Published:Updated:

வடுகநாதம்

வடுகநாதம்
பிரீமியம் ஸ்டோரி
வடுகநாதம்

சிறுகதை: என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

வடுகநாதம்

சிறுகதை: என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

Published:Updated:
வடுகநாதம்
பிரீமியம் ஸ்டோரி
வடுகநாதம்
வடுகநாதம்

ருள் அடர்ந்த பனி இரவு. நடுச்சாம வேளை. தோட்டத்து வீட்டின் உள் அறையில் படுத்திருந்த நான் ஏதோ சத்தம் கேட்டு, கண்விழித்தேன். நாய்கள் குரைப்பதும், ஆட்கள் விசில் அடிப்பதும் மாறி மாறிக் கேட்கத் தொடங்கின.

கிழக்குப்புறத்தில் இருந்துதான் சத்தம்.

நான் அவசரமாக எழுந்து ஆசாரத்துக் கயிற்றுக்கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பினேன். எழுந்ததும் ஏதோ ஆபத்து என உணர்ந்துகொண்டார். வெளித்திண்ணை விட்டத்தில் செருகியிருந்த குத்தீட்டியை உருவி எடுத்துக்கொண்டு, விசில் சத்தம் கேட்கும் கிழப் புறத்துத் தோட்டத்தை நோக்கி ஓடினார்.

அதற்குள், வடக்கே செங்காட்டூரில் இருந்து ஆட்கள் பதில் விசில் கொடுத்துக்கொண்டு ஓடிவருவதை, பேட்டரி லைட் வெளிச்சப் புள்ளிகளைவைத்து கண்டுணர முடிந்தது. நாலா திக்குகளிலும் செம்மறியாட்டுப் பட்டிகளில் கட்டியிருந்த நாய்களும் விழித்துக்கொண்டன. குரைப்பு ஒலி பலமானது. மாட்டுக் கொட்டகையில் உறங்கிக்கொண்டிருந்த மாதேவப்பாவும் எழுந்து வந்தார். நானும் கவைக்குச்சியைத் தூக்கிக்கொண்டு ஓடினேன்.

எங்கும் கடும் இருள். கார்த்திகைக் குளிர். பனி இறங்கியிருந்தது. பாதை மண்ணைத் தோண்டி உட்கார்ந்திருந்த காட்டுப் பக்கிகள் விருட்டெனப் பறந்துபோயின. வழியின் இருபுறங்களிலும் மானாவாரி நிலங்களில் சடைமஞ்சிய சோளப் பயிர்கள் புடைதள்ளியிருந்தன. நாங்கள் கிழப் புறத்துத் தோட்டம் போனபோது, பட்டியக்கிடையில் ஆட்கள் சூழ்ந்து நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ஒவ்வோர் ஆளின் கையிலும் குத்தீட்டி, வல்லயம், அரிவாள், கட்டுத்தடி என கனமான ஆயுதங்கள்.

அப்பா என்னிடம் சொன்னார்... ``ஆட்டுத் திருடந்தான். மூனு செம்புலிப் பிரவையைப் புடிச்சுக்கிட்டுப் போயிட்டான். நல்லவேளையா நாய் ஒலைக்கங்காட்டி தூக்கம் தெளிஞ்சு கத்தியிருக்காங்க. இல்லீனா, மொத்த பட்டியாட்டையும் புடுச்சுட்டுப் போயிருப்பானுக.''

ஆட்கள் கலைந்து செல்லாமல், ஆட்டுத் திருடனை எப்படிப் பிடிப்பது எனக் கலந்து ஆலோசித்துக்கொண்டிருந்தனர். அப்பா எங்களைக் கூட்டிக்கொண்டு நேராக எங்கள் தோட்டத்துப் பட்டியக்கிடைக்கு வந்தார். செம்மறிகள் மிரண்டு எழுந்தன. குட்டிகள், தாய் மடிக்காம்பைப் பற்ற, அவை பாலூட்டின. மாதேவப்பா ஆடுகள் சரியாக இருக்கின்றனவா என எண்ண ஆரம்பித்தார். அப்பா, தொடுவான விளிம்பில் ஒளிர்ந்த விண்மீனைப் பார்த்தபடி இயலாமையோடு என்னிடம் பேசினார்.

‘நமக்குத்தான்டா பட்டி நாயே வாய்க்கமாட்டேங்குது. பத்து வருஷமா நானும் ஒரு நல்ல நாய் வளர்க்கப் படாதபாடு படுறேன். யார்விட்ட சாபமோ தெரியலை.”

சமீபத்தில்தான் பட்டியில் கட்டியிருந்த கருநாய், சோறு குடிக்காமலேயே கிடந்து செத்துப்போனது. அப்பா, சந்தையில் இருந்து நெத்திலிக் கருவாடு எல்லாம்கூட வாங்கிவந்து போட்டுப்பார்த்தார். அது செருமிக்கொண்டே இருந்ததே தவிர, தேறிவரவில்லை. அதற்கு முன்பிருந்த செவலை நாய் வாகனத்தைத் துரத்தும் பழக்கத்தைக்கொண்டிருந்ததால், லாரியில் அடிபட்டுச் செத்துப்போனது. அப்பா வருஷத்துக்கு இரண்டு நாய்களாவது வளர்த்துப்பார்த்தார். நாய்கள் தங்கவில்லை.

ஒருமுறை அப்பா ஆதங்கத்தோடு என்னிடம் சொன்னார்... ‘`ஒரு குடியானவனுக்கு ஆடு - மாடு, விருத்தி மட்டும் இல்லடா... நாய் விருத்தியும் இருக்கணும். எனக்கு ஏனோ, அந்தக் கொடுப்பினை இல்ல இந்த ஜென்மத்துல...''

மறுநாள் விடிந்ததும், அப்பா கயிற்றுக் கட்டிலைத் தூக்கிக்கொண்டு பட்டியக்கிடைக்குப் போனார். மாதேவப்பாவோடு சேர்ந்து ‘வண்டிக்குடிசு’ தயார்செய்தார். ராத்திரியில் அந்த ‘வண்டிக்குடிசு’க்குள் படுத்துக்கொண்டு, பட்டிக்கு காவல் இருக்க மாதேவப்பாவை நியமித்தார். மாதேவப்பாவும் கொஞ்சம் வெளிச்சம் இருக்கும்போதே இரவு உணவை முடித்துக்கொண்டு, பட்டியக்கிடைக்குப் போய்விடுவதை வழக்கமாக வைத்திருந்தார். மழை கொட்டும் நாளிலும் மாதேவப்பா இந்த நியமத்தை மீறவில்லை. பட்டியாடுகளுக்கு மாதேவப்பா காவல் இருக்கும் தெம்பில் அப்பாவும் நிம்மதியாகவே படுத்து உறங்கினார்.

நாட்கள் கடந்தன. எங்கள் பகுதியில் ஆடுகள் திருட்டுப்போவது மட்டும் நிற்கவே இல்லை. ஒவ்வொரு விடிகாலையிலும் யார் பட்டியில் திருட்டு நடந்தது எனத் தகவல் வந்தவண்ணமே இருந்தது. அன்று முன்ஜாமத்தில் வந்து அப்பா என்னை எழுப்பினார். அப்பாவுக்கு உடம்பெங்கும் வியர்த்துக்கிடந்தது. பதற்றமாக இருந்தார்.

‘`கனவு கண்டேன்டா... நம்ம பட்டியாட்டை எல்லாம் யாரோ திருடிட்டுப் போறமாதிரி. ஒடனே பொறப்படு. ஒரு எட்டு போயி பட்டியக்கிடையப் பாத்துட்டு வந்துடலாம்.”

தென்னந்தோகைகளின் அசைவும் நின்றிருந்த நிசப்தம். நான் அப்பாவோடு நந்தம் பூசணிக்காட்டு வரப்பில் இறங்கி நடந்தேன். முகில்களுக்கு இடையே மறைந்திருந்த வளர்பிறை நிலா, திடீரென வெளிப்பட்டு வெளிச்சம் பரப்பியது. நான் பேட்டரி லைட்டை பட்டிக்குள் அடித்தபோது, செம்மறிகளின் கண்கள் கோலிக்குண்டுபோல ஒளிர்ந்தன. வண்டிக் குடிசுக்குள் படுத்திருந்த மாதேவப்பா எங்கள் பேச்சரவம் கேட்டு எழுந்து வரவில்லை.

அப்பா சத்தமிட்டார்...

‘`மாதேவப்பா... மாதேவப்பா...”

படுத்திருந்த மாதேவப்பாவிடம் இருந்து ஓர் அசைவும் இல்லை. நான் எழுப்புவதற்காக கிட்டத்தில்போய் போர்வையைப் பிடித்து இழுத்தேன். போர்வை மட்டும் கையோடு வந்தது. மாதேவப்பா, ஆள் படுத்திருப்பதுபோல ஜோடனை செய்துவிட்டு எங்கோ சென்றிருந்தார்.

மாதேவப்பா மேல் ஏற்பட்ட கோபத்தை அப்பா வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. பட்டித்தரம்போரம் தரையில் உட்கார்ந்து கொண்டார். என்னையும் உட்காரச் சொன்னார். தோட்டவெளி எங்கும் அநாதியான மௌனம். புழுதி வெடிப்புகளில் பதுங்கிய சில்வண்டுகளின் ரீங்கரிப்புகூட இல்லை. செம்மறிகளின் மூத்திரம் கலந்த புழுக்கை வாசனையை நுகர்ந்தபடி, பனிக்குளிரில் நேரம்போனது. மாதேவப்பா வந்தபாடில்லை.

ஆறு வருடங்களுக்கு முன்பு அப்பா கொல்லேகால் பட்டுப்புழு கொண்டுபோனபோது, மாதேவப்பாவை எங்கோ பார்த்து தோட்டத்துக்கு அழைத்துவந்தார். தேன்கனிக்கோட்டை பக்கமுள்ள நூரொந்துசாமிமலை என்கிற மலைக்கிராமம்தான் மாதேவப்பாவின் பூர்வீகம். குள்ளமான கறுத்த உடம்பு. இடுப்பில் ஓர் அழுக்கடைந்த வெள்ளை வேஷ்டி மட்டும். துண்டுகூடக் கிடையாது. ஐம்பது வயதைக் கடந்திருந்தபோதும் முப்பது வயதுக்காரன்போல ஒரு தோற்றம். நகரத்தில் இருந்து கல்யாணம் செய்துவந்த மனைவி யாருடனோ ஓடிப்போய்விட, அதில் இருந்து தேசாந்தரக்காரனாக மாறிவிட்டதாக வந்த சில நாட்களில் சொன்னார்.

முதல் சேவல் கூவிவிட்டது. பனைகள் மட்டும் கீகாற்றின் போக்குக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தன. நந்தம் பூசணிக்காட்டு வரப்புப் பக்கம் இருந்து மாதேவப்பா பாடியபடி வருவது தெரிந்தது.

‘`உச்சி வகுந்தெடுத்து... பிச்சிபூ வெச்சகிளி...

பச்சைமலைப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க...''


பட்டியக்கிடையில் எங்களைக் கண்டதும் மாதேவப்பா திடுக்கிட்டு, தயங்கியபடி நின்றார். அப்பா எழுந்து எதுவும் பேசாமல் வரப்பில் ஏறி வீட்டைப் பார்த்து நடந்தார். மறுநாள் கீழ்வானம் வெளிறி விடிந்தது. திருமுருகன் திரையரங்கில் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படம் போட்ட ஏழு நாட்களும், நாள் தவறாமல் மாதேவப்பா படம் பார்த்திருப்பதை பெரியப்பாவின் ஆடுகளை மேய்ப்பவர் சொல்லிவிட்டார். அப்போதும் அப்பா கோபப்படவில்லை. வருத்தமாகப் பேசினார்.

“நல்லவேளை... நம்ம பட்டிக்குத் திருடன் வரலை. வந்திருந்தா, கேக்குறதுக்கு நாதியத்து மொத்த ஆட்டையும் ஓட்டிட்டுப் போயிருப்பான்.''

அன்றில் இருந்து அப்பா, நாய்க்குட்டி தேடுவதில் தீவிரமானார். அப்போது மடத்துப் பாளையத்து அப்புச்சியிடம் நாய்க்குட்டி இருப்பதாக சேதி கிடைத்தது. அப்பா சைக்கிளில் என்னையும் அழைத்துக்கொண்டு மடத்துப் பாளையம் போனார். அப்புச்சி, உப்பாற்றின் மறுகரை வயலில் கொத்தாட்கள் நெற்பயிருக்குக் களையெடுப்பதைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். வாடைக் காற்றில் ஈரமணம். உச்சிப்பொழுதை முகில்கள் மறைத்த பகலாக இருந்தது. உடனே அப்புச்சி எங்களை வீட்டுக்குக் கூட்டிவந்தார்.

மதிற்சுவரில் எருகாமுட்டி தட்டி காயவைக்கப்பட்டிருந்தன. வாசலில் செண்பகப்பூ நிற நாய்க்குட்டி ஒன்று விளையாடிக்கொண்டி ருந்தது. கண்டதும் எங்களுக்குப் பிடித்துப்போனது. நாங்கள் வந்த சோலி தெரிந்ததும் அப்புச்சியின் முகம் இறுக்கம் அடைந்தது.

‘`எனக்கு நாய்க்குட்டியைக் குடுக்கப் பிரியந்தாம் மாப்பிள்ள. ஆனா, சம்பந்தி வூட்டுக்கு நாயைச் சீதனமாக் குடுத்தா, உறவு நாள்பட நெலைக்காதுனு சாங்கீதம் இருக்கே... என்ன பண்ணறது?”

ஊருக்குத் திரும்பிவரும்போது அப்பா நிராசையுடனேயே சைக்கிளை அழுத்துவது தெரிந்தது. அந்த வாரம் எல்லாம் அந்தச் செண்பகப்பூ நிற நாய்க்குட்டி எங்கள் கண்களுக் குள்ளேயே இருந்தது.

ரு வழியாக வருஷ மழையும் ஓய்ந்தது. தை பிறந்து, மானாவாரி நிலப் பயிர்கள் அறுவடையாகின. எங்கும் தரிசான பின்பும் ஆட்டுத் திருடனைப் பிடிக்க முடியவில்லை. மிகச் சாதுர்யமாக பட்டியாடுகளைத் திருடிப்போய்க்கொண்டே இருந்தான். வேறு வழி இல்லாமல் அப்பாவே பட்டிக் காவலுக்குப் போகத் தொடங்கினார்.

அன்று இருண்டவெளி மெள்ள வெளுத்துக்கொண்டிருந்தது. அறுவடை முடிந்துவரும் வருடாந்திரக் குறிக்காரிச்சிகள் வாசலில் நின்றிருந்தனர். அம்மாவை வாசற்படியில் அமர்த்தி, காலம் கணித்து நிமித்திகம் கூறும் குறிக்காரிச்சிகள் ஏடுகளை கோனூசியால் பிரித்தனர். பைரவமூர்த்தி பிரசன்னமானார்.

‘வடுகன் வரப்போறான்...
வாலாட்டி வாசலில் நிற்கப்போறான்
வம்சத்தையே காக்கப்போறான்...’


அம்மா கண்களில் நீர் வந்துவிட்டது. தானியங்களைப் போட்டதும், குறிக்காரிச்சிகள் போய்விட்டனர். ஆனால், எனக்கும் அப்பாவுக்கும் குறிக்காரிச்சி சொன்னதன் மேல் துளியும் நம்பிக்கை வரவில்லை.
அதற்கு அடுத்த சனிக்கிழமை. மூன்றாம் ஜாமம். குளத்துப்பாளையத்து நூற்பாலைச் சங்கு ஊதி அடங்கியது. எங்கள் மானாவாரி நிலத்தில் விளைந்த தானியங்களை விற்க, குண்டடம் சந்தைக்கு அப்பா மொட்டை வண்டி பூட்டினார். நானும் அம்மாவும் மாதேவப்பாவும் தானிய மூட்டை மீது ஏறி அமர்ந்துகொண்டோம். வண்டி கிளம்பியதும் மாதேவப்பா தூங்கிவிட்டார். அம்மா, முந்தானையால் தலைக்கு முக்காடிட்டுக்கொண்டு இருளை வெறித்தபடியே மௌனமாக இருந்தாள். பின்பனிக்காலக் குளிரில் தென்பட்ட ஊர்களின் சனங்களும் நடைசாத்தி, உறங்கிப்போய்க் கிடந்தனர். மின்மினிகள் தன் ஒளிச் சிமிட்டலுடன் பறந்து திரிந்தன. அப்பா குண்டடம் சந்தைப்பேட்டை வரும் வரை எட்டு மைல் தூரமும் சரியான நாய் ஒன்று அமையாமல்போனது பற்றி, ஆற்றாமையுடன் என்னிடம் பேசியபடியே வந்தார்.

சந்தைப்பேட்டையில், ஏற்கெனவே தானியங்களை ஏற்றிவந்த பாரவண்டிகள் அவிழ்த்துவிடப்பட்டி ருந்தன. வியாபாரிகள் விடியட்டும் எனக் காத்திருந்தனர். அப்பா வண்டியை அவிழ்த்து விட்டதும், தானிய மூட்டைகளுக்கு மாதேவப்பாவையும் அம்மாவையும் காவல்வைத்தார். என்னைக் கூட்டிக்கொண்டு சந்தையின் மறுகோடிக்கு வந்தார். தேநீர்க் கடை திறந்திருந்தது. பாய்லர் வெளிச்சத்தில் நின்றிருந்த கடைக்காரர், தேநீரை விநியோகிக்காமல் தாமதப்படுத்தினார்.

‘`வடுகக்குட்டி வந்து வாய் வெக்கணும். அப்புறந்தான் சப்ளையே...”

ஆட்களில் சிலர் எரிச்சலடைந்து நகர்ந்தனர். எனக்கும் அப்பாவுக்கும் எதுவும் புரியவில்லை. அந்தச் சமயத்தில் திடீரென தேநீர்க் கடைக்காரர் கத்தினார். ‘`வா வடுகா... வந்துட்டியா... வந்து
ஒரே ஒரு வாய் என் காணிக்கையை எடுத்துக்க...''

முருங்கைப்பூ நிற நாய்க்குட்டி ஒன்றுவந்து கடை முன்பு நிற்பதை அப்போதுதான் நானும் அப்பாவும் பார்த்தோம். கடைக்காரர் அவசரமாகச் சிறிய தலைவாழை இலையில் ஒரு சூடான வடையையும் கொஞ்சம் தேநீரையும் ஊற்றி, நாய்க்குட்டியின் முன்பு பவ்யமாக வைத்தார். நாய்க்குட்டி உடனே தின்னாமல் சற்று யோசித்தது.

‘அப்பனே எடுத்துக்க... ரோசணை பண்ணாதே இன்னிக்கத்த பொழப்புதான், எனக்கு எட்டு நாள் சீவனம்...”

வடுகநாதம்

கடைக்காரர் செய்தது எங்களுக்கு விசித்திரமாகப்பட்டது. நாய்க்குட்டி சட்டெனக் குனிந்து, நாவால் தேநீரை மட்டும் நக்கியது. பின்னர் நகர்ந்து வேறு கடைப்பக்கம் சென்றது.

கடைக்காரர் உள்ளே பார்த்துச் சத்தமிட்டார்... `‘வடையைக் கொறைச்சலாவே போடு. வடுகன் தொடலை... இன்னிக்கு இழுக்காது.”

சில கடைகளின் பக்கம் அந்த நாய்க்குட்டி நிற்கவில்லை. நிறையக் கடைக்காரர்கள் நாய்க்குட்டிக்கு சிறிது பிரசாதமாகவைத்த பின்னரே வியாபாரத்தைத் தொடங்கினர். எனக்கும் அப்பாவுக்கும் இந்த முருங்கைப்பூ நிற நாய்க்குட்டியை நிரம்பவும் பிடித்துப்போனது.

எங்கள் வண்டிப் பக்கம் வந்தபோது நான் அப்பாவிடம் கேட்டேன்... ‘`ஏம்ப்பா... இந்த நாய்க்குட்டி நமக்குக் கெடைச்சா, நல்லா இருக்குமில்ல?''

``ஆமான்டா... நானும் இப்பிடி ஒரு தெய்வீக அம்சம் பொருந்திய நாயைத்தான்டா இத்தனை நாளும் தேடிட்டிருந்தேன்.”

பொழுது கிளம்பி மேலே ஏறிவிட்டது. அப்பா, தானிய மூட்டைகளை விற்று முடித்திருந்தார். பூண்டு, மிளகு, பட்டை, சோம்பு போன்ற ‘செலவுப்பெட்டி’ சாமான்கள் வாங்க அம்மா சந்தைக்குள்ளே போய்விட்டாள். மாதேவப்பா பீடியைப் புகைத்தபடி, வண்டியின் முக்காணிக் கட்டை மீது உட்கார்ந்திருந்தார்.

அப்பா கேட்டார்... ‘`இங்க இருக்கிற டென்டு கொட்டகையிலயும் `ரோசாப்பூ ரவிக்கைகாரி' ஓடுது. பார்த்துட்டு வர்றியா?”

மாதேவப்பா, பீடிப் புகையை மூக்கில் விட்டுக்கொண்டே அசட்டுச் சிரிப்பு சிரித்தார். திருவோடும் கம்பும் பிடித்தபடி காவிப் பண்டாரங்கள் பாடியபடி வந்து பிச்சை கேட்டனர். அவர்களுக்குப் பின்னே முருங்கைப்பூ நிற அதே நாய்க்குட்டி நின்றிருந்தது. எங்களை அண்ணாந்து பார்த்து, வாலை லேசாக ஆட்டியது.

அப்பா கிட்டத்தில் போய் அதைத் தடவிக்கொடுத்தார். சாதுவாகவே நின்றது. கண்கள் சாந்தமாக இருந்தன.  நகம், இரட்டைப்படை எண்ணிக்கை. நிமிர் வால். விறைத்தக் காதுகள். அப்பா நாய்க்குட்டியைத் தூக்கியபடி எழுந்தார்.

‘`சர்வலட்சணங்களும் பொருந்திய நாய்க்குட்டி இதுடா...''

உடனே மாதேவப்பா கேட்டான்... ‘`அப்படின்னா... இந்த நாய்க்குட்டியைக் கட்டி, வண்டியில நம்ம தோட்டத்துக்குத் தூக்கிட்டுப் போயிருவோமா?”

அடுத்த கணம் நாய்க்குட்டி அப்பாவின் பிடியில் இருந்து நழுவி, கீழே குதித்தது. கூட்டத்தின் இடையே புகுந்து சந்தைப் பேட்டையின் நுழைவாயிலை நோக்கி ஓடியது. அப்பா மாதேவப்பாவை முறைத்துவிட்டு, நாய்க்குட்டி சென்ற திசையைக் குறிவைத்து ஓடினார். நானும் பின்னே ஓடினேன்.

அதற்குள் நாய்க்குட்டி நுழைவாயிலைக் கடந்து. தார்ச்சாலையில் கிழக்குப் பார்த்து ஓடியது. வாகனங்களைக் கண்டு பயமின்றி ஓரமாகவே சென்றது. ஊரின் கிழக்கோடிக்கு வந்து, தெற்கே திரும்பியது. நாங்களும் விடாமல் பின்தொடர்ந்தோம். நாய்க்குட்டி வடுகநாத ஸ்வாமி கோயிலின் முன்பு போய் நின்று, மூச்சு வாங்கியது. பின், நடை தாண்டி உள்ளே போனது. கொடிமரத்தில் இருந்து வலமாக ஓடி, பிரகாரம் சுற்றிவந்தது. வடுகநாதர் சன்னதி படிக்கட்டில் ஏறி, முன்னங்காலை நீட்டிப் படுத்துக்கொண்டது. நாங்கள் ஒன்றும் புரியாமல் படுத்துக்கிடக்கும் நாய்க்குட்டியையே பார்த்தபடி இருந்தோம்.

பித்தளைக் குடத்தில் தண்ணீர் சுமந்துவந்த குருக்கள் நின்று பேச ஆரம்பித்தார்...

‘`ஏழெட்டு மாசத்துக்கு முன்னால ஒரு சாயங்காலம், கார்மழை, இடியும் மின்னலுமாகக் கொட்டுது. காத்தும் அசுரத்தனமா வீசுது. நேரம் ஆயிட்டுதேனு நான் நடை திறக்க வந்தேன். கோபுரத்தின் அடியில ஆறேழு குறி சொல்ற கோடாங்கிப் பொண்ணுக மழைக்கு ஒண்டியிருந் தாங்க. நான் நடை திறந்ததும், அவுங்ககிட்ட இருந்து இந்த நாய்க்குட்டி ஓடிவந்து வடுகநாதர் சன்னதி முன்னால நின்னுக்குச்சு. மழைவிட்டதும் கோடாங்கிப் பொண்ணுக போயிட்டாங்க. இந்த நாய்க்குட்டி போகலை. புராண காலத்துல அசுரர்கள் செய்த கொடுமைகளைப் பொறுக்காத பிரசுதாரணன்  என்ற முனிவன், தேவர்களுக்காக காசியில் உத்திரவேள்வி செய்தபோது பைரவர் பாலகனாகத் தோன்றினாராம்... வடுகநாதன்னு பேரோடு. வடுகன்னா, பாலகன்னு அர்த்தம். நானும் இந்த நாய்க்குட்டியை இந்தக் கலிகாலத்துல தோன்றிய வடுகன்னு நெனைச்சு கோயில்லயே விட்டுட்டேன்.''

சந்தைப்பேட்டை வரும் வரை அப்பா மௌனமாகவே வந்தார். எங்களுக்காகக் காத்திருந்த அம்மாவிடம், நான் நடந்ததை எல்லாம் சொன்னேன். அம்மாவின் முகம் மலர்ந்தது.

‘`அடேய்... அன்னிக்கு குறிக்காரிச்சி சொன்ன நாய்க்குட்டி இதுதான்டா...”

வண்டி, வடுகநாதசாமி கோயில் பக்கம் வந்ததும் நிறுத்தச் சொல்லி இறங்கினாள். கோயிலின் நடைப்பக்கம் போய் நின்று, குரல் கொடுத்தாள்...

``வடுகா... வடுகா...”

நாங்கள் யாரும் எதிர்பார்க்காத அந்தக் கணத்தில், முருங்கைப்பூ நிற நாய்க்குட்டி ஓடிவந்து அம்மாவின் காலடியில் நின்றது.

ங்கள் தோட்டத்துக்கு வந்த பின்னர், நாய்க்குட்டியை நாங்கள் `வடுகன்' என்றே பெயர் சொல்லி அழைத்தோம். பகல்களில் எல்லாம் வீட்டு வாசற்படியிலேயே படுத்துக்கிடக்கும். இருள் சூழ்ந்ததும், தானாகப் பட்டிக்குச் சென்று, ஆடுகளுடனேயே படுத்துக்கொள்ளும். ஆடுகள், வடுகனைக் கண்டு மிரளவில்லை. குட்டிகள், இதோடு விளையாடின.

ரு வருடம் போயிருந்தது. அன்று பகல் உக்கிரத்தின் வெம்மை அகலாத இரவு. அகால ஜாமத்தில் வாசலில் நின்று யாரோ கூப்பிடுவது கேட்டது. அந்தக் குரல், அதுவரை நாங்கள் கேட்டிராத குரலாக இருந்தது. நானும் அப்பாவும் குத்தீட்டியுடன் கதவைத் திறந்தோம். அதற்குள் கட்டுத்தரை பக்கம் இருந்து மாதேவப்பா அரிவாளுடன் வந்து நின்றார். மின்சார ஒளியில், வந்திருந்தவன் நடுங்கியபடி கை கூப்பினான். அவனின் வலது கெண்டைக் காலில் சதை பிய்ந்து, ரத்தம் நிற்காமல் வடிந்துகொண்டிருந்தது.

‘`என்னை மன்னிச்சிருங்க. நான் உங்க பட்டியில ஆடு திருட வந்தனுங்க. பட்டிக்குள்ள ஆடோட ஆடா உங்க நாய் படுத்திருக்கிறதைக் கவனிக்கலீங்க. எம்மேல பாஞ்சு கடிச்சிருச்சுங்க. பல்லு பலமா பட்டிருச்சுங்க. `கடிச்ச நாய் வீட்டுல ஒரு வாய் தண்ணி வாங்கிக் குடிச்சா, பல்லு வெஷம் ஏறாது'ங்கிறது பெரியவங்க வாக்கு. அதுதான் வந்துட்டேனுங்க. என்னை நீங்க போலீஸுலயே புடிச்சுக் குடுத்தாலும் சரி. ஆனா, ஒரு வாய் தண்ணி ஊத்தலைனு மட்டும் சொல்லிறாதீங்க...''

அவனுக்குச் சொற்கள் திக்கின. கண்களில் நீர் பெருகியது. அம்மா வீட்டுக்குள் போய் சொம்பில் தண்ணீர் கொண்டுவந்தாள். அவன் இரு கைகளையும் ஒட்டி, தண்ணீரைக் குடித்து முடித்தான். அதுவரை அமைதியாக இருந்த மாதேவப்பா, சட்டென அவனை நெருங்கிப் பிடித்துக்கொண்டார். அரிவாளைக் காட்டி மிரட்டியபடி, தென்னை மரத்தில் கட்ட இழுத்துப்போனார். அதுவரை எதுவும் பேசாமல் நின்றிருந்த அப்பா, குத்தீட்டியை வெளித்திண்ணை மீது வீசியெறிந்துவிட்டுச் சொன்னார்.

`‘அவனை விட்ரு மாதேவப்பா...''

வேறு வழியில்லாமல் மாதேவப்பா அவனை விட்டுவிட்டார். அவன் ஓடிவந்து, அப்பாவின் காலடியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான். பின் எழுந்து கைகூப்பியபடி போய்விட்டான். எனக்கு இவை எல்லாம் ஏதோ கனவில் நடப்பதுபோல இருந்தது. இந்த விஷயம் ஊருக்குள் தெரிந்தபோது ஊர்க்காரர்கள் அப்பா மீது கோபப்பட்டனர். ஆனால், அதன் பின்னர் எங்குமே ஆட்டுத் திருட்டு நடக்கவில்லை.

ரு வருடங்களுக்குப் பின் துந்துபி வருஷத்தின் புரட்டாசி மாத மழை நாள். இடியுடன்கூடிய கனமழை பெய்து, வானம் வெளிவாங்கியிருந்த உச்சிப் பகல். நல்லிமடம் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த நான், மதிய உணவுக்குப் பின் பசங்களோடு ஈர மைதானத்தில் தொட்டு விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தேன்.

அப்போது மேற்கே இருந்து சத்தம். கோவில்பாளையத்துக்காரர்கள் ஒரு நாயைத் துரத்திக்கொண்டு வந்தனர். நாய், நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு, ஜலவாய் ஒழிக்கியபடி விரைசலாக வந்துகொண்டிருந்தது. அது மடத்துப்பாளையம் அப்புச்சியின் செண்பகப்பூ நிற நாய் என்பதை நான் பார்த்ததும் கண்டுகொண்டேன். துரத்திவந்தவர்கள் சத்தமிட்டனர்.

‘`மசை நாய்... ஓடிருங்க... ஓடிருங்க...”

நாங்கள் வகுப்பறைத் திண்ணை மீது ஏறி நின்றுகொண்டோம். நாய், துரத்துபவர்களுக்குப் பிடிபடாமலேயே போய்க்கொண்டிருந்தது.

வடுகநாதம்

ஒரு வாரகாலம் ஓடியும் அந்த மசை நாய் யாரிடமும் சிக்காமலேயே சுற்றிக்கொண்டிருந்தது. ஆட்டுக்குட்டிகளை, மாட்டுக்கன்றுகளை பிற நாய்களைக் கடித்துச் சேதப்படுத்தியிருந்ததாகத் தகவல் வந்துகொண்டே இருந்தது. வேலைக்காட்டில் சில பெண்களைக்கூட கடித்துவிட்ட தாகச் சொன்னார்கள். குழந்தைகளை எல்லாம் பெரியவர்களே பள்ளிக்குக் கூட்டிவந்து விட்டபடி இருந்தனர். எனக்கும் அப்பா துணைக்கு வந்தார்.

அன்று திங்கட்கிழமை. அப்பா காங்கேயம் சந்தைக்கு தேங்காய் கொண்டுபோய்விட்டார். நான் வெளித்திண்ணையில் உட்கார்ந்து, உட்கார்ந்து பார்த்தேன். என்னைக் கூட்டிப்போகும் மாதேவப்பா எங்கோ சென்றுவிட்டார். நானே துணிந்து பைக்கட்டைத் தூக்கிக்கொண்டு கிளம்பினேன். எறவான கூரை மீது அண்டங்காக்கைகள் கத்துவதைக் கண்டு அம்மா எச்சரித்தாள்.

‘`டேய்... ரோட்டு வழியாகப் போயிராதே... மசை நாய் வந்திரும். குறுக்கு வழியா இட்டேரியில போ.”

இட்டேரியின் இருபுறங்களிலும் முடக்கற்றான் கொடி படர்ந்த கிளுவை வேலி, அநாதரவாகக் கிடந்தது. தூரத்தில் மணிப்புறாக்கள் மட்டும் கூவின. சுள்ளிப்பூ பறித்து, தேன் உறிஞ்சியபடி நான் நடந்துகொண்டிருந்தேன். ஒரு திருப்பத்தில் செண்பகப்பூ நிற நாய் நாக்குத் தொங்கலோடு எதிரில் வந்துகொண்டிருந்தது. பார்த்ததும் எனக்குப் பகீரென்றது. திகிலில் மனம் உறைந்துபோனது. சுற்றும் முற்றும் பார்த்தேன். காலை வெயிலைத் தவிர, யாரும் இல்லாத இட்டேரி வெறிச்சிட்டுக்கிடந்தது.

வாலை, பின்னங்கால்களுக்கு இடையே செருகிய நாய் என்னைப் பார்த்து வேகம் எடுத்துப் பாய்ந்து வந்தது. நான் திரும்பிக் கத்தியபடி தோட்டத்தைப் பார்த்து ஓட ஆரம்பித்தேன்.
``அய்யோ... அம்மா... அப்பா... காப்பாத்துங்க... காப்பாத்துங்க...''

மசை நாய் என்னை நெருங்குவதற்கு இன்னும் சில அடி தூரங்களே பாக்கியிருந்தன. மசை நாய் கடித்து சாகப்போகிறேன் என அந்தக் கணம் நினைத்தேன். மேலும் விசைகொண்டு ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தினேன். நாய் என் நெருக்கத்தில் வருவது அதன் காலடி ஓசையில் இருந்து தெரிந்தது. அப்போது என்னையும் அறியாமல் என் வாய் முணுமுணுத்தது...
``வடுகா... காப்பாத்து. வடுகா... காப்பாத்து.”

ஓடியபடியே நிமிர்ந்து பார்த்தேன். என் எதிரில் வடுகன் ஓடிவந்துகொண்டிருப்பது தெரிந்தது. மசை நாய் என்னை விட்டுவிட்டது. வடுகன் மீது பாய்ந்தது. இரண்டும் சத்தமாகக் குரைத்தபடி, மூர்க்கமாகச் சண்டையிட்டன.

நான் நிற்காமல் தோட்டத்துக்கு ஓடிவந்துவிட் டேன். அம்மா ஆசுவாசப்படுத்தினாள். சிறிது நேரத்துக்குப் பிறகு, வடுகன் வாசலில் வந்து நின்று வாலாட்டியது. வாயெல்லாம் ரத்தக் கறை. அன்று இள மதியத்தில் இட்டேரியில் செண்பகப்பூ நிற மசை நாய் குரல்வளை கடிபட்டுச் செத்துக்கிடப்பதாக மாதேவப்பா வந்து சொன்னார்.

அன்றில் இருந்தே வடுகன் எதுவும் சாப்பிடவில்லை. தென்னந்தோப்பின் கிழக்கு ஓரமாகப் போய், அமைதியாக நின்றுகொண்டது. மறுநாள் நாக்கு நீண்டு, ஜலவாய் ஒழுக ஆரம்பித்தது. மாதேவப்பா இரும்புச் சங்கிலியை எடுத்துப் போய், வடுகனை தென்னை மரத்தோடு சேர்த்துக் கட்டியபடி சொன்னார்...

``வடுகனுக்கு மசை பிடிச்சிருச்சு...''

வடுகன் அசையவே இல்லை. திறந்த கண்களில் இருந்து நீர்த்துளிகள் உதிர்ந்துகொண்டே இருந்தன. மசை நாய்க்கே உண்டான எவ்வித மூர்க்கக் குணமும் இல்லை. சாந்த சொரூபியாகவே நின்றான். பதிமூன்று தினங்கள் கழித்து அதிகாலையில் போய்ப் பார்த்தபோது வடுகன் தரையில் விழுந்துகிடந்தான். காதோரம் எறும்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன.

அப்பா, வடுகனை நாரத்தை மரத்தின் வேர்க்காலில் புதைத்தார். முப்பது வருடங்கள் கடந்துபோன பின்னரும் மரம் பருவம் தவறாமல் பூப்பூத்து, காய்க்கிறது. எத்தனையோ பஞ்ச காலத்திலும் மரம் பட்டுப்போகவில்லை. தற்போது நகரோடியான நானும், இந்த வாழ்க்கை வடுகன் போட்ட பிச்சை என அவ்வப்போது நினைத்தபடியே இருக்கிறேன்!