Published:Updated:

நீச்சல் கலை - மகுடேசுவரன்

நீச்சல்  கலை - மகுடேசுவரன்
பிரீமியம் ஸ்டோரி
நீச்சல் கலை - மகுடேசுவரன்

அனுபவம்படங்கள் : அருண் டைட்டன், சசிக்குமார்

நீச்சல் கலை - மகுடேசுவரன்

அனுபவம்படங்கள் : அருண் டைட்டன், சசிக்குமார்

Published:Updated:
நீச்சல்  கலை - மகுடேசுவரன்
பிரீமியம் ஸ்டோரி
நீச்சல் கலை - மகுடேசுவரன்
நீச்சல்  கலை - மகுடேசுவரன்

ங்கள் பகுதியின் பெருஞ்செல்வந்தர்களில் ஒருவர் அவர். பெரிய உற்பத்திக்கூடம் உள்ள வளாகம். நாடெங்கும் விற்கும் ஆடையை உற்பத்திசெய்து அனுப்புகிறார். அவருக்கு ஒரே மகன். கல்லூரி முடித்துவிட்டு தந்தையின் நிர்வாகத்தைக் கையிலெடுத்தவராக, அப்போதுதான் நிறுவனத்துக்குள் நுழைந்திருக்கிறார்.

இதைக் கொண்டாடும்விதமாக, நண்பர்களோடு பக்கத்து மாநிலத்துக்குச் சுற்றுலா சென்றார். சென்ற இடத்தில் உற்சாகம் மிகுந்து, வழியில் கண்ட நீர்க்குளத்தில் குளிக்க விரும்பியிருக்கின்றனர், அவருடன் சென்ற நண்பர்கள். எல்லோரும் குளித்தனர். நம்மவர் குளிக்காமல் குளக்கரையோரப் படிகளில் கால்வைத்திருந்தவர் வழுக்கி விழுந்தார். விழுந்து மூழ்கியவர் மூழ்கியவர்தான். மீண்டும் எழவே இல்லை.

மூழ்கியவரை மூச்சு அடங்கியவராகத்தான் வெளியே எடுத்தார்கள். ஒரே காரணம், அவருக்கு நீச்சல் தெரியாது. இன்று அந்த நிறுவனம் தன் பொலிவிழந்து நிற்கிறது. நூற்றுக்கணக்கில் பணியாளர்கள் நடமாடிய அவ்வளாகம் இறுகப்  பூட்டப்பட்டிருக்கிறது.  

இந்தச் சம்பவத்தை நினைவுகூர்வதற்குக் காரணம், நீச்சலின் முக்கியத்துவத்தை உணர்த்தவே. கடந்த ஆண்டின் இறுதியில் பெய்த பெருமழைக்கு, சென்னையில் நீச்சல் தெரிந்தவர்கள் சிலர் வெள்ளத்தின் போக்கில் சற்றே நீந்திச் சென்று உயிர்பிழைத்தார்கள். நீச்சலுக்கெல்லாம் கட்டுப்பட்டு ஓடிய வெள்ளம் அது இல்லைதான். என்றாலும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டாலோ அல்லது வேறு காரணத்தாலோ, நம்மைச் சூழ்கின்ற நீரை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான் நீச்சல் கலையின் அடிப்படை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்றுக்கொடுக்கின்ற கலையாக, பணம் புழங்கும் தொழிலாக நீச்சலைத் தற்காலம் மாற்றிவிட்டது. நாமெல்லாம் நீச்சல் கற்ற நீர்க்குளங்களை எண்ணிப் பார்த்தால், இக்காலச் சிறார்களுக்கு அந்த வாய்ப்பே இல்லை. அதனால், நீச்சல் குளம் கட்டி, கற்றுக்கொடுக்கிற கலையாக நீச்சல் மாறியதில் வியப்பு இல்லை.

பலரைப் போலவே என் இளமையும் கிராமத்து வாழ்க்கையால் ஆனதுதான். எங்கள் பூர்வீக நிலம், வானம் பார்த்த பூமியெனப்படுகின்ற புன்செய்க்காடுகள். அந்த நிலத்தில் அழகிய கிணறொன்றை வெட்ட வேண்டும் என்பதே என் பாட்டனாரின் கனவாக இருந்தது. அவ்வாறு வாயகன்று கிடக்கும் கிணற்றில் பேரன், பேத்திகள் குதித்து மகிழ வேண்டும் என்னும் ஆசையோடிருந்தார். சுற்றிலும் இருந்த காடுகளில் ஒருசில கிணறுகள் தோண்டப்பட்டு, நல்ல ஊற்றெடுப்பும் இருந்தது. அதுபோல், தன்னுடைய காட்டிலும் தோண்டப்பட்ட கிணற்றில் தெளிந்த தண்ணீர் வானம் பார்த்துக் கிடக்க வேண்டும் என்று கனவு கண்டார்.

அவருடைய காலத்தில் அக்கனவு நிறைவேறவில்லை. எங்கள் தந்தையார் காலத்தில் புன்செய்யை விற்றுத் தீர்த்தார். கிணற்றுப் பாசனத்தில் தன் காட்டு மண் குளிர்ந்து விளைய வேண்டும் என்னும் என் பாட்ட னாரின் கனவு இறுதி வரை நிறைவேறவே இல்லை. இன்று கிணறு என்றால், ஆழ்குழாய்க் கிணறுகள்தாம். பாட்டனாரின் கிணற்றுக் கனவை நான் ஒருவாறு நிறைவேற்றினேன் என்றுதான் கூறவேண்டும். ஆனால், நான் அகழ்ந்தது ஆழ்துளைக்கிணறு. அதைக்கொண்டு வீட்டுக்குப் பயன்படும் நீரை இறைத்துக்கொள்ளலாம். நீந்திக் களிப்பதற்கு அக்கிணறு பயன்படாதே.

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் காலடியில் நிலத்தடி நீர்க்கால் பாய்ந்து சென்றது என்பதை நீங்கள் நம்ப முடியாதுதான். இன்று நிலத்தடி நீரூற்றுகள் யாவும் தூர்ந்துவிட்டன. ஆழ்குழாய்க் கிணறுகள் அளவின்றி அமைக்கப்பட்டதால், கிணறுகளுக்கு நீர்சுரந்த நீர்க்கால்கள் எல்லாம் வற்றிவிட்டன. ஆயிரம் அடிகள் வரை தோண்டப்படும் ஆழ்குழாயால்கூட நீரூற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு நீர்க்கால்களாக உறிஞ்சித் தீர்த்துக்கொண்டே போகிறோம். அதனால், கிணற்று மட்டங்கள் யாவும் நீரோடு தொடர்பறுந்துவிட்டன.

நாம் குடியிருக்கும் இடம் எதுவோ, அதனருகில் உள்ள நீர்நிலையிலிருந்தே நமக்கான குடிநீரும் புழங்குநீரும் பெறப்பட வேண்டும். அதுதான் நாம் வாழுமிடம் வாழத் தகுந்ததாக இருக்கிறது என்பதற்குச் சான்று. பிறிதோரிடத்திலிருந்து குடிநீர்த் திட்டங்கள் மூலம் குழாயமைத்துக் கொண்டுவரும் நீரைத்தான் குடிக்கிறோம் என்றால், நாம் வசிக்கும் இடத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் தாண்டவமாடுகிறது என்பதே உண்மை. தற்காலிகமாக, குடிநீர்த் திட்டங்கள் மூலம் அந்தப் பஞ்சத்தைத் தவிர்த்துவருகிறோம். `எங்களுக்குக் கிருட்டிணை ஆற்றுத் தண்ணீர் வந்துவிட்டது’, `எங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வருகிறது’, `எங்களுக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து தண்ணீர் வருகிறது’ என்பவை எல்லாமே, ‘நாங்கள் தண்ணீர்ப் பஞ்சத்தால் தவிக்கிறோம்’ என்பதை மறந்த பேச்சு.

அப்போதெல்லாம் மழை பெய்தால், இப்போதுபோல் சடசடவென்று கொட்டித் தீர்க்காமல், எண்ணி ஐந்தாறு துளிகளாய் விழாமல், நின்று நிதானமாக மணிக்கணக்கில் பெய்யும். அவ்வாறு நிதானமாகப் பெய்தாலே, மண்ணில் நீர்த்துளிகள் செறிவாக இறங்கிவிடும். மண்ணில் இறங்கியதுபோக, மீதமாகும் மழைநீர் யாவும் சிறிய நீர்க்கால்களாகப் பெருகி, அருகிலுள்ள குளம், குட்டைகளில் சென்று தேங்கும். குளம், குட்டைகள் நல்ல மணற்பாங்கோடும் கரை வலுவோடும் இருக்கும். குளம், குட்டைகளை நிறைத்து, ஓடை வழிபிடித்து, ஏரியில் சென்று தேங்கும். ஏரி வழிந்து சிற்றாறுகளாகி, கடலில் சென்று சேர்கின்ற நதியை அடையும். அத்தகைய மழையைப் பார்த்தே நாளாகிவிட்டது. மழை பெய்தால், கோரமழையாய்ப் பெய்கிறது அல்லது மண்ணுழவுக்கே உதவாத சிறுமழையாய் ஏமாற்றுகிறது. இயற்கைச் சூழலே மாறிப்போய்விட்டது.

நீச்சல்  கலை - மகுடேசுவரன்

அவையெல்லாம் தீராத கதைகள். மீண்டும் நம் நீச்சல் விவகாரத்துக்கே வருவோம். என் வீட்டுக்கருகிலேயே குட்டை ஒன்று இருந்தது. நன்கு கரையெடுத்து, படித்துறை அமைத்து, ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்த்தேக்கம்... குளம். அவ்வாறில்லாமல் இயற்கையாகத் தோன்றிய நிலையிலேயே இருப்பது குட்டை. அதனால்தான் குட்டை என்கிறேன்.

சுற்றுவட்டார மேட்டில் பெய்கின்ற மழைநீர் இந்தக் குட்டையில் வந்து தேங்கிவிடும். அவ்வாறு தேங்கும் நீர், சில மாதங்களுக்கு வற்றாமல் இருக்கும். ஐந்து நாட்கள் ஓயாது பெய்த மழையொன்று எனக்கு நினைவிருக்கிறது. எந்நேரமும் வானம் துளித்துக்கொண்டே இருந்தது. அந்த மழைக்கு அந்தக் குளம் கரை ததும்பி நிறைந்துவிட்டது. மழை முடிந்து மறுநாள் அடிக்கும் வெய்யில்போல் ஒரு தகத்தகாய பொழுது இருக்க முடியுமா? அதுபோல், பொன்வெய்யில் பூத்த மறுநாளில் தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் சிறுவனாகிய நான், அந்தக் குட்டையருகே போனேன்.
புது மழைத்தண்ணீரின் வாசம் இன்றைக்கும் எனக்கு நினைவிருக்கிறது. அந்தக் குட்டை காய்ந்திருந்தபோது உள்ளே இறங்கி விளையாடிய இடம்தான். அதனால், அந்த நீரடி நிலம் எனக்கு அத்துபடி. குட்டைக்குள் இடுப்பளவுத் தண்ணீரில் இறங்கி நின்றேன். நீரில் இறங்கி நிற்கையில் நாம் எடை கழிந்தவர்களாகிறோம். நம் எடையை நீர்த்தாய் வாங்கிக்கொள்கிறாள். நாம் மிதக்கவேண்டும் என்பதற்காக, இயற்கை வழங்கிய முதல் சலுகை அது.

என் பெற்றோரும் அருகிலுள்ளவர்கள் பலரும் அங்கே வந்துவிட்டனர். எல்லாரும் நீரில் இறங்கிக் களித்தனர். ஆழத்திற்குச் செல்வதற்கு நான் மறுத்துவிட்டேன். நீரைப் பற்றிய பயம் தெளிந்தது. கொஞ்சம் கொஞ்சமாகப் படுத்து கைகளை வீசி நீச்சல்போன்ற ஒன்றைச் செய்துகொண்டிருந்
தேன். ஆனால், கால்கள் தரையைத் தொட்டு ஏமாற்றிக்கொண்டிருந்தன. அந்தக் குட்டைதான் எனக்குத் நீர்த்தாய். அங்கே நான் நீச்சல் பழகவில்லை என்றாலும் நீரைப் பழகினேன்.

இயன்றபோதெல்லாம் குட்டையில் சென்று குதித்தாடுவது என் வழக்கமாக இருந்தது. இரவுதோறும் குட்டையில் குடியிருக்கும் தவளைகள் தொடர்ந்து கத்திக்கொண்டிருக்கும். உயிரற்ற ஊரில் வாழும் நம் பிள்ளைகளுக்கு இன்று ‘தவளைச் சத்தம்’ என்றால் என்னவென்று தெரியாது. சில மாதங்களில் அந்தக் குட்டையும் வற்றிவிட்டது. குட்டையைச் சுற்றிலும் இருந்த வயல்களில் நெல்மணிகள் விளைந்திருந்தன. குட்டையின் நீர்வளம் அப்படியே அருகிலிருந்த காடுகளின் பச்சைவளமாக மாறியிருந்தது.

பிறகு ஒரு ஞாயிற்றின் நண்பகலில், ஊரார் அனைவரும் அருகிலிருந்த ஒரு கிணற்றங்கரையில் கூடிவிட்டார்கள். அது வற்றாத ஊற்றுடைய கிணறு. நீச்சல் தெரிந்தவர்கள் மேலேயிருந்து குதித்து விளையாடினார்கள். எனக்கும் அவ்வாறு குதித்து நீந்த கொள்ளை ஆசை. ஆனால், முன்பிருந்த குட்டைபோல் இது இடுப்பளவுத் தண்ணீருள்ள இடம் இல்லையே. விழுந்தால், மூழ்கவேண்டியதுதான். இதுநாள்வரை செய்து பழகியிருந்தது, நீந்துவதைப்போன்ற பாவனைதானேயொழிய, நீச்சல் இல்லை. இங்கு உண்மையாய் நீந்த வேண்டும். நீந்திக்கொண்டிருந்த என் தந்தையின் நண்பருக்கும், என்னருகில் நின்ற என் தந்தைக்கும் இடையில் ஏதே கண்ணசைவுச் செய்திகள் பரிமாறப்பட்டன. நான் அயர்ந்த நேரமாகப் பார்த்து என்னை அப்படியே தூக்கி, கிணற்றுக்குள் போட்டுவிட்டார் என் தந்தை. கண்ணிமைக்கும் நேரம்தான். என் கால்பற்றுதல் நீங்குகிறது. நான் மிதந்து மிதந்து நீரை நோக்கி விழுகிறேன். தொபுக்கடீர். தண்ணீரில் விழுந்துவிட்டேன். விழுந்த வேகத்தில் நீருக்குள்ளே மூழ்குகிறேன். என்னைச் சுற்றிலும் பச்சைத்தண்ணீர். நீர்க்குமிழ்கள் மேலே போய்க்கொண்டு இருக்கின்றன. மூழ்கிய வேகத்தில் மேலே வருகிறேன். அன்று வாயிலும் மூக்கிலும் ஏறிய தண்ணீரின் வாசம் இன்றைக்கும் ஒவ்வொரு நீராடலிலும் நினைவுக்கு வரும். மேலே வந்து நீர்மட்டத்தில் கழுத்தளவு  தண்ணீரில், அந்தக் கிணற்றிலிருந்து கரை மீது நின்றோரையும் வானத்தையும் பார்த்த ஒரு பார்வை இருக்கிறதே. மலைமுகட்டிலிருந்து சமவெளியைப் பார்க்கும் ஞானதிருட்டிக்கு எவ்விதத்திலும் தாழ்ந்தது இல்லை அது. ‘இப்படிச் செய்துவிட்டாயே தந்தையே…’ என்று என் கண்கள் என் தந்தையாரை நோக்கி இறைஞ்சின. அவர் மேலே புன்னகையோடு நின்றிருந்தார்.

எனக்குத் தெரிந்த அளவில் கைகால்களை அசைத்துத் தண்ணீரை அளைந்து கொண்டிருந்தேன். நான் மூழ்கவில்லை. அதேபோல் நீந்தி நகரவில்லை. நீரில் விழுந்த இடத்திலேயே ஒருவாறு தேங்கிக் கொண்டிருந்தேன். என்னால் மூச்சுவிட முடியவில்லை. என் வலுவெல்லாம் தீர்ந்துகொண்டிருந்தது. இதற்கு மேல் முடியாது என்கின்ற நிலை வந்தது. என் பின்னால் நீந்தி வந்த என் தந்தையின் நண்பர் என்னை இடுப்போடு சேர்த்தெடுத்து கிணற்றுச் சுவரருகே கொண்டுபோய்ச் சேர்த்தார். என் தந்தையிடம் காணப்பட்ட அதே புன்னகை இப்போது அவர் முகத்தில். “அவ்வளவுதான்… ஒண்ணுமில்ல… நீச்சல் பழகிட்ட… அவ்வளவுதான்…” என்றார். இந்த எல்லா துன்பங்களுக்கும் நீங்கள்தான் மூல ஊற்றா என்பதுபோல் அவரைப் பார்த்தேன்.

நான் கிணற்றுச் சுவரைப் பிடித்துக்கொண்டு கண்களில் நீர்வர அரைகுறையாய் ஒரு சிரிப்பு சிரித்தேன். அப்பகுதியில் வற்றாமைக்குப் புகழ்பெற்ற, பல்லாண்டுகளாய் நீர்சுரந்து பாவித்த பெருங்கிணற்றில் என் முதல் நீச்சலைப் பழகினேன். சற்றே முயன்று கிணற்றுச் சுவர்களுக்கருகிலேயே நீந்தி நீந்திப் பழகினேன். இந்தச் சுவரிலிருந்து அந்தச் சுவரைப் பாய்ந்துபோய் பிடித்தேன். ஆம். நான் நீச்சல் பழகிவிட்டேன். நன்கு நீந்துகிறேன்.

பிறகு, அதே கிணற்றில் கரையிலிருந்து பாய்ந்து தலைகீழாகக் குதித்து கிணற்றுத் தண்ணீரை அதிரவும் செய்தேன். அருகில் வேறொரு பகுதியிலிருந்த ஏரியொன்றில் இக்கரையில் குதித்து அக்கரையில் கரையேறினேன். திருநள்ளாற்றுக் குளத்தில் என் தாத்தா தண்ணீருக்குள் நீந்த முடியாமல் தத்தளித்தபோது கையைப் பிடித்து இழுத்துவந்து கரைசேர்த்தேன். ஆந்திரத்தின் மகாநந்தி, ஏகண்டி ஆலயங்களில் உள்ள தெளிந்த நீர் ததும்பும் புனிதக் குளங்களில் வாழ்வின் நோக்கம் தீர்ந்ததைப்போல் நீராடியிருக்கிறேன். மேட்டூர் அணையிலிருந்து இரண்டு லட்சம் கன அடி நீர் திறந்துவிட்டபோது கரைமேவிய நீரில் குளித்ததும் உண்டு. திருவையாற்றுத் தியாகய்யர் படித்துறையில் பெருவெள்ளம் சுழன்றோடியபோது, படித்துறைத் திட்டிலிருந்து இருபதடிக்குத் தாவிக்குதித்து, ஆற்று வெள்ளச்சுழலில் ஒரு புரட்டுக்குள்ளாகி நெளிந்து மேலேறிக் கரையேறியதும் உண்டு. காவிரியில் நீராடாத இடம் இல்லை. தலைக்காவிரித் தண்ணீரைத் தலையில் தெளித்து, சீரங்கப்பட்டினத்தில் நீருக்கு வெளியே தலைகாட்டும் பாறைகள் தோறும் குளித்திருக்கிறேன். தலைக்காட்டுக் காவிரியிலும் கொடுமுடிக் காவிரியிலும் இக்கரையிலிருந்து அக்கரை நீந்திக் கடந்தாயிற்று. சிவசமுத்திர ஒகேனக்கல் நீர்வெளியில் நின்றாயிற்று. கோதாவரி, துங்கபத்திரை, பெண்ணாற்றங்கரைகளில் அலைந்து திரிந்தாயிற்று. கடல்கள்தோறும் கிடந்தாயிற்று. எல்லாம் அந்தக் குட்டையும் கிணறும் கற்றுக்கொடுத்த நீர்வித்தையால்தான்.

இன்றைக்கு என் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். `கோடை விடுமுறையைப் பயனுறக்கழிக்க எங்களிடம் நீச்சல் பழக வாரீர்...’ என்ற பலகைகளைப் பார்க்கிறேன். எல்லாம் சதுரமாய்க் கட்டப்பட்ட சிறு நீச்சல் தொட்டிகள். அளந்துவைக்கப்பட்ட ஆழங்கள். இவற்றில் களிப்பு மாறாமல் கற்றுக்கொள்ளும் நீச்சலால் என்ன பயன்? நீர்க்கரை எப்படி இருக்கும் என்று இவை கற்றுக்கொடுக்குமா? நீரடியில் உள்ள புதைமணலை உணர முடியுமா? கோதாவரியில் நீந்திக்கொண்டே காலை மணற்படுகையில் அழுத்தினேன், வெண்ணெய்போல் கால் உள்ளிறங்கியது. பத்தடிப் புதைகுழி அடியில் இருந்திருக்கிறது. அப்படியே நீந்தியெழுந்து உடலைத் தூக்கி தண்ணீர்ப் பரப்புக்குக் கொண்டுவந்து வேறோர் இடத்தில் கரையேறினேன். இது கற்றுக்கொடுப்பதால் வருமா? நீந்தத் தெரியும் என்று பெருமையாய்ச் சொல்லிக்கொள்வதைத் தவிர, நீருள் தத்தளிக்கும் ஒருவரைக் காப்பாற்றப் பயன்படுமா? என்னை என் தந்தையார் நீரில் தூக்கிப்போட்டபோது நானுணர்ந்த நீரை இவர்கள் உணர்வார்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism