Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை - 37

பாலைவன மான்கள்!கா.பாலமுருகன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

பிரீமியம் ஸ்டோரி
நெடுஞ்சாலை வாழ்க்கை - 37

ராஜஸ்தான்  மாநிலத்தில் ஜோத்பூர், நாகூர், சுஜன்கர் தாண்டிச் சென்றுகொண்டிருந்தோம். வெளிர் நிறத்தில் மணல் வெளியில் ஆங்காங்கே நிற்கும் சிறு மரங்கள், சின்னத் தாவரங்கள் தவிர, எதுவும் தென்படவில்லை. குறுகலான அந்தச் சாலை வளைந்து நெளிந்து மேடும் பள்ளமுமான மணல் வெளியை ஊடுருவிச் சென்றுகொண்டிருந்தது. பகலின் வெயில் லேசாக இருந்தாலும்,  பச்சயம் அற்ற வெறுமையால் கண்கள் கூசுகின்றன. ஆங்காங்கே சின்ன கிராமங்கள், சாலையில் குறுக்கிடும் கால்நடைகள் என அந்த மணல்வெளியில் மனிதர்கள் உயிர்ப்புடன் இருப்பதைச் சொல்கின்றன. மிக முக்கியமாக, ராஜஸ்தானில் மான்கள் ஏராளமாக இருக்கின்றன. சாலையோர வேலிக்குள் மேயும் ஆடுகளுடன் மான்களும் இருந்தன. வெயில் உச்சியை எட்டியபோது சமையலுக்காக, ஒரு சிறு மோட்டல் ஒன்றில் லாரியை நிறுத்தினார் மணி.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 37

அந்தச் சாலையில் போக்குவரத்து மிகக் குறைவு. எப்போதாவதுதான் வாகனம் கண்ணில் படுகிறது. ஆனாலும், அந்தப் பாலை வெளியில் ஹோட்டல் வைத்து நடத்துவது ஆச்சரியமாக இருந்தது. மணி, அங்கிருந்த தண்ணீர்த் தொட்டிக்குப் பாத்திரங்களை எடுத்துச் சென்றார். பரமேஸ்வரன் மோட்டலில் கயிற்றுக் கட்டிலில் சாய்ந்தார். நான் கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். அது நால் வழிச் சாலை அல்ல; சாதாரணமான இரு வழிச் சாலை. தெற்குப் பகுதியில் இருந்து பஞ்சாப் மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களுக்கு இது வசதியான, டோல்கேட் வரி செலுத்தத் தேவையில்லாத வழி. லாரிகளைத் தவிர, வேறு போக்குவரத்து வாகனங்கள் அவ்வளவாக இல்லை. அதனால், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், இமாச்சல் செல்லும் லாரிகள் மட்டும் இந்தப் பக்கம் வருகின்றன. வியாபாரம் பெரிதாக இருக்காது என்றாலும் மோசமாக இருக்காது என்றார்.

‘‘தண்ணீர்ப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’’ என்று கேட்டபோது, தரையில் அகலான சிமென்ட்டால் கட்டப்பட்ட வட்டத் தொட்டி ஒன்றைக் காட்டினார். ‘‘மழை பெய்யும்போது சிமென்ட் தரையில் விழும் நீர், தொட்டிக்குள் சேகரமாகும். அதைத்தான் கால்நடைகளுக்கும் எங்களுக்கும் தேவைப் படும்போது எடுத்துப் பயன்படுத்துவோம். அரசே பைப் மூலம் குடிநீர் வழங்குகிறது’’ என்றார்.

அது பகலின் நீண்ட பயணமாக இருந்தது. மாலையில் ஹரியானா மாநிலத்தில் நுழைந்தோம். அதன் நில அமைப்பு சட்டென மாறிவிட்டது. ஆனால், புழுதி பறக்கும் சாலையில் கண்களை இடுக்கிக்கொண்டே பார்க்க வேண்டியது இருந்தது. பஞ்சாப் மாநிலத்தில் நுழைந்த பிறகுதான் புழுதி ஓய்ந்தது.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 37

பஞ்சாப் மாநிலத்தில் சிகுரூர் எனும் ஊரில் உள்ள தொழிற்சாலையில்தான் லோடு இறக்க வேண்டும். விடிவதற்கு முன்பு சென்றுவிடுவோம். “சிகுரூர், லூதியானாவுக்கு முன்பாகவே இருப்பதால், போக்குவரத்துப் பிரச்னை இல்லை’’ என்று சொல்லியிருந்தார் மணி. இரவாகிவிட்டதால், இருட்டில் பஞ்சாப் மாநிலத்தின் வளத்தைக் காண முடியவில்லை. அதிகாலை ஐந்து மணிக்கு சிகுரூர் இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் இருந்த அந்தச் சிறு தொழிற்சாலையின் வாசலில் நின்றது லாரி. செக்யூரிட்டியிடம் பில்லைக் காட்டியதும், ‘‘ஓனர் வர 10 மணியாகும். காத்திருங்கள். அவர் வந்த பிறகுதான் லோடு எங்கே இறக்குவது என்பது தெரியும்’’ என்றார். விடிவதற்காகக் காத்திருந்தோம்.

10.30 மணிக்கு வந்த ஓனர், ‘‘சரக்கை இரண்டு இடங்களில் இறக்க வேண்டும். இன்று இறக்க முடியுமா எனத் தெரியவில்லை. கேட்டுச் சொல்கிறேன்’’ என குண்டைத் தூக்கிப் போட்டார். நாங்கள் புறப்பட வேண்டுமே என்றதுக்கு, ‘‘சரக்கை இறக்கி வைக்க இடம் இல்லை. நீங்கள் நாளைதான் செல்ல முடியும்’’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். இரண்டு நாட்கள் லோடு இருக்கும் இடத்தில் காத்திருப்பதால் ஏற்படும் செலவை நினைத்து பெருமூச்சுவிட்டார் மணி. அன்று மதியத்துக்கு மேல் புறநகரில் இருந்த ஒரு குடோனில் ஒரு பகுதி சரக்கை இறக்கிய பிறகு மீண்டும் தொழிற்சாலை வந்து சேர்ந்தோம். இரவில் கடுமையான குளிர். ஆனால் லாரியின் கேபின், நால்வரின் மூச்சுக் காற்றில் சூடாகவே இருந்தது. தொழிற்சாலையில் குளியலறை இருந்ததால், பிரச்னை இல்லாமல் இருந்தது. அடுத்த நாள் மதியத்துக்கு மேல் லோடு இறக்க வேண்டிய முகவரி தந்தார்கள். அது, நகரத்தில் இருந்து 7 கி.மீ தூரம். அங்கே சென்று லோடு இறக்கிவிட்டு, வாடகை வாங்கிக்கொண்டு புறப்பட்டோம். சரக்கு இல்லாத லாரி அதிகமாகத் தடதடத்துக் குலுங்கிக் கொண்டே சென்றது. 

மீண்டும் இரவுப் பயணம். லூதியானா நகரை நள்ளிரவில் கடந்து பதான்கோட்டுக்கு முன்பு இருந்த தாபாவில் லாரியை நிறுத்தினார் மணி. ‘‘தூங்கி எழுந்து காலையில் செல்லலாம்’’ என்றார் மணி. குளிர் கடுமையாக இருந்தது. கேபினில் சுருண்டு தூங்கிவிட்டோம். அதிகாலையில் பதான்கோட் நகருக்குள் நுழைந்தபோது லேசாக சூரியன் எட்டிப் பார்த்தது.

பரமேஸ்வரன், ஜம்மு வரை சென்றிருக்கிறார்; மணி, பஞ்சாப்பைக் கடந்தது இல்லை. இருவருக்குமே காஷ்மீர் புதிய பாதைதான். பதான்கோட்டில் தமிழக லாரிகளைச் சந்தித்து, அவர்களது ஆலோசனையின் பேரில் மேற்கொண்டு பயணத்தைத் தொடர்வோம் எனத் திட்டமிட்டிருந்தார் மணி. பதான்கோட்டில் ஜம்மு நோக்கிச் செல்லும் சாலையில் இருந்த ஒரு பெட்ரோல் பங்க் முன்பாக லாரியை நிறுத்தினார் மணி. திரும்பிய பக்கம் எல்லாம் ராணுவத்தினர்தான். கூகுள் மேப்பை ஆன் செய்தால், சில கிலோ மீட்டரிலேயே பாகிஸ்தான் எல்லை இருப்பதைப் பார்த்து பகீரென்றது. தமிழகப் பதிவு எண் கொண்ட லாரிகள் சிலவற்றைப் பார்த்தோம். அவர்களிடம் பேசியபோது, அவர்கள் பிடிகொடுக்கவில்லை. ‘காஷ்மீரில் ஆப்பிள் லோடு கிடைக்கவில்லை. நாங்கள் ஜம்முவுக்குச் செல்கிறோம்’ என நம்மைப் பின்வாங்க வைக்கும் விதமாகவே பேசினார்கள். மிகக் குழப்பமான மனநிலையில் இருந்தார் மணி. காஷ்மீர் போகலாமா, வேண்டாமா என்ற ஊசலாட்டம் எங்கள் எல்லோருக்கும் வந்துவிட்டது.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 37

காஷ்மீரில் இருக்கும் தன் நண்பருக்குத் தெரிந்த லாரி ஏஜென்ட்டைத் தொடர்புகொண்டு பேசினார் மணி. அவர் வரச் சொல்லவும் உற்சாகமானோம். லாரிகளுக்கு மாலை 6 மணிக்கு மேல்தான் ஜம்மு மாநிலத்துக்குள் நுழைய அனுமதி. பஞ்சாப் - ஜம்மு மாநிலங்களைப் பிரிக்கும் எல்லைக் கோடு, ஓர் ஆறுதான். ஆற்றின் அக்கரைக்குச் சென்றால் ப்ரீபெய்டு செல்போன்கள் வேலை செய்யாது. போஸ்ட்பெய்டு போன்கள் மட்டுமே வேலை செய்யும். ஜம்முவில் தனியாக ப்ரீபெய்டு சிம் வாங்கித்தான் பேச முடியும். இதையெல்லாம் காஷ்மீர் ஏஜென்ட் மணியிடம் சொல்லியிருந்தார். மாலை ஆறு மணிக்காகக் காத்திருந்தோம்.

மணி ஆறு நெருங்கியதும் ஓரங்கட்டி நின்ற லாரிகளின் இன்ஜின்கள் உயிர் பெற்றன. அவசர அவசரமாக லாரியை ஸ்டார்ட் செய்தார் மணி. முந்துவதில் போட்டி ஏற்பட்டு, சாலை டிராஃபிக்கில் தத்தளித்தது. ஜம்மு மாநிலத்தில் நுழையும் அந்தப் பாலத்தில் ஏராளமான வாகனங்கள் நின்றிருந்தன.

- (நெடுஞ்சாலை நீளும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு