Published:Updated:

டொமினிக்

டொமினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
டொமினிக்

சிறுகதை: பவாசெல்லதுரை, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

டொமினிக்

ரண்டாம் போகம் நெல் விளைந்து முற்றி, நிலம் பொன்னிறமாக உருமாறியிருந்தது. பார்க்கிற எவரையும் வசீகரிக்கும் அழகு. தன் அழகில் தானே பெருமிதம்கொள்ளும் தருணம், அறுவடைக்குக் கொஞ்சம் முந்தைய நாட்களில்தான் ஒரு வயலுக்கு வாய்க்கிறது.

வழக்கத்தைவிட இன்று அதிகாலை விஜயத்தில் எனக்கு நிதானம் கூடியிருந்தது. வரப்புகளில் பனியில் நனைந்த விதவிதமான வண்ணங்களில் புடவைகள். தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவை வண்ணக்கோடுகள்.

கூர்ந்து கவனிக்கிறேன். எல்லா புடவைகளின் நுனியும் நெல்வயலின் ஒரு மையத்தில் குவிந்திருக்கிறது. இந்தக் கனவின் விரிவு நம்ப முடியாததாகவும் ஆச்சர்யங்களைக் கூட்டிக் கொண்டுபோவதாகவும் இருக்கிறது.

புடவைக் குவியலின் மையத்தில் ஓர் அழகான இளம்பெண் இருக்கவேண்டும் என யாசிக்கிறேன். அத்தனை வண்ணங்களையும் குடித்தெழும் அவள், இதற்கும் அப்பாற்பட்டவளாக, இதுவரை நான் காணாத ஒரு நில தேவதையாக எழவேண்டும் என மனம் முந்துகிறது.

வரப்புகளின் மீது அசையும் புடவைகளின் லயத்துக்கு ஏற்ப அந்த மையம் கூட்டியும் குறைத்தும் விளையாடுகிறது. அதில் ஒரு தேர்ந்த நாட்டியக்காரியின் நளினம் இருக்கிறது. கூடவே ஓர் இதமான டிரம் சத்தம், ஏற்கெனவே இசைத்து வைத்தது மாதிரி ஒலிக்கிறது. எப்போதாவது எங்கேயாவது இப்படி சில அதிசயக் காட்சிகள் விரியும். இன்று அது என் வயலில்.

என் கவனத்தைச் சிதைத்து, சீழ்க்கை ஒலி அதே மையத்தில் இருந்து மேலெழும்புகிறது. புடவைகளின் நுனிகளோடு வரப்பின் கீழ் படுத்திருந்த குழந்தைகள், குபீரென எழுந்து கும்மாளமிடுகின்றனர்.

இப்போதும் குழந்தைகளின் கைகளில் புடவைகளின் நுனி. பனியில் நனைந்து நிற்கும்  குழந்தைகளை இன்னும் நெருங்குகிறேன். எல்லோரும் பக்கத்து இருளக் குடியின் தேவதைகள். இன்று அதிகாலை ஒலித்த டிரம் சத்தம்தான் அவர்களை இங்கு அழைத்திருக்கக்கூடும்.

மையத்தில் இருந்து இப்போது ஒரு பாடல் ஒலிக்கிறது. மொழி புரியாத சங்கீதம். அந்தப் பாடலை உள்வாங்கி, குழந்தைகள் எதிரொலிக் கின்றன. அது முற்றிய கதிர்களில் பட்டுத் தெறிக்கிறது.
வயல் நடுவில் இருந்து எழப்போகும் தேவதைக்கு எதிர்பார்த்திருந்த ஒரு தருணத்தில், மேல்சட்டை அணியாத வெற்றுடம்போடு ஒரு வெள்ளைக்காரன் எழுகிறான். கால்சட்டை அணிந்திருக்கும் அவன் முதுகு லேசாக வளைந்திருப்பதைப் பார்த்தேன்.

குழந்தைகளின் கையில் இருக்கும் புடவை நுனிகளின் மொத்தத்தையும், அவன் தன் இரு கைகளில் தாங்கிப்பிடித்து நிற்கிறான். அவன் வலது தோளில் டிரம் ஒன்று தொங்குகிறது.

அவனைப் பார்த்ததும் குழந்தைகளின் உற்சாகக் கூச்சல் இன்னும் அதிகரிக்கிறது. அதையே தனக்கான பின்னணி இசையாக்கி, அவன் நடனத்தோடு கலக்கிறான். இப்போது புடவை நுனிகள் அவன் கால்களுக்கு அடியில் புதைந்து கொண்டன. குழந்தைகளின் ஆரவாரமும் டிரம்மின் ஓசையும் தூரத்தில் துலங்கும் ஊர் வரை எட்டுகிறது.

தன் வெற்றிலை இடிப்பை நிறுத்தி பெரியத்தாய் ஆயா, குழந்தைகளின் ஆரவாரக் குரலை அருந்துகிறாள். அவள் பொக்கைவாய் சிரிப்பு காலத்தைத் தாண்டி நீள்கிறது.

அந்த வெள்ளைக்காரன், நான் நிற்கும் திசை நோக்கி வருகிறான். குழந்தைகளின் கூச்சல் இன்னும் அதிகரிக்கிறது. அவன் நடனமாடிக் கொண்டே வருகிறான். என் கண் முன்னர் ஒரு கவித்துவக் காட்சி பரந்துவிரிந்து அந்தக் காலையை இன்னும் அழகாக்குகிறது.

ஒரு மாமரத்துக்குப் பின்னால் நான் மறைந்து நின்றுகொள்கிறேன். இப்போது அவர்களின் உலகத்தில் இருந்து மறைந்திருத்தலே நன்று.

என்னைக் கண்டுவிட்ட சந்தோஷத்தோடு அவன், என்னை இன்னும் சமீபிக்கிறான். நான் என்  உடம்பை இன்னும் சுருக்கிக்கொள்கிறேன். அது திமிறுகிறது.

மரத்துக்கு அப்புறம் நின்று தன் வலது கையை மட்டும் நீட்டி, “ஐ'ம் டொம்னிக், ஆனந் ஸ்கரியாஸ் ஃப்ரெண்ட்”  என ஆங்கிலத்தை ரகசியம்போல உச்சரிக்கிறான்.

பதிலுக்கு என் கையை நீட்டாமல் அவன் பக்கமாக நகர்ந்து, அவனை ஒரு பெண்ணைப்போல தழுவிக்கொள்கிறேன். எங்கள் இருவரின் உடல் சூட்டையும் இருவராலும் உணர முடிகிறது. இப்படித்தான் எனக்கும் டொமினிக்குக்குமான அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

தோ டொமினிக்குடனான என் இரண்டாம் சந்திப்புக்கு, கார்த்தியோடு போகிறேன். எங்கள் இருவர் முகங்களிலும் பதற்றம் படர்ந்திருக்கிறது. எங்கள் புல்லட் சத்தம் மட்டும் அந்தச் சாலையை நிறைக்கிறது.

பெரிய இரும்பு கேட் போட்ட அந்த வீட்டின் முன்னர் புல்லட் அணைக்கப்படாமல், சத்தம் கூட்டப்படுகிறது. ஹார்ன் ஒலியும் கூடவே அலறுகிறது. காத்திருக்காமல் அந்த கேட் திறக்கப்படுகிறது. யாரையும் பொருட்படுத்தாமல் நானும் கார்த்தியும் உள்ளே நுழைகிறோம். நான் மட்டும் திரும்பிப் பார்க்கிறேன். பத்து பேருக்கும் மேல் அங்கங்கே மிஷ்கின் பட மனிதர்கள் மாதிரி நிற்கிறார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கோடு களுக்குள் அவர்கள் நின்று அல்லது உட்கார்ந்தி ருக்கிறார்கள். வெய்யில் ஏறிய மத்தியானம்.

ஒரு சிவப்பு வண்ண பிளாஸ்டிக் சேரில் அதன் விட்டத்தில் இருந்து வெளியே பிதுங்கி ஓர் ஆள் உட்கார்ந்திருக்கிறான். எங்கள் வருகை அவனிடம் ஒரு சிறு அசைவையும் உருவாக்கவில்லை என அவனது உடல் மொழி சொன்னது.

‘‘இங்க யாரு சக்திவேலு?’’

ஒரு கறுத்த ஆள் தலை உயர்த்தி என்னைப் பார்த்தான்.

‘‘உனக்கு என்னடா பிரச்னை?’’ என கார்த்தியின் குரல் என்னை முந்துகிறது.

‘‘பொறு, பொறு கார்த்தி.’’

‘‘என்ன பிரச்னை?’’ - அதே வார்த்தைகளை நான் கொஞ்சம் சாந்தமாக உபயோகித்தேன்.

‘‘ஒரு பிரச்னையும் இல்லையே’’ - அவன் மதிற்சுவரின் வடக்கு நோக்கிப் பார்த்தவாறு, யாருக்கோ சொல்வதுபோல சொன்னான். அவன் உடல்வழியே காட்டிய அலட்சியம் யாரையும் வெறியேற்றும்.
கார்த்தி தன் ஆத்திரத்தை என் கைப் புதைப்பில் கரைத்துக்கொண்டிருந்தான்.

நான் டொமினிக்கைத் தேடினேன்.

மதிற்சுவரின் ஒரு மூலையில் சட்டையில்லாமல் ஒரு பெர்முடாஸ் மட்டும் போட்டு திரும்பி நின்றுகொண்டிருந்தவன், என் குரல் கேட்டு எழுந்து திரும்பினான். அவனின் வெள்ளை உடல் எங்கும் விழுந்த அடிகளின் ரத்தவிளாறுகள் படிந்திருந்தன. கன்னம் கன்றியிருந்தது. சற்று முன் உதட்டின் வழி வழிந்த சிறு ரத்தம் உறைந்து கருங்கோடாக நிலைபெற்றிருந்தது. திறந்திருந்த அந்த வீட்டின் ஹாலின் தரையில், அவன் எங்கெங்கோ சேகரித்திருந்த வண்ணப் புடவைகள் தாறுமாறாகக் கலைந்துகிடந்தன.

படிக்கும் தரைக்கும் இடையே புரண்டுகிடந்த டிரம்மின் ஒரு பக்கத் தோல் முற்றிலும் கிழிந்திருந்தது.

டொமினிக் என்னை ஏறெடுத்தான்.

பாம்பின் தலை கடைசியாக நசுக்கப்படுவதை நீங்கள் அருகில் இருந்து பார்த்திருக்கிறீர்களா? அது சாகும் முன்னர் ஒருமுறை தலையை உயர்த்தி யாசிக்கும். டொமினிக் தன் தலையை உயர்த்தி என்னை நோக்கி யாசித்தான்.

நானும் கார்த்தியும் சூழலைக் குடித்துக் கொண்டிருந்தோம்.

நான் அந்தச் சிவப்பு நிற சேரில் உட்கார்ந்திருந்த ஆளை நோக்கிப் போனேன். கூடவே என் ஒரு கை டொமினிக்கைப் பற்றியிழுத்துக்கொண்டிருந்தது.

‘‘என்ன இது?’’

‘‘என்னைக் கேட்டா?’’

‘‘யார் இவரை இப்படி அடிச்சது?’’

அவன் சக்திவேலை நோக்கிப் பார்வையைத் திருப்பினான்.

நானே எதிர்பாராத அந்தக் கணத்தில் கார்த்தி அவனை நோக்கி ஓடி, அவன் முகத்தில் எட்டி உதைத்தான். பின்னால் இருந்த ஓர் அடுக்கு செம்பருத்திச் செடியில் அவன் மல்லாக்க விழுந்தான். அந்தக் கறுத்தப் பெண் ஓடிவந்து அவனைத் தூக்கினாள். அந்தச் சிறுமி திடீரென வீறிட்டு அழுதாள். என் கைப்பற்றி இருந்த டொமினிக்கின் உடல், பயத்தால் உதற ஆரம்பித்தது. கூடுமானவரை என் கை அழுத்தத்தில் அவர் பயத்தை உறிஞ்சிவிட முயன்றேன்.

அவனைத் தூக்கி உட்காரவைத்தவள், உதைத்தவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவள் மௌனத்தை என்னால் அளவிட முடியவில்லை.

விளைந்த நெல்வயலின் நடுவே தன் பாடலோடு ஓர் ஆண் தேவதை என காற்றில் மிதந்துவந்த டொமினிக், என் முன் பிம்பமாகத் தோன்றி மறைந்தான்.

இங்கு இருப்பவன்தான் நிஜம். கலைந்த புடவைகள், கிழிந்த டிரம், பாதி வெந்த சோற்றோடு கவிழ்ந்துகிடக்கும் அந்தப் பாத்திரம், இன்று பூத்த மலர்களோடு உடைந்து சரிந்த செம்பருத்திச் செடி, எதற்கும் அசைந்துகொடுக்காத அந்தச் சிவப்பு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் வீட்டு உரிமையாளன்.

உன் பாடலுக்கும் வாழ்வுக்குமான தூரம் தெரிகிறதா என் டொமினிக்?

அவனை உற்றுப்பார்த்தேன்.

இப்போதுகூட சற்றுமுன் கரும் ரத்தம் கசிந்த தன் வலிமிகுந்த உடலைப் பஞ்சாக்கி, அப்படியே அவனால் வானில் பறந்துவிட முடியும் எனத் தோன்றியது. எங்கோ ஒரு வயலில் இறங்கி அதனுள் இருந்து ஆடி, பாட முடியும். சட்டையில்லாத கரும்நிறக் குழந்தை களோடு ரயில்வண்டி விளையாட்டில் வெகுதூரம் பயணித்து, வளைந்து வளைந்து ஓடும் காட்டாற்றில் குதித்துவிடவும் முடியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், அது எதுவும் முடியாமல், பெருமழையில் நனைந்த ஒரு கோழிக்குஞ்சின் உதறலோடு என் பின்னால் நிற்கிறான் டொமினிக்.

ப்பா கொல்கத்தாக்காரன், அம்மா அயர்லாந்துக் காரி என்பது டொமினிக்குக்குப் புரிய ஆரம்பித்தபோது, அவர்கள் இருவருமே அவனுடன்  இல்லை. மரணம், தொலைதல், விடுபடல், விட்டொழித்தல் இதில் எதுவென அவன் அறிந்துகொள்ளவும் இல்லை. பூர்வீகம் தேடியலையும் வாழ்வு இதுவரை அவனுக்கு வாய்க்கவில்லை. அன்றாடங்கள் அகலவே பெரும் போராட்டம் தேவைப்பட்டது.

கடந்தகால இழிவுகள், பெருமிதங்கள் எல்லாம் ஒருபோதும் நிகழ்காலப் பசியைப் போக்கிவிடுபவை அல்ல என்பதை, டொமினிக்கின் பட்டினிகள் நிறைந்த நாட்கள் அவனுக்கு உணர்த்தியிருந்தன.
இந்தத் தொடர் அலைக்கழிப்பில் அவன் திருவண்ணாமலையை அடைந்தபோது, தன் வாழ்வின் முப்பத்து ஏழு வருடங்களை இழந்திருந்தான்.

ஆஸ்ரம அமைதி, எப்போதாவது அதைக் கீறி எழும் மயில்களின் சத்தம், மதியச் சாப்பாடு, ஃபில்டர் காபி... இவை எதுவும் ஆரம்பம் முதலே அவனுக்கு ஏனோ பிடிக்காமல்போனது. அதன் பின்பக்க வழியே நீளும் மலையேறும் பாதை, விரவிக்கிடக்கும் சரளைக்கற்கள், சிறு குகைகள், எலுமிச்சம்பழ வாசனைகொண்ட மஞ்சள் புல் புதர்கள், சில்லிட்ட நீரூற்றுகள், அழுக்கேறி வாய் நாறும் சாமியார்கள்... எல்லாவற்றில் இருந்தும், அவன் வெகுதூரம் விலகிப்போய்க்கொண்டிருந்தான்.

சமுத்திர ஏரிக்கரையின் மேல் ஊர்க்காவல்போல் நிற்கும் அந்தக் கரிய பனைமரங்கள். கரைக்கும் கீழ் வியாபித்திருக்கும் புளியமர நிழல்கள்தான் அவனை அப்படியே இருத்திக்கொண்டன.
ஏதோ ஓர் உந்துதல்பெற்று அவன் என் கையை விடுவித்து வீட்டுக்கு உள்ளே போனான். எங்கள் எல்லோர் கண்களும் அவன் மீதே இருந்தன. அடுத்த பத்தாவது நிமிடத்தில், ஐஸ்கட்டிகள் ஒட்டியிருந்த எலுமிச்சை பழச்சாறு நிரம்பிய பெரிய கண்ணாடி டம்ளர்களை ஒரு மர ட்ரேயில் அடுக்கிக்கொண்டு வெளிவந்தான். நேராக வந்து, விழுந்து எழுந்து அதன் பின் தரையையே வெறித்துக்கொண்டிருந்த சக்திவேல் முன் நின்று, ‘‘ப்ளீஸ் டேக் இட்’’ என்றான். அவன் முகத்தைக் கவனித்தேன். கருணை ததும்பும் முகம்.

அவன் தலையுயர்த்திப் பார்த்துவிட்டு, பின் கவிழ்ந்துகொண்டான். அந்த வீட்டு ஓனரும், நானும், கார்த்தியும் ஜூஸ் டம்ளர்களைக் கையில் எடுத்தோம். மீதி டம்ளர்கள் ட்ரேயிலேயே இருந்தன. புளியமர நிழல் மனதை நிரப்பி உடலைக் கிடத்தியது. பசியைக் கண்டுகொள்ளவில்லை.

வன் பெரும்பாக்கம் சாலையில் இரும்பு கேட் போட்ட ஒரு பெரிய வீட்டை ஆனந் ஸ்கரியாவின் பண உதவியோடு முன்பணம் தந்து வாடகைக்கு எடுத்தான்.

டொமினிக்

சீஸனுக்கு வரும் வெள்ளைக்காரர்கள் அவனிடம் சுலபமாக வந்துசேர்ந்தார்கள். உணவோடுகூடிய தங்கும் இடம். கூடவே மீந்த விஸ்கியும், சில சமயங்களில் சோர்ந்த வெள்ளைக்காரிகளின் உடம்பும்கூடக் கிடைத்தன.

தனியாக அவனால் சமாளிக்க முடியாதபோதுதான், ராணி தன் ஆறு வயது மகள் சசியோடு உடன் வந்துசேர்ந்தாள். அவனுக்கு ராணி மீது உடல் ஈர்ப்பு எப்போதுமே இருந்தது இல்லை. தன்னைப்போலவே அநாதை என்ற ஒரு கருணை சுரந்தபடியே இருந்தது. அந்தக் குழந்தையை கனந்தம் பூண்டி ரமண மகரிஷி பள்ளியில் சேர்த்தான். அவளைக் கொண்டுபோக, கூட்டிவர சைக்கிள் வாங்கினான். விருந்தினர்களை ராணியும் அவனும் சேர்ந்து கவனித்தார்கள்.

ராணியின் முன்கதையை அவன் ஒருபோதும் கேட்டது இல்லை. ரணங்கள் அதுவாக ஆறிவிடும். ஆனந் கொடுத்த முன்பணம் ஒரே சீஸனில் அடைந்து அவன் முதலானது. பின்னிரவு வரை தூக்கம் இல்லாமல் தவித்த அவன் இரவுகள், வலி நிறைந்தவை. மொட்டைமாடியில் தகரம் அடித்து, தனக்கான அறையை அவனே வேய்ந்துகொண்டான்.

இது பிளாட்பாரத் தங்கலையும், புளியமர நிழலையும் தாண்டிய அடுத்த நிலை. ராணியும் அவளது மகளும் சமையலறையோடு கூடிய கீழ் வீட்டில் இருந்தார்கள். ஒருநாளும் அவர்களோடு உட்கார்ந்து பேச நேரம் இருந்தது இல்லை அவனுக்கு. சசியை சைக்கிள் கேரியரில் உட்கார்த்தி வைத்து ஸ்கூலுக்குக் கூட்டிப்போகும்போது, எதிர்ப்படும் குளிர்காற்றில் அடக்கிவைத்த அத்தனையையும் கொட்டிக் கொண்டே போவான். சசி அதைக் கேட்கிறாளா என ஒருநாளும் கவனித்தது இல்லை. அந்தப் பேச்சில் அவன் நினைவுகள் எப்போதும் ததும்பியது இல்லை. சில சமயம் பாடல்கள், இவை எப்போதும் விசித்திரமாக இருந்தது சசிக்கு.

வெளிக்கசிவு எதுவுமின்றி அந்தச் சிறுபெண் எப்போதும் மௌனத்தால் இறுகியிருந்தாள். அவள் பேச்சற்று இருந்ததே எல்லோரையும் நிறைத்துக்கொண்டதாகத் தெரிந்தது அவனுக்கு.

அந்த இறுக்கம் டொமினிக்குக்குப் பிடித்திருந்தது. அவன் குதூகலமாகிக் காற்றில் மிதக்கும்போது எல்லாம், சசிதான் அவனை எப்போதும் தரைக்கு இழுத்துவந்தவள்.

ன்றும் இல்லாமல் எதற்காக இன்று அதிகாலையிலேயே சக்திவேல் வந்தான்? இவன்தான் என் புருஷன் என ராணிதான் டொமினிக்குக்கு அவனை அறிமுகப்படுத்தினாள். அவனை நோக்கி நீட்டிய டொமினிக்கின் கையை உதறினான் சக்திவேல். அதில் ஒரு முரட்டுத்தனம் இருந்தது.

எதிர்பாராத ஒரு தருணத்தில் டொமினிக் முகத்தில் காறித்துப்பி அந்தக் காலையை வன்மமாகத் தொடங்கினான் சக்திவேல்.

தரையில் சாத்திவைக்கப்பட்டிருந்த டிரம் கிழிந்தது. சரமாரியாக அவ்வப்போது டொமினிக்குக்கு அடி விழுந்தது. ராணி அவனைத் தடுக்க இயலாமல் பதுங்கினாள். சசியின் முகம் மேலும் இறுகி எந்த நேரமும் வெடித்துவிடும்போல ஆனது.

என்ன யோசித்தும் எதற்காக இந்தத் துவம்சம் என டொமினிக்கால் புரிந்துகொள்ள முடியவில்லை, ராணியின் இந்த மௌனத்தையும் சேர்த்து.

புதுசுபுதுசாக யார் யாரோ வந்து உட்கார்ந்தார்கள். டொமினிக்கின் உடல் நடுக்கத்தில் இருந்தது. ரத்தக்கசிவுதான் தாங்க முடியாத வலியைத் தந்தது. என்ன முயன்றும் இது எதனால் என அவனால் யூகிக்கவே முடியாமல்போனது. ராணியையும் சசியையும் யாராலும் டொமினிக்கைவிட அக்கறையோடு கவனித்துக்கொள்ள முடியாது. அத்தனை அக்கறை, அத்தனை ப்ரியம்.

‘‘இன்னும் ஒரு படி மேலே போ டொமினிக்.இன்னும் ஏறு…'' உயரம் சறுக்கியது, ஏறினான்.

டொமினிக்... இன்னொருவன் மனைவி, குழந்தை மீது உனக்கு ஏன் அக்கறை… ப்ரியம்? ஏணிக்கு அருகில் சக்திவேல் நின்றிருந்தான். சட்டெனச் சறுக்கி தரைக்கு வந்தான்.

ஒரு கணத்தில் டொமினிக்குக்கு எல்லாம் புரிந்தன. வாழ்வின் ரகசிய முடிச்சுக்கள் ஏதோ ஓர் எதிர்பாராத தருணத்தில்தான் அவிழ்கிறது. தூக்கிச் சுமந்ததை நழுவவிட்டுத் துறந்தான்.

டொமினிக் லேசானான்... முகம் தெளிந்தது. அவன் திடீரென வீட்டுக்குள் பிரவேசித்தான். போன வேகத்தில் வெளியே வந்தான். மிகச் சிறிய ஒரு டிராவல் பேக் மட்டும் அவன் வலதுபக்கத் தோளில் தொங்கியது.

எதிர்புறம் நின்றிருந்த சக்திவேலை நெருங்கி, வீட்டைக் காண்பித்து, ‘‘நான் போறேன், நீ இருந்துக்கோ” என்று சைகையிலும் தப்புத்தப்பான தமிழிலும் சொன்னான்.

சக்திவேல், முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். அது மிகச் செயற்கையாக இருந்தது.

ராணி அவனை ஏறெடுத்துப்பார்த்து சட்டெனக் கவிழ்ந்துகொண்டாள். நிமிடத்தில் அவள் பார்வை அவன் மீது பட்டுத் திரும்பியது. சசியை மட்டும் தரையளவு குனிந்து தன்னுள் அணைத்துக்கொண்டான். ஒரு தமிழ் சினிமாவின் உருவாக்கப்பட்ட காட்சிபோல அந்த இடம் விரிந்துகொடுத்தது.

திறந்திருந்த கேட் வழியே டொமினிக் சட்டென வெளியேறினான்.

வெளியே நின்று இருபக்கச் சாலைகளையும் கவனித்தான். அவன் செல்லவேண்டிய திசை சற்றுமுன் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அது தெற்கு. அவன் நடக்க ஆரம்பித்தான். எப்போதும் டொமினிக்கின் நடையில் ஒரு நளினம் இருக்கும். இன்று அவன் நடை வேகமெடுத்து ஓட்டமாக மாறியிருந்தது.

வாடகை வீடுதான் எனினும் அது அவன் வீடு. ஒரு கரும்பிசாசு மாதிரி வாசலை அடைத்து நின்றது அவன் புல்லட்.

ஆனந்திடம் இருந்து பெற்ற பணத்தில் இருந்து ஆரம்பித்த உயர்ந்த வாழ்வு சில நிமிடங்களில் அவன் என்ஃபீல்ட் முதுகுக்குப் பின்னால் போய்விட்டது. அவனால் திரும்பிப் பார்க்க முடியாது.
திரும்பினால் சக்திவேல் தெரிவான்; தரையில் உறைந்துபோய் ராணி உட்கார்ந்திருப்பாள்; சசியின் தவிப்பு மீண்டும் அவனை ஈர்க்கும்.

டொமினிக், பெரும்பாக்கம் சாலையில் இன்னும் வேகம் கூட்டி நடந்தான். நடையில் ஒரு தீர்மானம் இருந்தது.

டொமினிக்

அடுத்த நாள் காலை, ஆணாய்பிறந்தானில் கூலி வேலைக்குப்போன பெண்களின் குரல்கள் வியந்து வியந்து பேசிக்கொண்டன.

``வெள்ளக்காரன்டி, கால்சட்டை மட்டுந்தான் போட்டிருக்கான். வெளஞ்ச வெளச்சலுக்கு நடுவால இருந்து எழுந்தான் பாரு... வரப்பு முழுக்கக் கொத்துக்கொத்தா கொழந்தைங்க... அம்மாஞ் சீக்கிரம் எப்படித்தான் நம்மூருக் கொழந்தைங்க முழுக்க அவங்கூட போச்சுங்களோ?”

“நம்ம அம்புட்டுப் பேரு பொடவையும் அதுங்க கையில கலர் கலரா என்னமா அசையுது!”

“வரப்பு மேல குபீர்னு  எழுந்து வந்துச்சுங்க பாரு, எம்மாம் அழகு. அதுங்க கூடவே போயிடலாமுனு இருந்துச்சு!”