Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை - 36

குஜராத்தில் லஞ்சம் இல்லை!கா.பாலமுருகன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

பிரீமியம் ஸ்டோரி
நெடுஞ்சாலை வாழ்க்கை - 36

சேலத்தில் இருந்து புறப்பட்ட பயணத்தின் மூன்றாவது நாள். மஹாராஷ்ட்ரா மாநில எல்லை தாண்டி, குஜராத்தில் நுழைந்து, செக்போஸ்ட்டில் சீல் வாங்கிக் கொண்டு புறப்பட்டுவிட்டோம்.

சுதந்திரப் போராட்டக் களத்தில், இந்தியாவின் ஊர்களுக்கு என சில சிறப்புகள் உள்ளன. அப்போது நடந்த போராட்டங்கள் அந்த ஊரின் பெயரைத் தாங்கி நின்றதால், பள்ளி காலத்தில் படித்த வரலாற்றுப் பாடம், ஊரின் பெயரைக் கேட்டதுமே ஞாபகம் வந்துவிடுகிறது. பர்தோலி, சத்யாகிரஹம் போராட்டத்தை சர்தார் வல்லபாய் படேல் முன்னெடுத்த ஊர். அதற்கான அடையாளங்கள் அந்த ஊரில் இல்லை.

அடுத்து, நாங்கள் பயணிக்கும் இந்தச் சாலை, மும்பை அஹமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சூரத் அருகே இணைகிறது. சூரத் புறநகரை அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. இது ஒரு தொழிற்சாலை நகரம் என்பது புகை சூழ் சாலையும், துர்நாற்றமும் சொல்கிறது. அஹமதாபாத் பைபாஸ் சாலையில் நுழையும்போது, அதிகாலை 3 மணிக்கு மேல். பளபளவென விடிந்தபோது ராஜஸ்தான் மாநிலம் நோக்கிச் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது லாரி. உன்ஜா என்ற ஊரில் நுழையும்போது, கமகமவென மணக்க ஆரம்பித்தது. மிகப் பழக்கமான வாசனையாக இருக்கிறதே என மணியிடம் விசாரித்தேன். இந்த ஊர் சீரக விளைச்சலுக்குப் பெயர் பெற்ற ஊர். சீரக மார்க்கெட்டும் இங்கேதான் இருக்கிறது. இங்கிருந்துதான் இந்தியா முழுவதும் சீரகம் சப்ளை ஆகிறது என்று சொல்லிக்கொண்டே வந்தவர், எதிரே வந்த லாரியைப் பார்த்து ஓரங்கட்டினார். லாரியை விட்டு இறங்கி உற்சாகமாக சாலையின் எதிர்ப்பக்கம் நின்ற அந்த லாரியை நோக்கிச் சென்றார். பரமேஸ்வரனிடம் யார் என்று விசாரித்தேன். ‘‘நீங்களே போய் விசாரிங்க... இன்ட்ரஸ்ட்டிங் தகவல் கிடைக்கும்’’ எனக் கண்ணடித்தார்.

ஆர்வமாக நானும் ரமேஷும் சாலையை கிராஸ் செய்தோம். மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்த மணி, நம்மை அவரிடம் அறிமுகம் செய்துவிட்டு நம்மிடம், ‘‘சார், இவர் பேரு கண்ணன். என்னோட குரு இவர்தான். இவர்கிட்டதான் மூணு வருஷம் கிளீனரா ஓடுனேன். எனக்கு லாரி ஓட்டச் சொல்லிக் கொடுத்தது இவர்தான்!’’ என்றார் மணி உற்சாகமாக. அந்த கண்ணனுடன் வருங்கால டிரைவர் ஒருவர் இருந்தது ஆச்சரியம். ஏனென்றால், நாம் வழியில் சந்தித்த எந்த லாரியிலும் கிளீனரே இல்லை. கண்ணனுக்கு மாற்று டிரைவரும் இல்லை. கிளீனருடன் லூதியானாவில் லோடு ஏற்றிக்கொண்டு சேலம் திரும்பிக்கொண்டிருக்கிறார். ‘‘ஏன் மாற்று டிரைவர் இல்லாமல் வந்திருக்கிறீர்கள்?’’ என்று கண்ணனிடம் கேட்டேன். ‘‘இப்போ கிடைக்கிற வாடகைக்கு ரெண்டு டிரைவருக்கு கட்டுபடி ஆகாது. அதனாலதான் சிங்கிளா ஓட்டுறேன். என்ன... ரெண்டு நாள் கூடுதலா ஆகும்; பரவாயில்லை’’ என்றார் சிரித்துக்கொண்டே. அவரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.

குஜராத் மாநிலத்தில் எந்த இடத்திலும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை என்பது எனக்கு அதிர்ச்சி அளித்தது. மணியிடம் கேட்டபோது, ‘‘நான் கிளீனராக இருந்த காலத்தில் இருந்தே குஜராத் இப்படித்தான். பகல் வேளையில் அஹமதாபாத் நகருக்குள் சென்றால் மட்டுமே கேஸ் போடுவார்கள். மற்றபடி எந்த இடத்திலும் லாரிகளுக்குப் பிரச்னை இல்லை’’ என்றார் மணி.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி என்ற ஊரை நோக்கிச் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தோம். சரியாக குஜராத் மாநில எல்லை முடியும் இடத்தில் ஆரம்பமாகிறது மவுன்ட் அபு என்ற பிரபலமான மலைத் தொடர். ராஜஸ்தானில் உள்ள மலை வாசஸ்தலம் இந்த மவுன்ட் அபு. பல கிலோ மீட்டர் நீளத்துக்கு அந்த மலைத் தொடரை பக்கவாட்டில் கடந்து சென்றுகொண்டிருந்தோம். குஜராத், ராஜஸ்தானில் சாலைகள் எல்லாம் பக்காவாக இருக்கின்றன

சிரோகி என்ற ஊரைக் கடந்ததுமே எதிரே தென்பட்ட வறண்ட மலையைக் காட்டினார் மணி. இந்த மலையில்தான் இப்போது சுரங்கம் வெட்டி இருக்கிறார்கள் என்றதும் கேமராவுடன் ஆயத்தமானார் ரமேஷ். பிரம்மாண்டமான மலைத் தொடரைக் குறுக்காகக் குடைந்த அந்தச் சுரங்கம், ஒரு கி.மீ தூரத்துக்கும் மேல் நீண்டது. உள்ளே நுழைந்து வெளியேறுவதற்கு ஒருவித பய உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 36

பாலியை அடைந்தபோது மதியத்துக்கு மேல் ஆகிவிட்டது. மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஜோத்பூர் சாலையில் சென்றுகொண்டிருந்தோம். அதுவரை ஓரளவு பசுமையாகக் காணப்பட்ட நிலப்பரப்பு, கொஞ்சம் கொஞ்சமாக வெளிர்நிறமாக மாறத் துவங்கி இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வறண்ட மணல் படுகைபோலக் காட்சியளிக்க... கண்கள் கூசத் துவங்கின. ஆனாலும், ஆங்காங்கே விவசாயம், கால்நடைகள் என நிலம் உயிர்ப்புடன் இருப்பதை உணர முடிந்தது. பக்கவாட்டில் சட்டென நீர் கால்வாய் ஒன்று உடன் வர... ஆச்சரியமாக இருந்தது. லாரியை நிறுத்தி சமையல் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தனர் இருவரும்.

ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்று, ஜோத்பூர். பழைமையான கோட்டைகள்,  நூற்பாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகரம் இது. இரவு 10 மணி இருக்கும்போது, ஜோத்பூர் நகர எல்லையை அடைந்தோம். ஆனால், லாரியை ஓரங்கட்டிய மணி, ‘‘துணைக்கு ஏதாவது லாரிகள் வரட்டும் போகலாம்’’ எனக் காத்திருக்க ஆரம்பித்தார். நகருக்குள் செல்வதற்கு ஏன் துணைக்கு ஆள் தேட வேண்டும் என்றபோது, ‘‘வழிப்பறிக்காரர்களிடம் சிக்காமல் இருக்கத்தான்!’’ என்றபோது அதிர்ச்சியாக இருந்தது.

‘‘இங்கேயும் அஹமதுநகர் டெக்னிக். ‘ஏன்டா என் வண்டிய இடிச்சுட்டு நிக்காமப் போற...’ என்றுதான் வழிப்பறிக்கான உரையாடல் துவங்கும். நான் ஒருமுறை 800 ரூபாய் தண்டம் கொடுத்துள்ளேன். சிலருக்குப் பணம் கொடுத்த பின்பு போனஸாக அடியும் கிடைத்திருக்கிறது’’ என்றார் பரமேஸ்வரன் சிரித்துக்கொண்டே. ‘‘நகருக்குள் செல்லாமல் புறநகர் வழியாகவே செல்ல ஒரு சாலை இருக்கிறது. அதிலும் கூட்டாகச் சென்றால்தான் வழிப்பறிக்காரர்களிடம் தப்பிக்க முடியும்’’ என்றார் மணி.

அரைமணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு லாரிகள் வந்தன. தமிழக லாரி ஒன்று ஓரங்கட்டி இருப்பதைப் பார்த்து அவர்களே நின்றார்கள். மணி அவர்களிடம் சென்று பேசினார். சில நிமிடங்களில் மூன்று லாரிகளும் அணிவகுக்க ஆரம்பித்தன. பிரச்னையான இடம் என்றாலே எனக்குத் தூக்கம் காணாமல் போய்விடுகிறது. இந்த கிராமச் சாலையின் வழியாக ஜோத்பூரின் மறுமுனையை அடைந்து அங்கிருந்து ஹரியானா, பஞ்சாப் நோக்கிச் செல்லும் சாலையில் இணைய வேண்டும். சுமார் இரண்டு மணி நேரப் பயணத்துக்குப் பின்பு அந்தச் சாலையைப் பிடித்தோம். உடன் வந்த லாரிகளில் ஒன்று பின்தங்கிவிட்டது. இரு லாரிகளும் அந்த இரவில் தனியாகச் சென்றுகொண்டிருப்பதை உணர முடிந்தது. ‘‘லூதியானா வரை செல்லும் அந்த லாரியை முடியும் வரை தொடரலாம்’’ என்றார் மணி.

நாகூர், சுஜன்கர் ஆகிய ஊர்களைக் கடந்தபோது விடிய ஆரம்பித்திருந்தது. உடன் வந்த லாரி டிரைவரிடம் டீ குடிக்க நிறுத்துமாறு சொன்னபோது, ‘‘கொஞ்சம் தள்ளி நிறுத்துகிறேன்’’ என்றவர், நீர் இருக்கும் டீக்கடையாகப் பார்த்து நிறுத்தினார். அனைவரும் பல் துலக்கி, முகம் கழுவி டீ குடித்து முடித்ததும், திருச்சியைச் சேர்ந்த அந்த டிரைவர், ‘‘இனி பிரச்னை இல்லை; நீங்கள் செல்லுங்கள். நான் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வருகிறேன்’’ என்று எங்களுக்கு விடை கொடுத்து அனுப்பிவைத்தார்.

 - (நெடுஞ்சாலை நீளும்)  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு