கோடை விடுமுறை...
கோடை வெயிலை அடித்துப் பிழிந்து
தலைகீழாய்த் தொங்கவிட்டுவிடுகிறார்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விடுமுறையில் பிள்ளைகள்.
மதியவேளைகளில் அம்மா கண்ணசருகையில்
ரகசியப் பூனையென உருட்டுகின்றனர் அடுக்களையை.
தொலைக்காட்சி அலைபேசிகளை
விருப்பம்போல் தன்வசப்படுத்துகிறார்கள்.
இரவு நேர மொட்டைமாடி உறக்கத்தில்
வெகுநேரம் நட்சத்திரங்களை எண்ணுகிறார்கள்.
செல்லப்பிராணிகளோடு
முன்னிலும் நெருக்கமாகிவிடுகிறார்கள்.

மறந்திருந்த விளையாட்டுக்களைத் தூசிதட்டி
துடைத்தெடுக்கிறார்கள்.
காகிதப் பட்டங்களின் வால் பிடித்தபடியே
நூல்கண்டுகளோடு காற்றுக்கு அலைகிறார்கள்.
உண்ணும் உறங்கும் நேரங்களைக் கலைத்துப்போட்டு
வெகுநேரம் கழித்துத் தேடி அடுக்குகிறார்கள்.
விருப்பம்போல சண்டையிட்டுக்கொள்கிறார்கள்.
விருப்பம்போல கூடிக்கொள்கிறார்கள்.
பள்ளி திறப்பதற்கு முதல் நாளில்
கோடை விடுமுறையை புன்னகையோடு
வழியனுப்பிக் கையசைக்கிறார்கள்.
- ந.கன்னியக்குமார்
ரயில்...
கேட் மூடப்பட்டுவிட்டது
ரயில் தூரத்தே வரும்
ஓசையையும் அதிர்வையும் உணரமுடிகிறது.
வாகன ஓட்டிகளுக்கும்
எதிரெதிரே காத்திருப்பவர்களுக்கும்
ரயில் பார்க்கும் ஆசை துளியுமில்லை.
தடதடத்துக் கடக்குமதன் வால் மறைவதற்குள்
புகை கக்கியபடி உறுமுகின்றன டூவீலர்கள்
பாய்ந்து பரபரத்து அந்தக் கணத்தைக்
கடந்துவிடத் துடிப்பவர்கள்போல.
மதத்தைக் கடந்துவிட
சாதியைக் கடந்துவிட
காதலைக் கடந்துவிட
சமதளத் தண்டவாளங்களில் பாய்ந்து
உடல்கள் துண்டங்களாகிச் சிதறக் கடக்கும்
ரயிலின் கண்ணீர் ஆவியாகி
ஒலிப்பானின் சத்தம்
நூற்றாண்டுக் கதறலைப்போல
காற்றைக் கிழித்துக்கொண்டு
மரண ஓலத்தோடு
ஊருக்குள் நுழைகிறது தலைதெறிக்க.
- சூ.சிவராமன்
தாயம் கேட்கும் தலைமுறை...
சோழியைக் குலுக்கிப் போட
பன்னிரண்டு விழுந்ததைப் போல
பிள்ளைகள் பெற்றாளாம் அப்பத்தா.
நோவுக்கு நான்கு சாவுக்கு மூன்று
தின்னக் கொடுத்த பின் மிஞ்சியது
அப்பாவும் அத்தைகளுமென ஐந்து உருப்படிகள்.
அத்தைகளைப் பொறுப்பாய்க் கரைசேர்த்து
நாற்பதில் திருமணம் முடித்த அப்பாவுக்கு
சோழியில் விழுந்தது நான்கு
ஐம்பதை நெருங்கும்போது
வெட்கத்தோடே தம்பியைப் பெற்றாளாம் அம்மா.
மென்பொருள் துறையொன்றில்
மனிதவளப் பிரிவில் பணிபுரியும் நான்
ஒன்பது வருடங்களாகக் காத்திருப்பதோ
ஒரே ஒரு தாயத்துக்குத்தான்.
- சச்சின்
மீளவரும் குளம்...
நீர் உரசிப் பறக்கும் தட்டான்கள்
தாழ்வான மரக் கிளையில் ஒரு மீன்கொத்தி மறைந்திருந்து கூவும் ஒரு போர்க்குயில் வளைந்த மொட்டைப்பனையில் ஒரு கிளி
மரச்சரிவில் ஒரு மரங்கொத்தி...
பதிவுசெய்து வைத்திருந்த காட்சிகள்
மீளவருகின்றன மனக்கண்ணில்
வற்றிய இந்தக் குளக்கரையில்.
- சேயோன் யாழ்வேந்தன்