Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியம்: ஹாசிப்கான்

சொல்வனம்

ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

எனக்குத் தெரியும்! 

அவளிடமிருந்து

எந்தக் குறுஞ்செய்தியும் வரவில்லை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்த அழைப்பும் வரவில்லை.

எதிரில் நான் வந்தும்

எந்தச் சலனமுமின்றி விலகிப்போகிறாள்.

வழக்கமாய் இருவரும் சேர்ந்துபோகும்

23கி பேருந்தில் இப்போதெல்லாம்

அவள் ஏறுவதில்லை.

கல்லூரிச் சாலையோர ஆவின் பாலகத்திற்கு

தோழிகளோடு வந்து போகும் அவள்

அங்கும் வருவதில்லை.

எனக்குப் பிடிக்குமென

வெள்ளிக்கிழமைகளில் கூந்தலை விரித்துவிட்டு

மஞ்சள் ரோஜா வைத்துவரும் அவள்

இப்போதெல்லாம் அப்படியும் வருவதில்லை

என் நெருங்கிய நண்பனோடும் பேசுவதில்லை.

அவள் தோழிகளையும்

என்னோடு பேச அனுமதிப்பதில்லை.

அழுது அழுது சிவந்து

ஏதோ ஒரு பயத்தைச் சுமந்துகிடக்கும்

கண்களோடு

என்னைக் கண்டுகொள்ளாமல்

கடந்து போகிறாள்.

இளவரசன் இறந்தபோதும்

இவ்வாறே

கோகுல்ராஜ் இறந்தபோதும்

இவ்வாறே.

எனக்குத் தெரியும் பட்டப்பகலில்

சங்கர் கழுத்தறுபட்டதைப்

பார்த்ததில் இருந்தும்

இவள் இவ்வாறே...

 - ச.ஜெய் 

நமது துபாய் பேச்சுலர்!

எண்ணெய்க் கிணறுகளுக்குப் பேர்போன தேசத்தில்

இரண்டாம் கட்டப் பணி முடிந்து

நள்ளிரவில் வீடு திரும்புகிறான்

நம் காரைக்குடி ஆசாமி.

அவனது படுக்கையில் சினேகிதமாய் வந்தமர்கிறது

இடி சப்தங்களும் மின்னல் தெறிப்புகளும்

ஊதற்காற்றும் சூழக் கொட்டும் கனமழையுடன்

செம்பழுப்பாய் தாய்மண்.

நெஞ்சாங்கூட்டு மேல் புரள்கிறது புதுவெள்ளம்.

சீமையோட்டு வீட்டில்

ராப்பொழுது சாப்பாட்டுக்குத் தயாராக இருக்கிறது

முலைப் பருத்த இளமனைவி தயாரித்த

கருவாட்டுக் குழம்பு.

வயிறுமுட்டத் தின்றவன் முன்

சந்தன முல்லை வாசம் கமழ

மல்லாந்து படுக்கிறது காமம்.

உதவிக்கு வருகிறது காற்றூதி தலையணை

குருடெண்ணெய் நாற்றம் பொங்க.

அதனாலே...

ஓர் அவசர வேண்டுகோள்போல்

பேச விழைந்து

அங்கலாய்ப்புகளும் அலைக்கழிப்புகளும்கொண்டு

விரிந்த பின்புலத்தில் எடுத்துரைத்த

விலக்கப்பட்டவன் பற்றிய

துயரம் மண்டிய புனைவு

உன்னைப் பொறுத்தமட்டில்

வெறும் கதையாகிப்போனது.

அதனாலே தன் தற்கொலைக்கு

யாரும் காரணமல்ல என்று

ஒரு கடிதம் எழுதிவைத்து

முக்கியமான காரணமொன்றின் மேல்

வெளிச்சம் பாய்ச்சிவிட்டு

நட்சத்திரங்களுடன் கலந்துவிட்டான்

என் கதை நாயகன்

ரோஹித் வெமூலா!

 - வெ.வெங்கடாசலம்

திருச்சியை நெருங்குகிறது வைகை எக்ஸ்பிரஸ்!

மெலிந்த கைகளினுள் அடங்காமல்

அளவில் சிறிது தடித்த புதினத்துடன்

யுவதி ஒருத்தி எதிர் இருக்கையில்.

சிநேகமாகப் புன்னகைத்தவளிடம்

சொல்வனம்

தயக்கமாக முறுவலித்த

என் கரங்களினுள்

'வெண்ணிற  இரவுகள்’.

வாசித்தலின் களிப்பினூடே

யதேச்சையாக சந்தித்த ஓரிரு வேளைகளில் தன்னியல்பாகப் புன்னகைத்துக்கொண்டதில்

எக்ஸ்பிரஸ் சற்று அதிகமாகக் கூவி வேகமெடுத்தது.

முகம் உரசும் சாளரக் காற்றும்

'தடக் தடக்’ ரயில் அசைவும்

நினைவில் அம்மாவின் தூளியை

மீட்டெடுத்திருக்குமோ என்னவோ சிறிது நேரத்திற்கெல்லாம் உறங்கிப்போனாள்

ஒரு குழந்தையின் பாவனையில்.

மடியில் படபடத்துப் புரளும்

புதினத்தின் பக்கங்களில்

கள்ளத்தனமாக ஊடுருவும் இளவெயில்

மனம் கரையுமொரு சித்திரத்தையொத்திருந்தது.

நீளும் இந்த இதமான

பிற்பகல் பயணத்தில்

இன்னும் நேரம் இருக்கிறது

இறுதியாகப் புன்னகைத்து

நாங்கள் விடைபெறுவதற்கும்,

தடித்த புதினத்தின்

மீதப் பக்கங்களை சாவகாசமாக

வெயில் படித்து முடிப்பதற்கும்.

 - தர்மராஜ் பெரியசாமி