Published:Updated:

ப(ஜ)ல்லிக் கட்டு

ப(ஜ)ல்லிக் கட்டு
பிரீமியம் ஸ்டோரி
ப(ஜ)ல்லிக் கட்டு

சிறுகதை /பாக்கியம் ராமசாமி, ஓவியம்/ஜெயராஜ்

ப(ஜ)ல்லிக் கட்டு

சிறுகதை /பாக்கியம் ராமசாமி, ஓவியம்/ஜெயராஜ்

Published:Updated:
ப(ஜ)ல்லிக் கட்டு
பிரீமியம் ஸ்டோரி
ப(ஜ)ல்லிக் கட்டு
ப(ஜ)ல்லிக் கட்டு

லகத்திலுள்ள ஜீவராசிகளில் எந்த ஒன்றையாவது என் நண்பன் புஜங்க சயனம் வெறுக்கிறானென்றால்... அது பல்லியாகத்தான் இருக்கும்! 

ஒரு தினம் அவன் வீட்டுக்கு நான் போயிருந்த சமயம் அவன் செய்து கொண்டிருந்த கொலை பாதகச் செயலைப் பார்த்துப் பதறிவிட்டேன். அவன் மீதிருந்த மதிப்பு பூரா போய்விட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டூல் போட்டு ஏறி டியூப் லைட்டைத்தான் ஏதோ ரிப்பேர் செய்து கொண்டிருக்கிறானோ என்று பார்த்தால்... கையில் ஒரு செருப்புடன் பல்லியை அடிக்க முயன்று கொண்டிருந்தான்.

டியூப் லைட் பல்லி என்ன இவன் அடிச்ச அடிக்கு சடாரி சாத்த தலையைக் காட்டுகிறது மாதிரி தலையைக் காட்டிக் கொண்டிருக்குமா? டியூப் லைட்டுக்குப் பின்னே தன் வாசஸ் தலமான பட்டியில் போய்ப் பதுங்கிக் கொண்டுவிட்டது.

நண்பன் விடாக்கண்டன். ஒரு விளக்கு மாற்றுக் குச்சியை எடுத்து பட்டியின் பல இண்டு இடுக்குகளில் நுழைத்து பல்லியை வெளியே கொண்டு வர முயன்றான். அதற்குள் அவன் நின்றிருந்த ஸ்டூல் தடாலென்று சரிந்து கீழே விழுந்துவிட்டான்.

அடி ஒன்றும் பிரமாதமில்லை. கையி லிருந்த செருப்பை வீசி எறிந்துவிட்டு பல்லியை மெட்ராஸ் பாஷையில் திட்டினான்.

என்னைப் பார்த்ததும், ''இந்தப் பல்லித் தொல்லை தாங்கலை? உன் வீட்டில் எப்படி?'' என்று விசாரித்தான்.

''எங்க வீட்டிலும் பல்லித் தொல்லை உண்டு. ஆனா, நாங்கள் அதைக் கொல் வதில்லை. பாவம்...'' என்றேன்.

ப(ஜ)ல்லிக் கட்டு

புஜங்க சயனம் என்னைக் கொன்று விடுவான் போல முறைத்துப் பார்த்தான். நானும் அவனும் பள்ளிக்கூட நண்பர்கள். அவனுக்கு 'பள்ளிக்கூடம்’ என்று சொல்லவராது. 'பல்லிக்கூடம்’ என்றுதான் உச்சரிப்பான். (இப்போது அவன் தனியார் டி.வி. சேனல் ஒன்றில் புகழ்பெற்ற செய்தி அறிவிப்பாளராக இருக்கிறான்)

''பல்லிகளை அடிக்கக்கூடாது என்பார்கள்'' என்றேன் புஜங்க சயனத்திடம். அவனுக்கு மகா கோபம் வந்துவிட்டது. ''எந்த மடையன் சொன்னான்? எங்கள் வீட்டில் இருக்கிற பல்லிக்கு அறிவே கிடையாது. எங்கே பார்த்தாலும் பல்லி... பல்லி... பல்லி!''

அவன் சொன்னது உண்மைதான் என்பதை நிரூபிப்பதைப் போல நான் உட்காரப் போன நாற்காலியின் மீது ஒரு பல்லிக் குஞ்சு விருட்டென்று குறுக்காக ஓடி மறைந்தது.

''இன்ஸெக்ட் எலிமினேட்டர்ஸ்னு ஒரு கம்பெனி இருக்குதே... போன் அடிச்சு பிடிச்சுட்டுப் போகச் சொல்றதுதானே?''

''செய்யணும். பல்லி பிடிச்சிட்டுப் போறதுக்கெல்லாம் காசு செலவு பண்ண முடியுமா?'' என்றான், ''சுவத்து மூலையைப் பார்...''

அங்கே இரண்டு பல்லிகள், தாயும் மகனுமோ, தகப்பனும் மகளுமோ வால்களில் சிறு மூவ் மென்ட் கொடுத்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தன.

நாங்கள் பார்க்கிறோம் என்றதும் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு நண்பனின் அப்பா படத்துக்குப் பின்னால் ஓடி மறைந்துவிட்டன.

''எல்லாம் எங்க அப்பா கொடுத்த இடம் ராமு...'' என்று வருத்தப்பட்டான். ''பல்லியை அடிக்கவே கூடாது என்கிற கட்சி. நிறைய பல்லி இருந்தால் லட்சுமி கடாட்சம் என்பார். பரம்பரை பெருத்துப் போச்சு!''

''ஒரு ஒயிட் வாஷ் பண்ணிடேன்...'' என்றேன்.

''ஓடறாப்பலே போக்குக் காட்டிட்டு, பழைய சாமான்களுக்குள்ளேயே சாமர்த்தியமாக ஒண்டிக் கொள்கிறது. கங்கையிலே குளிக்கப் போனால், பாவங்களெல்லாம் தண்ணியில் இறங்கியதும் கரையிலே... மரத்திலே... ஒட்டிக்குமாம். குளித்து முழுகி ஆள் வெளியே வந்ததும் பழையபடி அவனிடம் ஒட்டிக் கொண்டுவிடுமாம். அந்த மாதிரிதான்...''

''நான் ஒரு புஸ்தகத்தில் படித்தேன். அதை வேணுமானால் செய்து பாரேன்...'' என்றேன்.

''சொல்லு சொல்லு... சுவரில் படமே மாட்டாதே என்று சொல்லப் போகிறே? ஏண்டா, பெற்ற அப்பா அம்மா படத்தை மாட்டி வைக்காமல் இருக்கலாமா? பேரன் பேத்தி படம் இரண்டொண்ணு, எங்க கல்யாணப் படம் ஒண்ணு, தினக் காலண்டர் ஒண்ணு, மாசக் காலண்டர் ஒண்ணு, மனைவி போட்ட நிட்டிங் வொர்க் ஸீனரி ஒண்ணு மாட்டியிருக்கேன். நீயும் நானும் ஸ்கூல் காலத்திலே எடுத்துண்ட படம் ஒண்ணு, என்னை வளர்த்து ஆளாக்கிய அத்தைப் பாட்டி படம், அப்புறம் நான் காலேஜ் ஃபர்ஸ்ட் வாங்கின சர்ட்டிஃபிகேட். வேறு என்னத்தை நான் மாட்டியிருக்கேன்?'' என்றான்.

''கொஞ்சம் ஜாஸ்திதான்.''

''எதைக் குறைக்கிறது நீயே சொல்லு. பூஜை அலமாரியிலே சாமி படம் வைக்காமலிருக்க முடியுமோ? அங்கே ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பல்லிகள் - சின்னதும் பெரிசுமாக.''

''ஆக்சுவலா என்ன பண்றது பல்லிகள்? படத்து பின்னாலேதான் இருந்து தொலையட்டும். விட்டுத் தொலை!''

''எங்கே விட்டுத் தொலையறது? ராத்திரி 12 மணிக்குப் பசிச்சதே ஒரு வாழைப் பழத்தைச் சாப்பிட்டு வைக்கலாம்னு போனால் வாழைப்பழம் வெச்சிருந்த கூடையிலிருந்து விழுந்தடித்துக் கொண்டு ஒரு பல்லி ஓடி விளக்குமாற்றுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறது.''

''பல்லி வாழைப்பழம் சாப்பிடுமா என்ன?''

''அந்த இழவெல்லாம்தான் புரியவில்லை. வாயாலே கடிச்சிருக்குமான்னு சந்தேகம் வந்துட்டுது. பழத்தைச் சாப்பிட மனசு வரலை. தூக்கிக் குப்பைத் தொட்டியிலே போட்டேன். மூணு ரூபாய் போட்டு வாங்கின ஒரு ரஸ்தாளிப் பழம் வீண்.''

''ஃபிரிஜ்ஜிலே வைச்சுடலாமே...''

''வாழைப் பழத்தை ஃப்ரிஜ்ஜிலே வெச்சா கறுத்துக் கண்ணராவியாப் போயிடறது.''

''ராத்திரி சமையலறை சாமான் பூராவும் நல்லா மூடிட்டுப் படுத்துக்கணும்.''

''ராத்திரியிலே சமைக்கிறது அரை மணின்னா, எல்லாத்தையும் பார்த்து மூடி பந்தோபஸ்து பண்ண ரெண்டு மணி ஆறது. ஒரு கிலோ நல்லெண்ணெய் நூற்றி இருபது ரூபாய்... ஒரு பல்லிக் குஞ்சு அதிலே விழுந்து பிராணனை விட்டுட்டுது.''

''பெரிய நஷ்டம்தான்...'' ஆதரவுப் பெருமூச்சு தெரிவித்தேன்.

இரண்டொரு நாளில் நண்பர் புஜங்க சயனத்திடமிருந்து டெலிபோன் வந்தது. விசித்திரமான ஒரு பொருளை என்னிடம் கேட்டான்.

''உன்கிட்டே மயில் இறகு ஏதாவது இருக்குமா?'' என்றான்.

நான் சிரித்தேன். ''எதற்கு? உன் குட்டிப் பெண் புஸ்தகத்துல வைக்கக் கேட்கிறாளா?''

''அதெல்லாம் இல்லை. நான் கேட்பது எனக்காகத்தான். மயில் இறகு வைத்தால் பல்லிகள் ஓடி விடுமாமே?'' என்றான்.

நான் அசந்து போனேன். இவ்வளவு எளிமையான முறையில் பல்லிகளை ஒழிக்க முடியுமென்று இவ்வளவு நாள் யாரும் எனக்கு சொல்லவில்லையே. இன்ஸெக்ட் கன்ட்ரோலில் ஒரு டஜன் பல்லி பிடிக்க ஐந்நூறு ரூபாயாவது கேட்பார்கள்.

என் வீட்டிலும் நிறையப் பல்லி நடமாட்டம் உண்டு. பல்லி உண்டே தவிர மயில் இறகு என்னிடம் இல்லை. ஆனால், திருவல்லிக்கேணியில் மருந்துக் கடை ஒன்றில் அது விற்கப்படுவதாகக் கேள்விப்பட்டு அக்கறையாக வாங்கிக் கொடுத்தேன். அதன் பலனைத் தெரிந்துகொள்ள புஜங்க சயனத்தின் வீட்டுக்குச் சென்றேன். அதிர்ச்சி தரும் விஷயமாக சுவரில் ஒட்டப்பட்டிருந்த மயில் இறகின் மீதே இரண்டு மூன்று பல்லிகள் நடமாடிக்கொண்டிருந்தன.

அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் என் வீட்டிலும் பல்லிகள் துள்ளி விளையாடியது என் கண்களுக்குத் தெளிவாகத் தெரியத் தொடங்கியது. நானும் புஜங்க சயனத்தைப் போலவே பல்லிகளை விரட்டுவதில் இறங்கியது தெரிந்ததும், பல்லி நிவாரணத்துக்கு ஆளுக்கொரு வழி சொன்னார்கள்.

ஒருத்தர் வெங்காய சருகுகள் பரப்பினால் பல்லி வராது என்றார்.

வெங்காயம் உரிக்கவே சோம்பல் படும் நான் வெகு அக்கறையாக வீட்டிலிருந்த வெங்காயங்களை எல்லாம் சகட்டுக்கு உரித்துத் தள்ளினேன். அநேகமாகத் தினந்தோறும் வெங்காய சாம்பார்தான். நான் உரித்த சருகுகளை பல்லி நடமாட்ட பகுதிகளில் பரத்தி வைத்தேன். ஆனால், ஒரு காற்று அடித்ததும் எல்லாம் பறந்து போக, அதற்காக ஒரு வழி செய்தேன். வெங்காயச் சருகுமீது தண்ணீர் தெளித்து வைத்தேன். வீடு பூறா ஒரே ஜலப் பிரளயம். கடைசியில் வேறு வழியின்றி இன்ஸெக்ட் கண்ட்ரோல்காரர்களிடம் சரணாகதி அடைந்தேன்.

ப(ஜ)ல்லிக் கட்டு

சின்ன சின்னத் துண்டுக் காகிதத்தில் வாஸ்லைன் போன்ற ஒட்டு மெழுகைத் தடவி பல்லி நடமாட்டப் பகுதிகளில் அவர்கள் வைத்தனர். சுவர்களில் ஒட்டி வைத்தனர்.

ஆனால், பூச்சி இனங்களிடையே என்ன ஓர் அபாரமான ஒற்றுமை. அந்தப் பசைக் காகிதத்தை எப்படியோ சுவரிலிருந்து பெயர்த்து, எறும்புக் கூட்டங்கள் தரதரவென இழுத்துக்கொண்டு திசை அறிவிக்காமல் எங்கோ சென்றன.

பூச்சி இனத்திடையேகூட இப்படி ஆபத்தில் உதவுகிற தன்மை இருக்கிறதே என்று வியந்தேன். எந்தக் கலவரத்தை அடக்குவது என்றாலும் அந்தக் கலவரக் குழுவின் தலைவரோடு பேசுவதுதானே மானிட மரபு?

அதையொட்டி நான் எங்கள் வீட்டுப் பல்லிகளின் தலைவர் எங்காவது தென்படுகிறாரோ என்று பார்த்தேன்.

ஒரு நாள் அந்தத் தலைவர் என் கண்ணில் பட்டுவிட்டது சமையலறை டியூப் லைட் பட்டியின் பின்னால் அவர் குடியிருந்தார். நல்ல கொழுக் கொழுக்கென்று வளர்ந்திருந்தார். வால்தான் வெட்டப்பட்டிருந்தது.

தலைவர் தன் வாலை யுத்தத்தில் இழந்தாரா அல்லது வாலண்டியராக யாருக்காவது விற்றுவிட்டாரா என்பதற்கு ஆதாரபூர்வமான தகவல் இல்லை. ஆனால், பல்லி வால்களைப் போட்டு சாராயம் காய்ச்சினால் நல்ல கிக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மனிதர்களில் சிலர் கிட்னி விற்பதுபோல தலைமைப் பல்லியார் தன் முடை எதற்காவது வாலை விற்றிருப்பாரா என்ற தகவல் இல்லை.

மனைவி சொன்னாள். ''அந்த, மொட்டை வால் பல்லியை ஒன்றும் செய்துக்க முடியாது. கொஞ்சம் கூட பயமில்லாமல் கண்ணெதிரே வந்து சமையல் மேடையில் பால் குடிக்கிறது. மிளகாயைக் கவ்விக் கொண்டு ஓடுகிறது...''

''சிவப்பு மிளகாய் வற்றலைத்தானே?''

''எப்படி கரெக்டாகச் சொல்லுகிறீர்கள்?''

''அந்தத் தலைவருக்குக் கண் சரியில்லை. காட்ராக்ட் பண்ண வேண்டிய கேஸ். கரப்பு என்று நினைத்து அந்த சிவப்பு மிளகாயைத் தூக்கிப் போயிருக்கிறது. பாவம்!''

''உங்க ஆராய்ச்சி கிடக்கட்டும். அந்த மொட்டை வால் பல்லியின் அராஜகத்துக்கு எப்படித்தான் முடிவு கட்டப் போறீங்க?'' மனைவியும் சீறத் தொடங்கினாள்.

''என்மீது வள்ளென்று விழுந்து பிரயோஜ னமில்லை. அந்த மொட்டை வால் பல்லி, பல போர்க்களம் கண்டதாக இருக்கும். சண்டையினால் தன் வாலை இழந்திருக்கக்கூடும்.''

''போய்ப் பாத்தீர்களா, அது வந்து உங்களிடம் சொன்னதா?''

''அமைதி! அமைதி! பல்லியும் பல்லியும் 'வூடு கட்டி’ சண்டை போடும்போது வாலை ஆட்டியவாறு எதிரியைக் குறி பார்க்கும். வலுவான பல்லி எதிரியின் வாலை ஒரே தாவில் கடித்துத் துண்டாக்கிவிடும். வாலிழந்த பல்லி தோற்றதாக அர்த்தம். ஆனால், அந்த வாலிழந்த வீரப் பல்லிக்கு ஒரு சலுகை உண்டு. அறுந்த வால் மறுபடி வளரத் தொடங்கும். ஓரிரு மாசம் அது வாலை ஆட்டாமலிருந்து பின்பு வாலுடன் வளர்ந்து வரும், ஸாரி வாழ்ந்து வரும்!''

இவ்வாறு நாங்கள் பல்லியின் ஆளுகைக்கு உட்பட்டு நொந்து நூடுல்ஸான நிலையில் என் மேட்டூர் பெரியப்பா வந்திருந்தார். அவரிடமும் பல்லி பயங்கரம் பற்றிப் புலம்பினேன். அவர் சிரித்தாறு 'சாயந்தரமானால் நீ விளக்குப் போடுகிறாயா?'' என்றார்.

''ஆமாம்.''

''சாயந்தரம் இனிமேல் வாசலில் விளக்குப் போடாதே. சாயந்தரம் என்ன எப்போதுமே விளக்குப் போடாதே...'' என்றார்.

''மகாலட்சுமி வருகிற நேரம் எப்படி நான் சாயந்தரம் விளக்குப் போடாமல் இருப்பது...'' என்றேன்.

''மகாலட்சுமி மட்டுமே வரும் நேரம் அல்ல. பல்லிகளும் வருகிற நேரம்தான் அது. விளக்குப் போடாமல் இருந்தால் பல்லிகள் வராது'' என்றார்.

''தெய்வத்திரு மகாலட்சுமிக்கும் அற்ப பல்லிக்கும் என்ன தகராறு?'' என்று அவரிடமே கேட்டேன்.

அவர் சொன்னார் ''விளக்குகள் போட்டால் பூச்சிகள் வரும். அந்த பூச்சிகளைப் பிடிக்கத்தான் பல்லிகள் வருகின்றன. ஆகவே பூச்சி வராமல் செய்ய விளக்குகள் அணைந்த நிலையிலேயே இருக்கவேண்டும்.''

இவ்வாறாக பல்லி புராணம் முடிகிறது.

பெரியப்பா சொன்னாரென்று வாசலில் விளக்கே போடுவதில்லை. இருளோ இருள். பல்லி வந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், வாசற்படி தடுக்கி மனைவி மூன்று தரமும் நான் இரண்டு தரமும் விழும்படி ஆயிற்று.

முழங்கால் முறிவு, கணுக்கால் முறிவு என்று பலவித முறிவுகளுக்கு ஆளாகி டாக்டர்களுக்கும், தடவு மருந்துகளுக்கும் பணம் செலவானதே தவிர பல்லிகள் முன்மாதிரியேதான் இருக்கின்றன.

இத்தனை தொந்தரவுகளுக்கும் நடுவிலும் எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல், என் நண்பன் புஜங்க சயனம் வீட்டிலும் பல்லிகள் எண்ணிக்கை குறையவே இல்லை என்பதுதான். வாழும் பாம்பு என்பார்களே அது மாதிரி... வாழும் பல்லிகள்!

சிரிப்பு மன்றம்!

ராஜா

ப(ஜ)ல்லிக் கட்டு

சேலம் பக்கம் தாரமங்கலம் கோயில் திருவிழாவில் பேசுவதற்காக காரில் போய் இறங்குறோம். பெரிய மீசை வெச்ச ஒரு ஆள் எங்களை வரவேற்று, 'என்ன.... இவ்வளவு லேட்டா வர்றீங்க...? சரி... சரி சட்டுபுட்டுன்னு மேக்கப் போட்டுட்டு மேடைக்கு வாங்க’னு அவசரப்படுத்தினார். அந்த நேரம் பார்த்து எங்களோடு பட்டிமன்றம் பேசுவதற்காக வந்திருந்த வயதான அம்மா காரில் இருந்து கடைசி ஆளா இறங்கவும், 'என்ன இது நாடகக்காரங்கள்லாம் ரொம்ப வயசான ஆளுங்களா இருக்கு?’ன்னு கேட்க... எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. விஷயம் என்னன்னா.... எங்க பட்டி மன்றத்துக்கு அப்புறமா 'வள்ளி திருமணம்’ நாடகமும் நடக்குது. அந்த நாடகக் குரூப்புனு எங்களை நினைச்சிட்டாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism