Published:Updated:

சாலை விதிகள் - சிறுகதை

ஷங்கர்பாபு, ஓவியங்கள்:பிள்ளை

பிரீமியம் ஸ்டோரி
சாலை விதிகள் - சிறுகதை

"கடைசில ஆமை ஜெயிச்சுட்டுது, பாத்தியா?'' என்றார் அன்பரசன். ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த முயல்-ஆமை கதையைக் கேட்ட கணம், என்னைத் தாத்தாவின் அருகில் தள்ளியது. தாத்தாக்கள் தாத்தாக்களாகவே பிறக்கிறார்கள் என்று நம்பிய பருவம் அது. கூடுதல் உற்சாகத்துடன் ஏதோ அவரே முயல்-ஆமை ஓட்டப் பந்தயத்துக்கு ஏற்பாடுசெய்தது போல வர்ணனை செய்தார். ''ரெஃப்ரி விசில்  ஊதிட்டான். முயல் ரெண்டாம் நம்பர் தடத்துல நிக்குது. ஆமை அஞ்சாம் நம்பர் தடத்துல...'' என்று துவங்கி, ''கிரவுண்ட்ல ஒரே நிசப்தம்! பரிசுக் கோப்பையைக் கையில வச்சிருக்கற நம்ம பி.டி. வாத்தியார்கூட அதிர்ச்சியடைஞ்சு நிக்கறாரு. ஆமை தொடுகோட்டை நோக்கி வேகமா...'' என்று பிரமாண்ட பட்ஜெட்டுடன் கதையை முடித்து, ''இதுலேர்ந்து என்ன தெரியுது?'' என்றார்.

''வீட்டிலேயே நன்றாகத் தூங்கிவிட்டு வரவேண்டும். போட்டியின்போது தூங்கக் கூடாது!'' என்றேன், நான்காம் வகுப்பு படிக்கும் நான். தாத்தா சிரித்துவிட்டு, ''அப்படி இல்லடா குழந்தே... அலட்சியமா இருந்துரக்கூடாது. நாமதான் ஜெயிப்போம்னு யாரையும் குறைச்சு மதிப்பிடக்கூடாது!'' என்றார். என் பிஞ்சு உள்ளத்தில் இந்தக் கதை ஒரு விழிப்பு உணர்வுக் கதையாக இடம் பெற்றது.

அப்புறம் ரொம்ப நாளைக்குப் பிறகு, இப்போது அன்பரசன்தான் இந்தப் போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் முயலையும் ஆமையையும் நினைவுகூர்ந்தார். முழுசாகச் சொல்லவில்லை. அந்த ஒரே ஒரு வாக்கியம்தான் சொன்னார். அவரை அப்படிச் சொல்ல வைத்தது செந்தில். கடைசி நேரத்தில்தான் சேர்ந்தான். அவன் கார் ஓட்டிக் காட்டுவான் என்று யாருமே நினைக்கவில்லை. என்ன ஆச்சா¢யம்..! போன ஜென்ம நினைவோ... செந்தில் அழகாக 'எஸ்’ போட்டுக் காட்டினான். வெற்றிகரமாக காரை நிறுத்திவிட்டு, ஏதோ 'ஃபார்முலா ஒன்’ போட்டியில் அசத்தியது போல் கையை ஆட்டியவாறு எங்களைப் பார்த்து நடந்து வந்தபோதுதான், அன்பரசன் முயலையும் ஆமையையும் ஓடவிட்டார். தாமதமாக வந்தாலும் சரியாக முயற்சித்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்கிற அர்த்தத்தில்தான் அவர் இதைச் சொல்லியிருக்க வேண்டும்.

அன்பரசனைத் தலைவராகக் கொண்ட எங்கள் குழுவில், நாங்கள் எல்லோரும் ஓட்டிக்காட்டிவிட... இனி பசுபதி முறை.

அவன் ஓட்டிக்காட்ட வேண்டிய கார் ஒரு ஓரமாய் இருந்தது. அவன் காரை நெருங்க நெருங்க, அன்பரசனின் முகம் வெளிறியது. அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்... ''இந்த ஆர்.டி.ஓ. ரொம்ப ஸ்ட்ரிக்ட்! உங்க  பையனுக்குப் பயிற்சி போதாது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே...'' ஆனால், பசுபதியின் அப்பா சண்டைக்கே வந்துவிட்டார். ''அவன வெச்சு துட்டு சம்பாதிக்க நினைக்கறீங்களா?'' அதன்பின் அன்பரசன் ஆட்சேபிக்கவில்லை.

நாங்கள் வண்டியை நோக்கிக் கலவர முகத்துடன் நடக்கும் பசுபதியைப் பார்த்தோம். பிரேக் இன்ஸ்பெக்டர்; அன்பரசன்; சுற்றிலும் இருந்த வழிப்போக்கர்கள்; பார்வையாளர்கள்; அடுத்து கார் ஏற்றக் கலையை நிரூபிக்கக் காத்திருக்கும் மகளிர் கூட்டம்... எல்லோரையும் பார்த்தோம். நடக்க இருக்கும் கூத்தைப் பார்க்க ஆயத்தமானோம். அன்பரசன் எங்களைப் பார்த்துப் பரிதாபமாகக் கேட்டார்... ''எப்படிப்பா, ஓட்டிருவான்ல?''

இப்போது நேரம் கிடைக்கிறபோதே வாகனம் ஓட்ட பயிற்சி எடுத்துக்கொள்வோம்; பின்னால் கார் வாங்குகிறபோது வசதியாக இருக்குமே என்று, நான் அம்மன் வாகனப் பயிற்சிப் பள்ளியை நாடினேன். நம்மில் பலருக்கு ஃபாரின் போனாலும் யூரின் போனாலும் கம்பெனியோடு போவதே மரபு. எனவே, கூடவே மணி. நாங்கள் சேர்ந்த சில நிமிடங்களில், பசுபதி தன் தந்தையோடு வந்து அட்மிஷன் ஆனான். தனது புதிய சீடர்களைப் பார்த்து, ''டிரைவிங் மாதிரி ஈஸியான விஷயம் உலகத்துலயே இல்ல. ஏதோ நாங்கள்லாம் பிழைக்கிறதுக்காக இருபது நாள்னு வெச்சிருக்கோம். உண்மையில் ஒரு மணி நேரத்துல என்னால சொல்லிக் கொடுக்க முடியும்...'' என்று சம்பிரதாய உரை நிகழ்த்தினார்.

''உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும். யாருப்பா, அந்த உலகப் புகழ்பெற்ற டிரைவர்?''

''நரேன் கார்த்திகேயன்...''

''நடிகர் அஜித்...''

அன்பரசன் சிரித்துவிட்டு, ''பகவான் கிருஷ்ணர்... அவரே அர்ஜுனன்கிட்ட சாரதியா, அதாவது டிரைவரா இருந்திருக்கார். அப்படிப்பட்ட புனிதமானது டிரைவரின் பணி. அதை மனசுல வெச்சுக்கிட்டு, வண்டியை ஓட்டுங்க..!''

மூன்று நாள் பயிற்சிக்குப் பிறகு நாங்கள் இறங்கும்போது, ''சார், எனக்கு ஒரு டவுட்...'' என்றான் பசுபதி.

''கேளுப்பா...'' என்றார் அன்பரசன், பெருமையுடன். தனது அறிவைக் களத்தில் இறக்க வாய்ப்பு அளித்த சீடனைப் பெருமையாகவும், எங்களைத் துச்சமாகவும் பார்த்தார்.

''சார், இந்த பிரேக், பிரேக்குன்னு சொல்றாங்களே, அது எங்க சார் இருக்கு?''

''சொல்லால் அடித்த சுந்தரா...'' பின்னணிப் பாடல் ஒலித்திருக்க வேண்டும். இப்படி எல்லாமா கேள்வி கேட்பார்கள்? அப்படியானால் இவ்வளவு நாள் இவன் என்னதான் செய்துகொண்டிருந்தான்? எனது கற்பிக்கும் திறனை இதைவிடவும் கேவலப்படுத்த முடியுமா? இந்த மாதிரி கேள்விகளும், வாழ்நாளில் சந்தித்திராத பேரதிர்ச்சியும் அன்பரசனைத் தாக்கியிருக்க வேண்டும். விழாமல் இருக்க, கார் கதவைப்  பிடித்துக் கொண்டார். அடுத்த கணமே தன் முன்னால் வெகு அடக்கமாகவும் அப்பாவித் தோற்றத்துடனும் நிற்பது சாதாரண ஆள் அல்ல என்பதையும் உணர்ந்தார்.

''தம்பி... உன் பேர் என்ன?''

''பசுபதி சார்!''

''நிஜமாகவே எது பிரேக், எது க்ளட்ச், எது ஆக்ஸிலேட்டர்னு தெரியாதா?''

''கன்ஃப்யூஸ் ஆயிடுது, சார்...''

''என்ன படிச்சிருக்கேப்பா..?''

''பி.ஏ. சார்.''

அன்பரசன் சற்றும் மனம் தளராமல், ''ஓ.கே..! சந்தேகத்தை மனசுல வெச்சுக்காம, கேட்ட வரைக்கும் நல்லதுதான்...''

அதுவரை சாதாரணமாகவும் இயல்பாகவும் எங்களின் கண்ணுக்குத் தெரிந்த பசுபதி, இதற்குப் பிறகு முற்றிலும் எங்களின் கவனிப்புக்கு உள்ளானான்.

அவன் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பி.ஏ படிப்பில் அவனால் சேரத்தான் முடிந்தது; முடிப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தபோது, வயது 25 ஆகியிருந்தது. அவனது மார்க்குகளைக் கேட்டுவிட்டு மணி, ''அரசாங்கம் பத்தாவதிலும் ப்ளஸ் டூ-விலும் முதல் இடங்களைப் பிடிக்கிறவர்களை அறிவிக்கிற மாதிரி, கடைசி இடத்தைப் பிடிக்கிறவரையும் அறிவிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தால், பசுபதி எப்போதோ பிரபலமாகியிருப்பான்...'' என்றான். படிப்புதான் வரவில்லையே, வாகனம் ஓட்டியாவது பிழைத்துக்கொள்ளலாமே என்றுதான் இங்கு சேர்ந்திருக்கிறான் பசுபதி. அல்ல, அவனது அப்பாவால் சேர்க்கப்பட்டிருக்கிறான்.

''கார் ஓட்டறதை நினைச்சா கை காலெல்லாம் நடுங்குது. இந்த பெட்ரோல், டீசல் வாசனையே குமட்டுது. கார் ஓட்டக் கத்துக்கறதுல எனக்குக் கொஞ்சம்கூட விருப்பம் இல்லே. என்னைப் போய்...'' என்றான் பசுபதி. டீ வாங்கிக்கொடுத்து, அவனைச் சாந்தப்படுத்தினோம்.

''சும்மா என்ஜாய் பண்ணி ஓட்டுங்க, பிரதர்! பயப்படாதீங்க. மைண்டை ரிலாக்ஸா வெச்சுக்குங்க. கார் ஒரு அழகான பொண்ணு மாதிரி! கன்னிப் பொண்ணா நினைச்சு காரைத் தொடணும்னு கமலஹாசனே சொல்லியிருக்கார்...''

''என்ன பண்ணி என்னங்க... லைஃப் இஸ் பப்ளீதானே..? அதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படணும்?'' என்றான் பசுபதி.

அப்போது புரிந்த மாதிரி காட்டிக்கொண்டாலும், அந்த 'லைஃப் இஸ் பப்ளீ’யில் வருகிற பப்ளீக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் நானும் மணியும் குழம்பினோம். எத்தனையோ ஆங்கில நாவல் படித்திருக்கிறோம்; எவ்வளவோ பேசியிருக்கிறோம்; இந்த பப்ளீ..? சட்டென்று ஒரு வெளிச்சம்... ''டேய், அது 'ஙிuதீதீறீமீ’டா! 'வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி’ன்னு பசுபதி தத்துவம் சொல்ல ஆசைப்பட்டிருக்கார்!''

''முட்டாள்...'' என்றான் மணி.

''முட்டாள்னு சொல்லமுடியாது. சற்று நுண்ணறிவு குறைந்தவர்னு சொல்லலாம். விஷயங்களைக் கொஞ்சம் தாமதமா புரிஞ்சுக்கிறவர்னு சொல்லலாம். கொஞ்சம் செயல்திறன் குறைஞ்சவர்; தனக்கு இருக்கிற மூளையோட சக்தியை அவ்வளவா யூஸ் பண்ணாதவர்னு சொல்லலாம்... அப்புறம்...''

''டேய், இதுக்கு நான் சொன்னதே பெட்டர்டா..!''

ஆனால், ஒன்று நிச்சயம்... பசுபதி திறமைகளை வைத்துக்கொண்டு வஞ்சனை செய்யவில்லை. ''அவனுக்கு என்ன வருதோ, அதைக் கண்டுபிடிச்சு...''

''நிச்சயமா டிரைவிங் வராது! காரணம், திறமையை விடு... குறைந்தபட்ச ஆர்வம்கூட அவன்கிட்ட இல்லை; ஈடுபாடு இல்லை. பின்னால பாரு, நாம வண்டி ஓட்டிட்டு இருக்கோம். அவன் பின்னால உக்காந்து தூங்கிட்டு இருக்கான்...''

அன்பரசன் அவனை அடித்து எழுப்பினார். ''டேய், உனக்கு வண்டி ஓட்டக் கத்துக் கொடுத்து லைசென்ஸ் வாங்கிக் கொடுக்கறேன்னு உன் அப்பாட்ட வாக்கு கொடுத்திருக்கேன்டா... எனக்காகவாவது கத்துக்கோடா..!''

அன்பரசனுக்கும் அவனுக்கும் யுத்தம் துவங்கியது. அவனுக்காகக் கூடுதல் நேரமும், கூடுதல் சிரத்தையும் எடுத்துக்கொண்டார். அவர் எவ்வளவுக்கு எவ்வளவு அவனை நெருங்கினாரோ, அந்த அளவு அவனிடம் பயம் கூடிக்கொண்டே இருந்தது. சாலையில் ஜனங்கள் சிதறி ஓடினார்கள். என்னவென்று புரியும் முன் கார் கண்ணில் படாமல் மறைந்திருக்கும். இரண்டு சக்கரங்களில் பயணிக்கும். ரேஸ் கார்  மாதிரி திருப்பங்களில் புழுதி கிளப்பும். இன்னும் பல்டி ஒன்றுதான் அடிக்கவில்லை.

''பசுபதி, ஏன் இவ்வளவு வேகமா ஓட்டறே..?''

''சார், நான் கண்ணையே திறக்கறதில்ல. ரோட்டைப் பார்த்தாலே தல சுத்துது!''

இதற்குப் பிறகும் நாங்கள் வண்டியில் இருந்து இறங்காமல் இருக்க முடியுமா?

அடிப்படையில் அன்பரசன் ஒரு மென்மையான மனிதர். அவரை மருத்துவ உலகம் அன்போடு வரவேற்கத் துவங்கியது. அவரது வாகனத்தை ஒர்க் ஷாப், பேரன்புடன் வரவேற்கத் துவங்கியது. ஒன்று, வேகம்; அல்லது, ஜானவாச ஊர்வலம். நாங்கள் நகரின் முக்கியமான சாலையில் பீக் ஹவரில் ஊர்வலம் நிகழ்த்திக் காட்டினோம். நடுவில் பசுபதி எதையோ செய்யப்போய், வண்டி போலீஸ் நிழற்குடை அருகே எக்கச்சக்க புகை கக்கியவாறு ஒரு விசித்திரமான போஸில் முறுக்கிக்கொண்டு நிற்க... நாங்கள் இறங்கித் தள்ளினோம். எந்த நேரத்திலும் அன்பரசனும் பசுபதியும் கார் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுக் கைதுசெய்யப்படலாம் என்று எங்களுக்குத் தோன்றியது.

''இவ்வளவு அவஸ்தை எதுக்கு? பேசாம இவனை கிளாஸ்லருந்து டிஸ்மிஸ் பண்ணிருங்க, சார்! இந்த ஜென்மத்துல இவனுக்கு டிரைவிங் வராது.''

''ஆமாம் சார், என்னைத் துரத்தி விட்ருங்க. என்னால ஒரு பாவமும் அறியாத ஜனங்க கை இல்லாமலோ, கால் இல்லாமலோ, தலை இல்லாமலோ ஏன் வாழணும்?'' என்றான் பசுபதி.

''எனக்குத் தெரிஞ்சு, என் இத்தனை வருஷ சர்வீஸ்ல, கார் ஓட்டறதை இவ்வளவு கஷ்டமான காரியமா மாத்தினது நீ ஒருத்தன்தாம்ப்பா. ரொம்ப மகிழ்ச்சியா செய்யவேண்டிய காரியம் இது. அதனாலதான் இதை மகிழ்வுந்துன்னு சொல்றாங்க...''

''சார், எனக்கு ஒரு டவுட்...''

''தாராளமா...'' என்று துவங்கிய அன்பரசன், பழைய அனுபவத்தில் வெலவெலத்து, ''முதல்ல வண்டிய ஓட்டு. அப்புறம் கேளு!'' என்றார். பின், அவருள் இருந்த நல்லாசிரியர் உயிர்பெற்று, ''சரி, கேட்டுத்தொலை'' என்றார். நாங்கள் சற்றுத் தள்ளி நின்றோம்.

''சார், நாட்டுல பாதி டிரைவிங் ஸ்கூல் பேரு அம்மன் டிரைவிங் ஸ்கூல், பாண்டியன் டிரைவிங் ஸ்கூல், பரக்கத் டிரைவிங் ஸ்கூல்... இந்தப் பேர்லயே இருக்கே. ஏன் சார்?''

கவுண்டமணியின் கஷ்டம் புரிந்தது. ''நீ என்ன பண்ற... இந்தச் சந்தேகங்களை ஒரு கல்வெட்டுல அடிச்சு வெச்சு, தஞ்சாவூர் கோயில் வாசல்ல போய் உக்காந்துர்ற. உனக்குப் பின்னாடி வரக்கூடிய சந்ததிகள்...''

தொடர்ந்து பல 'சார், எனக்கு ஒரு டவுட்டு’கள்!

''சார், முப்பதே நாள்ல டிரைவிங் கத்துக்கறதுக்கு புத்தகம் ஏதாவது இருக்கா? நான் அதை எப்படியாவது படிச்சு மனப்பாடம் பண்ணி...''

''சார், கொஞ்சம் நீங்க என்ன மாதிரிதான் இருக்கீங்க. மீசையை மட்டும் எடுத்துட்டா, கண்டுபிடிக்கவே முடியாது. எனக்குப் பதில் நீங்களே வண்டி ஓட்டி லைசென்ஸ் எடுத்துருங்களேன். ஏதாவது வாய்ப்பு இருந்தா பாருங்களேன். இல்ல, என்னோட சித்தி பையன் என்ன மாதிரியே இருப்பான். அவன வெச்சு சமாளிக்க முடியுமா?''

''சார், ரெண்டு பேர் சேர்ந்து ஒண்ணா வண்டி ஓட்ட முடியுமா? நான்                         எதுத்தாப்ல வண்டி ஏதாவது வருதான்னு சொல்லுவேன். இன்னொருத்தர் வண்டி ஓட்டிட்டே போகணும்...''

நாங்கள், கார் ஓட்டும் கலை பிழைத்திருக்க வேண்டினோம். பசுபதி நடுங்கினான்; தளர்ந்தான்; சோர்ந்தான்; திணறினான்; தத்தளித்தான். போன பிறவிகளில் கொடூர வாகன விபத்தில் சிக்கிப் பிராணனை இழந்திருந்தால் ஒழிய, இவ்விதம் சாலையைப் பார்த்தும், வாகனத்தைப் பார்த்தும் அவனது அந்தராத்மா இவ்விதம் அலறித் துடிக்க வேண்டியதில்லை.

நாங்கள் அளித்த ஆறுதல்களையும், தைரியங்களையும் பசுபதி வீணாக்கிக்கொண்டே இருந்தான். இந்தியாவின் சாலை விதிகளையும் போக்குவரத்து முறைகளையும் சீர்குலைக்க வெளிநாட்டில் இருந்து கூலிக்கு அனுப்பபட்டவன் மாதிரியே நடந்துகொண்டான்.

எப்படியெல்லாமோ அன்பரசன் அவனைத் தயார் செய்ய முயன்றார். அந்த விதிக்கப்பட்ட நாளும் வந்தது.

''ஓட்டிருவான், அண்ணே! கவலைப்பட வேண்டாம்...''

அன்பரசனின் மன ஆறுதலுக்காகச் சொன்னாலும், பசுபதியின் கடந்த காலச் சாதனைகள் எங்களுக்கு சந்தேகத்தையே தந்தன.

காலையில் வரும்போதே, விபத்துக்குள்ளாகி இழுத்துச் செல்லப்படும் வாகனம் போல வந்து சேர்ந்தான் பசுபதி. முந்தின இரவு தூக்கமே இல்லையாம். காய்ச்சலாம். கை நடுக்கமாம். அடிக்கடி தண்ணீர் குடித்தான். ஓரமாய் ஒதுங்கினான். அன்பரசன் தன் பங்குக்கு இறுதிக்கட்ட உபதேசத்தில் ஈடுபட்டார். நாங்கள் அன்பரசனை மீட்டெடுக்க முயன்றோம்.

வேறு யாரையோ அழைத்தபோது பசுபதி தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்று ஓடினான். அவன் அழைக்கப்பட்டபோது, வேறு யாரையோ கூப்பிடுகிறார்கள் என்பது போல் சலனமின்றி இருந்தான். நான்கைந்து தடவை விளித்த பிறகே அவனது காதுகள் உயிர்பெற்றன. பரிதாபமாக அவன் செல்லும்போது, அன்பரசன் உச்சகட்ட இதயத்துடிப்பை எட்டினார். நான், மணி, செந்தில் எல்லோரும் இயல்பாய் இருப்பதாய் காட்டிக்கொள்ள முயன்றோம்.

ஒரு வழியாய், வாகனத்தை அடைந்தான் பசுபதி. தயங்கித் தயங்கி ஏறினான். ஸ்டியரிங்கைத் தொட்டுக் கும்பிட்டான். நடுங்கும் ஈரக்கையால் சாவியைத் துவாரத்தில் நுழைக்க முயன்றான். சாவி நழுவிக் கீழே விழுந்தது. எடுக்கக் குனிந்தான். மீண்டும் சாவி; மீண்டும் கீழே. மோட்டார் வாகன ஆய்வாளர் எரிச்சல் அடைவதை உணர முடிந்தது.

பசுபதி மீண்டும் ஸ்டியரிங்கை வணங்கிப் பிரார்த்தனை செய்தான். ஒருவழியாக, வண்டி இரண்டு அடி நகர்ந்தபோதுதான், கச்சேரி களைகட்டத் துவங்கியது. கிளம்பிய வாகனம் ஒரு கணம் நின்று, திணறி, பசுபதி என்ன செய்தானோ, திடீர் வேகம் பெற்றுக் கட்டுப்பாட்டை இழந்து, திசை தெரியாமல் பயணித்தது. 'எஸ்’ பாதையை உருவாக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ட்ரம்கள் மீது ஒரு தமிழ் சினிமா காட்சி போல் இடித்துத் தள்ளிவிட்டு, அப்பாவி மரங்களை நோக்கிப் பாய்ந்தது. இந்த மோதல் தந்த பதற்றத்தில் இருந்து மீளும் முன், பசுபதி எதிரில் இருந்த மரங்களைப் பார்த்துவிட்டான். அவற்றின்மீது மோதுவதைத் தவிர்க்க என்னவெல்லாமோ செய்ய, வாகனம் 'எஸ்’ மட்டுமின்றி, அநேகமாக எல்லா ஆங்கில எழுத்துக்களையும், பல தமிழ் எழுத்துக்களையும் போட்டுக்காட்டியது. ஓரமாய் நின்றிருந்த பைக்குகளை வீழ்த்திவிட்டு, பார்வையாளர்களை நோக்கித் தறிகெட்டு ஓடியது. சும்மாவே கூச்சலிடும் பெண்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை விடுவார்களா? விதவிதமான குரல்களுடன் அவர்கள் அலறி ஓட, ஆண்களும் பாதுகாப்பான இடம் தேடி ஓட, அந்த இடத்துக்கு ஒரு கலவர 'லுக்’ கிடைத்தது. பசுபதி எதை எல்லாமோ அழுத்தி வண்டியை நிறுத்த ஆசைப்பட்டாலும், அவனது பதற்றம் வண்டியைச் சாந்தப்படுத்தவே இல்லை.

இறுதிக்கட்ட நிலவரப்படி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிட்டாய்ப் பறந்துகொண்டிருக்க, பசுபதியின் வண்டி அவரை விரட்டத் துவங்கியிருந்தது. அவர் தன் அலுவலகத்துக்குள் தஞ்சம் புக, வண்டி அலுவலக வாசலில் முட்டி, உறுமியவாறு ஓய்வுகொண்டது. சுற்றிலும் ஒரே புகை!

''ஒருவழியா நின்னுருச்சு!'', ''நல்லவேளை, உயிர்ப்பலி ஏற்படல...'' என்பன போன்ற பாஸிட்டிவ் கருத்துக்களுடன், நாங்களும் அன்பரசனும் மரத்தில் இருந்து குதித்தோம். அன்பரசன் மரத்தில் இருந்து இறங்கவே மாட்டேன் என்றுதான் அடம் பிடித்தார். பயிற்றுநர் என்கிற முறையில் அவருக்கான கடமைகள் காத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இறக்கிவிட்டோம்.

அன்பரசன் கூட்டத்தை விலக்கி, வாசலில் விசித்திரமாய் நின்ற வாகனத்தை எட்டிப்பார்த்தார். சீட்டில் பசுபதி மயக்கம் போட்டு விழுந்திருந்தான். அன்பரசன் ஆராய்ந்து, ''உயிர் இருக்கு...'' என்று அறிவித்தார். இந்தக் கட்டத்தில் பசுபதி சுயநினைவு பெற்று, இறங்கித் தலைதெறிக்க ஓடினான்.

இதற்குள் வெளியே வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கோபத்தில் வெடித்தார்... ''எவன்டா இவனுக்கு டிரைவிங் கத்துக்கொடுத்தது..?''

''அய்யா, நாந்தாங்கய்யா...'' - அன்பரசன் பம்மிப்போய் நின்றார். ''அய்யா, ஒரு சின்ன தப்பு நடந்துபோச்சுங்கய்யா...''

மறுகணம், வாகன ஆய்வாளர் அன்பரசனின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டார். ''இதுதான் டிரைவிங்காடா? இனிமே உன்ன இந்த ஏரியா பக்கம் பாத்தேன்...''

அன்றிரவு நாங்கள் பார்த்தபோது பசுபதி, ''அதான் நான் முதல்லயே சொன்னம்ல'' என்றான். ''என்ன நடந்துச்சுன்னே தெரியல... இந்த ஜென்மத்துல எனக்கு வாகன யோகம் கிடையாது...''

அதன்பின், ஊரில் கபடிப் போட்டி நடந்தால் முதல் ரசிகனாய் வருபவனாகவும், சினிமா போஸ்டரை வெறித்துப் பார்க்கிறவனாகவும், கிடைத்த இடத்தில் தூங்குகிறவனாகவும் வெட்டியாகத்தான் அலைந்துகொண்டிருந்தான். அப்புறம் ரொம்ப நாள் பசுபதியை நாங்கள் பார்க்கவே இல்லை.

இப்போது அன்பரசன் டிரைவிங் ஸ்கூலை மூடிவிட்டு, ஃபேன்ஸி ஸ்டோர் வைத்திருக்கிறார். அவர் நினைவுகூர்ந்த முகூர்த்தமோ என்னவோ... மீண்டும் முயலும் ஆமையும் என் வாழ்க்கையில் குறுக்கிடத்தான் செய்தன

சாலை விதிகள் - சிறுகதை

நான் வேலை பார்க்கும் கம்பெனி அளித்த மேனேஜ்மென்ட் கோர்ஸில் முயலும் ஆமையும்  மேலாண்மைத் தத்துவத்தை விளக்கின. அதாவது, தோற்றுப்போன முயல் ஆமையிடம், ''இன்னொரு போட்டி வைக்கலாமே...'' என்கிறது. மீண்டும் இருவரும் ஓட... வழித்தடத்தில் ஆறு ஒன்று குறுக்கிடுகிறது. என் தாத்தா இருந்திருந்தால், முயல் நீச்சல் வகுப்புக்கு மட்டம் போட்ட மாதிரி ஒரு காட்சியை உருவாக்கியிருப்பார். நீச்சல் தெரியாத முயலை ஆமை தன் முதுகில் சுமந்து ஆற்றைக் கடக்க முயலுக்கு உதவுகிறது. இன்னொரு இக்கட்டான நேரத்தில் முயல், ஆமைக்கு உதவ... இறுதியில் இருவருமே வெற்றிபெறுகிறார்கள்.

''இதுக்குப் பேர்தான் வின்வின் சிச்சுவேஷன்...'' என்று முடித்தார் பேராசிரியர்.

ஒரு நண்பர் முயலையும் ஆமையையும் ஆன்மிகக் களத்தில் இறக்கிவிட்டார். அதன்படி, முயல் என்பது துள்ளித் திரிகிற மனம்; ஆமை என்பது ஐம்புலன்களின் குறியீடு. மேற்படி புலன்களை அடக்கி ஆண்டால், அலைபாய்கிற மனத்தை வென்று... வேறென்ன, முக்தி நிச்சயம்! இதைச் சிறு குழந்தைகளுக்கு உணர்த்தவே இக்கதை உருவாக்கப்பட்டது என்றார். எனக்குப் புல்லரித்தது.

பின்னொரு நாளில் என் மகனின் கதை நாட்களில், முயலும் ஆமையும் ஓடி வந்தபோது, என் தாத்தா சொன்ன, 'எதிரியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது’; பேராசிரியர் சொன்ன 'நண்பேன்டா’ டைப் கதை; நண்பர் சொன்ன முக்தி மார்க்கக் கதை ஆகியவற்றை விட... தனது மிஸ் 'ஆமை போட்டிக்காக விசேஷப் பயிற்சிகளை மேற்கொள்கிறது. அதனால், வெற்றி பெறுகிறது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு உதாரணமாக மாறுகிறது’ என்று சொன்னதே பொருத்தமானது என்றான் மகன்.

இந்த விளக்கமே சரியானது என்று நானும் ஒப்புக்கொண்டேன்.

ஆனால், அடுத்த மாதமே இந்தக் கதையில் இன்னுமொரு திருப்பம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.

அதன்படி, அந்தக் கதை வாழ்க்கையைச் சொல்லும் யதார்த்தக் கதையாக மாறியது. வாழ்க்கையில் திறமை இருப்பதாலேயே எப்போதும் முயல்களே வெற்றிபெறும் என்று சொல்வதற்கில்லை. ஏன், எப்படி என்றெல்லாம் கேட்க முடியாது. பந்தயத்தின்போது ஆமைக்குச் சிறகுகள் முளைக்கலாம்; அதன் கால்கள் சிறுத்தையின் கால்களாக மாறலாம்; அவ்வளவு ஏன், ஆமை அதே இடத்தில் நிற்க, பாதையே பின்னுக்கு ஓடலாம். ஆமைகளும் வெற்றிபெறும் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். என்ன ஒரு வாழ்வியல் கதை இது! இக்கதையின் ஆசிரியர் வாழ்வென்னும் நீண்ட சாலையின் விதிகளை அறிந்தவனாகத்தான் இருப்பான். ஆமைகளும் வெற்றி பெறுவதுதான் வாழ்க்கை!

அந்த முகம் தெரியாத யதார்த்தக் கதை மன்னனை, வாழ்வியல் அறிஞனை வணங்கினேன். காரணம், நான் ஆட்டோவில் போவதற்கு பேரம் பேசிக்கொண்டிருந்தபோது, மணியும் செந்திலும் பற்பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, சைக்கிளில் போவதே அதிக மைலேஜ் தருகிறது என்பதை உலகுக்கு அறிவித்தபோது, பசுபதியைப் பார்த்தேன். தன் சொந்த வெளிநாட்டுக் காரை ஓட்டிவந்து, எங்கள் முன் இறங்கினான் அவன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு