Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 22

குடி குடியைக் கெடுக்கும் - 22
பிரீமியம் ஸ்டோரி
குடி குடியைக் கெடுக்கும் - 22

#BanTasmac தொடர்பாரதி தம்பி, படங்கள்: ப.சரவணகுமார்

குடி குடியைக் கெடுக்கும் - 22

#BanTasmac தொடர்பாரதி தம்பி, படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
குடி குடியைக் கெடுக்கும் - 22
பிரீமியம் ஸ்டோரி
குடி குடியைக் கெடுக்கும் - 22

கள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்... குடிகார மருமகன்களால் அடையும் மனஉளைச்சல். குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்துத் துன்புறுத்துவது, வார்த்தைகளால் சுட்டுப் பொசுக்குவது, சந்தேகப்பட்டு சண்டை வளர்ப்பது, வீட்டுக்கே வராமல் சாக்கடை ஓரங்களில் வீழ்ந்துகிடப்பது என, குடிகாரர்கள் செய்யும் அத்தனை அட்டகாசங்களும் பெண்ணைப் பெற்றவர்களைத் தாங்கமுடியாத துன்பத்துக்குள் தள்ளுகின்றன. `ஆசை ஆசையாகப் பெற்று வளர்த்த பெண்ணின் வாழ்க்கை இப்படிச் சீரழிகிறதே!' என ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு நரகவேதனை.

குடிகாரர்கள் குடித்துவிட்டு வம்பு வளர்ப்பதும், அது கொலை வரை சென்று முடிவதும் அன்றாடச் செய்தியாகிவிட்டது. அது நம் கவனத்தை ஈர்ப்பது இல்லை. ஆனால், இவற்றைத் தொகுத்துப் பார்த்தால், பளிச்சென ஒரு விஷயம் புரிகிறது. குடிகார மருமகன்களைக் கொலைசெய்த மாமனார்களின் எண்ணிக்கை, அஞ்சத் தகுந்த எண்ணிக்கையில் பெருகிவருகிறது.

ஈரோடு மாவட்டம் ஆணைக்கல் பாளையத்தைச் சேர்ந்த குப்புசாமிக்கு 30 வயது. திருமணமாகி இரண்டு குழந்தைகள். குப்புசாமி குடித்தால் தலைகால் புரியாமல் ஆட்டம் போடுவார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கடும் சண்டை. அவ்வப்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிடுவார் மனைவி. பெரும்பாலும் குடிபோதையிலேயே இருக்கும் குப்புசாமி, மாமனார் வீட்டுக்கே வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார். மாமனார் தங்கவேல் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். அது அன்றைய ஒருநாளில் வந்த கோபம் அல்ல...

ஒட்டுமொத்தமாக தன் பெண்ணின் வாழ்வை துன்பக் கேணியில் அமிழ்த்திய ஒரு மிருகத்தின் மீது அவர் கொண்ட பல்லாண்டுகாலக் கோபம். `இப்படி ஒருவனுக்குக் கட்டிவைத்துவிட்டோமே!' என தன்மீது கொண்ட குற்றவுணர்ச்சி, வீடு தேடி வந்து அசிங்கப்படுத்துகிறானே என்ற அவமானம் எல்லாம் சேர்ந்து நிலைகுலைந்த தங்கவேல், அருகில் கிடந்த ஒரு கட்டையால் மருமகனின் மண்டையில் தாக்கினார். எதிர்க்க வலுவின்றி போதை மயக்கத்தில் இருந்த குப்புசாமியின் உயிர் பிரிந்தது. தன் மகள் வாழாவெட்டியாக இருக்க, தானே காரணமாகிவிட்டோமே என்ற சராசரி தகப்பனின் குற்றவுணர்வுடன் சிறைக்குச் சென்றுவிட்டார். ஆனால் அவரது மகள், தொடர்ந்து அந்த மனிதனுடன் வாழ்ந்திருந்தாலும் அந்த வாழ்க்கையும் வெட்டிதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

குடி குடியைக் கெடுக்கும் - 22

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்செங்கோடு அருகே கல்லாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்துக்கும் ஈஸ்வரிக்கும் திருமணம் முடிந்து ஆண்டுகள் பல முடிந்துவிட்டன. குடிநோயின் உச்சத்தில் இருந்த சண்முகம், மனைவியை அடித்து நொறுக்க... அவர் தன் அப்பா வீட்டுக்குச் சென்றார். அங்கும் வந்து அடிக்க... பொறுமை இழந்த மாமனார் பொன்னையன், இரும்புக் கம்பியை எடுத்து மருமகனின் மண்டையில் அடிக்க... உயிர் பிரிந்தது.

முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோ டையில் தன் மகளின் வாழ்க்கை இப்படிச் சீரழிவதைக் கண்டு மனம் கொதித்த ஒரு மாமியார், மருமகனை உருட்டுக்கட்டையால் அடித்து, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டார். இப்படி எக்கச்சக்கச் சம்பவங்கள்.

உண்மையில், இது மிகப் பெரிய சமூக பண்பாட்டுச் சிக்கல். மகளுக்குத் திருமணம் செய்துவைப்பதையே வாழ்நாள் நோக்கமாகக் கொண்ட பெற்றோர்கள் வாழும் மாநிலம் இது. பிறந்தது பெண் குழந்தை என்றால், பிறந்ததில் இருந்தே பொருள் சேர்க்கத் தொடங்குகின்றனர். தங்களின் மொத்த வாழ்வையும் அடமானம் வைத்து, பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். உறவினர்கள், நண்பர்களின் அத்தனை தொடர்புகளையும் பயன்படுத்தி, தங்கள் அறிவுக்கு உட்பட்ட அனைத்து வழிகளிலும் உறுதிப்படுத்திய பிறகே ஒரு மருமகனைத் தேர்வுசெய்கின்றனர். இப்படித் தேர்வுசெய்யும் மகளின் மண வாழ்வு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பெற்றோர்கள் மிக நன்றாக அறிவார்கள். இந்தியக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையை ஏற்கும் அப்பா, அதைக் கூடுதலாக அறிவார். அவரே தன் மகளின் கணவனை, தான் தேடித் தேடிக் கண்டுபிடித்த மருமகனைக் கொலைசெய்யும் மனநிலைக்குச் செல்கிறார் என்றால், அந்த மனவேதனையின் அடர்த்தியை நாம் சற்று மனமூன்றிக் கவனிக்க வேண்டும்.

மருமகன் குடிக்கிறார், பிள்ளையைப் போட்டு அடிக்கிறார் எனத் தெரிந்த பிறகு, ஒரு நாள் ஒரு பொழுதேனும் அவர்கள் நிம்மதியாக உறங்கியிருப்பார்களா? எந்தக் கோயிலுக்குச் சென்று வேண்டினால் அவர் திருந்துவார், எதை வாங்கிக் கொடுத்தால் மனம் மாறுவார் என, தங்கள் தரப்பில் செய்யவேண்டிய எல்லா வற்றையும் செய்து முடித்து மனசுவிட்டுப்போய் வெறுமை நிலைக்குச் செல்லும் வரை அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

உண்மையில் இந்தியக் குடும்பங்களில் மாமனார்-மருமகன் உறவு என்பது சாராம்சத்தில் பெருந்தன்மையும் நெகிழ்ச்சியும் நிறைந்தது. தான் வாழ்ந்து முடித்த வாழ்வை தன்னைப்போல் ஒருவன் வாழத் தொடங்கியிருப்பதை புன்னகையுடன் அங்கீகரிக்கும் அதன் பலவீனங்களை, திறந்த மனதுடன் ஏற்கும் மனம் அவர்களுக்கு உண்டு. அதனால்தான் மாமியார்-மருமகள் சண்டையைப்போல, மாமனார்-மருமகன் சண்டைகள் அதிகம் வருவது இல்லை. இந்த உறவுச் சமநிலையை, குடி உடைத்து நொறுக்கிவிட்டது.

சொன்ன உதாரணச் சம்பவங்களில் பெரும்பாலானவற்றில் ஒரு பொதுத்தன்மையை காண முடிகிறது. மகளின் வாழ்வு துன்பநிலையில் இருக்கிறது எனத் தெரிந்தாலும், அவள் எங்கோ கண்காணாத இடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் வரை அதைச் சகித்துக்கொள்கிறார்கள். தங்களின் ஆத்திரத்தால் மகளின் வாழ்வு கெட்டுவிடக் கூடாது என்ற பெருந்தன்மையின் கரை உடையும் வரை, அந்தப் பொறுமை நீடிக்கிறது. தங்கள் கண் எதிரில் பெற்று வளர்த்த பிள்ளை தாக்கப்படும் போதுதான் நிலைகுலைந்துவிடுகின்றனர். ஆனால், இப்படி மருமகனின் குடியால் மகளின் வாழ்வு சீரழிகிறது எனக் கவலைப்படும் மாமனார்கள் பலபேர், பெரும் குடிகாரர்களாக இருப்பதுதான் நகைமுரண். அவர்களின் பல்லாண்டுகாலக் குடிக்கு மனைவி பழகிவிட்டிருப்பதால், அதைக் குற்றப்பட்டியலில் இருந்து அவர்களே விடுவித்துக்கொள்கின்றனர். மொத்தத்தில் லட்சக்கணக்கான தமிழகப் பெண்களின் வாழ்க்கை, குடியினால் கெடுத்துக் குட்டிச்சுவராக்கப்பட்டுள்ளது.

மகளின் துன்பநிலை கண்டு பொறுக்காத எல்லா அப்பாக்களும், கொலை வரை செல்வது இல்லை. பலர், தங்களைத் தாங்களே ஒரு நடைப்பிணமாகக் கருதிக்கொண்டு மிச்ச வாழ்வைக் கழிக்கின்றனர். வேறு சிலர், துணிந்து முடிவு எடுத்து மகளுக்கு மணமுறிவு பெறுகின்றனர். இந்தியாவில் அதிக மணமுறிவு நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இந்தியாவில் நடைபெறும் மொத்த மணமுறிவில் 8.8 சதவிகிதம் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இது மேற்கொண்டு அதிகரித்தும் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துவரும் மணமுறிவுக்கு, குடி ஒரு முதன்மைக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக, படித்த மத்தியத் தர வர்க்கத்தைச் சேர்ந்த இளம் தம்பதியர்தான் குடியில் அதிகமாக வீழ்கிறார்கள். சென்னையின் மக்கள் அடர்த்தி அதிகம் என்பதால், அங்கு அதிக எண்ணிக்கையிலும் (சுமார் 8,000 வழக்குகள்), மாநிலம் முழுவதும் மணமுறிவு மிக அதிகமாக இருக்கிறது.

குடி குடியைக் கெடுக்கும் - 22

பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி முதல் ஏழு மாதங்களில் மட்டும் 130 குடும்பத் தகராறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் கணிசமானவை, மணமுறிவு வழக்குகள். குடி போதையில் மனைவியை அடிப்பது, சந்தேகப்படுவது ஆகியவை முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.

வெளியில் அதிகம் சொல்லப்படாத இன்னொரு காரணம், ஆண்மைக்குறைவு. இதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதில் ஆயிரத்து ஒன்றாவது காரணமாக, குடி இணைந்திருக்கிறது. பலர், ‘குடிப்பது ஆம்பளைத்தனம்’ என எண்ணிக்கொண்டு குடிக்கிறார்கள். இருக்கும் ஆண்மை பறிபோவதற்கே அதுதான் காரணமாக இருக்கிறது என்பது மருத்துவர்கள் சொல்லும் உண்மை. டாஸ்மாக்கின் வருகைக்குப் பிறகு குழந்தைப்பேறின்மையின் விகிதம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது, இவர்களைக் குறிவைத்து உருவாகியிருக்கும் ஃபெர்ட்டிலிட்டி சென்டர்கள் எவ்வளவு அதிகரித்துள்ளன...  என்பது எல்லாம் ஒன்றை ஒன்று தொட்ட சங்கிலித்தொடர் கண்ணிகள்; அழிவில் இருந்து ஆதாயம் பார்க்கும் பண்புகொண்டவை. மேலும் ‘ஆண்மைக்குறைவு என்பது, குழந்தைப்பேறின்மை மட்டும் அல்ல, உடலுறவில் முழுமையாக ஈடுபட இயலாத தன்மையும்தான். குடிப்பவர்கள் இந்த நிலைக்கு எளிதில் ஆளாகிறார்கள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். மணமுறிவுக்காக நீதிமன்றப் படி ஏறுவதற்கு இந்தச் சிக்கலும் ஒரு காரணம்.

இப்படி உடலுறவில் ஈடுபட முடியாத போதையாளிகள், தங்களின் இயலாமையை முந்திக்கொண்டு மறைத்துக்கொள்வதற்காக எதிராளியைக் குற்றவாளியாகச் சித்தரிக்கிறார்கள். அது சந்தேகமாக உருமாறி, மனைவியைத் துன்புறுத்து கின்றனர். கணவன் முழுமையான குடிநோயாளியாக மாறும் வீடுகளில் இந்தச் சந்தேகம்தான் பெண்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை. உளவியல்ரீதியாக வீழ்த்தப்பட்டு, நான்கு பேரிடம் நியாயம் கேட்க முடியாமல் மனதுக்குள்ளேயே குமைந்து, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சமூகரீதியாக, குடும்பரீதியாக, தனிப்பட்ட உடல் மற்றும் உளவியல்ரீதியாக அனைத்து வகையிலும் மாபெரும் சீரழிவுச் சக்தியாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடைகளை, விடா முயற்சியுடன் தொடர்ந்து நடத்திவருகிறது இந்த அரசு. ஆனால் மக்களோ, இதற்கு மேலும் இதைத் தாங்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். மக்கள் தங்கள் மனங்களில் டாஸ்மாக்கை மூடும் முடிவை எடுத்து வெகுகாலம் ஆகிறது. அந்த எண்ணத்தைச் செயல்படுத்துவது எப்படி... டாஸ்மாக்கை மூடுவது எப்போது?

- போதை தெளிவோம்...