Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை - 35

செய்யாத வேலைக்கு கூலி! - சேலம் to காஷ்மீர்கா.பாலமுருகன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

பிரீமியம் ஸ்டோரி

தீம்பூர்னி டு அஹமதுநகர் நெடுஞ்சாலையில் இரவில் பயணித்துக் கொண்டிருந்தோம். அந்தச் சாலையின் கொள்ளையர்களைப் பற்றி பரமேஸ்வரனிடம் பேசிக்கொண்டே சென்றதில், கணிசமான தூரத்தைக் கடந்துவிட்டிருந்தோம். மேலும், சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்ததால், வேகமாக சைடு வாங்கும் ஜீப்பையோ, பைக்கையோ கண்டால் குலை நடுங்கியது. ஒருவழியாக அஹமதுநகருக்கு முன்பாக இருக்கும் மோட்டலில் லாரியை நிறுத்தியபோதுதான் நிம்மதி வந்தது.

டீ குடித்துவிட்டுப் புறப்படலாம் என்ற மணியிடம், ‘‘வேண்டாம். ஹால்ட் செய்துவிட்டு காலையில் செல்லலாம். அஹமதுநகர் என்றாலே எனக்கு அலர்ஜியாக இருக்கிறது’’ என்றார் பரமேஸ்வரன். ‘‘இங்கே நின்றால், குஜராத்தில் நுழைவதில் சிக்கல் ஏற்படும். காலை சமயத்தில் குஜராத் பார்டரை கிராஸ் செய்துவிட்டதால் பிரச்னை இருக்காது’’ என வற்புறுத்திய மணி, ‘‘சரி; நீங்க தூங்குங்க!’’ என்று சொல்லிவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தார். எனக்கும் தூக்கம் வந்தது. ஆனால், இம்முறை ஷீரடியைப் பார்க்காமல் தவறவிடக் கூடாது என்பதற்காக விழித்தே இருக்க முடிவு செய்தேன்.

ஷோலாப்பூர் - துலே நெடுஞ்சாலையில் அஹமதுநகர், ராஹிரி தாண்டிப் போய்க்கொண்டிருந்தோம். ஷீரடி அடைந்தபோது, நள்ளிரவு 3 மணி. நெடுஞ்சாலையில் இருந்த கோயிலைப் பார்த்து விட்டுத் தூங்கிவிட்டேன். டெல்லி செல்லும் சாலையான அதில் ‘மன்மாட்’ என்ற ஊரில் இடதுபக்கம் செல்லும் சாலையில் பிரிந்து, குஜராத் மாநிலத்தில் நுழைய வேண்டும். மன்மாட் என்பதை நம்மவர்கள் மண்மேடு என்றே சொல்கிறார்கள். மண்மேடு தாண்டி உள்ள மாலேகான் வழியாகச் சென்றால், தூரம் அதிகம். அதனால், கிராமச் சாலைகள் வழியே சக்ரி எனும் ஊரில் தேசிய நெடுஞ்சாலையை அடைய வேண்டும். வழியில் பூர்ணா வனவிலங்கள் சரணாலயம் அமைந்துள்ள மலைத் தொடரைக் கடக்க வேண்டும். சூரிய வெளிச்சம் லேசாகப் பாய்ந்துகொண்டிருந்தபோது விழித்தேன். கிராமச் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது. வழியில் விசித்திரமான மலைக் குன்றுகள் மிரட்டுவது போல நின்றுகொண்டிருந்தன. வழியில் இருந்த டோல்கேட்டில் டீ குடிக்க நிறுத்தினார் மணி. அங்கே தமிழக லாரி ஒன்று நின்றுகொண்டிருக்க... அதன் டிரைவருடன் பேசச் சென்றார். நாங்கள் பல் துலக்கி, டீ குடித்து முடித்தோம். ‘‘அஹமது நகர்ல ஹால்ட் போட்டிருந்தா, இவ்வளவு சீக்கிரம் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. இன்னும் கொஞ்ச தூரத்துல இருக்கிற மலைப் பாதையைத் தாண்டிட்டா, குஜராத்...’’ என மணியை மெச்சினார் பரமேஸ்வரன்.  

நெடுஞ்சாலை வாழ்க்கை - 35

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து வெளியேறுவதற்கும் செக்போஸ்ட் இருக்கிறது. அது, மலைத் தொடரைத் தாண்டி சமவெளியில் இருக்கிறது. மலைத் தொடரில் ஏறுவதற்கு முன்பாக இருந்த மோட்டலில் லாரியை நிறுத்தினார் மணி. ‘‘இங்கே சமைத்துச் சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம்’’ என்றார். வெயில் சுள்ளென்று இருக்க... புழுதி பறந்தது. லாரியில் ஏறிய மூன்றாவது தினம். குளிக்கலாம் எனத் தோன்றவே, அங்கிருந்த தண்ணீர்த் தொட்டியில் ஆனந்தமாக ஒரு குளியல் போட்டுவிட்டு, மணி சமையலை ஒரு பிடி பிடித்துவிட்டு மீண்டும் லாரியில் ஏறினோம்.

மலைத் தொடரின் கணவாயில் சில கிலோ மீட்டர் மட்டுமே மலைப் பயணம். அந்த மலைத் தொடரின் சில பகுதிகளில் மரங்களே இல்லை. இங்கே என்ன வன விலங்குகள் வாழும் எனத் தெரியவில்லை. மலைச் சாலையில் ஏற்ற இறக்கங்களும் வளைவுகளும் ஏராளமாக இருந்தன. ஓரிடத்தில் சிமென்ட் லாரி ஒன்று பக்கவாட்டில் சாய்ந்தபடி நின்றிருந்தது. கொஞ்சம் தாண்டி இன்னொரு லாரி விளைநிலத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடந்தது. மலைத் தொடரைத் தாண்டியதும் நவாபூர் என்ற ஊரை பைபாஸில் கடந்தோம். செக்போஸ்ட்டுக்குச் சில கி.மீ முன்னதாக இருந்த பெட்ரோல் பங்கில் லாரியை நிறுத்திவிட்டு, அங்கிருக்கும் மேலாளரைத் தேடினார் மணி.

அந்த பெட்ரோல் பங்கில் இருக்கும் மேலாளர், தமிழ்நாட்டுக்காரர். மணியின் லாரியில் 1 டன் எடை அதிகம் அல்லவா?  மஹாராஷ்ட்ராவில் நுழையும்போது ஒரு மாதிரியாகச் சமாளித்து நுழைந்து விட்டோம். இப்போது வெளியேறும் இடத்தில் அதே எடைச் சிக்கல். அதனால், செக்போஸ்ட்டில் சமாளிக்க ஏதாவது உபாயம் கிடைக்குமா என அலைந்தார். அந்த மேலாளர், அருகே உள்ள ஒரு ஊருக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அங்கிருந்த ஒருவரிடம் விஷயத்தைச் சொன்னதும், ‘ஒன்றும் பிரச்னை இல்லை. முடித்துவிடலாம்’ என யாருக்கோ போன் செய்தார். சிறிது நேரத்தில் பைக்கில் இருவர் வந்தனர். பேப்பர்களை வாங்கிப் பார்த்துவிட்டு, ‘‘1,500 ரூபாய் ஆகும். வேலை முடித்து செக்போஸ்ட் தாண்டியதும் பணம் கொடுத்தால் போதும். போன் செய்யும்போது நீங்கள் புறப்படுங்கள். அதுவரை பார்க்கிங்கில் காத்திருங்கள்’’ எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 35

இரண்டு மணி நேரத்தும் மேலாகக் காத்திருந்தோம். அந்த புரோக்கருக்கு போன் செய்யும்போதெல்லாம், ‘செக்கிங் ஆபீஸர்கள் வந்திருக்கிறார்கள். இப்போது போக முடியாது. காத்திருங்கள்’ என்ற பதிலைச் சொல்லிக்கொண்டே இருந்தனர். புழுதி பறக்கும் அந்த ஏரியாவில் நிற்க முடியவில்லை; நடக்க முடியவில்லை. காரணம், புழுதி - கணுக்கால் வரை புதைகிறது. காலையில் குளித்தது பிரயோஜனம் இல்லாமல் ஆகிவிட்டது. ஒரு வழியாக மாலையில், சிக்னல் கொடுத்தனர். சம்பந்தப்பட்ட அந்த நபர்கள் செக்போஸ்ட்டுக்கு வந்து உதவுவார்கள் என எதிர்பார்த்தோம். அவர்களோ, ‘‘நாங்கள் வர மாட்டோம். எடை போடும் இடத்தில் இருக்கும் ஆளிடம் சொல்லிவிட்டோம். பிரச்னை இல்லை போங்கள்’’ என்று சொல்லிவிட்டார்கள். அதனால், கொஞ்சம் தடுமாற்றத்துடன் இருந்தார் மணி. காரணம், 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படக்கூடும் என்ற பயம். லாரியை எடை மேடையில் நிறுத்தியபோது, அது 31.600 டன் எனக் காட்டியதும் அதிர்ச்சியானார். ஏனென்றால், 32 டன்னுக்கு மேல் இருக்க வேண்டும். எடை போடும் ஆள், “300 ரூபாய் கொடு, 31 டன் சீட்டு தருகிறேன்’’ என்று நிமிடத்தில் பணத்தைக் கறந்துவிட்டார். டோல்கேட்டில் சீல் வைக்க 700 ரூபாய் கொடுத்துவிட்டு வெளியேறினோம். புரோக்கராக 1,500 ரூபாய் கேட்டவர்கள், எந்த ஆணியையும் பிடுங்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

அவர்களுக்கு ஏன் பணம் தர வேண்டும் எனக் கோபமானார் மணி. ‘‘எப்படியும் பணம் வாங்காமல் விட மாட்டார்கள்’’ என்றார் பரமேஸ்வரன். சிறிது நேரம் லாரியை நிறுத்திப் பார்த்தோம். பின்னால் வருகிறார்களா எனப் பார்த்துக்கொண்டே மெதுவாக சில கிலோ மீட்டர்கள் தாண்டிவிட்டோம். அவர்களைக் காணவில்லை. ‘‘சரி, அவர்களே நம்மால் ஒன்றும் ஆகவில்லை எனப் புரிந்துகொண்டிருப்பார்கள் போல. நாம் புறப்படலாம்’’ என ஆக்ஸிலரேட்டரை மிதித்தார் மணி. சில கிலோமீட்டர்கள் தாண்டியிருப்போம். பைக்கில் கத்தியபடியே அந்த இருவரும் வந்து வழி மறித்தனர். ‘‘பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டுச் செல்லலாம் எனப் பார்க்கிறாயா?’’ என சத்தம் போட ஆரம்பித்தனர்.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 35

மணி, பொறுமையாக எடுத்துச் சொன்னார். செக்போஸ்ட்டில் பணம் வாங்கிக்கொண்டது முதல் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டவர்கள், ‘‘நீ பொய் சொல்கிறாய். பணம் கொடுக்காமல் நீ லாரியை எடுக்க முடியாது’’ என்றபடி பைக்கை லாரியின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான் ஒருவன். இன்னொருவன் ஏக வசனத்தில் திட்ட ஆரம்பிக்க... சாலையில் செல்லும் வாகனங்கள் என்ன ஏதுவென்று மெதுவாக ஊர்ந்து வேடிக்கை பார்த்தபடி செல்ல ஆரம்பித்தன. நிலைமை அஹமது நகர்போல மோசமாவதை உணர்ந்த பரமேஸ்வரன், அவர்கள் செய்யாத வேலைக்காக 500 ரூபாயைக் கொடுத்தார். அதைத் தூக்கி எறிந்தனர். 1,500 ரூபாய் தராமல் லாரியை எடுக்க முடியாது என மிரட்டினர். ஒருவழியாக அவர்களைச் சமாதானம் செய்து 1,200 கொடுத்து அனுப்பிவிட்டு லாரியை எடுத்தோம்.

எந்தச் செலவும் இல்லாமல் சீல் வைத்துகொண்டு வெளியேற 2,200 ரூபாய் செலவுடன் 4 மணி நேரமும் வீணாகிவிட்டது. அடுத்து குஜராத் செக்போஸ்ட்டில் சீல் வைக்க வேண்டும். அது சில கிலோமீட்டரிலேயே சங்காத் என்ற ஊரில் இருக்க... வரிசையில் நிறுத்தி அரை மணி நேரத்தில் சீல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். சூரத் நோக்கிச் செல்லும் இந்தச் சாலையில்தான் அடுத்து பர்தோலி எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் இருக்கிறது. 

 - (நெடுஞ்சாலை நீளும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு