Published:Updated:

சிங்கம் புணரி - சிறுகதை - யுவன் சந்திரசேகர்

சிங்கம் புணரி - சிறுகதை - யுவன் சந்திரசேகர்
பிரீமியம் ஸ்டோரி
சிங்கம் புணரி - சிறுகதை - யுவன் சந்திரசேகர்

ஓவியம் : ஹாசிப்கான்

சிங்கம் புணரி - சிறுகதை - யுவன் சந்திரசேகர்

ஓவியம் : ஹாசிப்கான்

Published:Updated:
சிங்கம் புணரி - சிறுகதை - யுவன் சந்திரசேகர்
பிரீமியம் ஸ்டோரி
சிங்கம் புணரி - சிறுகதை - யுவன் சந்திரசேகர்
சிங்கம் புணரி - சிறுகதை - யுவன் சந்திரசேகர்

திகாலையில் எழுந்து, வழக்கம்போல வாசல் தெளிக்க மரக் கதவைத் திறந்தாள். அதிர்ச்சியில் நெஞ்சை அடைத்தது. வராந்தாவின் கம்பிக் கதவை இறுகப் பிடித்துக்கொண்டு அப்படியே சரிந்தாள். கத்துவதற்கு வாய் எழவில்லை. ஆனால், பார்வையை நகர்த்தவும் முடியவில்லை. அவள் பார்த்த காட்சியின் வசீகரமும் பயங்கரமும் அப்படிப்பட்டது.

ஆமாம். வாசலில் கோலம்போட வேண்டிய இடத்தில் ஒரு சிங்கம் நின்றிருந்தது. மூடிய இமைகளுக்குள் தைரியத்தை சேகரித்துக்கொண்டு மீண்டும் விழித்தாள் – சிங்கம் வாலாட்டியது. உணர்ச்சிகள் தெரிய வாய்ப்பே இல்லாத கூர் முகம்தான். ஆனாலும், அந்தக் கண்களில் குரோதம் இல்லாத மாதிரிப்பட்டது. இவளுக்குள் தைரியம் இன்னும் கொஞ்சம் அதிகரித்தது. கம்பி அழிக்கதவின் பூட்டைத் திறந்து, தாழை நகர்த்தினாள்.

சுற்றுச் சுவர்க் கதவின் மீது முன்னங்கால் இரண்டையும் தூக்கிப் பொருத்தி, வாலை இன்னும் வேகமாக ஆட்டியது. நாக்கைத் தொங்கவிட்டு, நாய்போலவே மூச்சிரைத்தது. ஏறித்தாழும் அடிவயிறு மட்டுமின்றி, நேருக்கு நேராய் நின்றதால், அதன் உறுப்பும் நேரே தெரிந்தது. இவளுக்கு லேசாகக் கூச்சம் எழுந்தது. பார்வையை விலக்க முடியாத ஈர்ப்பும்தான். வந்தது வரட்டும் என்று படியிறங்கினாள்.

வாசல் கதவை நெருங்க நெருங்க அடங்கிய குரலில், முனகுவதுபோல கர்ஜித்தது சிங்கம். வாசல் கதவின் பூட்டைத் திறக்க முனைந்தபோது, சட்டென்று நான்கு காலால் நின்று இவள் முன்னங்கையை நக்கியது. அந்தக் கணத்தில் சிங்கம் இவளுக்குப் பொமரேனியன் நாய்க்குட்டிபோலவே தென்பட்டது. துணிந்து கதவைத் திறந்தாள். தொடையிடுக்கில் வாலைச் செருகிக்கொண்டு உள்ளே வந்தது. இவளுடைய முன்னங்காலை நக்கித் தீர்த்தது.

முன்பு வளர்த்து, விரையும் வாகனத்தில் அடிபட்டுச் செத்துப்போன செல்ல நாயைக் கட்டும் சங்கிலி சும்மாதான் கிடந்தது. சிங்கம் மிகப் பணிவாகச் சங்கிலியை ஏற்றுக்கொண்டது. கொல்லைப்புறத் தென்னையில் கொண்டு கட்டினாள். மீந்திருந்த பழைய சாதத்தை நாய்க்கான அலுமினியத் தட்டில் போட்டு முன்னால் வைத்தாள். வாலை ஆட்டி ஆட்டி ஆசையாகத் தின்றது – பாவம் எத்தனை நாள் பசியோ.

வெறுமையாய் இருந்த வீட்டுக்குள் நுழைந்தாள். சங்கிலியும் தட்டும் பிடரி மயிரும் அவனை நினைவுபடுத்தின. மல்லாந்து கிடப்பவளை முத்தமிடுகையில், அவனுடைய பிடரி மயிர் இவளுடைய முகத்தில் படிவது நினைவில் எழுந்து, முன்னங்கைகளில் மயிர்க்கூச்செரிந்தது.

அவனோடு ரகசியமாக மருத்துவமனைக்குச் சென்றபோது, இவளுடைய அடிவயிற்றைத் தடவிப் பிரியமாய்ச் சிரித்த பெண்மருத்துவரின் மூக்குக்கு இடதுபுறம் மிளகுபோல அசைந்த மருவும் நினைவுக்கு வந்தது. அவள் ரகசியக் குரலில் கேட்டாள்... `இன்னும் கலியாணம் ஆகலயா?’ மருத்துவரின் முகத்தில் அதிகரிக்கும் குறும்புக்கு ஈடாக இவளுக்குள் பீதி உயர்ந்தது.

`தாலிக்கயிறு மாட்டியிருந்தா தெரியாமப் போயிருமா? இங்க வர்றதுக்காகக் கட்டிக்கிட்டது தானே இது! போகட்டும். இனிமேயாவது ஜாக்கிரதையா இரு.’ மறுநாள் வரச்சொல்லி, கலைத்து அனுப்பினாள்.

வயிற்றை நீங்கிய பிறவி, தகப்பனையும் இழுத்துக்கொண்டு போனது. மகளிர் விடுதியில் சந்தேகப் பார்வைகள் அதிகரித்ததால், வேறு விடுதிக்கு இடம் மாற்றிவிட்டுத் திரும்பியவன், தெற்கத்திப் பெருஞ்சாலையில் அதிவேகமாகக் கடக்க முயன்ற மணல் லாரியின் கீழ் அரைபட்டான். நாலுபேருக்குள் நடந்து முடிந்துபோயின சகலமும். நாலாவது ஆள், அந்தத் திசு.

மற்றபடி, அத்தனையுமே இயல்பாக, தடையின்றி நடந்தேறின. பெற்றவர்கள் இவளுடைய படிப்புக்கும் உத்தியோகத்துக்கும் ஜாதகத்துக்கும் பொருத்தம் என்று தாங்கள் கருதிய நபரைத் தாங்களே தேர்ந்தெடுத்தனர்.

இந்த அரக்கனைக் கலியாணம் செய்துகொண்ட தற்கு, கடைசிவரை கன்னியாகவே இருந்து செத்துப் போயிருக்கலாம் – இல்லை, அதற்கு வாய்ப்பில்லையே. கடைசிவரை திருமணம் ஆகாமலேயே இருந்து செத்துப்போயிருக்கலாம். சிங்கத்தைப் பிணைந்து, சிங்கக்குட்டியை உருவமற்ற திசுவாக வெளியேற்றிய தற்குப் பிறகு கன்னியாவது, மண்ணாங்கட்டியாவது.

தன்னிச்சையாகக் கண்ணில் நீர் ஊறியது. கண்ணீர்த்திரையின் பலவீன மறைப்புக்கு மறுபுறம் மாமியார்க்காரி நின்று, `ஆறு வருசமாச்சு, இன்னமுமா வேர் புடிக்காமெ இருக்கும்? டாக்டர்ட்ட எல்லாம் போயிக் கேக்க வேண்டியதில்ல. எம்புள்ள சிங்கக்குட்டி. இவகிட்டதான் கொறெ இருக்கும்’ என்றாள்.

குழம்பில் மிதக்கும் காய் மாதிரி, ஆஸ்பத்திரி வெண்பீங்கான் கோப்பையில் ரத்தக்கவிச்சியுடன் மிதந்த நிஜமான சிங்கத்தின் குட்டியை இரண்டு விரல்களால் சிட்டிகைப் போட்டு எடுத்து, அந்தக் கிழவியின் மூஞ்சியில் வைத்துத் தேய்க்க வேண்டும் என்று ஆசையாய் இருந்தது.

இப்போதைய புருஷன் வெளியூர் போயிருக்கிறான். நாளை இரவுதான் திரும்புகிறான். வந்தவுடன் அடிப்பான். இரண்டு நாள் நிலுவை மிச்சமிருக்கிறதே. எதற்கு வேண்டுமானாலும் அடிப்பான். எதைவைத்து வேண்டுமானாலும் அடிப்பான். அடி வாங்கும்போதும், விருப்பமேயில்லாமல் புணர்ச்சிக்கு ஆட்படும்போதும் மனத்தில் சலனமின்றி மரத்து இருக்கப் பழகிவிட்டது. சிலவேளை வெளிப்படையாய்த் தெரியும் காயங்களோடு அலுவலகம் போகவேண்டி வரும். ஆரம்பத்தில் அவமானமாக இருந்து. இப்போது அதுவும் பழகிவிட்டது. மற்றவர்களுக்கும்தான். யாருமே அது குறித்துக் கேட்பதில்லை.

புருஷன் இல்லாததன் சுதந்திரத்தை அனுபவிக்கிற மாதிரி, பத்து மணி சுமாருக்கு, கட்டிலில் சென்று படுத்துக்கொண்டாள். வாசல் கதவைப் பூட்டினோம்; கொல்லைப் புறக் கதவைப் பூட்டினோமா என்று லேசாக சந்தேகம் தட்டியது. பூட்டாவிட்டால் போகிறது என்ன வேண்டுமென்றாலும் நடக்கட்டுமே என்று விட்டேற்றியாக ஒரு சமாதானமும் எழுந்தது. கண்களை மூடினாள்.

கொல்லைப்புறம் கேட்டுக்கொண்டிருந்த மெல்லிய கர்ஜனை சற்று உரக்கிற மாதிரிப்பட்டது. செராமிக் ஓடு பதித்த வீட்டுத் தரையில் கீறும் ஒலி. நெருங்கியது... சிங்கமேதான். வீட்டுக்குள் வந்திருக்கிறது. அட, கட்டியல்லவா போட்டிருந்தோம். எப்படி அவிழ்த்துக்கொண்டது?

சிங்கம் புணரி - சிறுகதை - யுவன் சந்திரசேகர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கட்டிலின் அருகில் வந்தது. முன்னங்காலை இவள் முகத்தருகில் கொண்டுவந்தது. பாதத்தைக் கன்னத்தில் ஒத்தியபோது, பூனையின் பாதம் மாதிரி நகங்கள் உள்வாங்கி, பஞ்சுபோல மிருதுவாக இருந்தது. சிங்கம் கட்டிலில் தொற்றி ஏறியதும், ஆளத் தொடங்கியதும், இவள் மனப்பூர்வமாக ஒத்துழைத்ததும் இயல்பாக நடந்தன. முதல் ஓரிரு நொடிகளுக்குச் சற்றுத் தயக்கம் இருந்தது. அப்புறம், மிருகமாய் இருந்தாலென்ன, மனிதனாய் இருந்தாலென்ன, சிங்கமாய் இருந்தால் சரிதான் என்று ஒருவித சரளம் கூடிவிட்டது. வாகாக, இசைவாகப் படுத்துக்கொண்டாள். கனவின் மங்கிய ஒளியில், நிஜத்தின் தத்ரூபமான தொடுகை உணர்வுடன் நிகழ்ந்து முடிந்தது. சிங்கம் இறங்கிப்போகிறது. மடையுடைத்துக் கண்ணீர் பொங்கியது. உரத்து விசும்பினாள். அட, இப்படி ஆனந்தமாக அழுது எத்தனை நாளாகிவிட்டது!

அலுவலகத்தில் சாப்பாட்டு வேளை அரை மணிநேரம். அந்த அவகாசத்தில் நிம்மதியாகச் சாப்பிட்டு முடிக்க முடிந்ததேயில்லை. முதல் கால் மணி நேரம் கை கழுவவே சரியாய் இருக்கும். கணிப்பொறி முன்னால் வேலை பார்ப்பதில் அவ்வளவு சேருவதற்கில்லைதான் – இருந்தாலும் அழுக்கு முற்றாகப் போகவேண்டாமா? ஐந்தே நிமிடத்தில் அவக் அவக்கென்று விழுங்கிவைத்துவிட்டு, மறுபடியும் கைகழுவக் கால் மணி நேரம். பணியின் இடையில் அவ்வப்போது எழுந்துவந்து கை கழுவுவது தனி. இதனாலேயே, எல்லாரும் முடித்துத் திரும்பிய பிறகுதான் போவாள். தனியாக உட்கார்ந்து சாப்பிடும்போது, எதிரிலிருக்கும் தோழியுடன் பேசுவாள். அவளுக்கு நிர்மலா என்று பெயர்வைத்திருந்தாள். எந்த நிறத்திலும் உடையணியலாம் அவள் – வெண்மை மட்டும் கூடாது. ஒரிஜினல் சிங்கத்துக்குப் பிடித்த நிறம். நிர்மலாவிடம், புதிய சிங்கக் கதையை விவரித்தாள். அவள் சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள்... ‘அதுக்கு, தான் சிங்கம்னு தெரியிற வரைக்கும் பிரச்னை இல்லே…’.

வெறும் தயிர்சாதம்தான். ஆனாலும், விழுங்க முடியாமல் தொண்டையை அடைத்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism