Published:Updated:

கள்ளந்திரி

கள்ளந்திரி
பிரீமியம் ஸ்டோரி
கள்ளந்திரி

சிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம்

கள்ளந்திரி

சிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
கள்ளந்திரி
பிரீமியம் ஸ்டோரி
கள்ளந்திரி
கள்ளந்திரி

“ச்சே... ப்ச்ச்ச்... ச்சே...”

மிகுந்த கோபமும் ஆற்றாமையும் அழுகையும் கலந்து இப்படிச் சொல்லிக்கொண்டே இருந்தார் மூர்த்தி அண்ணன்.

நமக்கு நேரடியாக பேரிடியே விழுந்தாலும் பிரச்னை இல்லைபோலும். பிறரிடம் சென்று, `உன் அப்பா இறந்துவிட்டார்’ எனச் சொல்லிய பிறகு அவர்களை எதிர்கொள்வதுதான், அந்தக் கணத்தில் வாழ்வின் இதுவரையிலான உச்சபட்ச சவால் எனத் தோன்றியது எனக்கு.

அணைத்துவைத்திருந்த கைபேசியை எடுத்தவர், அதை உயிர்ப்பிக்கும்போதே அழைப்பு வந்தது.

எதிர்முனையில் அவரின் அம்மா. அழுகைச் சத்தம் ஸ்பீக்கரில் போடாமலே வெளியில் கேட்டது. ஒன்றும் பேசாமல், போனை கட் செய்தவர், நான் கண் இமைத்து அசந்த  ஒரு நொடியில், அதைச் சடாரென சுவர் மீது    எறிந்தார். சுக்குநூறாக உடைந்து விழுந்தது அந்த விலை உயர்ந்த கைபேசி. உடைந்த துண்டுகளையும் பாட்டரியையும் அள்ளிக்கொண்டு, அவரின் தோளைத் தொட்டு, அங்கு இருந்து நகர்த்தினேன். எதற்கோ கட்டுப்பட்டவர்போல என்னோடு நடந்துவந்து வண்டியில் ஏறிக்கொண்டார்.

அவர் தன்னியல்பாக  மீண்டும் மீண்டும் `ப்ச்’ கொட்டிக்கொண்டே இருந்தார்.

“ப்ச்... இன்னும் ஒரு வருஷம் இருந்துருக்கலாமேடா... ரமேஷ் பய கல்யாணம் வரைக்கும். அந்தப் புள்ள என்னடா பாவம் பண்ணான், அவர் காலையே சுத்திக்கிட்டு இருப்பான்டா, இப்படிப் படக்குனு போய்ட்டாரு... ச்ச.”

மூர்த்தி அண்ணனை எப்படி சமாதானம் சொல்லித் தேற்றுவது என உண்மையிலேயே தெரியவில்லை. அமைதியாக காரை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

அங்கு தெருவில், `கல்யாண சாவு’ எனத் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. 85 வயது வரை வாழ்வாங்கு வாழ்ந்து, இறந்தவர்.

அவருடைய 80-வது வயது நிறைவை விசேஷமாகக் கொண்டாட முடிவெடுத்த மூர்த்தி அண்ணன், பந்தல் போடச் சொல்லி ஏற்பாடு செய்ததும், பந்தலுக்கான மூங்கில் கம்புகளை ஊன்றும்போதே ஆட்கள் கூடிவிட்டார்கள்... மூர்த்தி அப்பா இறந்துவிட்டாரோ என. பதறிப்போய் முதலில் வாழைமரத்தைக் கட்டினார் மூர்த்தி அண்ணன்.

``விடப்பா திருஷ்டி கழிஞ்சதுனு வெச்சுக்க...’' எனத் தேற்றினார்கள் மூர்த்தி அண்ணனை.

நான் சற்றே குறைத்து மதிப்பிட்டுவிட்டு, மூர்த்தி அண்ணனிடம் பட்டெனச் சொல்லிவிட்டேன். ஆனால், அவர் அதை எதிர்கொண்டவிதம் எனக்குள் பயத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. எங்கே இவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ எனப் பதறிப்போனேன்.

“ச்ச... நான் காலையில வேலைக்குக் கிளம்பி வர்றவரைக்கும் நல்லாத்தானடா இருந்தாரு? ஏன்டா ரகு, ஏதாவது சொல்றா... கீழ ஏதும் விழுந்துதொலச்சாரா?”

பதில் சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை என்பதால், அமைதியாகவே இருந்தேன். அதுவும் நம்மை விட ஆறேழு வயது மூத்தவரைச் சமாதானம்செய்வதாக எந்த வார்த்தைகளை உபயோகித்திட முடியும்? சம்பிரதாய வார்த்தைகளைவிடவும் மெளனம்தான் இழவு வீட்டாரை எதிர்கொள்ள சரியான வழி என்பதாகப்பட்டது.

தெருவில் மூர்த்தி அண்ணன் என்றாலே, எங்களுக்கு எல்லாம் ஒருவித பரவசம் கலந்த பயம்.

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது, எந்நேரமும் அவர் வீட்டு மொட்டைமாடியில் நடந்து நடந்து படித்துக்கொண்டே இருப்பார்.

பெரிய பெரிய மீசை தாடிவைத்த அண்ணன்கள் எங்கிருந்தோ அவரைத் தேடிவருவதும், காலையில் கல்லூரி, மாலையாகிவிட்டால் கபடி விளையாடப் போவதும் என தெருவில் எப்போதும் பிஸியாக இருப்பார்.

நாங்கள் தெருவில் ஒன் பிச் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்போம். எவ்வளவு அவசரமாகச் சென்றாலும், எங்களைக் கடக்கும்போது ஒரு நிமிடம் நின்று, மட்டையைப் பிடுங்கி, ஒரு ஓவர் ஆடிவிட்டுத்தான் செல்வார்.

விடுமுறை மதிய நேரங்களில் நாங்கள் மெதுவாக எட்டிப்பார்ப்போம். மூர்த்தி அண்ணன் தலை தெரிந்தால், ஆமை சட்டென தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வதுபோல் மீண்டும் வீட்டுக்குள் ஓடிவிடுவோம். அரை மணி நேரம் பந்து போடச் சொல்வார். கூடவே கணக்கு, அறிவியல் எனக் கேள்விகள் கேட்பார்.

எதிர்வீட்டு மாலதி அக்காவுக்காகத் தான் எங்களைவைத்து அத்தனை அக்கப்போர்கள் செய்தார் என்பதை, அவரின் கல்யாணச் செய்தியைக் கேட்ட அன்றுதான் தெரிந்துகொண்டோம்.
அது கிட்டத்தட்ட தெருவின் முதல் காதல் திருமணம்.

“எல்லாம் சரிடா, ஒனக்கு லவ் பண்ண, பக்கத்து வீடு, சைடு வீடு எல்லாம் கிடைக்கலையா? எதிர்த்த வீட்டுல பொண்ணை எடுத்தா, நாளைக்கு ஏதாவது சாவுன்னா, சம்பந்தி வீட்ல இருந்து எப்படிடா சாப்பாடு எடுத்து வருவாங்க? இல்ல அங்க ஏதாவதுன்னா, நாம எப்படி என்னத்தைச் செய்ய முடியும்? முட்டாப்பய. பொடலங்கா காதல்...”

மூர்த்தி அண்ணனின் அப்பா விட்ட சவுண்டு இன்றுபோல் இன்னமும் கேட்கிறது. எவ்வளவு தீர்க்கமாக யோசிக்க முடிகிறது அவரால்? ஆனாலும் கல்யாணத்தைத் தடபுடலாகத்தான் நடத்தினார்.

அருகில் விசும்பிக்கொண்டிருக்கும் மூர்த்தி அண்ணனின் அழுகையையும் மீறி, இறந்து போய்விட்ட பெரியவரின் நினைவு என்னை முழுவதும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

வர் எப்போதும் ஏகாந்த நிலையிலேயே இருப்பார். இரண்டு கைகளும் காற்றில் மிதக்க, கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் மூக்குப்பொடியைப் பற்றியிருக்க, மற்ற விரல்கள் விரிந்து, அபிநயம் பிடிப்பதுபோல் இருக்கும்.

`அதீத அன்பு இட்டுச்செல்வது முட்டுச் சந்துக்குத்தான்’ என்பான் கோனார் தெரு முத்து. போலவே அதீத அறிவு இட்டுச் செல்வது பைத்திய நிலைக்குத்தான் என்பதை என் கணக்கு வாத்தியாரும் மூர்த்தி அண்ணனின் அப்பாவும் நிரூபித்திருந்தார்கள்.

புத்தாண்டு காலண்டரை அவரிடம் கொடுத்தால் தீர்ந்தது கதை. பச்சை, சிவப்பு, மஞ்சள்... என கலர் கலர் ஸ்கெட்ச் பேனாக்களால் தேதி, கிழமை என அடித்துக் கிறுக்கித் தள்ளி விடுவார். ஆம்... கிறுக்கல் என்றே தோன்றும். ஆனால் கையில் எடுத்துப் பார்த்தால் மிரட்சி ஏற்படும். பத்து, இருபது, முப்பது என அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான காலண்டரைத் துல்லியமாகக் கணக்கிட்டு எழுதியிருப்பார். டெக்னாலஜி துணைகொண்டு, கோடு டேட் போட்டுப் பார்த்தால், கிழமை அப்படியே பொருந்திப்போகும்.

நாம் சரிபார்த்ததைப் பார்த்தார் என்றால், கண்களைச் சிமிட்டி, முதுகில் ஒரு தட்டுத் தட்டி, `அதெல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கும்டா, அமாவாசை, பௌர்ணமிதான் கணக்கு’ -சொல்லிக் கொண்டே போய்விடுவார். மூக்குப்பொடி கிளப்பும் கிளர்ச்சியையும் தாண்டி, அதிசயத்தில் நமக்கு வாய் பிளக்கும்.

போலவே மதுரையின் எந்த இடத்தைப் பற்றி பேச்சுவந்தாலும், `கள்ளந்திரில இருந்து பதினைஞ்சு கிலோமீட்டர் இருக்கும்’ என சம்பந்தம் இல்லாமல் எங்கோ அழகர்கோயிலுக்கு அருகில் இருக்கும் `கள்ளந்திரி’ என்ற கிராமத்தைவைத்தே அடையாளம் சொல்வார்.

விளையாடும்போது, தப்பித்தவறி பந்து அவர் அமர்ந்திருக்கும் பால்கனி பக்கம் போய்விட்டால், நாங்கள் பந்தை எடுக்கப் போகாமல் அன்றைய ஆட்டத்தை முடித்துக்கொண்டுவிடுவோம்.
மூர்த்தி அண்ணன் கட்டுமஸ்தான கபடி ஆட்டக்காரர், போலிஸில் இருந்து அனைவரையும் எதிர் கேள்விகேட்கும் அன்றைய ‘ஆங்கிரி யங் மேன்’. அவரே அப்பா என்றால், பம்முவதைப் பார்த்திருக்கிறோம்.

`அவர்கிட்ட போய் ஏன்டா ஏழரையைக் கூட்றீங்க?’ எனும் மூர்த்தி அண்ணன் கேள்விக்கு எங்களிடம் பதில் இருந்ததே இல்லை. ஆனால், பிற்பாடு கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த பருவத்தில், அவர் சொல்லும் கதைகளைக் கேட்கும் ஆவலில் அவரைத் தேடிப் போவோம்.

அவரைச் சுற்றிலும் ஓர் அமானுஷ்யம் சூழ்ந்திருப்பதுபோலவே இருக்கும் எனக்கு. அவரின் ஆங்கில அறிவு, சங்கீத ஆலாபனை, பொடிபோடும் நளினம், சோதிடம் பார்க்கும் திறன்... என எல்லாவற்றையும் தாண்டி அவரிடம் ஏதோ ஒரு புலப்படாத சக்தி இருப்பதாகவே தோன்றும். பேசிக்கொண்டிருக்கும்போது சடாரெனக் குரல் உயர்த்திக் கட்டளை இடுவார். பயம் கவ்வும்.

ஒருமுறை மூர்த்தி அண்ணனின் நண்பர், தமக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்திருப்ப தாகவும், எதிர்காலம் குறித்துச் சொல்லும்படியும் கேட்டு தன் ஜாதகத்தை மூர்த்தி அண்ணன் அப்பாவிடம் கொடுத்ததும், ஒரே நொடியில் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு,“எப்ப போற?”

“அடுத்த வாரங்கய்யா.”

“அதெல்லாம் போக முடியாதப்பா, உனக்கு இங்க முக்கியமான வேலை இருக்கு.”

“இ...ல்லங்கய்யா, இது நல்ல வேலை.”

சடாரெனக் குரல் உயர்ந்தது.

“நல்ல வேலை பெருசா, முக்கியமான வேலை பெருசாடா முட்டாப்பயலே... கடமைடா, கடமை இருக்கு உனக்கு.”

அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் பொடியைப் போட்டு, கையை உதறி எழுந்துபோய்விட்டார்.

அவர் சொன்னதுபோலவே அந்த நண்பரின் தந்தை அந்த வாரத்துக்குள் இறந்துபோக, மூர்த்தி அண்ணனே லேசாக அதிர்ந்தார்... தன் தந்தையின் தீர்க்கம் பார்த்து.

ஒருநாள் இரவு 9 மணி இருக்கும். சாப்பிட்டு விட்டு காலார நடக்கலாம் என தெருவுக்குள் நுழைந்தபோது, கணீரெனக் குரல் கேட்டது...

“டேய்ய்... மூர்த்தி. இங்க வா.”

அவருக்கு எல்லோருமே மூர்த்திதான்.

கள்ளந்திரி

மாடிப்படியின் கீழே, சுவரில் சாய்ந்து, வளைந்து, அமர்ந்து, கால் மேல் கால் போட்டு அதை முடிச்சுபோல் ஆக்கி மொத்தமாக ஆட்டிக் கொண்டே என்னைப் பார்த்து தலையசைத்தார்.
போனேன்.

புருவம் உயர்த்தி, எதிரே அமரச் சொன்னார்.

அமர்ந்தேன்.

ஒன்றும் பேசாமல் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார். கையில் பொடி, விரல்களில் ஆலாபனை.

மெள்ளக் குரல் எழுந்தது அவரிடம் இருந்து.

“அநேகமா அது தொள்ளாயிரத்து எழுவதாக இருக்கும். அழகர்கோயில். எனக்கு மேலூர்ல டியூட்டி. முடிச்சிட்டு ஒரு எட்டு மலை ஏறி தீர்த்தத்தொட்டித் தண்ணியில ஒரு குளியலைப் போட்டு வரலாம்னு போனேன். எங்கு இருந்துதான் அந்தச் சுனையில அப்படி தண்ணி ஊருதோ, குடிச்சா தேன் மாதிரி இருக்கும். மேலப்பட்டா ஜில்ல்லுனு ஐஸ்கட்டி மாதிரி...”

“இப்பவும் அப்படித்தான் இருக்கு.”

“இன்னும் ஆயிரம் வருஷமானாலும் அப்படித்தான்டா இருக்கும். அந்த மலை அப்படி; அந்தச் சுனை அப்படி.”

“ம்ம்...”

நான் இடையே குறுக்கிட்டது அவருக்குக் கோபமோ அல்லது நினைவோடையில் தடங்களோ, மீண்டும், கண்களை மூடி தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். பிறகு, மெள்ள ஆரம்பித்தார்...

“குளியல்னா குளியல் அப்படி ஒரு குளியல். உடம்பு அப்படியே பூஞ்சை பிடிச்சு லேசான மாதிரி, ஆளைக் கிறக்கிருச்சு. தண்ணித்தொட்டிக்கு மேல ஏறி மரத்தடியில கொஞ்ச நேரம் படுத்துட்டுக் கிளம்பலாம்னு படுத்தா... உடம்பை யாரோ போட்டு அமுக்கு அமுக்குனு அமுக்குறாங்க. எந்திரிக்கவே முடியலை. நானும் எதிர்த்து எந்திரிக்கிறேன். ஒண்ணும் முடியலை. நல்லா கடும்பாறையைக் கட்டித் தூக்கின மாதிரி வெயிட். அட உடம்பைத்தான அமுக்கிறான், கண்ணுக்கு என்னா வந்துச்சுனு திறந்து பார்த்தா, இருட்டுன்னா இருட்டு, மசி இருட்டு. வண்டி மையைத் தடவின மாதிரி மலையையே காங்கல.”

என்னால் அந்த இருட்டையும் அழகர்மலையையும் உணர முடிந்தது.

“இப்பத்தான முக்குக்கு முக்கு லைட். அப்பல்லாம் ஒரு மண்ணும் கெடையாது. சரி தீப்பந்தம் கீப்பந்தம், ஊஹும் மருந்துக்குக்கூட பொட்டு வெளிச்சத்தைக் காணோம். மெள்ள எந்திருச்சு இறங்குறேன், ஒரு நிமிஷம்தான், என்ன நடந்தது ஏது நடந்ததுனு தெரியாது... கீழே வந்துட்டேன். முதுகுல ஏதோ ஜிவ்வ்வ்வுனு ஏறுது. கிடுகிடுனு நடக்கிறேன். வீதி `ஆ’னு பொளந்துகிடக்கு. திரும்பிப் பார்த்தா அழகர்கோயில் மலை, அந்த இருட்டுலயும் கழுவிவிட்ட மாதிரி தெரியுது. அறுவது எழுவது அடி குதிரையில கறுப்புச் சிலையா அழகர் அம்பாரமா எந்திருச்சு நிக்கிறாரு. கண்ணைக் கசக்கிப் பார்த்தேன்... உருவம் அசையுது.”

“அட அதெல்லாம் சு...” என்று சொல்ல யத்தனித்தவனை அவரின் கணீர் குரல் அடக்கி ஒடுக்கி அரளவைத்துவிட்டது.

“என்னடா அதெல்லாம் சும்மா... தெரியுமோ உனக்கு? சொல்லிக்கிட்டு இருக்கேன், கேட்பியா...”

அவரே அழகர்போல் கண்களை உருட்டினார். பம்மலாக அமர்ந்திருந்தேன்.

“சரி, ஏதோ நடக்கப்போகுது, அமாவாசை னாலே ரேகை திரும்புமா இல்லையானு யோசிச்சுக்கிட்டே திரும்பிப் பார்க்காம நடக்கி றேன். அமாவாசை பௌர்ணமினா கொஞ்சம் உஷாரா இருக்கணும்டா மூர்த்தி, என்ன?”

“ம்ம்...”

“ நடந்தவன் அப்படியே வண்டி மாடு எதுவும் வந்தா ஏறி, ஊர் வந்துரலாம்னு ஓட்டமும் நடையுமா நடக்கிறேன். கள்ளந்திரினு நினைக் கிறேன். `சரி... கள்ளந்திரி வந்துருச்சு அப்படியே போயிரலாம்னு பார்த்தா, ரோட்டோரத்துல ஒரு சின்னக் கோயில். கால் வின்னு வின்னுன்னு தெறிக்குது. சரி செத்தவடம் உட்கார்லாம்னு உட்கார்ந்தேன். அதான் நான் பண்ணின தப்பு.”

அமைதியாக அமர்ந்திருந்தேன்.

“ராத்திரி வேளையில ரோட்டுக் கோயில்கள்ல எவனும் இருக்க மாட்டான். நான் உட்கார்ந் திருக்கேன். எனக்கு எதுத்தாப்புல அம்மன். கல்லுன்னா கல்லு... நல்ல கருங்கல் சிலை. வழுவழுனு கல்லை சீய்ச்சிருக்கான். அப்படியே பார்க்கிறேன். நல்ல அம்சமா இருக்கு. ஒரு நிமிஷம் அதை சாமியாப் பார்க்கலை. பொம்பள சிலை. அப்படித்தான் இருந்தது வளைவும் நெளிவும். பார்த்துக்கிட்டே இருக்கேன். வாழ்க்கையில எந்தத் தப்பு வேணும்னாலும் செய் மூர்த்தி. ஆனா, அர்த்த ராத்திரியில தனியா சிலையை மட்டும் உத்துப் பார்க்காத.”

பயமாக இருந்தது... அவர் உலுக்கிச் சொல்லியது.

“சிலை கால் தனியா, மார் தனியா, கை தனியா, வயிறு தனியா, தொட தனியானு பார்த்துக்கிட்டே இருக்கேன். கால் பாதம் பார்த்தா, அஞ்சு விரலும் அம்சமா வடிச்சிருக்கான். கால் நகம் மொதக் கொண்டு. அப்படியே ரசிச்சு ரசிச்சு தொடையையும் வயித்தையும் மாரையும் பார்த்து நிமிர்ந்தனோ இல்லையோ... சிலையோட மூடின கண்ணு படக்குனு திறந்துச்சே பார்க்கணும். நகத்தைவெச்சு என் நெஞ்சுல பிராண்டின மாதிரி எரியுது. ஓட்டம்னா ஓட்டம், அப்படி ஒரு ஓட்டம்... ஓடினேன்.”

நானே பயந்து ஓடுவதுபோல் இருந்தது.

சட்டென நிறுத்தி, “சரி எங்கயோ போய்க்கிட்டு இருந்தியே... போ” என எழுந்து உள்ளே போய்விட்டார்.

நான் அங்கு இருந்து நான்கு வீடுகள் தள்ளியிருக்கும் என் வீட்டுக்குப் போகப் பயந்து, சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தேன். ஒருவர் என்னைக் கடக்க, அவர் கூடவே நடந்து என் வீட்டுக்குள் ஓடியவன்தான், மறுநாளும் வெளியே வரவில்லை.

“என்னடா என்னத்தையோ காணாததைக் கண்டு அரண்டுபோனவன் மாதிரி இருக்க”-அப்பா கேட்க, நான் மூர்த்தி அண்ணனின் அப்பா சொன்னதை ஒரு வழியாகச் சொன்னதும், “அட இன்னமுமா அவரு கள்ளந்திரியை மறக்காம இருக்காரு? அதெல்லாம் பெரிய கதை நீ போயி படிக்கிற வேலையைப் பாரு” என்ற வார்த்தைகள் பட்டெனப் பனி விழுந்த கண்ணாடியைத் துடைத்ததுபோல் ஆக்கியது மனதை.

காரை நிறுத்தும் முன்னரே மூர்த்தி அண்ணன் இறங்கி ஓடினார். வீட்டின் நடுவே கிடத்திவைக்கப்பட்டிருந்த தன் தந்தையின் உடலைப் பார்த்தவர் சரேலெனச் சுழன்று விழுந்தார். அவரது மகன் எங்கிருந்தோ சோடாவை வாங்கிக்கொண்டு ஓடிவந்தான்.

பெரியவர், கோவிந்தன், மூர்த்தியப்பா, சோதிடர் தாத்தா என்ற எதுவும் அல்லாமல், “பொணத்த நகர்த்திவைங்க” என்றானார்.

பெண்களை வெளியேறச் சொல்லிவிட்டு குடம்குடமாக நீர் எடுத்துவந்து, பிணத்தைக் குளிப்பாட்டினார்கள்.

ஈரமும் இன்னமும் ஏதோவும் சேர்ந்து வாடையாகப் பிசைந்தது.

நீரை ஊற்றி நிர்வாணமாக்கினார்கள்.

அவர் நெஞ்சில் நான்கு விரல் நகங்கள் பதிந்த தடம், ஆழமான கோடாக இருந்ததைக் கண்ட நொடியில், அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். பயமாக இருந்தது. மெள்ள எழுந்து வாசலுக்கு வந்துவிட்டேன்.

எல்லாம் முடிந்து, மறுநாள் அவரது அஸ்தியைக் கரைக்க வேண்டும் என்பதால், நான் காரை ஓட்ட மூர்த்தி அண்ணன், அவரது மகன் மூவரும் திருபுவனத்துக்குக் கிளம்பினோம்.

போகும் வழி எங்கும் மூர்த்தி அண்ணன் தன் தந்தை எப்படி எல்லாம் வளர்த்தார் என்பதையும், தன் மகனின் திருமணம் வரை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதையும் சொல்லிச் சொல்லி அழுதார். அஸ்தி சொம்பைக் கீழே வைக்கவில்லை.

“எவ்வளவு செஞ்சிருப்பாரு கோயிலுக்கு.

எம் பையன் கல்யாணம் வரைக்கும் விட்டு வைக்காத அந்தச் சாமி எல்லாம் ஒரு சாமியா, இனி கோயிலாவது, குளமாவது?”- மூர்த்தி அண்ணன் புலம்பல் இறுதியில் தீர்மானமாக முடிந்தது
திருபுவனம்... ஈமக்காரியங்கள் செய்யும் இடத்தை அடைந்து ஓரமாக வண்டியை நிறுத்தினேன்.

கரை புரண்டோடிய வைகை ஆற்றில் சாம்பலைக் கரைப்பார்களாம். ஆனால், இப்போது வெறும் மணல் திட்டுகளாகத் தென்பட்டது.

காசை வாங்கிக்கொண்டு கூடவந்த ஒருவர், ஓர் ஈரப்பதமான இடத்தைத் தேர்வுசெய்து, மணலைத் தோண்ட, நீர் ஊற்றெடுத்துக் கசியத் தொடங்கியது. அதில் சாம்பலைக் கரைக்க வேண்டும்.
மூர்த்தி அண்ணன் சொம்பை கையில் வைத்து அழுதார். அவர் மகன் ரமேஷ் தன் தந்தை அழுவதைக் கண்டு, லேசாக விசும்பினான். பள்ளம் தோண்டிய ஆள், “ம்ம்... ஆகட்டும் கொடுங்க” என்றார்.

மூர்த்தி அண்ணன் சொன்னதுபோல் இன்னும் ஓரிரண்டு வருடங்கள் அவர் உயிரோடு இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. அவர் முகமும் அவர் நெஞ்சில் இருந்த நகக் கீறலும் நினைவில் நிழலாடியது.

நன்கு அழுது முடித்ததனாலோ என்னவோ மூர்த்தி அண்ணன் முகம், மழை அடித்து ஓய்ந்த தார்ச்சாலைபோல் பளீரென இருந்தது.

கள்ளந்திரி

காரில் ஏறிக்கொண்டே சொன்னார்.

“ச்ச... கேட்டுக்கிட்டே இருந்தாரு. வேலை இருக்குனு தட்டிக்கழிச்சுக்கிட்டே இருந்தேன், நானே அவரைக் கள்ளந்திரிக்குக் கூட்டிப் போயிருக்கணும். பாவம் நேத்து தனியா எதுவுல போயிட்டு வந்தாரோ, எங்க விழுந்தாரோ?”

ஒரு நொடி அந்த அம்மன் சிலையின் கண்கள் என் கண்ணெதிரே படக்கெனத் திறந்து மூடின!