Published:Updated:

பாடிப் படிக்கலாமா?

பாடிப் படிக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
பாடிப் படிக்கலாமா?

அதிஷா, ஓவியம்: மகேஸ்

பாடிப் படிக்கலாமா?

அதிஷா, ஓவியம்: மகேஸ்

Published:Updated:
பாடிப் படிக்கலாமா?
பிரீமியம் ஸ்டோரி
பாடிப் படிக்கலாமா?
பாடிப் படிக்கலாமா?

ப்பா அடிப்பார் என அஸ்வின் நினைக்கவே இல்லை. அவர் வீட்டுக்குள் வரும்போது டி.வி பார்த்துக்கொண்டிருந்தான்.

‘‘பரீட்சைக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு. டி.வி கேட்குதா?’’ எனக் கோபத்துடன் அடித்துவிட்டார். அழுதபடி அறையில் படுத்திருந்தான்.

ஆறாம் வகுப்புப் படிக்கும் அஸ்வினுக்கு  மற்றவர்களைப் போல நன்றாகப் படித்து நிறைய மார்க் எடுக்க ஆசைதான். ஆனால், புத்தகத்தை எடுத்தாலே கொட்டாவி வந்துவிடுகிறது.

அரையாண்டுப் பரீட்சையில் மூன்று பாடங்களில் ஃபெயில். முழு ஆண்டுத் தேர்விலும் தோற்றுவிட்டால் அவ்வளவுதான். பேசாமல் வீட்டைவிட்டு ஓடிவிடலாமா என்று நினைத்தான். ஆனால், பயமாக இருந்தது. டி.வி-யில் பார்த்திருக்கிறான். ‘திருடர்கள் பிடிச்சுட்டுப்போய் பிச்சை எடுக்க வைத்துவிட்டால்?’

அஸ்வின், வீட்டுக்குப் போகும் வழியில் ஒரு குளம் இருக்கிறது. அந்தக் குளத்தைச் சுற்றி 33 வேப்பமரங்கள் இருக்கும். அதில் 13-வது மரத்தடியில் உட்கார்ந்து, ‘எனக்கு மட்டும் ஏன் படிப்பு வர மாட்டேங்குது’ என்று அழத்தொடங்கினான்.

திடீரென்று ஒரு குரல் கேட்டது. ‘‘அஸ்வின்ன்ன்ன்... அஸ்வின்ன்ன்... அழாதே!’

அஸ்வின் அழுகையை நிறுத்திவிட்டு சுற்றிலும்  பார்த்தான். அவனுக்குப் பக்கத்தில் ஒரு தவளை இருந்தது. அதன் அருகில் போய், ‘‘நீயா கூப்பிட்டே?’’ எனக் கேட்டான்.

அது, ‘க்ராக் க்ராக்’ என்று கத்திக்கொண்டே குளத்துக்குள் தாவியது. அஸ்வின், யோசனையோடு வீட்டுக்குக் கிளம்பிவிட்டான்.

இரவு, தூங்கச் சென்றபோது மீண்டும் அதே குரல். தன்னுடைய ஸ்கூல் பையிலிருந்துதான் வருகிறது  என்பதைக் கண்டுபிடித்தான். பயத்துடன் ஸ்கேலை எடுத்து,   பையைத் தட்டினான்.

‘‘அஸ்வின், அடிக்காதடா’’ என்றது குரல்.

அஸ்வின், துணிச்சலோடு பையை எடுத்துப் பார்க்க, ‘‘அஸ்வின், நான்தான் தமிழ்ப் புத்தகம் பேசுறேன்’’ என்றது.

அஸ்வின் வியப்போடு  தமிழ்ப் புத்தகத்தைக் கையில் எடுக்க, ‘‘நீ அழுவதைப் பார்க்க ரொம்பக் கஷ்டமா இருந்தது. கணக்குப் புத்தகம், அறிவியல் புத்தகம், இங்கிலீஷ் புக் எல்லாம் சேர்ந்து உனக்கு உதவ முடிவுபண்ணிருக்கோம்’’ என்றது.

அஸ்வின்,அதை நம்ப முடியாமல் கண்களைக் கசக்கிக்கொண்டான். ‘‘பரீட்சை எழுதும்போது நைஸா உள்ளே வந்து காப்பி அடிக்க உதவிசெய்வீங்களா?’’ எனக் கேட்டான்.

கணக்குப் புத்தகம் முன்னால் வந்து, ‘‘அது தப்பு அஸ்வின். நீ நல்ல மார்க் எடுக்க ஹெல்ப் பண்ணுவோம்’’ என்றது.

அஸ்வின் அலுப்புடன், ‘‘எங்கே, எனக்குத்தான் எழுத்துக்களைப் பார்த்தாலே தூக்கமா வந்துடுதே” என்றான்.

அதற்கு அறிவியல் புத்தகம், ‘‘கவலையை விடு அஸ்வின், உனக்குப் பிடிச்ச டி.வி மாதிரி மாறுவோம்’’ என்றது.

‘‘என்ன சொல்றீங்க. ஒண்ணும் புரியலையே.’’

“புத்தகத்தைத் திறந்து பார் புரியும்” என்றது தமிழ்.

புத்தகத்தைத் திறந்த அஸ்வினின் கண்கள் வியப்பில் விரிந்தன. திருக்குறள் பக்கத்தில், திருவள்ளுவரே எழுந்துநின்று ‘வணக்கம் அஸ்வின்’ என்றார். அங்கே குறள்கள் அழகான இசையில் ஒலித்தன. அனிமேஷன் படம் போல நகர்ந்தன.

கணக்குப் புத்தகத்தை எடுத்தால், எண்கள் விதவிதமான வடிவங்களில் கண் சிமிட்டின. அறிவியல் புத்தகத்தில் ஐன்ஸ்டீன் தன் தலைமுடியைக் கோதியவாறு, ‘அஸ்வின், என்னைப் பற்றிச் சொல்கிறேன். கேட்க டைம் இருக்கா?’’ என்றார்.

‘‘இப்போ புரிஞ்சதா அஸ்வின்? நாங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாளும் அரை மணி நேரத்தை உனக்காகத் தருகிறோம். அஞ்சு மணிக்கு எழுந்துக்கணும்” என்றது தமிழ்ப் புத்தகம்.

அஸ்வின், ‘‘அய்யோ, அஞ்சு மணிக்கு என்னால எழ முடியாதே’’ என்றான்.

‘‘உன்னை அஞ்சு மணிக்கு எழுப்புகிற அலாரம் பொறுப்பை நான் எடுத்துக்கறேன்’’ என்றது அறிவியல் புத்தகம்.

‘‘எனக்கு இப்போ தூங்கவே தோணலையே. விடியவிடியப் படிக்கலாம் போலிருக்கே’’ என உற்சாகமாகச் சொன்னான் அஸ்வின்.

‘‘அது தப்பு. உறக்கமும் ஓய்வும்தான் மூளையைச் சுறுசுறுப்பாக்கும். காலையில் படிக்கலாம்; இப்போ படுத்துத் தூங்கு” என்று ஆங்கிலத்தில் சொன்னது ஆங்கிலப் புத்தகம்.

‘ஆங்கிலம் இவ்வளவு அழகாக இருக்குமா?’  என அஸ்வினுக்கு ஆச்சர்யம். இதுவரைக்கும் ஆங்கிலத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அதட்டுவது போலத்தான் அவனுக்கு இருந்திருக்கிறது.

பாடிப் படிக்கலாமா?

உற்சாகமாகப் படுத்தான் அஸ்வின். காலையில், அவன் போர்வையைப் பிடித்து இழுத்த அறிவியல் புத்தகம், நீர் பாடம் பக்கத்தில் இருந்து சில துளிகளை முகத்தில் தெளித்தது. துள்ளி எழுந்தான்.

‘‘நாளையில இருந்து நீயா எழுந்துக்க அஸ்வின். ஒரு துளி நீரை வீணாக்கினாலும் எனக்கு கஷ்டமா இருக்கு” என்றது.

அன்று முதல் தினமும் அவனே எழுந்து பாடங்களைப் படித்து உள்வாங்க ஆரம்பித்தான். சில சமயம் தூங்கி விழுவான். அப்போது, கணக்குப் பாடம் தலையில் செல்லமாகக் குட்டி, ‘‘ஒரு பாட்டுப் பாடலாமா?’’ எனக் கேட்கும்.

ஆட்டம் பாட்டத்துடன் பாடம் நடக்கும். தேர்வு நாள் வந்துவிட்டது. அவனுக்குத் தைரியம் சொல்லி, ‘‘தேர்வு எழுதும்போது பதற்றம் வேண்டாம். பொறுமையாக கேள்வித்தாளைப் படி. முதல்ல தெரிஞ்சதை எழுதி முடி. அப்புறம், யோசிச்சு மத்ததை எழுது’’ என்றது தமிழ்ப் புத்தகம்.

தேர்வு முடிந்த பின் அஸ்வின் மகிழ்ச்சியாக வெளியே வந்தான். ‘‘எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதிட்டேன்” என்றான்.

‘‘அப்போ வா, ஜாலியா ஒரு டான்ஸ் போடலாம்” என்ற தமிழ்ப் புத்தகம் ஒரு பாட்டு பாட, மற்ற புத்தகங்களோடு சேர்ந்து அஸ்வினும் பாட ஆரம்பித்தான்.

‘‘டேய் அஸ்வின், எழுந்திருடா. பரீட்சை நேரத்திலும் தூக்கத்தில் பாட்டுதானா. உன் அப்பா டென்ஷன் ஆகப் போறார்” என உலுக்கி எழுப்பினார் அம்மா.

பாடிப் படிக்கலாமா?

திகைத்துப்போய் அம்மாவைப் பார்த்த அஸ்வினின் முகம், அடுத்த நொடியே மலர்ந்தது. ‘‘அம்மா, பாடங்களை எப்படிப் படிக்கணும் என்கிற ஃபார்முலாவை நான் கண்டுபிடிச்சுட்டேன். புத்தகத்தில் இருக்கிறதை வெறும் எழுத்துக்களாகப் பார்க்காமல், டி.வி மாதிரி பார்க்கப்போறேன்’’ என்றவன் துள்ளி எழுந்தான்.

முகம் கழுவிக்கொண்டு வந்து, புத்தகத்தைக் கையில் எடுக்க, அது அவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தது.