Published:Updated:

வாழைப்பழச் சோம்பேறி!

வாழைப்பழச் சோம்பேறி!
பிரீமியம் ஸ்டோரி
வாழைப்பழச் சோம்பேறி!

ஆயிஷா இரா.நடராசன், ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

வாழைப்பழச் சோம்பேறி!

ஆயிஷா இரா.நடராசன், ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

Published:Updated:
வாழைப்பழச் சோம்பேறி!
பிரீமியம் ஸ்டோரி
வாழைப்பழச் சோம்பேறி!
வாழைப்பழச் சோம்பேறி!

நான் சொல்வதை நம்புங்கள் டீச்சர், நேற்று இரவு எனக்கு நடந்த அதிசயத்தைக் கேட்டால் அசந்துவிடுவீர்கள். நான் ஏன் வீட்டுப் பாடம் எழுதவில்லை எனக் கேட்க மாட்டீர்கள். வாழைப்பழச் சோம்பேறி என்று என்னைத் திட்டவே மாட்டீர்கள்.

நேற்று இரவு, 10 மணி இருக்கும், நீங்கள் கொடுத்த வீட்டுப் பாடத்தை எழுதிக்கொண்டிருந்தேன். வீட்டில் எல்லோரும் தூங்கிவிட்டனர். அப்போது, திடீரென்று தோட்டத்தில் மின்னல் மாதிரி ஏதோ பளிச்சிட்டது. ஜன்னல் வழியே நான் பார்த்ததை நம்பவே முடியவில்லை. தோட்டத்தில், இரண்டு வாழை மரக்கன்றுகளின் அருகே ஒரு மேடு இருக்கும். அங்கே, ஒரு பறக்கும்தட்டு மினுமினுத்தது. நேற்று, நீங்கள் நடத்திய பாடத்தில் வந்த அதே பறக்கும்தட்டு. நான் வெளியே வந்து, ஒரு மரத்தின் அருகே ஒளிந்துகொண்டு எட்டிப் பார்த்தேன்.

அலுமினிய நிறத்தில் சிவப்பு வண்ணம் பூசிய, அந்த அழகான பறக்கும் தட்டிலிருந்து ஓர் ஏணி, ‘வொய்ங்’ என்று சத்தமிட்டபடி வந்தது. அதில், கதவு திறந்து, இரண்டு குள்ள உயிரிகள் இறங்கி வந்தன. எனக்கு பயத்தில் வியர்த்தது. ஓடிவிடலாமா என யோசித்தேன். ஆனால், அந்த இரு உயிரிகள் மேல் ஒளி படர்ந்து வினோதமாக இருந்ததால், அதைப் பார்க்கும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. உற்றுப் பார்த்தபோது,  அவற்றுக்கு மூன்று கண்கள், மூன்று காது, இரண்டு மூக்கு, இரண்டு வாய் இருப்பது தெரிந்தது.

ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்த என்னை, அவர்கள் பிடித்துக்கொண்டார்கள். வாயில் எதையோ திணித்தார்கள். அட, வாழைப்பழம்! நான் கத்துவதற்கு வாய் திறப்பதற்கு முன், அந்தப் பறக்கும் தட்டுக்குள் இருந்தேன். அதன் உள்ளேயும் வாழைப்பழ வாசனை. அப்பறம்தான் கவனித்தேன், அந்த இருவரின் உடையும் வாழைப்பழத் தோலால் ஆனது என்பதை.

‘உய்ங்...’ என்ற சத்தத்தோடு பறக்கும் தட்டு வானில் பறந்தது. அவர்கள், என்னோடு சகஜமாகப் பேசினர். அவர்களது இரண்டு வாய்களில் ஒன்று, நமது மொழியை உடனே கற்றுக்கொண்டு பேசியது. மற்றொரு வாய் அந்தக் கிரகவாசிகளின் மொழியைப் பேசியது. அவர்களது கிரகம் அருகில் வந்தபோது, வானத்தில் பரப்பிவைத்திருக்கும் வாழைப்பழம் போன்ற வடிவில் இருந்தது. அங்கே, ‘காம்பு’ எனும் இடத்தில் நாங்கள் தரை இறங்கினோம்.

என்ன அதிசயம்! நீங்கள் நம்பவே மாட்டீர்கள் டீச்சர். போக்குவரத்து வித்தியாசமாக இருந்தது. சாலைகள் வாழைப்பழத் தோலால் போடப்பட்டிருந்தன. போய் நின்றால் போதும், வழுக்கிக்கொண்டே போய், நாம் விரும்பும் இடத்தில் சேர்ந்துவிடலாம். வீடுகள், கட்டடங்கள் யாவும் மேற்கூரை கிழியாத வாழை இலையால் ஆனது. எல்லா வீடுகளிலும் சாலைகளின் இருபுறமும் வாழை மரங்கள் நடப்பட்டிருந்தன.

ஓர் இடத்தில் வாழைத்தண்டுகளைப் பயன்படுத்தி ஊஞ்சல், சறுக்குமரம், மேலும் கீழும் போகும் சீசா, ராட்டினம், நீச்சல்குளம் எல்லாம் அமைத்திருந்தார்கள். அதில், குட்டி வாழைப்பழ உயிரிகள் ஜாலியாக விளையாடின.

வாழைப்பூவின் இதழ்களால் பள்ளி மாணவர்களுக்கு அழகுச் சீருடை, பூவின் இதழ்க் கூம்புகளைவைத்து அந்தக் கிரகத்தில் பணம் உருவாக்கியிருந்தார்கள். பார்த்த எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. வாழைப்பழக் கிரகப் பள்ளிகளில் வீட்டுப்பாடமே கிடையாது. யாரும் எப்போது வேண்டுமானாலும் படுத்துத் தூங்கலாம். பள்ளிக்குப் போவதே ஓய்வு எடுக்கத்தான்.

அந்தக் கிரகவாசிகள், என்னை எதற்காக அங்கே கடத்திச் சென்றார்கள் தெரியுமா டீச்சர்? ஓர் இரவு முழுதும் முயன்று, அவர்களில் ஒருவரால் ஒரு வாழைப்பழத் தோலைத்தான் உரிக்க முடிகிறதாம். வாழைப்பழத்தின் தோலை வேகமாக உரிக்கும் உத்தியை மனிதரிடமிருந்து கற்கவே, அவர்கள் என்னை அங்கே கடத்திச் சென்றது.

என்னை நீங்கள் வாழைப்பழச் சோம்பேறி எனத் திட்டியதை, ஏதோ சிக்னல் மூலம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். வாழைப்பழம் கொடுத்தால்கூட ‘அதை உரித்துத் தரக்கூடாதா...’ என்று கேட்கும் சோம்பேறி என்கிற அர்த்தம், அவர்களுக்குத் தெரியவில்லை, பாவம்.

என்னை அழைத்துச் சென்ற இடம், ஒரு தொழிற்பேட்டை மாதிரி இருந்தது. அங்கே, மலைபோல குவிக்கப்பட்டிருந்த வாழைப்பழங்களை உரித்து, தோலில் உடைகள், காலுறைகள் செய்தார்கள். ஓர் இடத்தில் வாழைப்பழ ஆம்லேட், வாழை-65, வாழைப்பழ நூடுல்ஸ் என விதவிதமான உணவுகளைத் தயாரித்தார்கள்.

ஆனால், நம்முடைய ஊர் போல அங்கே இல்லை. இரண்டு மணி நேரத்துக்கு பகல், அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு இரவாக இருந்தது. அதனால், வாழைப்பழத்தை நடுவிலிருந்து உரித்துச் சிரமப்பட்டார்கள். தோலும் முழுதாக வரவில்லை. நான் வாழைப்பழத் தோலை உரிக்க இரண்டு உத்திகளை அறிமுகம் செய்தேன். ஒன்று, மேலிருந்து கீழ் நோக்கி உரித்தல், மற்றொன்று, காம்பிலிருந்து மேல் நோக்கி உரித்தல். இப்போது, வாழைப்பழத்தை எளிதில் உரிக்க அவர்கள் கற்றதால், மேலிருந்து கீழ் நோக்கி உரிக்கும் தொழிற்சாலையையும், கீழிருந்து மேல்நோக்கி உரிக்கும் தொழிற்சாலையையும் தனித்தனியாக நிறுவிவிட்டார்கள்.

அதிகாலையில்தான் நான் தோட்டத்தில் வந்து இறங்கினேன். உடனே குளித்து, உடைமாற்றிப் பள்ளிக்கூடம் வந்ததால், நான் வீட்டுப் பாடம் எழுதவில்லை டீச்சர். மன்னித்துவிடுங்கள். நாளை, அவசியம் எழுதி வருகிறேன். இரவு முழுதும் வாழைப்பழக் கிரகத்தில் கழிந்ததால் தூங்கவில்லை. அதனால், வகுப்பில் சற்று நேரம் தூங்கலாமா டீச்சர்... ப்ளீஸ்!