Published:Updated:

மோகனரங்கன் கவிதைகள்

மோகனரங்கன் கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மோகனரங்கன் கவிதைகள்

கவிதைகள்: க.மோகனரங்கன், படம்: சி.சுரேஷ்பாபு

மோகனரங்கன் கவிதைகள்

வரிகளுக்கு நடுவே வாசித்தல்

'இத்தனை மகத்தான கதைக்கு 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதயத்தைக் கனக்கச்செய்யும்

இவ்வளவு சோகமான முடிவா?’

படித்துமுடித்த ஒருவர்

பதைத்துப்போய் வினவ,

எழுதிய கையை உயர்த்தி

யாருடையதோ என்பதைப்போல

ஏறிட்டுப் பார்த்தவன்

அதன் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு

முணுமுணுத்தான்

'திண்ணமாக

எண்ணிவைத்த பலவற்றையும்

எழுதிப்போகையில்  நான்

எண்ணாததுவும் எழுதவொண்ணாததுவுமென

ஏதேதோ அர்த்தங்கள்

இடை கலந்துவிட்டதை

அச்சிட்டு வந்த பிறகே

அறிய முடிந்தது’

புத்தகத்தின் தாள்களைப்

புரட்டிக்கொண்டிருந்தவன்

மூடிவைத்த பிறகு கேட்டவரின்

முகம் பாராது சொன்னான்...

'நான் பிறப்பித்த பாத்திரங்கள்

என் சொற்கள் வழியே

தம் கதையை  

தாமே எழுதிக்கொண்டுவிட்ட விசித்திரத்தை

இனிமேல்தான் உங்களோடு சேர்ந்து

நானும் புரிந்துகொள்ளவேண்டும்.’

பொய்யா விளக்கு

கருவறையின் முன்

கற்படியின் நடுவே யாரோ

ஏற்றிவைத்துப்போயிருக்க,

எஞ்சியிருக்கும்

கடைசிச் சொட்டு எண்ணெயில்

காற்றிலாடிக்கொண்டிருந்தது

அச்சுடர்.

எனதொரு பெருமூச்சு

போதுமாகயிருந்திருக்கும்

ஊதியணைக்க.

உய்த்துணரவோ

உள்ளத்து இருள் முழுவதையும்

உரித்துக்காட்டியபடி

நினைவழிந்து நிற்கிறேன்.

மீ மழை

பெய்தோய்ந்த

மழையீர மண்ணில்

இறுதியாகச் சொட்டிய

இருதுளி ரத்தினங்களென

சுடர்ந்துகொண்டிருக்கும்

பட்டுப்பூச்சிகளை

குனிந்து பார்க்கும்

குழந்தைப் பெண்ணின்

விழி நீலத்தில்

வியப்பின் பொன்னுருக

கன்னத்தில் இழைகிறதொரு

வண்ண வில்.