மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 23

குடி குடியைக் கெடுக்கும் - 23
பிரீமியம் ஸ்டோரி
News
குடி குடியைக் கெடுக்கும் - 23

#BanTasmac தொடர் பாரதி தம்பி, படங்கள்: கே.குணசீலன், க.முரளி

டந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டங்களைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், அவற்றில் ஓர் ஒற்றுமையைப் பார்க்கலாம். காவிரி நீருக்கான போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், பாலாறு, பவானி, வைகை, தாமிரபரணி ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு எதிரான போராட்டங்கள், மதுரையில் `கிரானைட் குவாரிகள்’ என்ற பெயரில் இயற்கையைச் சுரண்டுவதற்கு எதிரான போராட்டம், தூத்துக்குடி-நெல்லை மாவட்டங்களின் கடலோரத்தில் தாதுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம், `இறால் பண்ணை’ என்ற பெயரில் கடலோரங்களைச் சுடுகாடாக்கும் திட்டங்களுக்கு எதிரான போராட்டம், `மீத்தேன் வாயுத் திட்டம்’ என்ற பெயரில் விவசாய நிலங்களைப் பாழ்படுத்துவதற்கு எதிரான போராட்டம், கெயில் நிறுவனக் குழாய் பதிப்புக்கு எதிரான போராட்டம், கவுத்தி வேடியப்பன் மலையைக் காவுகொடுப்பதற்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம்... என நம் கண்ணுக்கு எட்டிய வரையிலும் போராட்டங் களால் நிறைந்திருக்கின்றன நமது கடந்த காலமும் நிகழ்காலமும்.

இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் அநீதியை எதிர்த்து, இந்த மக்கள் திரள் போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஆனால், இது மட்டுமே இவற்றுக்கு இடையிலான ஒற்றுமை அல்ல. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் புதிய கோரிக்கைகள் எதையும் முன்வைக்கவில்லை. ஒரு தொழிற்சாலையோ, பாலமோ, பள்ளிக்கூடமோ, கல்லூரியோ கேட்டு மக்கள் போராடவில்லை. ‘இருப்பதையும் பிடுங்காதீர்கள்’ என்றுதான் போராடுகின்றனர். இந்த அடிப்படை வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘எங்கள் ஆறுகளில் மணல் அள்ளாதீர்கள். நாங்கள் விவசாயம்செய்து பிழைத்துக் கொள்கிறோம்’ என மன்றாடுகின்றனர். ‘தாதுமணல் அள்ளாதீர்கள். நாங்கள் கடலுக்குப் போய் பிழைத்துக்கொள்கிறோம்’ என்கிறார்கள். ஆனால், மக்களின் இந்தக் கோரிக்கைகளை காதுகொடுத்தும் கேட்கத் தயார் இல்லாத அரசு, மக்கள் விரோதத் திட்டங்களை முழுவீச்சுடன் செயல்படுத்திவருகிறது. இதே வரிசையில்தான் டாஸ்மாக்குக்கு எதிரான மக்கள் போராட்டமும் வருகிறது. இதுவரை ‘எங்கள் வளங்களை விட்டுவிடுங்கள்’ என முறையிட்ட மக்கள், இப்போது ‘எங்களை உயிரோடாவது விடுங்கள்’ எனப் போராடுகிறார்கள். இதுவரை நடந்தது பிழைப்பதற்கான போராட்டம்; இது உயிருக்கான போராட்டம்.

குடி குடியைக் கெடுக்கும் - 23

இது சற்றே மிகைப்படுத்தப்பட்ட வாதம்போல தோன்றலாம். ‘ஏதோ மொத்த தமிழ்நாடும் ஐ.சி.யூ வார்டில் அட்மிட்டாகிக் கிடப்பதைப்போல சொல்கிறீர்களே...’ என எண்ணலாம். ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தால், அப்படித்தான் தோன்றும். சிக்கலின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள மாநிலத்தின் மொத்த நிலைமையை ஒன்றுதிரட்டிப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். நகரமோ, கிராமமோ எங்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் லட்சக்கணக்கான மனிதக் கூட்டம் குடியின் பிடியில் வீழ்ந்துகிடக்கிறது. இவர்கள் கடைக்கு நடந்துவந்து குடிக்கும் அளவுக்கு உடலில் பலம் உள்ளவர்கள். இவர்களைப்போல இன்னொரு கூட்டம் ஏற்கெனவே குடித்த குடியினால் முடமாகிக்கிடக்கிறது. கல்லீரல், கணையம், சிறுநீரகம், இதயம் என உள்ளுறுப்புகள் கெட்டுப்போய் அவர்கள் மரணத்துக்காகக் காத்திருக்கிறார்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்துக்கு உள்ளாகி, உடல் உறுப்புகளை இழந்து நடைபிணமாக வாழ்வோர் பல்லாயிரம் பேர். குடித்துவிட்டு மனைவி, பிள்ளைகளை அடித்து, அவர்களின் நிம்மதியைச் சீர்குலைத்து குடும்பத்தை நரகத்தின் மறுவடிவமாக மாற்றுவோர் லட்சக்கணக்கானோர். குடியால் மனநலன் கெட்டு, பைத்தியமாக அலைவோர் எண்ணற்றோர். இப்படி `குடி' என்னும் பெருங்கேட்டின் கொடும் விளைவு நாம் எண்ணிப்பார்க்க முடியாத பரிமாணங்களைத் தொட்டிருக்கிறது.

பொதுவாக உலகத்தில் எப்போது, எங்கு பேரழிவு ஏற்பட்டாலும் அதையும் ஆதாயம் பார்க்கும் ஒன்றாக மாற்றிக்கொள்வது ஆளும் வர்க்கத்தின் இயல்பு. ஈராக்கில் குண்டு போட்டு கட்டடங்களை அழித்தால், மறுபடியும் கட்டடம் கட்ட ஒப்பந்தம் விடப்படும்; அது மறுசீரமைப்பு. இலங்கையில் பெருந்திரள் மக்களைக் கொன்றொழித்து இனஅழிப்பை நிகழ்த்தி முடித்தால், மீண்டும் அங்கு வீடுகள் கட்ட வேண்டும், சாலைகள் அமைக்க வேண்டும்; அது, புனரமைப்பு. அந்த அடிப்படையில் டாஸ்மாக்கால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாபெரும் மனிதப்பேரழிவு, ஒரு புதிய ஆதாயம் பார்க்கும் தொழில் துறையை தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளது. `போதை மறுவாழ்வு மையம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான மையங்கள் முளைத்திருக்கின்றன. அங்கு போதையின் பிடியில் இருந்து ஒருவர் மீட்கப்படலாம். அதன் சாத்தியத்தைச் சந்தேகப்படவில்லை. ஆனால், இத்தகைய மறுவாழ்வு மையங்களின் கட்டணம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகம்.

வீட்டுக்கு ஒரு குடிகாரர் என்ற நிலைமை உருவாகிவிட்ட பிறகு, தங்கள் குடும்ப உறுப்பினரை எப்படியேனும் குடியின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என, குடும்பத்தினர் நினைக்கின்றனர். இதன் பொருட்டு எந்த வாய்ப்பையும் அவர்கள் பரிசோதித்துப்பார்க்கத் தயார். ஏதோ ஓர் எல்லையில் போதை மறுவாழ்வு மையம் குறித்து விசாரிக்கின்றனர்; ஒருமுறையேனும் முயற்சித்துப் பார்க்கின்றனர். பெரும்பாலும் குடியைக் கௌரவக் கேடாகக் கருதும் நடுத்தரவர்க்கத்தினர்தான் இங்கு வருகிறார்கள். ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என் புருஷன் / என் மகன் குடியை விடணும்’ என்பது இவர்களின் எண்ணமாக இருப்பதால், அவர்கள் நினைப்பதைப்போலவே செலவு எக்கச்சக்கமாகத்தான் ஆகிறது. ஆனால், சக்சஸ் ரேட் மிக மிகக் குறைவு என்பது அவர்கள் அனுபவத்தில் அறிந்துகொள்ளும் உண்மை. இந்த டி-அடிக்‌ஷன் சென்டர்கள் என்பவை, டாஸ்மாக் ஏற்படுத்திய பேரழிவை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் புதிய தொழில்வாய்ப்பு. `குடித்துக் குடித்து கல்லீரல் கெட்டுக்கிடக்கும் பல்லாயிரம் பேர் இங்கு இருப்பதால், தமிழ்நாட்டில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைகள் இனி எக்கச்சக்கமாக நடைபெற வாய்ப்பு இருக்கிறது' என்கிறார்கள். உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை சந்தையில் கல்லீரலுக்கான ரேட் இனி கிடுகிடுவென அதிகரிக்கக்கூடும். எனவே, குடி பாதிப்பின் தீவிரம் என்பது, நாம் கண்களால் காணும் வரம்புகளுக்கு அப்பால் வேறு எங்கோ இருக்கிறது.

கிராமத்துப் பள்ளிப் பிள்ளைகளிடம் குடி பற்றி விசாரித்தால், அந்தப் பிஞ்சு மனங்களில் இதன் தாக்கம் அஞ்சத் தகுந்தவகையில் படிந்துள்ளது. ‘எங்க அப்பாவைக் கொல்லணும்’ என்று இறுகிய குரலில் சொன்ன சில மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். கொலை என்பதன் உண்மைப் பொருள்கூட அவர்களுக்குத் தெரியாது. ஆனால், தன் தந்தை, தாயைப் படுத்தும் கொடுமை அவனை அவ்வாறு எண்ணவைக்கிறது. இப்படி எத்தனை, எத்தனை மனங்கள்?

‘‘எங்க க்ளாஸ்ல அடிக்கடி பிள்ளைங்க லீவு போட்டுடும் சார். ஒரு வாரம், பத்து நாட்கள் கழிச்சுத்தான் திரும்பவும் வருவாங்க. என்னன்னு விசாரிச்சா, புருஷன் குடிச்சிட்டு வந்து அடிக்கிற அடி தாங்காம, அவரோட மனைவி பிள்ளைங்களை அழைச்சுக்கிட்டு பிறந்த வீட்டுக்குப் போயிடுவாங்க. திரும்பி வந்த பிறகுதான் இவங்க பள்ளிக்கு வர முடியும். பசங்க படிப்புக் கெட்டுப்போகுதுனு அவங்களும் கவலைப்படுறாங்கதான். ஆனால், பாவம் அவங்களும் என்னதான் பண்ணுவாங்க?’’ என விருத்தாசலம் அருகே உள்ள ஒரு பள்ளி ஆசிரியை சொன்னார்.

குடி குடியைக் கெடுக்கும் - 23

தேனி அருகே சந்தித்த இன்னொரு கதை, மனதை நொறுக்கக்கூடியது. அது, ஒரு கதை அல்ல; பல நூறு கதைகளின் தொகுப்பு. ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்றிருந்தபோது, `இங்கு உள்ள பெரும்பான்மை குழந்தைகள், குடியினால் பெற்றோரை இழந்தவர்கள்' எனச் சொன்னார்கள். அதைவிட அடுத்து சொன்னது மேலும் அதிரவைத்தது. தமிழ்நாட்டில், தேனி மாவட்டம் எய்ட்ஸில் முன்வரிசையில் இருப்பது நமக்குத் தெரியும். அப்படி எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட பெரும்பகுதி ஆண்களுக்குக் குடிப்பழக்கமும் இருக்கிறது. அவர்கள் குடித்துவிட்டு மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ள... மனைவிக்கும் எய்ட்ஸ் வந்துவிடுகிறது. ஓரிரு ஆண்டுகளில் இருவரும் இறந்துபோக... அந்தக் குழந்தைகள் அநாதைகளாகின்றன. அப்படி ஏராளமான குழந்தைகளை அந்த இல்லத்தில் சந்தித்தேன். சின்னஞ்சிறு வயதில் பெற்றோரை இழந்து, அன்புக்கு ஏங்கி, பரிதவித்து நிற்கும் அந்தக் குழந்தைகளின் முகங்கள் மனதைக் கலங்கடிக்கின்றன.

இப்படி உதாரணங்களாகச் சொல்வதற்கு, மாநிலத்தின் வீதிகள்தோறும் ஆயிரம் ஆயிரம் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. மொத்த தமிழ்நாடும், ஒரு பேரழிவுக்குப் பிறகான நிலம்போல சிதைக்கப்பட்டிருக்கிறது. இதில் இருந்து நாம் மீண்டு எழுவது நமது விருப்பம் அல்ல; அது ஒன்றுதான் நம் முன்னால் உள்ள தெரிவு. டாஸ்மாக் கடைகளை மூடவில்லை என்றால், இனி நமக்கு எதிர்காலமே இல்லை; இப்போது பள்ளி செல்லும் உங்கள் சின்னஞ்சிறு பையன், நாளை குடிகாரனாக மாறுவதற்கு எல்லாவிதமான சாத்தியங்களும் இருப்பதை மறந்துவிடாதீர்கள். எப்படி நம் பிள்ளைகளைக் காப்பாற்றுவது? எப்படி நம் தந்தையர்களை, நம் அண்ணன்களை, தம்பிகளைக் காப்பாற்றுவது? இந்த வாழ்வா, சாவா போராட்டத்தில் வெல்வது எப்படி? போராடும் மக்களைக் கொஞ்சம்கூட மதிக்காமல் அடித்து நொறுக்கும் அரசை எதிர்கொள்வது எப்படி? இன்னும் எத்தனை முறைதான் ‘கடையை மூடு, கடையை மூடு’ என மனு கொடுத்துக்கொண்டே இருப்பது?

- போதை தெளிவோம்...