Published:Updated:

வேகாத கட்டை

வேகாத கட்டை
பிரீமியம் ஸ்டோரி
வேகாத கட்டை

சிறுகதை / மேலாண்மை பொன்னுசாமி , ஓவியம்/அரஸ்

வேகாத கட்டை

சிறுகதை / மேலாண்மை பொன்னுசாமி , ஓவியம்/அரஸ்

Published:Updated:
வேகாத கட்டை
பிரீமியம் ஸ்டோரி
வேகாத கட்டை
வேகாத கட்டை

ரக்கால் தளும்ப இப்ப எடுத்த சுத்தத்தேனை வைத்துக் கொண்டு, ''அம்புட்டையும் ஒரே மூச்சிலே குடிச்சு முடிச்சாகணும்'' என்றால்... அது பாசத் ததும்பலா, கோபத் தண்டனையா? 

தங்கத்தில் செய்த கோணூசியை கையில் திணித்துக் கொண்டே, ''ஒங்கண்ணை நீயே குத்திக்கோ...'' என்றால், தங்க ஊசியாயிற்றே என்று சந்தோஷப்படவா முடியும்? சொன்னவர் கண்ணைக் குத்தத்தானே தோன்றும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்படித்தான் இருக்கிறது, அந்த வீட்டிலுள்ள அத்தனை பேருக்கும். நெஞ்சில் அறைந்த மாதிரியிருக்கிறது. உயிரின் ஆணிவேரையே அறுக்கிற மாதிரியோர் மூச்சுத் திணறல். சொல்ல வாய் வராமல், பேச நா எழாமல் மாரிமுத்து, பழநியம்மா உள்பட சகலருமே மனசடைத்துப் போய் நின்றனர். தேனம்மா ஆச்சி கேட்டது கொஞ்சங்கூட ஞாயமில்லை. அவள் ஆசைப்பட்டது, அவளளவில் நியாயமாக இருக்கலாம். குடும்ப மானம் என்ற ஒன்றிருக்கிறதே... அதை யோசிக்க வேண்டாமா? இந்த ஊருக்குள் குடும்பம் இருக்க வேண்டாமா? ஊரை மீறி, ஊர்க்கட்டுப்பாட்டை மீறி எதுவும் செய்ய முடியுமா? ஊருடன் பகைத்தால் வேருடன் கெடும் என்ற சொலவடை பொய்யா?

அம்மாவையே வெறிக்கிற மாரிமுத்து. அழுகையும் பாசத் திணறலுமாய் அழுது அரற்றிக் கொண்டிருந்தவர், அம்மாவின் ஆசையைக் கேட்டதும், அரண்டு போனார்.

கடைசி ஆசை. சாவின் விளிம்பில் நின்று, உயிரையே கண்ணில் நிறுத்தி, ஆன்மாவின் துடிப்பில் இருந்து எழுந்த கடைசி விருப்பம்.

அதுக்காக, குடும்பத்தையே நாசக்காடாக்குவதா? ஊருக்கு ஆகாத, பகைக்குடும்பமாக நிறுத்தி அவலப்படுத்துவதா?

மாரிமுத்து தத்தளித்தார். மேல் துண்டை எடுத்து அழுகை வெடித்து வருகிற வாய்க்குள் திணிக்கிறார். முதுகு குலுங்க அழுகிறார். அறுபதுக்கும் மேலாக வயதான பெரிய மலை அது. அந்த மலையின் அழுகையில், குடும்பமே நடுங்கியதிர்கிறது.

கொஞ்சநாளாகவே தேனம்மா ஆச்சி மேல் குடும்பத்திலுள்ள எல்லாருக்கும் ஒரு சலிப்பு வந்துவிட்டது. அந்தப் பாசக்காரி மேல், லேசுமாசான வெறுப்பு வரத் துவங்கிவிட்டது.

''சாகமாட்டாம, இந்தக் கெழடி கெடந்து நம்ம உசுரை வாங்குதே...'' என்று ஆள் ஆளுக்கு நினைக்கவும், முணுமுணுக்கவும் ஆரம்பித்துவிட்டனர்.

''நம்ம உசுரை கொத்திப்புடுங் குதுக்குன்னே... இந்த உசுரை எடுக்காமப் போட்டு, கூத்துவன் கூத்துகட்டி கொடுமை பண்ணுதான்!''

''எங்கெங்கேயோ என்னென்னமோ நடந்து சின்னஞ்சிறுசுக உசுரையெல்லாம் உருவிக்கிட்டுப் போற கூத்துவன், இந்த வங்கெழடி ஓலையை மட்டும் கிழிக்காம... எங்கனேயோ தொலைச்சுட்டான்...''

அரசல்புரசலாக சத்தமில்     லாமல் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர். இத்தனைக்கும் தேனம்மா ஆச்சி, யாருக்கும் எந்தத் தொல்லையும் தராதவள். பீ, மூத்திரம் அள்ளுகிற வேலைகூட தர மாட்டாள். வயது எம்பத்திநாலுக்கும் மேலிருக்கும். சதையில்லாத வெற்றுத் தொலியில் வாழ்நாள் பொழுதுகளைப் போல சுருக்கக் கோடுகள். குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருப்பாள். மொத்த உடம்பும் கூடைச்சாணியாக முழங்கால் மட்டத்துக்குள் முடங்கிக் கிடக்கும். தொலி மட்டுமேயுள்ள எலும்பாக இருக்கிற கைகளால் தரை தடவித் தரை தடவி... கையின் ஊன்றிய பலத்தில் உடம்பை இழுத்துச் சென்று, தவழ்ந்து தவழ்ந்து போய் கழிவு தண்ணீர் போகிற கல்வாய்க்காலில் 'ஒண்ணுக்கு’ இருப்பாள். 'ரெண்டுக்கும்’ அப்படித்தான்.

யாருக்கும் எந்த இடைஞ்சலும் தராமல், எவருக்கும் பாரமாக இல்லாமல் இருக்கிற ஆச்சி, ரொம்ப ரொம்பப் பாசக்காரி. எல்லார் மேலேயும் உயிரையே வைத்திருப்பாள். ஒவ்வொருத்தர் மேலேயும் தனி அக்கறை வைத்திருப்பாள். யாருக்கும் எதுவும் நடந்துவிட்டால், உயிர் துடிப்பாள். மொத்தக் குடும்பத்தினரையும் உற்று உற்று கவனிப்பாள். குடும்பத்தின் சிறுசிறு அசைவுகள், அணு அணுவான சலனங்கள் சகலத்தையும் கண் கொத்திப் பாம்பாகக் கண்காணிப்பாள். 'எங்கேயாச்சும் எந்தத் தவறும் நடந்துரக் கூடாதே’ என்கிற பயப்பதற்றம். 'யாருக்கும் எதுவும் நேர்ந்துவிடக் கூடாதே’ என்கிற பாசப்பதைப்பு.

வேகாத கட்டை

'நமக்கென்ன’ என்று ஒதுங்கி முடங்கிக் கிடக்க மாட்டாள். என்ன ஏது என்று கேட்பாள். கேள்விமேல் கேள்விகள் கேட்பாள். விடாமல், விசாரிப்பாள்.

அது மற்றவர்களுக்கு நச்சரிப்பாகத் தோன்றும். வேண்டாத விசாரிப்பாக, தேவையற்ற கேள்வியாகத் தொல்லை தரும். தொணதொணப்பாக மனசுக்குப்படும்.

''புஞ்சைக்குப் போன மாரிமுத்து வந்துட்டானா?''

மருமகள் பழநியம்மாளுக்கு வயது அறுபதைத் தொடும். அத்தையின் 'நைய், நைய்’ விசாரிப்பு, கடுப்பைத் தரும். வெறுப்பில் ஒற்றைச் சொல்லாக பதில் தருவாள்.

''இன்னும் வரல்லே...''

''அப்பதையே, மதியம் திரும்பியிருச்சு. பொழுதுக்கால் மேக்கே சரிஞ்சிருச்சு. இன்னுமா, கஞ்சி குடிக்க வரலே?''

''பசிச்சாத்தான், வீடுதேடி வருவாகள்லே?''

''வெறுங்கொடலை வேகவைச்சுக்கிட்டு, வேலைசோலி பாத்தா... கட்டை என்னத்துக்காகும்?''

கேள்வியிலிருந்து கேள்வியாகப் பாய்ந்துவர வர, பழநியம்மாளுக்கு 'பற்றி’க் கொண்டு வந்தது. மனசுக்கு அச்சலாத்தியாக இருக்கும். மனசின் கொதி நினைவுகள் பல திசைகளில் தெறித்துச் சிதறும்.

'வாயை வெச்சுக்கிட்டு, செவனேன்னு கிடக்கலாம்லே? வீட்லே கெடக்குற கெழடிக்கு, வாய் சும்மா இருக்க மாட்டேங்குது. கஞ்சி குடிக்க வராத மகனைப் போய், கூட்டிட்டு வந்துரவா போகுது? தொணதொணன்னு என்னத்தையாச்சும் கேட்டுக் கேட்டு ஜீவனைப் புடுங்குது’ என்று எரிச்சலும் சலிப்புமாக ஓடுகிற எண்ணங்களின் தகிப்பு, எடுத்தெறிந்து வீசுகிற வார்த்தைகளில் சுடுமுகம் காட்டும். அதை தேனம்மையும் மனசால் தொட்டுணர்வாள். ஆகாய மனப்பாசத்தால் அதைச் சகித்துக் கொள்வாள்.

'பாவம், அவளுக்கு எம்புட்டு அலப்பரைகளோ’ என்று மருமகளை நியாயப்படுத்திக் கொள்வாள்.

''பழநியம்மா... வீட்டுத் துணிமணிகளை தொவைச்சுட்டீயா?''

''இன்னும் இல்லே...''

''சோப்பு பவுடரு போட்டு வாளித் தண்ணியிலே துணிகளை ஊற வைச்சுட்டீயா?''

''இல்லே...''

''சாயந்தரமாச்சுன்னா... மழை தண்ணி வெரட்டிக்கிட்டு வந்துரும்!''

''வந்தா... வரட்டும். நாங்க பாத்துக்கிடுதோம்!''

''காலா காலத்துலே ஊற வைச்சு, தொவைச்சுக் காயப்போட்டீகன்னா... வெயிலுக்குக் காய்ஞ்சிரும். மழை தண்ணி வர்றதுக்குள்ளே, எடுத்து மடிச்சு வைக்கலாம்லே?''

''ம்... ம்... ம்... எங்களுக்குத் தெரியும்...''

எடுத்தெறிந்த மருமகளின் எரிச்சலான பதில்களின் வெப்பத்தினை உணர்கிற தேனம்மா ஆச்சி. வெப்பத்தை வெறுப்பின் முகமாக எடுத்துக் கொள்ளாத பாச மனசு ஆச்சிக்கு. எதற்குள்ளும் கல்மிஷத்தைத் தேடாத பரந்த மனாகாயம். குத்தலான சொல்லைக் கூட, குத்திய முள்ளைப் பிடுங்கி தூரப் போடுகிற மாதிரி பொருட்படுத்தாமல், ஒதுக்கிவிட்டு சிரிக்கிற மன சொந்தக்காரி. மகா பொறுமைக்காரி. மகா நிதானம்.

அறுபதைத் தாண்டி நாலைந்து வயதாகிவிட்டது, மகனுக்கு. மாரிமுத்து இவள் வயிற்றில் பிறந்த நாலாவது பிள்ளை. முந்தையது மூன்றும் பிறந்து பிறந்து சாக, முதன் முதலில் மடி தங்கி பால் குடித்தவன் என்பதால், இவன் மேல் அவளுக்கு எல்லையில்லாப் பாசம். தாய்ப்பாசமே தன்னிகரற்றது. அதிலும் தேனம்மையின் பிள்ளைப் பாசம், உயிருடன் பின்னிக்கலந்த பெரும்பாசம். அடி மனசு, மேல் மனசு, ஆழ் மனசு எல்லாவற்றிலும் ரத்தமெனப் பரவிக் கிடக்கிற மாரிமுத்து. இவன்மேல் தேனம்மாவுக்கு பாசம் என்றால் பாசம், அப்படியொரு தனிப்பாசம்.

அவன் சிறிசாய் இருந்தபோதும், கிழடாகிப் போன இப்போதும், அவனை அவள் கண்ணுக்குள் உயிரென வைத்துப் பாதுகாப்பாள். தூசியோ துரும்போ பிள்ளைமேல் படவிட மாட்டாள். மகனுக்கு காய்ச்சல் மண்டையடி என்று வந்துவிட்டால், அம்புட்டுத்தான். துடித்துப் போவாள், தேனம்மா. உயிரை உள்ளங்காலில் வைத்து ஓடித்திரிவாள். அதைப் பாத்துரட்டா, இந்த மருந்தை அரைச்சு தந்துரட்டா’ என்று மனப்பரபரப்போடு அலை பாய்ந்து வருவாள்.

மாரிமுத்து மேல் தனிப் பாசம் என்பது துல்லியமான சக்தியம். அதே அளவுக்கு... அந்த ஆகாய மனசு, சகலர் மீது பாசத்துடன் தழுவியணைக்கும். இயல்பாகவே பாச மனசுக்காரி. எல்லார் மேலும் உயிரை வைத்திருப்பாள்.

புருஷனுக்கு சமதையாக காடுகரைகளில் பாடுபடுவாள். கமலை வடம்பிடித்து, கூனைத் தண்ணீர் இறைப்பாள். கலப்பை பிடித்து புஞ்சையை உழுவாள். ஆம்பளையாள் மாதிரி. மம்பட்டியும் கூடையுமாக குப்பையை வெட்டி வெட்டி அள்ளி, வண்டியில் பாரம் ஏற்றுவாள். உடம்பைக் கடம்பாகக் கடைந்து, காடுகரையே கதியென்று கிடந்து, வன்பாடுபட்டு, வெயில் மழை பாராமல் வேர்வை கொட்டி, உழைத்து உழைத்துக் குருவி சேர்க்கிற மாதிரி துட்டு சேர்த்துத்தான்... மேலக்காடு புஞ்சையை விலைக்கு வாங்கினாள். பூவரசமரத்துப் புஞ்சையை வாங்கிப் போட்டாள். சமுத்திரப் பரப்பாக - நற்சதுக்கமாக - கரிசல் காடு பதினாலு குறுக்கம், வாங்கிப் போட்டாள். தொழு நிறைய எருமைகள், பசுமாடுகள், பெரிய நீளமான வீடு போல கூளப்படப்பு.

வேகாத கட்டை

சீதேவி சிரித்து, சீரகச்சம்பா பொங்கித்தட்டி வீடெல்லாம் லட்சுமியின் பிரகாசிப்பு, மாரிமுத்து இன்றைக்கு ஊரிலேயே செழிப்பான, செருக்கான - சம்சாரியாக இருக்கிறார் என்றால், இப்ப இவர் வைத்திருக்கிற சம்பாத்தியம், சொத்து பத்து எல்லாமே தேனம்மா வடித்த வேர்வையில் வந்தது.

மூணு பொண்ணுகளுக்கும் ஒரு குறை சொல்ல இடம் வைக்காமல் நகை நட்டு செய்து போட்டு கல்யாணம் 'மூய்த்து’ வைத்தாள். எல்லாச் சீர்வரிசைகளும், செய்முறைகளும், பிள்ளைப்பேறு காலங்களும் குறைவில்லாமல் செய்தாலும், ஒரு சல்லிக்காசுக் கடன் கூட சேர்த்து வைக்கவில்லை, மாரிமுத்துவுக்கு.

அய்யா சாகிறபோது, மாரிமுத்துவுக்கு பதினெட்டு வயது தங்கச்சிகளெல்லாம் நண்டும் நசுக்குகளுமாக. வெள்ளைச் சேலையும் வேர்வைப் பிசுக்குமாய் ஒத்தை மனுசியாக மல்லுக்கட்டிப் புரண்டாள், வாழ்க்கையுடன். ஜெயிச்சதெல்லாம், மாரிமுத்து சொத்துகளாக, இப்போது.

மாரிமுத்து கல்யாணமும், பழநியம்மாளின் வருகையும் தேனம்மா விருப்பப்படிதான் நடந்தது. நடத்தி வைத்தது அவளது முயற்சியினால்தான். மாரிமுத்துவுக்குப் பிறந்த பயல்கள் ரெண்டு பேர். பேரன்மார்களின் கல்யாணமும் இவள் ஏற்பாட்டில், இஷ்டப்படித்தான் பெண் தேடல்கள், பேச்சு வார்த்தைகள், நகைநட்டு பேசியது எல்லாமே தேனம்மைதான். கல்யாணம் எங்கே வைத்து, பந்தல்கால் என்றைக்கு ஊன்ற, பந்தியை எங்கே வைப்பது, யார் யாரைக் கூப்பிடுவது எல்லாமே தேனம்மை ஏற்பாட்டின்படிதான். அவள் முடிவுப்படிதான்.

மாரிமுத்துவிடம் வந்து, யார் என்ன கேட்டாலும் ''அம்மாகிட்டே போய்ப் பாருங்க...'' என்று கவலையே படாமல் தள்ளிவிட்டு விடுவார்.

சொந்த யோசனைப்படியே எல்லா ஏற்பாடுகள் செய்தாலும், மருமகள் பழநியம்மாளிடம் ஒரு வார்த்தை கலந்து பேசி, சம்மதம் வாங்காமல் செய்ய மாட்டாள்.

சகலர் மேலும் ஈரக்காற்றாக பாசத்தூறலால் தழுவுகிற தேனம்மா, சகலருடைய மன உணர்வுகளையும் மதித்து, அதற்குரிய மரியாதையும் தருவாள்.

அதனால்தான் - மாரிமுத்துவின் குடும்பம், அவரது மகன்களின் குடும்பங்கள், பேரன் பேத்திகள் என்று எல்லாருமே ஒரே வீட்டில், ஒரே உலையில் ஆக்கி அவித்து உண்டு உறங்கி, கூட்டுக் குடும்பமாக சேர்ந்திருக்கிறார்கள். இதுவும் தேனம்மாவின் ஏற்பாடுதான்.

''ஒத்தைக்குச்சியாக இருந்தா... தேக்கங்குச்சியாயிருந்தாக் கூட சடக்குன்னு ஒடிச்சிரலாம். கட்டுக்குச்சியாயிருந்தா, அகத்திக் குச்சியாயிருந்தாக் கூட எந்த வில்லாதி வில்லனாலும் ஒடிச்சிர முடியாதுடா... ஒண்ணாயிருந்தா, நாம பலம்; ஒடைஞ்சி தனித்தனியாயிருந்தா, எதிரிபலம்''

இது எங்கு படித்தாளோ, எந்த வானொலியில் கேட்டாளோ... வீடு புராவும் தேனம்மை வானொலி எந்நேரமும் இதை ஒலிபரப்பிக் கொண்டேயிருக்கும்.

மாரிமுத்து குடும்பம் கூட்டுக் குடும்பமாக இருப்பதைப் பார்த்து இந்த ஊர் ஜனம் மட்டுமல்ல, சுத்துப்பட்டி பத்து ஊர் ஜனமும் ஆச்சரியத்தில் அசந்து போய் பாராட்டிப் பேசுவார்கள்.

''இந்தக் கலிகாலத்துலேயும் இப்படியொரு கூட்டுக் குடும்பமா?'' என்று வியந்து வியந்து மாய்ந்து போகிற சகலரும் இதையே ஒரு பேச்சாக அடிக்கடி பேசி பிரமிப்பார்கள்.

''ரெண்டு ஆம்பளைப் பயகளும் கல்யாணம், புள்ளை குட்டியான பிறகும் ஒண்ணா இருக்குறதுங்குறதை நம்பவே முடியலே''

''ரெண்டு பயகளை வுட்டுத்தள்ளு... எங்கிருந்தோ வந்து சேர்ந்த ரெண்டு மருமக்கமாருக ஒரே வீட்டுக்குள்ளே ஒத்துமையாயிருக்குறது... அதிசயமில்லே?''

''எல்லாரும் மாரிமுத்து மாமா, பழநியம்மா அத்தை பேச்சை மதிச்சு நடந்துக்கிறது, எம்புட்டுப் பெரிய வெஷயம்!''

''சண்டை சத்தம், கோபதாபம், வம்புவழக்கு, நாம் பெருசு நீ பெருசுங்குற வீம்பு வெறைப்பு எதுவுமே வர்றதில்லியா?''

''வீடுன்னு இருந்தா விரிசல் வராமலாயிருக்கும்? வர்ற விரிசலை அப்பப்ப பேசி அடைச்சிகுறதுக்கு தேனம்மா ஆச்சி இருக்காகள்லே?''

''எல்லாமே அந்த மகராசி தேனம்மா ஆச்சி புண்ணியத்தாலேதான். அந்த ஆலமரம்தான், இம்புட்டுப் பறவைகளையும் ஒரு மரத்துப் பறவைகளாக உக்கார வெச்சிருக்கு.''

கூட்டுக் குடும்பம் என்ற பேரதிசயம் எல்லாரையும் வியந்து பாராட்ட வைத்திருக்கிறது. அதே மாதிரி சில பேர்களை பொறாமைப்படவும் வைத்திருக்கிறது.

''சிந்தாம செதறாம... இப்படியே இந்த வீடு இருந்துருமா?''

''நாம நம்ம காலத்துலே பாக்காத கூட்டுக் குடும்பங்களா? அதுகளே ஒடைஞ்சு, சிதறி, கந்து கந்தா பிய்ஞ்சு போச்சு. இதெல்லாம் எம்மாத்திரம்?''

''கெழடி கண்ணெதிரிலேயே இந்த வீடு, தனித்தனி அடுப்பு வைக்கும், பாரு...''

இப்படிப்பட்ட பேச்சுகளும் ஊரின் இண்டுஇடுக்குகளில் நடக்கத்தான் செய்யும். மனுச மக்கள் வாழ்கிற வீட்டுக்குள்ளேயே... தேள், நட்டுவாக்கலி இருக்கிறதில்லையா? அப்படித்தான் இதுகளும்.

இதுகளையும் யோசனையில் யூகித்து வைத்திருந்தாள், தேனம்மை ஆச்சி. யாருடைய கொள்ளிக் கண்பட்டு விடுமோ என்ற நிரந்தர பயம் அவளை வதைக்கும். கண்கொத்திப் பாம்பாக எச்சரிக்கையாக கண்காணிப்பாள். பேரன்மார்கள், அவர்களது பெஞ்சாதிகள், பிள்ளைகளிடம் கட்டுக்குச்சி கதையை ஓயாமல் சொல்லுவாள். சொல்லிச் சொல்லி மனசில் பதிப்பாள்.

எல்லாரும் படுத்த பிறகு, கடைசியில் முடங்குகிறவள் பழநியம்மா.

கனிவும் அக்கறையுமாக மருமகளிடம் சொல்வாள், தேனம்மா.

''சூடம் கொளுத்தி தெருவாசல்லே வெச்சுட்டுப் படும்மா!'' தான் சொன்ன உத்தரவை தனக்குத்தானே நியாயப்படுத்திக் கொள்கிற மாதிரி பேசிக் கொள்வாள்.

''ஊர் கண்ணோ... பேய் கண்ணோன்னு சொல்லுவாக. எந்தக் கண்ணுலே எந்தக் கொள்ளிப் பாம்பு ஒளிஞ்சிருக்கோ? யாரு கண்டது? எதுக்கும் சூடம் கொளுத்தி, வாசல்லே வெச்சிட்டு கதவைப் பூட்டுனா... எல்லா திருஷ்டியும் கழிஞ்சிரும்...''

அந்த வீட்டின் எல்லாமும் தேனம்மா மேற்பார்வையில்தான் நடந்து வந்தது, நாலைந்து வருஷங்களுக்கு முன்பு வரை.

வேகாத கட்டை

உத்தரவுகள் போடுவது நின்ற பின்பும் கண்காணிப்புகளும், விசாரிப்புகளும் நிற்கவில்லை. பாசமும், அக்கறையும் கேள்விகளாகப் படையெடுக்க...

அவை நச்சரிப்புகளாகவும், தொண தொணப்புகளாகவும், 'உயிர் பிடுங்கல்’களுமாய் தோற்றமளிக்க... சலிப்பும், வெறுப்பும், சிடுசிடுப்புமாக தீப்பொறிகள் பறந்தாலும், அவற்றையெல்லாம் பூப்பந்துகளாக எடுத்துக்கொள்கிற பக்குவமும் ஆகாய அகலமனசும் தேனம்மைக்கு.

முதுமை, அவளை வெகுவாகத் தளர்த்திவிட்டது. எம்பத்திஐந்துக்கும் மேலாகிற வயது. உடம்பு சிறுத்து, குறுகி, கூடைச் சாணியை கொட்டி வைத்த மாதிரி... சதைக் கோளமாகிவிட்டது.

கால்வாய்க்காலுக்கு கைகளை ஊன்றி ஊன்றித் தவழ்வாள், தேனம்மா. அப்போது எப்படியோ தடுமாறி, ஒரு கையின் மணிக்கட்டு முறிந்து, மொத்த உடம்பும் இடது பக்கமாக சாய்ந்து, சரிந்து, உருண்டு...

இப்ப, சாகக்கிடக்கிற தேனம்மா. நெஞ்சுக்கூட்டுக்குள் கலகலக்கிற சளி. தொண்டைக்கும் நெஞ்சுக்குழிக்கும் இழுத்துக் கொண்டிருக்கிற உயிர்க்கயிறு. உணர்வழியாத விழிப்பு நிலை. சட்டடியாக சாய்ந்துகிடக்கிற தேனம்மை.

சாகக் கிடக்கிற தேனம்மையின் கடைசி ஆசையைக் கேட்டவுடன், குடும்பமே திகைத்துத் திணறுகிறது. மாரிமுத்து குலுங்கி குலுங்கியழுகிறார்.

மாரிமுத்து நாலாவது பிள்ளையாகப் பிறந்து, முதல் பிள்ளையாக மடி தங்கி பால் குடித்ததால், தேனம்மைக்கு தனிப்பாசம். மாரிமுத்து மகளாக வந்து கடைக்குட்டியாகப் பிறந்த தேன்கனி மீது, மாரிமுத்துவுக்கு எல்லையில்லாப் பாசம்.

அம்மாவைப் போலிருப்பதாக... ஒரு பிரமை. பிள்ளைப் பேறு சமயத்தின் போது, பிறந்த பிள்ளையைப் பார்க்க வந்திருந்த பெண்கள் எல்லாருமே சொல்லி வைத்த மாதிரி ஆச்சரியப்பட்டார்கள்.

'அச்சு அசலா தேனம்மை ஆச்சியை உரிச்சுக்கிட்டு வந்த மாதிரி, புள்ளே முகச்சாயல் இருக்கு...''

''அப்படியே ஆச்சியோட ஜாடை அமைஞ்சிருக்கு!''

ஆள் ஆளுக்கு இதே வார்த்தைகளை வேறு வேறு விதத்தில் சொல்ல, மாரிமுத்துவின் மனப்பிரமை, கண் கண்ட உண்மையாகத் தோன்ற ஆரம்பித்தது.

பெண் பிள்ளை பிறந்த வீடு, துக்க வீடு போல ஒரு மௌன இறுக்கம் நிலவும். மாரிமுத்து சந்தோஷத்தில் கும்மாளம் போட்டார். பெப்பர் மிட்டாய் வாங்கி பெண்கள் சகலருக்கும் 'செலவு’ செய்தார். இனிப்பு வழங்கி மனமகிழ்ச்சியைக் கொண்டாடினார்.

அம்மா பெயரையே வைத்தார், 'தேன்கனி’யென்று. தேன்கனியை பொன்னோ பூவோ என்று பொத்திப் பொத்தி வளர்த்தார். அவள் மீது அவருக்கு தனிப்பாசம்.

எத்தனை பெரிய நெருக்கடியான சிக்கலில் மாட்டியிருக்கிற குழப்பமான தருணத்தில் கூட, தேன்கனியை பார்த்தால், முகம் மலர்ந்துவிடுவார். மனசெல்லாம் பூக்களின் புன்னகை கண்ணில் அதன் மின்னல் பளிச்சிடும்.

தேனம்மைக்கும் தேன்கனியென்றால் உயிர். பேரன்மார்கள், மகள் வழிப் பேரன்மார்கள் பேத்திமார்களை பாசமாகக் கொண்டாடினாலும், தேன்கனி என்றால் தனிப்பிரியம்.

அவளுக்கு தனது பேத்தி, அய்யாவை உரித்துக்கொண்டு வந்து பிறந்திருப்பதாக ஒரு நினைப்பு. செவி மடல் சுருளின் நெளிவும், நாடி நுனியமைப்பும், மேலுதடு தூக்கலும் அப்படியே அய்யாவை ஞாபகப்படுத்தியது, தேனம்மைக்கு.

அய்யா சாயல் என்ற நினைப்பு மின்னல் வெட்டிய கணத்திலேயே, பேத்தி அவளது உயிராகிவிட்டாள். போதாக்குறைக்கு பெயரும் அவள் பெயர். கொண்டாடிக் குதூகலித்துக் கூத்தாடினாள். பால் குடித்த நேரம் மட்டுமே பழநியம்மாவிடம். மிச்ச நேரமெல்லாம் தேன்கனி தேனம்மையின் தேகச்சூட்டின் கதகதப்பை ஸ்பரிசித்தே வளர்ந்தாள்.

தேனம்மா, தேன்கனிக்கு வண்டி வண்டியாகக் கதைகள் சொன்னாள். எல்லாமே, இவள் சின்னப் பிள்ளையாக இருந்தபோது கேட்டு வளர்ந்த கதைகள்.

தேனம்மா நெதம் நெதம் கதை சொல்வாள். எல்லாக் கதைகளிலும் இளவரசி வருவாள். இளவரசி என்றால், பேத்தி மனசுக்குள் தேன்கனி என்று பதியும்.

தேனம்மை சொல்லுகிற கதைகள் யாவற்றிலும் இளவரசி வருவாள். இளவரசிக்கு ஏகப்பட்ட சோதனைகள் வரும். இளவரசன் குதிரையில் வந்து காப்பாற்ற வருவான். அவனுக்கு ஆயிரத்தெட்டு தடைகள் அதையெல்லாம் தாண்டி வந்து இளவரசியைக் காப்பாற்றி விடுவான். ஈனாப்பூச்சிகள் வரும். மாயக்கிழவி வருவாள். கொம்பு முளைத்த சிங்கம் வரும். பிடரி வளர்ந்த யானை வரும். ராட்சஸ சிலந்தி வரும். முதலையை முழுங்குகிற அசுரப் பல்லி வரும். ஆள் உயரத்தில் தேள் வரும்.

எல்லாவற்றையும் தாண்டி குதிரையில் வருகிற இளவரசன் இளவரசியை சிறை மீட்டு, காப்பாற்றி விடுவான்.

தேன்கனி... 'ஹ...ப்பா...டா’ என்பாள்.

தேவலோகக் கன்னியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட இளவரசன் கதை சொல்வாள். பத்து நாளைக்குக் கதை, தொடரும். பத்தாம் நாள் தேவலோகக் கன்னியின் மடியில் இளவரசன் தலை வைத்திருந்து ஆனந்தப்படுவான்.

தேனம்மாவிடம் கதை கேட்டு வளர்ந்தவள். மாரிமுத்துவின் தனிப்பாசத்தில் திளைத்தவள். 'கடைக்குட்டி’ என்பதால் குடும்பத்தால் கொண்டாடப்பட்டவள். வளர்ந்த பிறகு...

ஓர் எளிய சாதி இளவரசனின் குதிரையில் ஏறிப் போயே போய்விட்டாள். இடி விழுந்த மரமாக குடும்பம், கருகிப் போயிற்று. ஊர் கூடி முடிவெடுத்து, கட்டுப்பாடு போட்டது.

''தேன்கனி சாதியை கேவலப்படுத்            திட்டா. சாதியோட மானமரியாதையை கால்லே போட்டு மிதிச்சுட்டா. அவளோட நம்ம சாதியான் எவனும் எந்த சங்காத்தமும் வெச்சுக்கிடக் கூடாது. அதைமீறி யாராச்சும் அவ  கூடப் பேசுனா - பழகுனா - கொண்டாடுனா அவுகளை ஊரைவிட்டே தள்ளி வெச்சிருவோம்.''

ஊர்க்கட்டுப்பாடு போடுவதற்கு முன்பே - அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன மாரிமுத்து, அவமானம் தாளாமல் வீட்டுக்குள் புதைந்து போனார். யாரிடமும் எந்த வார்த்தையும் பேசவில்லை. அரண்டு போன மனநிலை. 'நாண்டுக்கிட்டு செத்துரலாமா’ என்ற எண்ணம் வந்து வந்து முன் நின்றது.

மகன்கள், மற்ற பேரன் பேத்திகள், மருமக்கள், அம்மா தேனம்மை இவர்களை நினைத்துத்தான் அந்த எண்ணத்தைத் தள்ளி வைத்தார். அவர் மட்டுமல்ல... தேனம்மை உட்பட சகலருமே அவமானத் தீயில் கருகித் தீய்ந்தனர்.

வீடே சீர் குலைந்து சிறப்பழிந்து, உருக்குலைந்து, உள்மனம் பேதலித்து, தடுமாறி தத்தளித்தது.

ஆறு மாதம் ஓடிப்போய்விட்டது. மெள்ளமெள்ள சாம்பல் பூத்து... வெந்து கனிந்த தீக்கட்டையின் கங்கு சன்னஞ்சன்னமாகத் தணிந்து வருகிற

சமயத்தில் -

சாகக் கிடக்கிற தேனம்மை ஆச்சி... கேட்கிற கடைசி ஆசை. அந்த கங்குகளை ஊதித் தீயாக்குகிற இறுதி விருப்பம்.

''எம் பேத்தி தேங்கனியையும், அவளோட மாப்புள்ளையை கூட்டிட்டு வா. நா...ம் பாக்கணும். பாத்துட்டு சாகணும்!''

''அவன்... நம்ம சாதியில்லேம்மா. வேற சாதி. தாழ்ந்த சாதி''

''ஏண்டா... ஒரே சாமி பெத்த புள்ளைகதான், ஒலகம் பூராவும்... எல்லாரும் ஒரே சாதியாத்தானே இருக்கணும்? இதுவே வேற சாதி எங்கேயிருந்து வந்துச்சு? தாழ்ந்த சாதியை யாரு பெத்தது?''

அம்மாவை வெறிக்கிற மாரிமுத்து.

''இல்லேம்மா... ஊர்லே கட்டுப்பாடு. நம்ம குடும்பத்தையே வெலக்கி வெச்சு, வேரறுத்துருவாகம்மா...''

''சாதியிலே மேலே கீழேன்னு சொன்ன ஊரும் சொல்லி வெச்ச மனுசங்களும் நாசமாய்ப் போயிருவாக... சாதியைவுட பாசம்தான் பெருசு, மனுசன்தான் பெரிசுன்னு நாம நம்புவோம்டா... நம்ம குடும்பம் நல்லாயிருக்கும்டா... பாசத்தை அறுத்துட்டு, மனுசத்தனத்தை வுட்டுட்டு... நாம எதைக் கட்டியாளப் போறோம்டா? எதை வெச்சு வாழப் போறோம்டா? நாலு ஊரு தள்ளியிருக்குற ஊருலே இருக்குற எம் பேத்தியையும், பேத்தி மாப்புள்ளையையும் பாக்காம செத்தேன்னா... எங்கட்டை வேகாதுடா...''

தப்பாத உணர்வு நிலையில் தெளிவாகப் பேசுகிற அம்மா குதறிக்குதறி, சிதறிச்சிதறி வார்த்தைகள் ஒலித்தாலும், மனச்சத்தியமாக தெளிவான யோசனை.

அம்மாவின் பிடிவாதம். திரும்பத் திரும்பப் புலம்பிய சத்தம் ''தேங்கனி... தேங்கனி... தேங்கனி'' என்ற இழுவைக் குரலின் சங்கிலிப்பின்னல்கள்.

ஊர்? கட்டுப்பாடு...? ஊருடன் பகைக்கவா? வேருடன் கெடவா? எல்லாவற்றையும் விட பெரிசு மனுசத்தனம் என்று சொல்கிற அம்மா.

ஒரே சாமி பெத்த புள்ளைகள்லே என்ன ஏத்த எறக்கம்னு அம்மா கேட்கிற கேட்கிற கேள்வி. பாசத்தையும் மனுசத்தனத்தையும் எழந்துட்டு, என்னத்தைக் கட்டியாளப் போகிறோம்னு கேள்வி கேட்கிற அம்மா...

நாலு ஊரு தள்ளி இருக்கிற அந்த எளிய சாதி மக்கள் மட்டுமே வாழ்கிற அந்த ஊரை நோக்கிக் காலெடுத்து வைக்கிற மாரிமுத்து மனசுக்குள் -

தெய்வமாக நின்று தெம்பு சொல்கிற தேனம்மா.

சிரிப்பு மன்றம்

கு.ஞானசம்பந்தன்:

வேகாத கட்டை

நான் ஒரு கிராமத்துல பேசிக்கிட்டு இருந்தேன். பேச்சைக்கேட்டு எல்லோருமே விழுந்து விழுந்து சிரிக்குறாங்க. எனக்குப் பயங்கர சந்தோஷம். திடீர்னு ஊர் நாட்டாமையோட சம்சாரக் கிழவி கோபமா வந்து, 'ஏண்டி சிறுக்கிகளா, ஆம்பளை ஒருத்தர் தொண்டை கிழியப் பேசிக்கிட்டு இருக்காரு. நீங்கள்லாம் சிரிக்கிறீங்களா சிரிப்பு...? மரியாதையா வாயைப் பொத்திக்கிட்டு பேச்சை கேட்டுட்டுப் போங்க’னு கத்தித் தீர்த்திடுச்சு. இப்படியும் சில சமயம் ஆயிடுது... என்ன பண்ண?

வேகாத கட்டை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism