Published:Updated:

விடை சொல் வினோத்!

விடை சொல் வினோத்!
பிரீமியம் ஸ்டோரி
விடை சொல் வினோத்!

IQ கதைகள்- சுப.தமிழினியன், ஓவியங்கள்: பிள்ளை

விடை சொல் வினோத்!

IQ கதைகள்- சுப.தமிழினியன், ஓவியங்கள்: பிள்ளை

Published:Updated:
விடை சொல் வினோத்!
பிரீமியம் ஸ்டோரி
விடை சொல் வினோத்!
விடை சொல் வினோத்!

தேர்வுகள் முடிஞ்சாலே வினோத்துக்குக் கொண்டாட்டம்தான். அவங்க பாட்டி கிராமத்துக்குப் போய்  ஆட்டம் போடுவான்.

எப்பவும் அம்மாவோடு பஸ்லதான் போவான். இந்த முறை அப்பாவுக்கு இரண்டு நாட்கள் ஆபீஸ் லீவு. ‘‘அதனால, பைக்லேயே போகலாம்’’னு அப்பா சொன்னார்.

ஊருக்குக் கிளம்புறதுக்கு முதல் நாள் இரவு அப்பாவோட பேசும்போது, ‘‘தாத்தாவோட வீடு நம்ம வீட்டுல இருந்து எந்தப் பக்கம் இருக்கு?’’னு கேட்டான் வினோத். 

‘‘நான் புதிர் போட்டுச் சொல்றேன். கண்டுபிடி பார்ப்போம். நம்ம வீட்டுல இருந்து கிழக்குப் பக்கமா அஞ்சு கிலோமீட்டர் போயிட்டு, அங்கே இருந்து வலது பக்கம் திரும்பி, மூணு கிலோமீட்டர் போயிட்டு, கோயிலை ஒட்டி இடது பக்கம் திரும்பி, 10 கிலோமீட்டர் போய், ஆலமரத்துக்கிட்ட வலது பக்கம் திரும்பி ரெண்டு கிலோமீட்டர் போனா, தாத்தா வீடு’’ என்றார்.

சுத்திச்சுத்தி நின்னு யோசிச்ச வினோத், ‘‘ஓகோ, தாத்தா வீட்டின் திசையையும், தூரத்தையும்  கண்டுபிடிச்சுட்டேன்’’னு விடையைச் சொன்னான்.

மறுநாள், காலையிலேயே பரபரப்பாகி, ‘‘அப்பா, சீக்கிரம் கிளம்பலாம். நீங்க ரெடியாக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?’’னு கேட்டான் வினோத்.

‘‘கடிகாரத்துல பெரிய முள் இப்போ இருக்கிற இடத்துல இருந்து 180 டிகிரி தூரத்துல போய்  நிற்கும்போது’’னு சொன்னார் அப்பா.

விடை சொல் வினோத்!

‘‘அவ்வளவு நேரமா?’’னு சிணுங்கிய வினோத், ஐந்து நிமிடங்கள் முன்னாடியே அப்பாவைக் கிளம்பவெச்சுட்டான்.

போகும் வழியில் ஒரு மரத்தில் நான்கு பச்சைக்கிளிகளைப் பார்த்த வினோத், ‘‘அப்பா, பச்சைக் கிளிகள், பச்சைக்கிளிகள்’’னு கத்தினான்.

‘‘வழி முழுக்க பறவைகள் இருக்கும். பார்த்துட்டே வா, பாட்டி வீட்டுக்குப் போனதும் உன்னை ஒரு கேள்வி கேட்பேன்’’னு சொன்னாரு அப்பா.

பறவைகளை வேடிக்கை பார்த்துட்டே வந்த வினோத், தாத்தா வீட்டுக்குப் போய் இறங்கியதும், ‘‘அப்பா, வழியில் நாலு பச்சைக்கிளிகள், இரண்டு குயில்கள், ஒரு மரத்தின் உச்சியில் அமைதியா தூங்கிட்டு இருந்த ஆந்தை, எட்டு குருவிகள், 14 காக்கைகளைப் பார்த்தேன். மொத்தம் எத்தனை பறவைகளைப் பார்த்தேனுதானே கேட்கப் போறீங்க?’’ என்றான்.

அங்கேதான் ஒரு ட்விஸ்ட். ‘‘நீ பார்த்த பறவைகள்ல ஒரே ஒரு பறவை வித்தியாசமானது. அது எது?’’்னு கேட்டார் அப்பா.

வினோத்தின் பாட்டி, ‘‘விளையாட்டை அப்புறம் வெச்சுக்கோங்க. முதல்ல, கொஞ்சம் தண்ணீர் குடிங்க’’னு கொடுத்தாங்க.

அது என்ன பறவைனு யோசிக்க ஆரம்பிச்சுட்டான் வினோத்.

விடை சொல் வினோத்!

பாட்டி, ஒரு தட்டில் ஆப்பிள், மாதுளை, திராட்சை, கொய்யாப்பழங்களை எடுத்து வந்து வெச்சாங்க. வினோத் ஒரு ஆப்பிள் துண்டைக் கடிக்கும்போதுதான், ‘‘அப்பா, அந்த வித்தியாசமான பறவையைக் கண்டுபிடிச்சுட்டேன்’’னு குதூகலமா சொன்னான்.

‘‘இவ்ளோ நேரமா இதுக்கா நீ யோசிச்சே? இப்போ, தட்டுல இருக்கிற பழங்கள்லயும் ஒரே ஒரு பழம் வித்தியாசமானது. அது என்ன?’’னு கேட்டார் அப்பா.

‘திரும்பவும் வித்தியாசமா?’்னு பழங்களைப் பார்த்த வினோத் முகம் பிரகாசம் ஆச்சு. ‘‘ஆகா, கண்டுபிடிச்சுட்டேன்’’னு அந்தப் பழத்தைச் சாப்பிட எடுத்தான்.

பிறகு, வினோத்தை தாத்தா வீட்டுல விட்டுட்டு அப்பா கிளம்பிட்டாரு. இன்னும் ஒரு வாரத்துக்கு வினோத் அங்கே ஆட்டம் போடப்போகிறான்.

வினோத்திடம் அவங்க அப்பா கேட்ட ஐந்து கேள்விகளுக்கும் நீங்க விடையைக் கண்டுபிடிச்சிட்டீங்களா? அட்டகாசம் போங்கள். கண்டுபிடிக்காதவங்க, விடையைப் பார்த்துக்கோங்க.

விடை சொல் வினோத்!