி எழுவதை எந்த ஆமணக்குத் தூளை வீசி அடக்குவது என்று கவலை அடைந்தார். 'அவளைப் பார்த்துக் கொண்டே... இப்படியே விழுந்து செத்துப் போயிறலாம்...’ என்று தீர்மானித்துவிட்டார்.

கூப்பதநீ காய்ச்ச நேர்ந்தால் இவருக்கும் ஒரு பங்கு கிடைக்கும். சம்சாரிகள் வீட்டில் மாடு ஈன்றால், கன்றுக் குட்டிக்கும் போக மிஞ்சம் உள்ள சீம்பாவை கருப்பட்டி இட்டுக் காய்ச் சினால் அது திரைந்து கெட்டிப்படாத ஒரு கெட்டிப்பட்ட நிலை வரும். அதை அவர்கள் மட்டும் சாப்பிடாமல் பிரியப்பட்ட சுற்றத் தார்க்கும் தந்து அவர்களும் உண்​பார்கள்.

தேன் உறைந்தது போலுள்ள கூப்பதநீயை இவர் சாப்பிட்டுப் பார்த்ததில்லை. அதன் ருசியும் மணமும் சொக்கடித்தது இவரை.

காய்ச்சிய கைகள்... விரல்கள்... அதன் அருகாமையின் மனித மணம் யாவும் அதில் இருந்தன; பூ மணக்கும்போது பெண்ணின் மணமும் சேர்ந்து வருவது போல.

நாட்கள் அதிகம் ஆக ஆக... தாங்க முடியவில்லை இவரால். அவள் அருகே இருந்தும் தூரமாகத் தெரிந்தது.

எது செய்தாலும் முறையாகத்தான் செய்யணும்; தப்புவழி கூடாது என்று நினைப்பவர் இவர். 'ஏம் நாம் இவளைப் பொண்ணுகேட்டு, கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது?’ என்று தோன்றிவிட்டது.

அவனிடம் இதைப் பற்றிப் பேச சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டி ருந்தார். அதனால் இப்போ தெல்லாம் தொடர்ந்து காலையும் மாலையும் அவனிடமேதான் பதநீ குடிக்கிறது.

இது ஒரு விலகல் போல அவளுக்குத் தோன்றியது. இதனால் ஒரு பதற்றம்; ஆர்வம் அதிகமாகியது. ஒரு நாள் கடந்தாலும் அது பத்துநாள் போலத் தெரிந்தது.

அந்த நாள். அந்தி நேரம். இங்கே உள்ள பனைக் கூட்டங்களில் பாளை சீவி முடித்துவிட்டு, பக்கத்தில் கொஞ்ச தூரத்திலுள்ள ஒண்டிப் பனையில் பாளை சீவப் புறப்பட்டான். அங்கே என்றால், அவனோடு பேசத் தனிமை கிடைக்கும் என்று இவர் நினைத்தார்.

அங்கே போனார். அவன் பாளை சீவி முடித்துவிட்டு தரை இறங்குவதுக்கும் இவர் போய்ச் சேரவும் சரியாக இருந்தது.

எதோ சொல்ல நினைத்துத்தான் வருகிறார். வரட்டும், வரட்டும். அவருக்குச் சொல்ல ஒன்று இருப்பது போல, இவனுக்கும் சொல்ல ஏதோ இருப்பதாகத் தோன்றியது.

இருவரும் தயக்கத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, எப்படி, யார் தொடங்குவது என்று தெரியவில்லை.

இவரே அவனுடைய பெயரைச் சொல்லி, ''யப்பா ஒங்கிட்டெ எப்படிச் சொல்லி ஆரம்பிக் கிறதுன்னு தெரியலெ...'' என்று தொடங்கி, மனசில் உள்ளதை டபார் என்று போட்டு உடைத்தார்.

''எப்படிச் சொன்னாலும் விசயம் ஒண்ணுதாம். நாம ரெண்டு பேரும் சாதியில உயர்வு தாள்வுன்னு நான் நினைக்கலெ. ஓங்கிட்டெ வந்து நான் முறையாகப் பொண்ணு கேக்கிறேன்; உன் மகளை எனக்குக் கல்யாணம் கட்டிக் கொடு. என்ன சொல்றெ?''

பிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்!

இதைக் கேட்டதும், விக்கித்துப் போனதுபோல ஆனான்.

