Published:Updated:

புலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்

புலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்
பிரீமியம் ஸ்டோரி
புலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்

அனுபவம்ஓவியம் : கார்த்திகேயன் மேடி

புலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்

அனுபவம்ஓவியம் : கார்த்திகேயன் மேடி

Published:Updated:
புலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்
பிரீமியம் ஸ்டோரி
புலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்
புலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முதலாவது வருடம் முடிந்திருந்தது. பனி கொட்டிக்கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில், சுவற்சர்லாந்தின் சூரிச் தொடரூந்து நிலையத்தில் அந்த இரண்டு பேரையும் நான் கண்டேன். ஒருவிதப் பதற்றமான முகத்தோடு “அண்ணை... தமிழா..?” என்று என்னைக்  கேட்டார்கள். இருவருக்கும், 17, 18 வயதுகளைத் தாண்டியிருக்காத பருவம். முதுகில் ஆளுக்கொரு பையைச் சுமந்திருந்தார்கள். குளிருக்கு ஏற்ற ஆடைகளை அணிந்திருக்க வில்லை. கதைக்கும்போது நடுங்கினார்கள். “அகதிகள் முகாமுக்குச் சென்று எங்களைப் பதிவுசெய்ய வேண்டும். அங்கு செல்வதற்கு எந்தத் தொடரூந்தில் ஏற வேண்டும்?”

அவர்கள்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஈழத்தைவிட்டு நீங்கியிருந்தார்கள். முதலில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஸ்நேகல் என்ற நாட்டில் தங்கவைக்கப்பட்டார்கள். அங்கிருந்து ஐரோப்பாவுக்கு பல்வேறு பாதைகளை முகவர்கள் பரீட்சித்துப் பார்த்த போதெல்லாம் இவர்கள் பரிசோதனைக்கூட எலிகளைப் போலவாகியிருக்கிறார்கள். எல்லா வழிகளும் அவர்களுக்கு அடைக்கப் பட்டிருந்தன. கைதுசெய்யப்படுவதும், எந்தத் தேசம் என்றே தெரியாத சிறைகளில் அடைக்கப்படுவதும், தம்மை என்ன செய்யப் போகிறார்கள் என்று காத்திருப்பதுவும், மறுபடியும் ஸ்நேகலுக்கு அனுப்பிவைக்கப் படுவதுமாக, இரண்டாண்டுகளை அவர்கள் கழித்தார்கள். பிறகொருநாள் மொறோக்கோ ஊடாக இத்தாலிக்கு விமானமேறி, அங்கிருந்து ‘போர்டர் மாற்றுபவர்களால்’ சூரிச்சுக்கு வந்து சேர்ந்தார்கள். 

அகதிகள் முகாமுக்கான தொடரூந்துக்குக் காத்திருந்த அரைமணி நேரத்தில், ஸ்நேகலில்  ஒரு வீட்டில் 20 பேராக அடைப்பட்டிருந்ததைப் பற்றிப் பேசியபோது... இன்னுமொரு வீட்டில் தங்கியிருந்த ஐந்து பெண்களும் எதிர்கொள்ளும் சிரமங்களைப்பற்றிச் சொன்னபோது... ஒரு முறை துனிசியா நாட்டில் சிறைப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் அடிவாங்கிய அனுபவத்தை விவரித்தபோது... பெயர் தெரியாத ஒரு நாட்டில் அவர்களிடம் மிச்சமிருந்த கொஞ்ச டொலர்களையும் பறித்துக்கொண்டு தெருவில் விரட்டிவிட்டதைச் சொன்னபோது... அவர்களின் பதின்மப்பருவத்தின் எந்தச் சாயலும் அவர்களுடைய பேச்சிலும் முகத்திலும் தொனிக்கவில்லை. அதனை முற்றாகத் தொலைத்துவிட்டிருந்தார்கள்.

அவர்களுக்கான தொடரூந்து வந்து நின்றது. அகதி முகாமுக்குச் செல்வதற்காக இறங்கவேண்டிய நிறுத்தத்தைச் சொல்லி அவர்களை வழியனுப்பிவைத்தேன். அப்போது தொடரூந்திலிருந்து இரண்டு தமிழ்ப் பெண்கள், அவர்களுக்கும் 17, 18   வயதுகளிருக்கும். தமக்குள் சிரித்துப் பேசியபடி இறங்கி எம்மைக் கடந்துபோனார்கள். சட்டென்று இந்த இளைஞர்கள் என்னை நோக்கித் திரும்பினார்கள். “அண்ணை, நாம் பேசினால், இவர்கள் எங்களோடும் பேசுவார்களா?”

அந்த ஒரு கணத்தில், அவர்கள் தொலைத்து விட்டிருந்த பதின்ம வயதின் குறுகுறுப்பும், மலர்ச்சியும், மகிழ்வும் அவர்களுடைய கண்களில் ஒளிரக் கண்டேன்.

புலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலத்தை வலிந்து பிரிவதென்பது இந்த இளைஞர்களைப்போல வாழ்வையும் அதன் பருவங்களையும் இழத்தலே. உலகெங்கும் அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கும் மானுடர்கள் அனைவருக்குமான பொதுவிதி இது. இப்படி உலகின் திசையெங்கும் ஈழத்த வர்கள் அலையத்தொடங்கி நாற்பது ஆண்டுகளாகின்றன. ஆயினும், இன்றைக்கும் எங்கேனும் ஒரு கடற்பரப்பில் ஒரு சிறு படகு  அவர்களைச் சுமந்துகொண்டு அலைகளில் மோதிக்கொண்டுதானிருக்கிறது.ஆப்பிரிக்காவின் ஏதோ ஒரு நாட்டில் ‘பாதை திறக்குமென்று’ அடைபட்ட வீடொன்றுக்குள் அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். மொழி புரியாத ஒரு நாட்டின் சிறைக்கம்பி களுக்கிடையில் அடைபட்டுக்கிடக்கிறார்கள்.

நிலத்தைப் பிரிவதன் முதற் சோகம், பிறந்து வளர்ந்த தம் தேசத்தை மறுபடியும் கண்ணால் காண முடியாது என்ற துயரத்தில்தான் உருவாகிறது. அடைக்கலம் தேடிய நாடுகளின் வதிவிடச் சட்டங்களினாலும், ஈழத்தின் போர்ச் சூழலினாலும், ஈழத்தமிழர்களுக்கு நாடு திரும்பும் ஒருநாள் பற்றிய எந்த நம்பிக்கைக் கீற்றும் இருக்கவில்லை. அந்த மெய்யை ஜீரணிக்க முடியாமல், ஊரின் பழைய நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு, புதிய நிலத்தில் ஒட்டவும் முடியாமல் விலகவும் முடியாமல் கடக்கின்ற அகதி வாழ்வு எத்தனை துயரமானது..? 

80-களின் தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து இன்றைக்கு 50 வயதினைக் கடந்திருக்கும் மனிதர்களை நான் சந்தித்துப் பேசுவதுண்டு. தமது கடந்த காலத்தை அவர்கள் நினைவுகூரும் போது, எதையோ தொலைத்துவிட்ட வெறுமை முகத்தில் வெளிப்படை யாகத் தெரியும். ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து ஒவ்வொரு நிலமாக ஒரு நாயைப்போல அலைந்து நடந்த பயணத்தின் பயங்கரங்கள், எல்லைகளில் குறுக்கிட்ட குளிர்ந்த ஆறுகள், அவற்றில் அடித்துச் செல்லப்பட்ட மனிதர்களின் உதவி கோரும் கடைசிக் கையசைப்புகள், பனியில் விறைத்துச் செத்தபின் விட்டு வரப்பட்ட பிணங்கள், கன்டெய்னர் வாகனங்களில் மூச்சடைத்து மாண்டவர்கள், அவர்களுடைய கனவுகள்... இப்படி எல்லா நினைவு களையும் சுமந்துகொண்டுதான் அவர்கள் நாட்களை நகர்த்துகிறார்கள். வந்த இடத்திலும், முன்னர் கேள்விப்பட்டிராத மொழிகள்,  சுவையறியாத உணவுகள், பழக்க மில்லாத  சமூக வழக்கங்கள், கறுப்பு உடல் மீது எதிர்கொண்ட  நிறவெறி... என எத்தனை அவமானங்கள்.

ஒருவர் சொன்னார். ‘கையால் சாப்பிடுவதைக் கேலி செய்திருக் கிறார்கள். ஊரைப்போல மாமன் மச்சானாக தோள்களைக் கட்டிக் கொண்டு இரண்டு ஆண்கள் செல்வதை அவமானப்படுத்தியிருக்கி றார்கள். மொழி புரியாமல் சைகையால் பேசியபோது, கைகொட்டிச் சிரித்திருக் கிறார்கள். அக்காலத்தில் கறுப்பையும் வெள்ளையையும் மட்டுமே மனிதத் தோலாக அறிந்துவைத்திருந்தவர்கள், மண்ணிறமான தோல் நிறத்தை... குளிக்காத, அழுக்குச் சேர்ந்த ஊத்தை நிறமென்று தள்ளிச் சென்றிருக் கிறார்கள். இத்தனையையும் தாங்கிக் கொண்டுதான் வாழ்ந்தோம்.’

இன்னொருவர், ஈழத்தில் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவர், யுத்தம் வெடிக்கவும், ஏஜென்சி எந்த நாட்டில் இறக்குகிறானோ, அந்த நாட்டுக்கென்று புறப்பட்டுவிட்டார். ஜெர்மனிக்கு ஊடாக சுவிஸ் வந்தார். அகதி அடையாளம், மேலே படிக்கும் வாய்ப்பைப் பறித்தது. வேறு வழியில்லாமல் ஓர் உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அடுப்பு வெக்கைக்குள் வேகினார். கோப்பைகளைத் தேய்த்துக் கழுவினார். அவருக்கு மெள்ள மெள்ள ஜெர்மன் மொழி வசப்பட்டது. அதனால், உணவகத்தின் வெளியே பரிமாறும் பரிசாரகராகத் தரமுயர்த்தினார்கள். வேலையின் முதல் நாள். உணவருந்த வந்திருந்த ஒரு குடும்பத்தினரிடம்  அவர்களுடைய தெரிவுகளைக் குறித்துக் கொள்ள கிட்ட நெருங்கினார். அப்போது  ஒரு சிறுமி, ‘அய்யோ... கறுப்பு மனிதன்... கறுப்பு மனிதன்..  எனக்கு அச்சமாயிருக்கிறது. அவனை விரட்டுங்கள்...’ என்று வீறிட்டுக் கத்தத் தொடங்கினாள். வசப்பட்ட மொழி அவள் என்ன சொல்கிறாள் என்று உணர்த்திற்று. நொறுங்கிப்போனார். உணவக முதலாளி அவரை உடனடியாக உள்ளே போகச்சொல்லி விரட்டினான். அன்று முதல் அவர் மறுபடியும், அடுப்புகளோடு வேகத் தொடங்கினார். கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு உணவகங்களின் சமையற்கட்டுகளில் அவர் தன்னைச் சுருக்கிக்கொண்டுவிட்டார்.

இவ்வாறான அவமானங்களே ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அகரீதியாக தம்மைச் சுருக்கிக்கொள்ளக் காரணமாயிருந்திருக்கும். வெளிச் சமூகங் களோடு தொடர்பற்ற ஒரு தனித் தீவுச் சமூகமாக, இங்கே ஈழத்தமிழர்களின் முதலாவது தலைமுறையினர் வாழ நேர்ந்ததின் தொடக்கம், இதுவாகவே இருக்கலாம். இந்த அவமானங்களின் இடையில் பால்ய காலத்தின் ஈழத்து நினைவுகளே அவர்களை ஆற்றுப்படுத்தும் ஒரேயொரு கருவியாக இருந்தது. இதனால்தான் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களிடமிருந்து ஈழத்து நிலம் பற்றியும் அங்கு வாழும் கதை மாந்தர்களைப் பற்றியும் பிரதிகள் வந்த அளவுக்கு, புலம்பெயர்ந்த வாழ்வு பற்றிய எழுத்துகள் வரவில்லை.

இப்போது ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் இரண்டாம் தலைமுறைப் பிள்ளைகளின் காலம். வெளிநாடுகளில் பிறந்த பதின்ம வயதுகளைக் கடக்கும் அவர்களுக்கு தாய் தந்தையரைப்போன்ற நிலம் பிரிந்த சோகமும், அதைக் காண முடியா ஏக்கமும் இருக்கவில்லை. பிற சமூகத்தினரோடு ஊடாட மொழி ஒரு தடையாக இல்லை. கல்வி, தொழில் வாய்ப்பு என்று தெளிவான எதிர்காலம் ஒன்றைக்கொண்டிருக்கிற அவர்கள், புலம்பெயர்ந்த தேசத்தில் எதிர் கொள்கிற நெருக்கடிகள் முற்றிலும் வேறானவை. பெற்றோர் அனுபவித்திடாதவை. துரதிஷ்ட வசமாக பெற்றோராலேயே ஏற்படுத்தப் படுபவை. 

இரண்டாம் தலைமுறை ஈழத்தமிழ்ப் பிள்ளைகள், தம் நேரத்தின் பெரும் பகுதியை பாடசாலை, விளையாட்டு, பொழுதுபோக்கு என வீட்டுக்கு வெளியே கழிக்கிறார்கள். ஐரோப்பியச் சமூக நண்பர்களோடு பழகு கிறார்கள். இதனால், இயல்பாகவே மனதில் ஊறத்தொடங்கும் ஐரோப்பிய கலாசாரப் பழக்கங்களை அவர்களுடைய தவறு என்று சொல்லிவிட முடியாது. ஆனால், வீட்டுக்குத் திரும்பும்போது, ‘நேரடியாக அனுபவித்திடாத’  இன்னுமொரு கலாசாரம் பெற்றோரால் சொல்லித்தரப்படுகிறது; வலியுறுத்தப்படுகிறது. வீட்டிலொன்றும், வெளியிலொன்றுமான இந்த இரட்டைக் கலாசார முறையும் அதற்கேற்ப மாற்றி மாற்றித் தம்மை வெளிப் படுத்துவதும் மனச்சிதைவை ஏற்படுத்துகின்றன. குறிப்பாகப் பெண்களுக்கு, பாடசாலையில் ஆண்களோடு பேசாதே, ஆண்களோடு பழகாதே எனச் சொல்லப்படுகின்றபோது, அதை ‘மனதால் வாழும்’ ஐரோப்பியக் கலாசாரத்தினுள் பொருத்திப்பார்க்க முடியாமல் அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். இவ்வாறான அழுத்தங்கள் பெற்றோருக்கும் உண்டு. சுவிற்சர்லாந்தில் பாடசாலைச் சுற்றுலாக்களின்போது கருத்தடை சாதனங்கள், மாத்திரைகளை பதின்ம வயது மாணவர் களுக்கு வழங்குவார்கள். இவ்வாறு தமிழ்ப் பெண்பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டபோது, பாடசாலை நிர்வாகத்துடன் பெற்றோர்கள் சண்டையிட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இப்படியொரு பண்பாட்டு அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள இயலாத பெற்றவர்களின் மனதும் புரிந்துகொள்ளத்தக்கதே. 

புலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்

20 வயதிலிருக்கும் ஓர் இளைஞர் சொன்னார். “எனது அம்மாவும், அப்பாவும் என்னோடு ஒன்றாக அமர்ந்திருந்து ஒருநாள் கூட தேநீர் அருந்தியதில்லை. அதை நினைக்கும்போதெல்லாம் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறேன்” என்று. எனக்குள் பதியப்பட்ட பண்பாட்டு உணர்வு இதை ஒரு சிக்கலாகவே கருதாதபோதும், அவருடைய உணர்வு உண்மையானது.  அவர் வாழும் ஐரோப்பியச் சூழலில் ஆதரவாக அணுகப்பட வேண்டியது. 

இவ்வாறு, ஒரே குடும்பத்தில் இருவேறுபட்ட கலாசார உணர்வுகளுடன் வாழ நேரும்போது, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்படுகிற இடைவெளிகளையும், உறவில் வெடிப்புக் களையும் இங்கே பரவலாக அவதானிக்க முடிகிறது. உண்மையில் கட்டுக்கோப்பானது எனக் கருதப்படுகிற ஒரு பண்பாட்டு நிலத்தி லிருந்து முற்றிலும் புதிய ஒரு பண்பாட்டுத் தளத்தில் வேரூன்றிய பெற்றோர்கள், தாம் சுமந்துவந்த ஈழத்து நினைவுகளை, தம் பிள்ளைகளிடம் திணிக்கும்போது உருவாகும் பிளவுகள் பற்றி அவதானமாயிருக்க வேண்டும். தாய் நிலத்தோடு தமக்கிருந்த நேரடி நெருக்கமும், அந்த உணர்வுப் பிணைப்பும் பிள்ளைகளுக்கு இல்லை என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தம்முடைய விருப்புக்கும், பிள்ளைகளின் நிஜ உலகத்துக்கும் இடையிலான ஓர் அறிவார்ந்த இணைப்பைப் பற்றிச் சிந்திப்பதுதான், அகதிகளாக வெறும் கையோடு வெளியேறி, அவமானங்களையும் துயரங்களையும் கடந்து ஓர் ஓர்மத்தோடு நிலையூன்றிய ஒரு சமூகத்தின் குடும்பங்களும், உறவுகளும் சிதைந்துபோவதைத் தடுத்து நிறுத்தும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism