Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

என் அறையில் ஒரு நட்சத்திரம் 

மிகக் கஷ்டப்பட்டு யாருக்கும் தெரியாமல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரவு வானத்திலிருந்து

ஒரு நட்சத்திரத்தை எடுத்துவந்து

என் அறைக்குள் வைத்திருக்கிறேன்.

ஏதேனும் எழுதுகையில்

அதை மேஜையாக உபயோகிக்கிறேன்.

குளிக்கையில் சோப்பாக உபயோகிக்கிறேன்.

உறங்குகையில் தலையணை.

அறைக்குள்ளே விளையாடுகையில்

கால்பந்தாகவும்

சமயங்களில் கைப்பந்தாக்கியும்.

பசி அதிகரித்தால்

இட்லியாக மாற்றி

கொஞ்சம் தின்றுவிடுகிறேன்.

மனசு குழந்தையாகையில்

டெடிபியராக்கி அணைத்துக்கொள்கிறேன்.

தனிமை நனைக்கையில்

கதைசொல்லும் பாட்டியாகிறது நட்சத்திரம்.அமர்ந்து யோசிக்கையிலோ

புத்தகம் வாசிக்கையிலோ

இருக்கையாக்கிக்கொள்கிறேன்.

வெளிச்சமென மட்டும் உபயோகிக்கவில்லை

மின்சாரம் தொலைந்த இருளிலும்

எனக்குத் தெரியும்

வெளிச்சத்துக்குப் பயன்படுத்தினால்

நீங்கள் கண்டுபிடித்துவிடுவீர்கள்

நான் நட்சத்திரத்தைத் திருடிவைத்திருப்பதை.

 - சௌவி 

இன்றைய நாளின் சித்திரத்தில்...

முதுகில் பட்டாம்பூச்சிப் பையுடன்

கைகளைக் கட்டிக்கொண்டு உம்மென்று

ஒரு பெரிய மனுஷியைப் போல

அப்பாவிடம் கடிந்துகொண்டிருந்த குட்டிப்பெண்

பேருந்து நிறுத்தத்திலிருந்த யாவருக்கும்

ஆசுவாசக் குளிராகிப்போனாள்

அனல் கக்குமிந்த வன்கோடைப்பகலில்.

இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியா

அற்பக் காரணிகளுக்கு

குழந்தைமைச் சினங்கொண்ட வெகுளிச்சிறுமியும்

கெஞ்சலுடனும் கொஞ்சலுடனும்

தன் செல்ல மகளைப் புன்னகைத்தபடியே

வாரியணைத்துச் சென்ற வெள்ளந்தி அப்பாவும்தான்

என் இன்றைய நாளின் சித்திரத்தில்

அன்பின் வண்ணங்களைத் தீட்டியவர்கள்.

 - தர்மராஜ் பெரியசாமி 

சமாதானம்

எனக்கும் மனைவிக்குமான

வார்த்தைகள் தடித்த சண்டைக்குப் பிறகு

விடிந்த பகலில்,

எட்டு மணிக்குள் பிள்ளைகளை

பள்ளிக்குத் தயார்செய்ய அவளும்

ஒன்பது மணிக்குள்

அலுவலகம் செல்லும் அவசரகதியில் நானும்,

ஒரே வீட்டில் தனித்தனியே இயங்கிக்கொண்டிருக்கையில்

விசேஷம் ஒன்றிற்காய்

வீட்டிற்கு வந்துகொண்டிருப்பதாய் தகவல் சொன்ன

உறவினர்களின் அலைபேசி அழைப்பில்...

வார்த்தைகளின் வெம்மை தாளாமல்

இரவில்

தன் கூட்டைவிட்டு வெளியேறிய

சமாதானப் பறவை,

தன் அலகில்

ஒற்றை வெள்ளையிறகை ஏந்தியபடியே

மறந்துவைத்துவிட்ட பொருளைத்

தேடி எடுத்துத்தரும் சாக்கில்

அங்குமிங்கும் அலைந்தபடியேயிருக்கிறது

உற்ற தருணத்தில் கூடடைய.

 - ந.கன்னியக்குமார் 

மைனா

ஏரியில் குளிக்கும்

எருமைமாட்டின் முதுகில்

அமர்ந்திருக்கும்  

மைனாவை ரசிப்பது

போன்றதுதான்

உன் கோபத்தில் அமர்ந்திருக்கும்

புன்னகையை

ரசிப்பது.

 - தரணிவேந்தன் 

கடல் பறவை

நீங்கள்

கடல் பறவையைப்

பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்

நான்

கடலே பறவையாக இருப்பதைப்

பார்த்துக்கொண்டிருக்கிறேன்

பிரபஞ்ச வெளியில்

கிளைவிரிக்கும் பூமியை

பூமியின்மீது அமர்ந்திருக்கும்

கடல் பறவையை

பால்வீதியில் அலையடிக்கும்

அதன் சிறகுகளைப்

பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்

ஒரு நோயைப்போல

என் உடலெங்கும் விழித்துக்கொள்கின்றன

ஆத்மசாகரத்தின் கண்கள்.

 - கார்த்திக் திலகன்