''முதலாளி, ஒங்க வார்த்தெ எந்தலை மேலெ. இதுல எனக்கு வள்ளிசா சம்மதமில்லை.''

''ஏம்பா!''

''சாதியெல்லாங் கிடையாதுன்னு சமயத் துக்குத் தக்கன சொல்லிக்கிடலாம்; அது நெசமில்லெ. நீங்க உக்காந்தே சம்பாதிக்கிறவக. நாங்க உழைச்சிப் பிழைக்கிறவுக; உயிரைக் கொடுத்து உழைக்கணும். நமக்குள்ளெ ஏணி போட்டாலும் எட்டாது!'' என்று முடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த போது,

''அப்படிச் சொல்லீராதப்பா, சொல் லீராதப்பா...'' என்று சொல்லிக் கொண்டு அவனைத் தொடர்ந்தார்.

கொஞ்சம் குரலை உயர்த்தி, ''இன்னயத் தேதியிலயிருந்து, நீ உழைக்க வேண்டாம். நீயும் என்னோட சேர்ந்து உக்காந்தே சம்பாதிக்கலாம், உக்காந்து சாப்பிடலாம். ஒன் பேருக்கும் உன் மக பேருக்கும் எம்பங்குக்கு வர்ற சொத்தை யெல்லாம் எழுதிக் கொடுத்திருதேம். அதுக்குப் பிறகு நீ எனக்குப் பொண்ணு கொடுத்தாப் போதும்!''

இதைக் கேட்டதும் அவன் மேலும் காட்டமானான். மனசுக்குள்ளெ,

'நா இப்பொ இவரு வீட்டுலெ போயி பொண்ணு கேட்டா எனக்குத் தருவாங்களா?’ என்று நினைத்தான். 'பொண்ணுகேக்க வாரவரு குடும்பத்தோட வந்து ஏம் கேக்க முடியலெ?’ என்று நினைத்தான்.

இவர் சொன்னார்: ''தனீயா, இங்கயே நம்ம தோட்டத்துலயே வீடுகட்டி இருக்கலாம். ஊருக்குள்ளேயே போக வேண்டாம்!'' என்றார்.

'ம், ம், தாலிகட்டி வைப்பாக வச்சிக் கிடலாம்னு நினைக்​காரோ? துட்டு இருக்கவம் என்ன வேணும்னாலும் பண்ணுவான்.'

இதெல்லாம் சரிப்பட்டு​வராது. எப்படிப் பாத்தாலும் இதெல்லாம் நல்லதில்லை. பேசாம இவரோட சாதியிலெ நல்லதா ஒரு பொண்ணெப் பாத்துக் கட்டிக்கிட்டு, மத்தவங் களுக்குத் தொந்தரவு தராம இருக்கதுதாம் இவருக்கும் நல்லது... மத்தவங்களுக்கும் நல்லது!’ என்று நினைத்தான்.

'இதையெல்லாம் பெரிய இடத்துல சொல்ல முடியுமா; சொன்னாப் பொல்லாப்புதாம் வரும். இந்த செட்டிக்குச் சின்னச் சனியன் தாம் பிடிச்சிருக்கு!’ என்று எதுவும் பேசாமல் அவன் போக்கில் போய்க்கொண்​டிருந்தான்.

''கலந்து பேசி சொல்லப்பா; நாளைக்குப் பாப்போம்...'' என்று குரல் கொடுத்தார்.

எந்த விசயத்தையும் வந்து அவன் மகளிடம் சொல்ல வில்லை. பொதுவாக, 'பனை ஏத்துப் பருவம் முடிந்த மாதரிதாம் தாயி; ஊரப் பாத்துக் கிளம்ப வேண்டி யததுதாம்...'' என்ற ஒரு வார்த்தையை மட்டுந்தான் சொன்னான்.

''இப்ப, ஊர்ல என்னய்யா இருக்கு. நாம இங்கயே இருப்பம். இங்கெ சவுகரியமாத்தனெ இருக்கு?'' என்று கேட்டாள்.

''நம்ம சாதி சனங்களோட இருந்த மாதிரி வருமா. அவங்கவங்க இடத்துல இருக்கதுதாம் மருவாதி!'' என்றான்.

ஒன்றைத் தெரிந்து கொண்டான் அவன். 'ஊருக்கு நம்மோட வரச் சம்தமில்லெ இவளுக்கு!’ இதுவரை அவளை ஒரு சொட்டச்சொல் சொன்னதில்லை. ''தாயீ'' என்கிறதற்கு மாறுவார்த்தெ கிடையாது.

''தாயி, நீ உலகம் தெரியாத பிள்ளை; சொன்னாத்தாம் உனக்குப் புரியும். ஒன்னெ முழுங்க ஒரு கடுவா சுத்திச் சுத்தி அலையுது இங்கெ...''

ஒரு வீச்சில் அதன் பொருள் தெரிந்து கொண்டாள். அய்யாவுக்கு அது பிடிக்கலை. அவரு சொன்னாச் சொன்னதுதாம்.

பிறப்பிலிருந்து செல்லமாக வளர்க்கப்பட்டவள். சின்ன வயசிலேயே அம்மாவை இழந்தவள். ஒத்தைக்கு ஒரு பிள்ளை. எது கேட்டாலும் அட்டியில்லாமல் கிடைக்கும். இப்பொ நினைச்சது நடக்கலை, கேட்டது கிடைக்கலை. அய்யாவால் வாங்கிக் கொடுக்க முடியாது என்றதும் குழந்தை என்ன செய்யும்; அழும். அதைத்தான் அவளால் செய்ய முடிந்தது. நீண்ட நாள் கழித்து எழும் அழுகையை அடக்க முடியலை.

எல்லா இளசுகளுக்கும் ஏற்படுகிற பேரிழப் புத்தான். நெஞ்சைக் கீறியது அந்த அழுகை. அந்த ஓலத்தை அவனாலும் தாங்க முடியலை. அவன் வாழ்க்கையில் நடந்த எல்லா துக்கங்களோடு இதுவும் சேர்ந்துகொண்டது. அவனும் அழுதான்.

ஒரு கட்டத்தில் இருவருடைய அழுகையும் நின்றதும், ''எந்தி... மகளே எந்தி!'' என்றான்.

''இந்த அத்த ராத்திரியிலா''

பிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்!

''ஆமா, ஆமா...''

''தாமசப்படுத்துனா, வேட்டையாடிருவாக...'' வேகமாக, வேண்டிய அத்தியாவசியங்களை துணி மணி, ரூவா சில்லறைகளையும், முருக்கந் தடியும் அதோடு சேர்ந்தவை அறுவாப்பெட்டியும் எடுத்துக்கொண்டான். புறப்படுவதற்கு முன்னால் அவள் அவனுக்குப் பின் வந்து மண்டியிட்டாள். இரண்டு கைகளையும் விரித்து ஏந்தி பிச்சை கேட்பது போல, ''அய்யா, அய்யா...'' என்றாள். ஆடிய மனசைக்கெட்டிப் படுத்திக்கொண்டு திடுக்கிடும்படியான குரலில் ''கிளம்பு!'' என்று கத்தினான்.

நடந்தார்கள். ''சாலை வழி வேண்டாம்; குறுக்குப்பாதை வழி போவோம். நட, முன்னால் நட!'' என்று நடத்திக்கொண்டு மறுநாள் சாய்ந் திரம் அவர்களின் ஊர் போய் சேர்ந்தார்கள்.

காலையில் வந்த முதலாளி, வந்து பார்த்து எல்லாத்தையும் யூகித்துக்கொண்டார். அவர் களைத் தேட ஆரம்பித்தார். இருக்கும் இடம் தெரிந்தது. ஒரு சவரனை எடுத்துக்கொண்டு பொன்னாசாரியிடம் போனார். அம்மன் தாலி செய்து கொடு என்று கேட்டுச் செய்து வாங்கிக் கொண்டார். அம்மன் தாலி என்றதால் மஞ்சக் கயத்திலேயே பூரிக்கொடுத்தார்.

வீட்டுக்குப் போனார். அரங்கு வீட்டுக்குள் போய் ஒளுக்கரப் பெட்டியைத் திறந்து, இருக்கிற பணத்தையும் தங்க நாணயங்களையும் எடுத்து, கக்கத்துப் பையில் வைத்து இடது தோளில் மாட்டிக் கொண்டு மேல் வேட்டியால் தெரியாமல் உடம்பை மூடிக்கொண்டார். கல்லாவில் உட்காந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த தம்பியைக் கூப்பிட்டனுப்பி, அவன் கையில் ஒளுக்கரப் பெட்டியின் சாவிக் கொத்தைத் தந்து, ''பெட்டியில் இவ்வளவு பணம் இருக்கு. நான் வெளியூர் போய் திரும்ப எத்தனை நாள் ஆகும் என்று தெரியாது. திரும்பினால், நேராக வீட்டுக்கு வராமல் ஒடுக்கத்திலேயே (சமாதி கட்டடத்தில்) தங்கிக் கொள்கிறேன். எல்லாம் உன்புறந்தான். இப்பொ யாரிட்டெயும் சொல்ல வேண்டாம்...'' என்று புறப்படும்போதே அவனுக்கு அழுகை முட்டியது. எதோ கேட்க வாய்யெடுத்தான். அவர் கை உயர்த்தி, 'எதுவும் பேசாதே!’ என்பது போல் பாவனை காட்டிவிட்டுப் போய்விட்டார்.

  பனையேறி வீட்டில், மகளுக்கும் தகப்பனுக்கும் பேச்சுவார்த்தை இல்லை. சமைக்கிறதை அவனே போட்டுச் சாப்பிடுவான்; போய்விடுவான். இவள் மிச்சம் உள்ளதை நாய்க்குப் போட்டு விட்டு, முடக்கிப் படுத்துக் கொள்வாள். நாட்கள் நகர்ந்தன. அன்னாகாரம் இல்லாததால் மயங்கி விழுந்தாள். அதன் பிறகு எழுந்திருக்கவில்லை. 'சொன்ன பேச்சு கேக்காதவள் இருந்தென்ன... போயென்னெ!’ என்று இருந்தாள்.

பக்கத்து வீட்டார்தான் நாட்டு வைத்தியரை அழைத்து வந்தார்கள். அவர் இரண்டு கைகளிலும் நாடி பாத்து விட்டு, ''இந்தப் பவரணை கழியணும்...'' என்று சொல்லி மருந்து தந்துவிட்டுப் போய்விட்டார்.

மருந்து உள்ளுக்கு இறங்கவில்லை. நெருங்கிய சொந்தங்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள். ஆனால், பவுர்ணமி வருவதற்கு முன்னாலேயே இறந்து போனாள்.

முதல் நாள் சாய்ந்திரம் இவன் பாளைசீவ பனைமரத்தின் மேலே இருந்துகொண்டு வழக்கம்போல நாலா திசைகளிலும் கண்ணோட விடுவான். அப்போது அந்த முதலாளி (செட்டியார்) அந்தப் பக்கம் லாந்திக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டான். 'அடடா, கஷ்டத்தின் நிழல் எங்கே போனாலும் கூடவே வரும் போலிருக்கே’ என்று பதறினான். வேகமாக இறங்கி வீட்டுக்கு வந்து பார்த்த போதுதான் மகள் இறந்து போயிருப்பது தெரிந்தது.

இது தன்சாவா, மாய்த்துக் கொண்டாளா என்று தெரிந்து கொள்ள முடியாமல் தவித்தான். முட்டி முட்டி அழுதாலும் தனது அருமை மகள் தன்னைவிட்டுப் போய்விட்டாள். சவ அடக்கம் பண்ண இடுகாட்டுக்கு உடம்பைக் கொண்டு போனபோதுதான் அங்கே வந்தார் செட்டியார். உரிமை கொண்டவர் போல வந்து அலறி அழும் அந்தப் புதிய மனிதனை ஊராரும் சுற் றத்தாரும் விசாரித்த போதுதான் அவர், நடந்த கதைகளை ஊர் பெரியவர்களிடம் சொன்னார்.

''நாங்கள் கண்டு கொண்டதோடு சரி. ஒருவரை ஒருவர் தொட்டுப் பழகியதோ... மற்ற வகையான பேச்சுகளையோ பேசிக் கொண்டதும் கிடையாது. நான் இவளை கல்யாணம் பண்ணிக்கொள்ள இவரிடம் பொண்ணு கேட்டேன். முடியாதுன்னு மறுத்து இங்கே வந்துவிட்டார்கள்...'' ஊர்ப் பெரியவர்களிடம் அவர் சொன்ன இன்னொரு விசயம்தான் எல்லாரையும் திடுக்கிட வைத்தது!

''இவளுடைய உடம்பை குழிக்குள்ளே இறக்குவதுக்கு முன்னால் அவளுக்கு நான் தாலிகட்ட  அனுமதிக்க வேணும்!'' என்று கேட்டார்.

'இது என்ன பரிகாசம், மடத்தனம்!’ என்று பலருக்கும் பலவிதமாகப் பட்டது. பேச்சுகள் பல விதமாகப் பிரிந்தது. 'இவம் சரியான கிறுக்கனா இருப்பாம் போலிருக்கே’ என்று ஒரு பெரியவர் கோபமாய்க் கேட்டார்.

''அதானெ; இவஞ்சாதி என்ன நம்ம சாதி என்ன, சரியான கோட்டிக்காரனா இருப்பாம் போலிருக்கே!'' இன்னொரு பெரியவர் சொன்னார்: ''உயிரோட இருக்கும் போதுதாம் சாதி; செத்துப் போனா பிணம்தாம்!'' என்றார்.

''என்ன பேசுதீருவே; செத்துப் போனாலும் சாதி உண்டும். சாதி வாரியா சுடுகாடு இடுகாடு இருக்கே, அதுக்கென்ன சொல்லுதீரு?

ஆக, இடுகாட்டின் தீர்ப்புப்படி செட்டி யாருக்கும் பிணத்துக்குத் தாலிகட்ட அனுமதி இல்லை. அழுது கொண்டே திரும்பினார் அவர்.

மகளின் உடம்பைப் புதைத்துவிட்டு வந்த பிற்பாடும் பனை ஏறிக்கு நிம்மதியில்லை. புதைத்த இடம் அந்த செட்டியானுக்குத் தெரியும். தோண்டி எடுத்துக்கொண்டு போய் மகளின் உடம்பை வைத்துக் கொண்டு என்ன கோலமும் பண்ணுவானோ என்று தோன்றி விட்டது. தன்னுடைய பனையடிக்கு அரவமில்லாமல் ஓடினான். நீளமான குழியைத் தோண்டி முடித்துவிட்டு, இடுகாட்டுக்கு ஓடினான். தனது மகளின் உடலைத் தோண்டி எடுத்துக்கொண்டுவந்து தனது பனையடியில் தோண்டிய குழியில் போட்டுப் புதைத்தான். அங்கே அவன் பகலில் தங்குவதற்குப் போட் டிருந்த குடிசைக்குள் போட்டு வைத்திருந்த கயிற்றுக் கட்டிலை, மூடிய மண்ணின் மீது போட்டு, அந்த கயிற்றுக்கட்டிலின் மீது விரித்த நான்கு விரி ஓலைகளைப் போட்டுப் படுத்துக் கொண்ட பிறகுதான் அவனுக்கு நிம்மதி பிறந்தது. என்றாலும் தூக்கம் வருவதாகத் தெரிய வில்லை.

அந்த மண்ணுக்குள் இட்ட அந்த உடல் செமிக்க வேண்டும். அதுவரையும் இரவு தவறாமல் வந்து படுத்திருந்தான். மழை கொட் டினால் மட்டும் வந்து குடிச்சைக்குள் படுத்து இருப்பான். வெரித்ததும் கட்டிலில் போய்ப் படுத்துக்கொள்வான். இப்படி நான்கு பவுர்ணமிகள் கழிந்தன. அதன் பிறகுதான் பனை ஏறிக்குத் தூக்கம் வந்தது. செட்டியாருக்குத் தூக்கம் போய்விட்டது. இரவுகளில், பேய் போல் தூக்கம் கொள்ளாத போதெல்லாம் அந்தக் காட்டில் நடமாடிக்கொண்டிருந்தார். பல இரவுகள் அவர் அந்த இடத்துக்குப் பூனை போல் வந்து பனை ஏறி நிம்மதியாகத் தூங்குவதை கவனித்திருக்கிறார். இந்தக் கட்டிலுக்கடியில் உள்ள மண்ணுக்குள்ளேதான் தனது பிரியமானவள் இருக்கிறாள் என்று அவருடைய மனசு சொன்னது. அய்ந்து பவுர்ணமிகள் அந்த மழைக்காலத்தோடு முடிந்தன. பனை ஏறியும் அந்த இடத்தை விட்டு விலகினான். நாள் பார்த்தார் அவர். பின் நிலா இரவாக இருக்க வேண்டும். மழைக் காலத்து மண் அவருக்குத் தோண்டத் தோண்ட உதவி செய்தது. உடலில் ஏற்பட்ட எலும்புகளை மட்டும் விட்டுவிட்டு, பாக்கி அனைத்தையும் எடுத்துவிட்டது மண். முகம் தெரிந்ததும் மகிழ்ச்சியுடன் பற்கள் அனைத்தும் தெரியச் சிரித்தது. உடனே மடியில் இருந்த தாலிக்கொடியை எடுத்து மனம் குலவையிட கட்டி மூன்று முடிச்சுகள் போட்டார்;

1. இனி நமக்குள் பிரிவென்பதே இல்லை.

2. ஒடுக்கத்தினுள் ஒன்றுபட்டிருப்போம் நாம்.

3. இனி பிறப்பென்பதே இல்லை நமக்கு.

தொட்டுத் தூக்கி அணைத்து முகத்தோடு முகம் சேர்த்து அந்த வெண் பற்களில் முத்தினார். மூச்சை உறுஞ்சி மீண்டும் முத்தினார். அந்த பற்களிலிருந்து பதநீர் வாடை வந்தது!

தாமதிக்கக் கூடாது. உன்னை தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டம் ஓடிவிட வேண்டும் ஒடுக்கத்துக்கு. இத்தனை நாள் இவளை பத்திரமாக வைத்திருந்து தந்த இந்தப் பள்ளத்துக்கு என்ன தருவது?

தோளிலிருந்து அந்தப் பையை எடுத்தார். கை நிறைய்ய தங்கச் சவரன்களை அள்ளினார். தலைப்பக்கத்திலிருந்து கால்பக்கம் வரை சால்க்குழியில் பட்டம் விதை போடுவது போலப் போட்டு முடித்துக் குழியை மூடி, சமன் செய்தார்.

மேல் வேட்டியை தரையில் விரித்து அந்த அவளை பொன்னம் போல எடுத்து வைத்து மூடி, தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அவருடைய ஒடுக்கம் என்ற சமாதிக்கு வந்து கதவைத் திறந்து உள்ளே வைத்து மூடிவிட்டு, வெளித்தாள் வார த்தில் படுத்து அயர்ந்து தூங்கினார்.

  எத்தனை நாள் தூங்கினோம் என்று தெரியாது. விழிப்பு வந்ததும் பேச்சுச் சத்தம் கேட்டுத் திரும்பினார். தம்பியும் குடும்பத்தில் முக்கிய மானவர்கள் வந்து காத்துக் கொண்டிருப்பது தெரிந்து. அவர் குளிப்பதற்கான ஏற்பாடுகளும் அன்ன ஆகார வகைகளும் தயாராக இருந்தன.

சைகை மூலம் தம்பியை மட்டும் தன்னருகே வரும்படி செய்தார். மற்றவர்கள் எல்லாரையும் போகும்படியும் இந்த அன்ன ஆகார வகைகள் எதுவும் இங்கே இருக்கக் கூடாது என்றும் உத்தர விட்டதும் அதுபடியே நடந்தது.

''நான் இங்கே இதெல்லாம் அனுபவிக்க வரவில்லை. நான் ஒடுக்கத்தினுள் ஒடுங்கப் போகிறேன். அன்ன ஆகாரம் எதுவும் வேண்டாம்.

நான் ஒடுங்கியது தெரிந்தவுடன், நான் என்னோடு கொண்டு வந்திருக்கும் எலும்புக்கூட்டோடு என் எலும்புக் கூட் டையும் சேர்த்து வைத்து ஆழமாகப் புதைத்துவிட வேண்டும். அதுவரை யாருக்கும் தெரியக் கூடாது. இதுதான் நீ எனக்குச் செய்ய வேண்டிய சத்தியம். என்று வாக்குப் பெற்றுக் கொண்டு அதுபடியே எலும்புக்கூடாகி, அந்த எலும்புக்கூட்டுடன் சேர்ந்து இருவரும் பூமிக்குள் போய் விட்டார்கள்.

பிரியப் பட்ட ஒரு பெண்ணும் ஆணும் இப்படித்தான் அந்தக் காலத்தில் சேர முடிந்தது எலும்புக் கூடுகளாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism