அஞ்சல் முகவரியாக
அலுவலக முகவரியைக் கொடுப்பது
என் வழக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வீடு போல் புறநகரிலன்றி
நடுநகரிடை அலுவலகம் என்பதால்
கடிதங்கள் ஒருநாள் முன்பாகக் கிடைக்கும்.
நரசிம்மன் என்கிற மூத்த அஞ்சல்காரர்
பத்துப் பதினைந்து ஆண்டுகள் வரை
கடிதம் கொடுத்தார்.
அலுவலகப் படிக்கட்டில் அமர்ந்துதான்
கடிதங்களைப் பகுப்பார்.
அவர் காலடியில்
தெருநாய் ஒன்றும் முன்கால் நீட்டி அமர்ந்து
வேடிக்கை பார்க்கும்.
கோடையில்

தம் சிவந்த மேனி வியர்வையில் ஊற
வினையொன்றே நோக்காகக்
கடிதங்கள் அடுக்குவார்.
அவர் மிகுதியாய்ப் பேசி நான் பார்த்ததில்லை.
பேசுகையில் வல்லினங்களை
அழுத்திப் பலுக்குவார்.
ஓய்வுக்கு பத்தாண்டுகள் முன்புதான்
அவருக்குத் திருமணமாயிற்று.
அதன் பின் நரசிம்மனின் பேச்சு
முற்றாக முடங்கிற்று.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு
என் கட்டடத்தார் அவரையும் அழைப்பர்.
மொடாக்குடியர் என்று அப்போதுதான் தெரிந்தது.
குடித்ததோடு குத்தாட்டமும் போட்டார்.
மறுநாள் அவரிடம்
ஆடிய கூத்துகளைச் சொன்னபோது
வெட்கினார்.
தீபாவளி... பொங்கலுக்கு
ஐம்பது, நூறு பெறுவார்.
தராதபோதும் முகமாற்றம் இராது.
புதியவர் ஒருவர் அஞ்சல் தந்தபோதுதான்
நரசிம்மன் ஓய்வுபெற்றதை அறிந்தோம்.
பிறப்பூர் நோக்கிப் பெயர்ந்துவிட்டது தெரிந்தது.
பின்னொரு பெரியம்மா
அஞ்சல் தரத் தொடங்கினார்.
வெய்யிலில் காய்ந்து வருகையில்
அமரச் சொல்வேன்.
குடிநீரோ தேநீரோ தருவதுண்டு.
வழியிடையில் கண்டாலும்
அஞ்சல் அடுக்குகளைக் கலைத்து
'இன்று ஒன்றுமில்லை...’ என்று
சொல்லிவிட்டே அகல்வார்.
பிறிதொரு நாள் அமர்கையில்
தம் குடும்பக்கதை பகர்ந்தார்.
முப்பெண்டுகளில்
மூத்தது கணவனைப் பிரிந்தது.
இரண்டாவது பணிக்குச் செல்கிறது.
மூன்றாவது படிக்கிறது.
தனியாளாய்க் கடிதஞ்சுமந்து உழைத்து
விதியோடு போராடுகிறார்.
இப்படியிருக்க
அண்மையில் எனக்கு வரவேண்டிய கடிதங்கள்
காலந்தாழ்ந்தன; கை மாறிக் கிடைத்தன.
அடுத்தக் கட்டடத்தார்
கொண்டுவந்து கொடுத்ததும் நிகழ்ந்தது.
முகவரியறியாப் புதியவரிடம்
என் கடிதங்கள் தடுமாறுகின்றனவோ
என்று ஐயுற்றேன்.
இன்று விடை கிடைத்தது.
பள்ளிச் சிறுமிபோல்
நீலச் சீருடை அணிந்த இளம்பெண்
விரைவஞ்சலில் வந்த புத்தகக் கட்டோடு
என் பெயர் வினவினாள்.
'தாமே புதிதாய்ப் பொறுப்புக்கு வந்த
அஞ்சல்காரி’ என்று அறிமுகம் தந்தனள்.
போதும்
அவளைப் பற்றி எதுவும்
எனக்குத் தெரிய வேண்டா.
இப்பெண்ணாள் ஓய்வுபெறும்போதும்
என் அலுவலக முகவரி
இதுவாகவே இருக்குமென்பது மட்டும்
எனக்குத் தெரியும்!