Published:Updated:

மாப்பிள்ளை சீர்

மாப்பிள்ளை சீர்
பிரீமியம் ஸ்டோரி
மாப்பிள்ளை சீர்

சிறுகதை /பாரததேவி, ஓவியம்/கண்ணா

மாப்பிள்ளை சீர்

சிறுகதை /பாரததேவி, ஓவியம்/கண்ணா

Published:Updated:
மாப்பிள்ளை சீர்
பிரீமியம் ஸ்டோரி
மாப்பிள்ளை சீர்

சிவகாமியின் மகளான மயிலுக்கு இது முதல் தீபாவளி. கணவர் ராமமூர்த்திக்கு லீவு கிடைக் காததால் சிவகாமியே மகளையும், மருமகனையும் அழைத்து வருவதற்காகப் பட்டணத்துக்குப் புறப்பட்டாள். எங்கே போவதென்றாலும் சிவகாமிக்கு அவள் தம்பி வாங்கிக் கொடுத்த குடையைப் பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும். அந்தக் குடை மீது அவளுக்கு அப்படியொரு பிரியம், ஆசை. போன வருஷம் வெளிநாட்டிலிருக்கும் அவள் தம்பி வாங்கிக் கொடுத்த குடை அது. 

குடையைச் சுற்றிலும் சிறுமணிகள் கோத்திருந்ததால் நடக்கும்போது இனிமையான இசையை எழுப்பும். அத்தோடு வண்ண வண்ண கலர்களால் அந்தக் குடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அது போதாதென்று குடையின் உச்சியில் அழகிய குஞ்சம் ஒன்று.

சிவகாமி எங்கு புறப்பட்டாலும் அந்தக் குடையோடு தான் புறப்படுவாள். அந்தக் குடையை விரித்து கையில் பிடித்தாலே சிவகாமிக்கு ஜிவ்வென்று ஒரு கௌரவமும், ஒரு கம்பீரமும் மனதுக்குள் ஏறிவிடும். எதிரில் வருபவர்களை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடப்பாள். மனதுக்குள் உற்சாகம் ஊஞ்சலாட்டம் போடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போதும் பேப்பரில் சுற்றி பாச்சா உருண்டை போட்டு பத்திரப்படுத்தியிருந்த அந்தக் குடையை எடுத்துக் கொண்டாள். அதன் பக்கத்திலேயே சிறு நகைப் பெட்டி ஒன்று இருந்தது. அதை எடுத்து திறந்து பார்த்தாள். இந்த தீபாவளிக்கு மரும கனுக்குப் போடவேண்டிய மோதிரம் அந்தப் பெட்டிக்குள் பதுங்கியிருந்தது. அதை எடுத்துக் கொண்டு போய் மருமகனிடம் காட்டலாம் என்று நினைத்தவள், வேண்டாம் மருமகனைக் கூட்டிக்கொண்டு வந்தபிறகு காட்டலாம் என்று நினைத்தவாறு அந்த மோதிரத்தை மீண்டும் பெட்டிக்குள் வைத்துவிட்டுப் புறப்பட்டாள் குடையை விரித்தவாறு.

பஸ் ஸ்டாண்டில் இருந்து மகள் வீட்டுக்கு ஆட்டோவில் வந்தவள், தனது குடையை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே மகள் இருக்கும் தெரு முனையிலேயே இறங்கிக் கொண்டாள். பகட்டும், பவுசுமாக குடையை விரித்துப் பிடித்தவாறு மனதுக்குள் பெருமை பொங்கி வழிய சாவகாசமாக நடக்க ஆரம் பித்தாள். எல்லோரும் இவளையே பார்ப்பது போன்ற ஒரு பிரமையுடன் குடையை சுழட்டி, சுழட்டி நடந்தாள்.

மாப்பிள்ளை சீர்

வீட்டுக்குள்ளேயே குடையோடு வந்தவளைக் கண்டதும் அவள் மகளுக்கும், மருமகனுக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை. குடையைப் பார்த்து மருமகன் மெய்மறந்து இருக்க... மகள் அம்மாவிடம் இருந்து குடையை வாங்கிப் பத்திரப்படுத்தினாள்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் இருந்ததால் மருமகன் செல்லத்துரையும், மயிலும் சிவகாமிக்கு ஊரையெல்லாம் சுற்றி காண் பித்தார்கள் தினமும் விதவிதமான சமையல் செய்து விருந்து படைத்தார்கள். புதுப்புது சினிமாவாகக் கூட்டிக் கொண்டு போனார்கள். சிவகாமி சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனாள். மகளும், மருமகளும் உபசரித்ததில் அவளுக்கு தான் கொண்டு வந்த குடைகூட மறந்து போனது. குடையை எடுக்காமலே ஊருக்குப் புறப்பட்டுவிட்டாள்.

வாசலில் வந்து ஆட்டோ நிற்கவும்... ''அய்யா மருமகனே! உங்களுக்கு நீலக்கல்லு பதிச்சு அழகா புதுமாடல்ல ஒரு பவுனுக்கு மோதிரம் எடுத்திருக்கேன். தீபாவளிக்கு முதல் நாளே வந்துருங்க... தீபாவளியன்னிக்கு எண்ணைய் தேச்சி தலைக்கு குளிச்சிட்டு அந்த மோதிரத்தைப் போட்டுக்குவீங்களாம்!'' என்று சொன்னதும் செல்லத்துரைக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

''நீங்க சொன்ன மாதிரியே வந்துடுறோம் அத்தை...'' என்றவன், ''இந்தாங்க அத்தை உங்களுக்கும், மாமாவுக்கும் கருப்பட்டி மிட்டா யின்னா ரொம்பப் பிடிக்குமேன்னு அரைகிலோ வாங்கிட்டு வந்தேன். வீட்டுக்குப் போயி மாமாவுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிடுங்க...'' என்று ஸ்வீட் பையை தூக்கிக் கொடுத்தபோது சிவகாமிக்கு மனம் பூரித்துப் போனது. இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்கத்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே ஆட்டோவில் ஏறினாள்.

தன் ஊருக்கு வந்த பிறகுதான் சிவகாமிக்கு குடையின் ஞாபகமே வந்தது. தன் உயிருக்கும் மேலான குடையை மகள் வீட்டில் வைத்துவிட்டு, வந்ததை நினைத்து துடிதுடித்துப் போனாள். அப்போதே மருமகனுக்கு போன் செய்து, ''நீங்கள் வரும்போது குடையை மறக்காம கொண்டு வந்துருங்க. அப்பத்தேன் எனக்கு தீபாவளிய சந்தோசமா கொண்டாட முடியும்...'' என்று இரண்டு, மூன்று தடவை சொல்லி விட்டாள்.

மயிலும், செல்லத்துரையும், ''நிச்சயமா குடையோடு வாறோம்!'' என்று சொன்ன பிறகுதான் சமாதானமாகி தீபாவளிக்கான பலகாரங்களைச் செய்ய ஆரம்பித்தாள்.

தீபாவளிக்கு முதல் நாள் மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார்கள், புதுத் தம்பதி. அவர்கள் வந்ததும் வராததுமாக, ''வாங்க மருமவனே, வா மயிலு... குடைய கொண்டுக்கிட்டு வந்தீங்களா?'' என்றுதான் முதலில் கேட்டாள்.

சிவகாமி கேட்ட பிறகுதான் மயிலுக்கும், செல்லத்துரைக்கும் குடையின் ஞாபகமே வந்தது. முதன் முதலாக ஜோடியாக தலை தீபாவளிக்கு ஊருக்குப் போகும் மகிழ்ச்சியில் அவர்களுக்கு குடையைப் பற்றிய நினைவே இல்லை.

''போம்மா, எங்களுக்குக் குடை ஞாபகமே வரலை. இன்னொரு தடவ நீ எங்க வீட்டுக்கு வரும்போது குடையை எடுத்துக்கலாம்...'' என்று மயிலு அலட்சியமாகச் சொன்னதைக் கேட்டு சிவகாமிக்கு கோபம் உச்சி மண்டையைத் தாக்கியது.

''நீ என்னடி சொல்றே... தங்க நகையைப் பத்திரப்படுத்துற மாதிரி நானு அந்த குடையை பத்திரப்படுத்தி வெச்சிருக்கேன். அந்த மாதிரி குடை இந்த ஜில்லாவுலயே கிடைக்காது. உம்மாமன் பாசத்தோட வெளிநாட்டுல இருந்துல்ல அதை வாங்கிக் கொடுத்திருக்கான்...'' என்றாள்.

''சரிம்மா, அந்தக் குடையை நாங்க என்ன பிச்சா தின்னுட்டோம்? காலையில வண்டியில ஏறுன தீபாவளிக் கூட்டத்தில் இடிபட்டு, மிதிபட்டு உன் வீட்டுக்கு வந்துருக்கோம். வந்ததும் வென்னி போட்டு குளிக்க வெச்சி பசி அமத்தாம... குடையைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கே?'' என்று மயிலு சொன்னதும், கோபத்தோடு அவளைப் பார்த்த சிவகாமி, ''உங்கூட எனக்கென்ன பேச்சு? நானு மாப் பிள்ளகிட்ட பேசிக்கிடுதேன்...'' என்றவள் விடுவிடுவென்று வீட்டுக்குள் போய் செல்லத்துரைக்காக வாங்கிவைத்திருந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு வந்து மருமகனிடம் காண்பித்தாள்.

''இந்தா பாருங்க மாப்பிள்ளே... உங்கள் மோதிரத்தை!'' என்று தன் கையில் வைத்துக் கொண்டு செல்லத்துரையிடம் காட்டியபோது அவன் அந்த மோதிரத்தின் அழகைப் பார்த்து மயங்கிப்போனான்.

தாமரைப்பூ வடிவத்தில் வெள்ளைக் கல்லின் நடுவில் நீலக்கல் பதித்துப் பார்ப் பதற்கு மிகவும் கவர்ச்சியாயிருந்தது அந்த மோதிரம். செல்லத்துரை மிகவும் ஆசைப்பட்டு மோதிரத்தை எடுப் பதற்காகக் கையை நீட்டியபோது, சிவகாமி பெட்டியை மூடி அதை தன் கைக்குள்ளேயே பத்திரப்படுத்திக் கொண்டாள். ''இந்த மோதிரம் உங்க கைக்கு வரணுமின்னா, நீங்க போயி நாளைக்கே என் குடையை என் கையில் கொண்டாந்து கொடுக்கணும். அப்பத் தேன் தீபாவளிச் சீரா இந்த மோதிரத்தை உங்களுக்குக் கொடுப்பேன். இல்லாட்டி அடுத்த தீபாவளிக்குத்தேன். அப்பக்கூட சூழ்நிலை எப்படியிருக்கோ, என்னமோ... கண்டிப்பா உங்களுக்கு மோதிரம் போடுவேன்னு சொல்ல முடியாது!'' என்று மாமியார் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனான் செல்லத்துரை.

எப்படியும் இந்தத் தடவை மோதி ரத்தைத் தன் விரலில் போட்டே ஆக வேண்டுமென்று ஆசையும் வெறியுமாய், ''நீங்க முதல்ல மோதிரத்தைப் போடுங்க அத்த... நானுபோயி குடையைக் கொண்டுவாரேன்!'' என்று செல்லத்துரை சொல்ல, பிடிவாதமாக மறுத்தாள் சிவகாமி.

''கோவிச்சிக்கிடாதீங்க மாப்பிள்ளை. நீங்க குடையைக் கொண்டு வந்தாத்தேன் இந்த மோதிரம் உங்க விரலுக்கு வரும்...'' என்று சொன்னவள் மோதிரத்தைக் கொண்டு போய் பெட்டியில் வைத்து பூட்டியதோடு சாவிக்கொத்தையும் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள்.

மாப்பிள்ளை சீர்

மோதிரத்தின் மீது உள்ள மோகத்தால் செல்லத்துரை ஊரிலிருந்து வந்த அலுப்பைக்கூட பார்க்காமல் அப்போதே ஊருக்குப் புறப்பட்டு விட்டான். தீபாவளி கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பஸ்ஸிலும் நூறு, இருநூறுன்னு ஆளுங்க வரிசையாக காத்துக் கிடந்தார்கள். இவனும் போய் நின்றான். ஊருக்குப் போகும் சந்தோசத்தில் அவன் மத்தியானம்கூட சரியாகச் சாப்பிடவில்லை. அதனால் பசி வயிற்றைக் சுருட்டியது.

பதினொரு மணிக்கு மேல்தான் இவனுக்கு பஸ் கிடைத்தது, அதுவும் உட்கார இடம் கிடைக்கவில்லை. ஒரே இரைச்சல், புழுக்கம், நெருக்கடி தாங்காமல் ஒவ்வொருத்தரும் மிதித்துக் கொண்டு இருந்தார்கள். கூட்டத்தில் இடித்துப் பிடித்து அவன் வீடு வந்து சேர்ந்ததும், 'அப்பாடா...’ என்று கொஞ்ச நேரம் ஃபேனை சுழலவிட்டுப் படுத்தவனுக்கு கண்ணைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்தது. தூங்கினால் தீபாவளிக்குள் ஊர் போய் சேரமுடியாது, மோதிரமும் கிடைக்காது என்று நினைத்தவன் ஒரு டம்ளர் தண்ணியைக் குடித்துவிட்டு அவசர, அவசரமாக குடையைத் தேடினான். குடையை எங்கேயும் காணவில்லை.

ஒரு வேளை மயிலு பரண்மீது குடையை பத்திரப்படுத்தியிருப்பாளோ? பரண் மேலிருந்த பொருள்களையெல்லாம் இறக்கித் தேடினான் உடம்புதான் களைத்துப் போனதே தவிர, அவன் கண்ணுக்கு குடை தட்டுப்படவே இல்லை. எரிச்சலும் கோபமுமாக மயிலுக்கு போன் அடித்து குடையைப் பற்றி கேக்க... அவள், 'அய்யய்யோ... உங்ககிட்ட சொல்ல மறந்தே போனேன் நம்ம தெருவுக்கு ஆறு தெரு தள்ளி தையல் தைப்பாங்களே பார்வதி அக்கா... அந்த அக்கா ஒரு நாளு நம்ம வீட்டுக்கு வந்தப்போ குடையைப் பாத்துட்டு, அவங்க வீட்டுக்காரருகிட்ட காமிச்சிட்டு வாரேன்னு எடுத்துட்டுப் போனாங்க. அவங்களும் திருப்பிக் கொண்டாந்து கொடுக்கல... நானும் அதைக் கேக்க மறந்தே போனேன். ப்ளீஸ், அவங்க கிட்ட இருந்து மறக்காம குடையை வாங்கிட்டு வந்துருங்க...’ என்று ரொம்பக் கொஞ்சலாகச் சொன்னதும் செல்லத்துரைக்கு கோபம் சண்டாளமாக வந்தது.

மயிலு பக்கத்திலிருந்தால் நாலு அறை அறைந்திருப்பான். என்ன செய்வது? தன்னையே நொந்து கொண்டவனாக பார்வதியின் வீட்டைத் தேடி புறப்பட்டான். அவள் வீடு அவனுக்குத் தெரியாததால் தெரு, தெருவாய் விசாரித்துக் கொண்டு அவள் வீட்டுக்குப் போனபோது அந்த வீட்டு பூட்டப்பட்டு இருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பார்வதியைப் பற்றிக் கேட்டபோது, அவள் திருச்சியிலிருக்கும் அவள் அம்மா வீட்டுக்கு தீபாவளி கொண்டாடப் போய்விட்டதாகச் சொன்னார்கள்.

'குடை போய் தொலையட்டும். உங்கள் மகள்தான் குடையை அடுத்தவரிடம் கொடுத்துவிட்டாள் என் மீது எந்தத் தப்பும் இல்லை’ என்று தன் மீது இருக்கும் நியாயத்தைச் சொல்லி எப்படியாவது மோதிரத்தை வாங்கிவிட வேண்டுமென்று மீண்டும் பஸ் ஸ்டாண்ட் வந்தான் செல்லத்துரை. பசித்த வயிற்றுக்கு நான்கு வாழைப்பழத்தை வாங்கித் தின்றுவிட்டு நீண்ட வரிசையில் நின்று அவன் ஊர் வந்து சேர்ந்தபோது பளிச்சென்று தீபாவளிக்கு மறுநாளாக விடிந்திருந்தது.

''மாப்பிள்ள தீபாவளி முடிஞ்சிருச்சி... அடுத்த வருசந்தேன் உங்களுக்கு தீபாவளி சீரு!'' என்று சிவகாமி சொல்ல, செல்லத்துரைக்கு தலைக்குள் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது.

மாப்பிள்ளை சீர்
மாப்பிள்ளை சீர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism