Published:Updated:

பெண்களின் அந்தரங்க உலகை இலக்கியத்துக்கு கொண்டு வந்த அநுத்தமா..! கதை சொல்லிகளின் கதை - பாகம்17

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெண்களின் அந்தரங்க உலகை இலக்கியத்துக்கு கொண்டு வந்த அநுத்தமா..! கதை சொல்லிகளின் கதை - பாகம்17
பெண்களின் அந்தரங்க உலகை இலக்கியத்துக்கு கொண்டு வந்த அநுத்தமா..! கதை சொல்லிகளின் கதை - பாகம்17

பெண்களின் அந்தரங்க உலகை இலக்கியத்துக்கு கொண்டு வந்த அநுத்தமா..! கதை சொல்லிகளின் கதை - பாகம்17

                                                                                                                        முந்தைய பாகங்கள்:

பாகம்-2- ஆ.மாதவய்யா

பாகம்-5- மௌனி

பாகம்-6 - கு.பா.ரா

                                                                                                       பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்

பாகம் - 13 - எஸ்.வி.வி

பாகம்- 15.1  கல்கி

பாகம்-15.2 கல்கி

பாகம் - 16 - இராஜாஜி

இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு அநுத்தமாவைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் தலைமுறையிலும், ஏன் நானும்கூட அவருடைய பெயரை அறிந்திருந்தேனேயொழிய அவருடைய சிறுகதைகளை வாசித்ததில்லை. `மணிக்கொடி'ப் பாரம்பர்யத்தையும் `தாமரை', `சரஸ்வதி' பாரம்பர்யத்தையுமே பெரிதாக எண்ணிய நாங்கள், `கலைமகள்', `விகடன்' பாரம்பர்யத்திலும் திராவிட இயக்கப் பாரம்பர்யத்திலும் வளர்ந்த எழுத்தாளர்களை அவ்வளவாக வாசித்ததில்லை; வாசிப்பதில்லை. அது ஒரு மனவியாதி என்பதை, மிகத் தாமதமாகவே நான் உணர்ந்தேன்.

தவிர, அநுத்தமா அதிக காலம் கல்கத்தாவிலேயே வாழ்ந்து அங்கு இருந்தபடியே எழுதியவர் என அறிகிறோம். அவருடைய `நைந்த உள்ளம்' நாவல் மிகப் பிரசித்தம். `கேட்ட வரம்' நாவல், காஞ்சிப் பெரியவருக்கு மிகவும் பிடித்த நாவல் `கேட்ட வரம்', பாளையம் என்ற ஊரில் நடைபெறும் பஜனை சம்பிரதாய நெறி பற்றிப் பேசும் நாவல்.

`காஞ்சி மகா ஸ்வாமிகள், இவரை ` `கேட்ட வரம்’ அநுத்தமா' என்றுதான் அழைப்பாராம். இவரது எழுத்துகளைப் போற்றி, சமீபத்தில் காஞ்சிப் பெரியவர்கள் இருவரும் இவரைப் பாராட்டி நற்சான்றிதழ் அளித்து ஆசி வழங்கியுள்ளனர். இந்திய நாட்டின் மிகப்பெரிய விருதுகளையும் பட்டங்களையும் வழங்கும் தலைவர்களே, காஞ்சி மகானின் ஆசியைத் தேடி காஞ்சிபுரம் வருகின்றனர். ஆனால், அந்தக் காஞ்சி மகான் `அநுத்தமா’வுக்குப் பட்டமும் ஆசியும் வழங்கினார். இதுவே இவரது எழுத்துக்குக் கிடைத்த முத்திரை' என்று அவருடைய ஐந்து சிறுகதைத் தொகுப்புகளுக்குமான பதிப்புரையில் கலா நிலையம் பதிப்பகத்தார் குறிப்பிட்டுள்ளனர்.

காஞ்சிப் பெரியவரைச் சந்தித்த இரு அனுபவங்களைப் பற்றி அநுத்தமா எழுதிய உணர்ச்சிகரமான கட்டுரை ஒன்று இணையத்தில் காணக் கிடைக்கிறது. ஆகவே, இவர் அக்கரையில் நிற்பவர் என்று புறம்தள்ளுவது நியாயமில்லை. 40-களில் வாசிப்பும் இலக்கியப் பரிச்சயமும் வாய்க்கப் பெற்ற உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த பெண்கள்தாம் ஆரம்பத்தில் எழுத வந்தனர். அதிலும்தான் எத்தனை பேரால் தொடர்ந்து எழுத முடிந்தது. அன்றைய சமூகத்தின் பிடிக்குள் நின்றுகொண்டே இலக்கியம் படைக்கவேண்டியிருந்ததையும் நாம் கணக்கில்கொள்ள வேண்டும்.

மறுபதிப்பாக அவருடைய கதைகளை ஐந்து தொகுப்புகளாக கலா நிலையம் வெளியிட்டுள்ளது. ருசியான கதைகள், அற்புதமான கதைகள், பிரமாதமான கதைகள், படு பேஷான கதைகள், அழகான கதைகள் என, இந்தத் தொகுப்புகளுக்கு பெயர் சூட்டியுள்ளார்கள். இப்படியெல்லாம் பேர் சூட்டியதற்காக இந்தப் புத்தகங்களைப் புறக்கணிக்கலாம்தான். ஆனால், அநுத்தமாவின் கதைகள் புறக்கணிக்க முடியாதவை. அவருக்குப் பரிச்சயமான பிராமண வாழ்வைப் பற்றி மட்டும் அவர் எழுதவில்லை. பிராமண வீடுகளில் பணிப்பெண்களாக வரும் எளிய வர்க்கத்துப் பெண்கள், உழைப்பாளிகள் பற்றியும் நியாயமான பரிவுணர்வுடனும் உழைப்பை மதித்தும் கொண்டாடியும் பல கதைகளை எழுதியுள்ளார்.

அதைவிட முக்கியமாக 1947-ம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கிய அநுத்தமா, 22 நாவல்கள், 300 சிறுகதைகள், 15-க்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் மற்றும் சிறுவர் நூல்கள் என எழுதிக் குவித்தவர். இந்து குடும்பங்கள் வலியுறுத்தும் பெண் கடமைகள், ஆச்சாரங்கள், அடங்கி நடத்தல், கணவர் பணிவிடை, குடும்பப் பெருமை, குடும்ப மானம், ஈருடல் ஓருயிராக வாழ்தல், இத்யாதி விஷயங்கள் உயர்வானவை என நம்பி வாழ்ந்து, அதையே தன் எழுத்திலும் கொண்டாடிய ஆளுமை, அநுத்தமா. பெண் உரிமை, பெண் விடுதலை போன்ற விஷயங்கள் அவருக்குத் தெரியாமலிருக்க முடியாது. 2003-ம் ஆண்டு வரை எழுதிய அவர், நிச்சயம் அறிந்திருப்பார். எனினும், குடும்ப எல்லையைத் தாண்டாத வாழ்வும் எழுத்துமே அவருக்கானவை.

பல கதைகள் இருந்தாலும் அவருடைய `சுருதிபேதம்' என்னும் கதை, அவருடைய எழுத்தின் அடையாளமாகச் சொல்லத்தக்கக் கதை.

விஜயாவுக்கும் அவள் கணவர் ஷண்முகசுந்தரத்துக்கும் ஒத்துப்போவதேயில்லை. எதற்கெடுத்தாலும் சண்டை வந்துவிடுகிறது. அடக்கி அடக்கிப் பார்த்து முடியாமல், தன் மன பாரத்தை எல்லாம் தன் தோழியான சரோஜாவிடம் கொட்டித்தீர்த்து `வழிகாட்டுதல் கேட்க வேண்டும்; ஆறுதல் பெற வேண்டும்' என நினைக்கிறாள். அதற்காகவே ஒரு பாட்டுக் கச்சேரிக்கு அவளை அழைத்துக்கொண்டு போய் அங்கு வைத்துப் பேசத் திட்டமிடுகிறாள். அவளை அழைப்பதற்காக சரோஜாவின் வீட்டுக்குப் போகிறாள். வாசற்படியில் கால் வைக்கும்போதே சரோஜாவின் கணவர் கத்திக்கொண்டிருப்பதை விஜயா கேட்கிறாள்.

``உன்னிடம் எப்படிக் கத்த முடியும்? ஹோட்டல்காரனிடம் கத்தினாலும் சற்று பயந்துகொண்டு செய்வான். `காபி கொண்டு வா’ என்று கேட்டால், கொஞ்சமாகப் பொடியைப் போட்டு நிறைய உப்புத்தண்ணீரை விட்டு, பொடி மிதக்க அழுக்குத் துணியில் வடிகட்டி ஆறிய பிறகே ஆடையோடுகூடிய பாலை ஊற்றி சர்க்கரை போதாமல் கலந்து, பாசி படிந்த பித்தளை டம்ளரில் ஒரு விரல் உள்ளே தோய்ந்தபடி கொண்டுவந்து கொடுப்பாய். அதை நான் தேவாம்ருதமாக எண்ணிக் குடிக்க வேண்டும்” என்று ராமலிங்கம் கூறிக்கொண்டிருந்தார்.

உள்ளே வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு, விஜயா யோசனையுடன் நின்றுவிட்டாள். `இங்கேயும் இவ்வளவுதானா? நாம் என்னவோ ஆறுதலை உத்தேசித்து இங்கு வந்தோமே!' என்று எண்ணியபடி, அவள் வாயிற்படியில் தயங்கி நின்றுவிட்டாள். அகஸ்மாத்தாக தெருப்பக்கம் பார்த்த ராமலிங்கம், விஜயா நிற்பதைக் கண்டு, ``உள்ளே வாருங்கள், சரோஜா இருக்கிறாள்'' என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டார்.

விஜயா விறுவிறுவென உள்ளே சென்றாள். தன் சிநேகிதி சரோஜா கட்டிலின் மீது படுத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பாள் என்று அவளுக்குத் தீர்மானமாகத் தோன்றியது. அந்தச் சம்பவத்தை எப்படிச் சமாளிக்கலாம் என்று தன் மனதினுள் யோசித்தபடியே அவள் உள்ளே நுழைந்தாள்.

``விஜயா, இங்கே இருக்கிறேன் வா” என்று சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள் சரோஜா. அவள் தொனி கணீரென இருந்தது. கண்ணீரால் அலம்பப்பட்ட உப்புக்கரிப்போ, கரகரப்போ அதில் சிறிதுமில்லை. விஜயா வியப்புடன் நோக்கிக்கொண்டே, தோழியிடம் ஏகினாள்.

தோழிகள் இருவரும் கச்சேரிக்குப் போகிறார்கள். இளம் பாடகர் பாடுகிறார். ஆயினும் கச்சேரி சோபிக்காமல் சப்பென்றிருந்தது.

``என்ன, பாட்டு சோபிக்கவே இல்லையே!” என்று மெதுவாகக் கேட்டாள் சரோஜா.

``சுருதி சேரவில்லை, அதுதான்” என்று சட்டென பதிலளித்தாள் விஜயா. அவளுக்கு நல்ல சங்கீத ஞானமுண்டு.

கதையின் மையப்புள்ளியாக இந்த சுருதிபேதம் விவாதிக்கப்படுகிறது.

வீடு திரும்பிய பிறகு சரோஜா தன் கணவனுடன் இது பற்றி விவாதிக்கிறாள்.

``சுருதிபேதம். இன்று பாடகன் சுருதியோடு சேராமல் பாடிக்கொண்டே போனான். கேட்கவே வழங்கவில்லை. எனக்கு முன் அவளேதான் அதைக் கண்டுபிடித்தாள். தம்பூர் நல்லதாக இருந்தால் என்ன, பாடகன் பல நாள் பயின்றவனாக இருந்தால் என்ன? தம்பூர் சுருதி நாதமும் இவன் குரல் நாதமும் சேர்ந்து இழைந்தால் அல்லவா ஜீவனுள்ள சங்கீதம் ஏற்படும்? தன் வாழ்க்கையிலும் சுருதிபேதம் இருப்பதை அறிந்துகொள்ளாத மூடமாக அவள் தன் கணவனையும் பெற்ற பிள்ளையையும் கடிந்துகொள்கிறாள்.”

கணவன் அப்படிப் பேசினாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் மனைவி, கணவனின் பாட்டுக்கு சுருதி கூட்டி வாழவேண்டும் என்பதுதான் கதையின் சேதி. இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்றால் நமக்கு ஏற்புடையதுதான். மனைவிதான் கூடுதலாக விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வாசகர்களாகிய நமக்கு இடிக்கிறது.

அநுத்தமாவின் `கேட்ட வரம்' என்ற நாவலை பட்டியல் மன்னரான க.நா.சு  தன் பட்டியலில் சிபாரிசு செய்திருக்கிறார். அதை சுந்தரராமசாமி மறுத்திருக்கிறார்

``க.நா.சு இந்த நாவலை ஏன் சிபாரிசு செய்தார்?'' என அவரிடம் சுந்தரராமசாமி கேட்டபோது, ``பெண்களுக்கு அந்தரங்க உலகம் ஒன்று உள்ளது. அது இலக்கியத்துக்கு வரவேண்டும்'' என்றாராம் க.நா.சு. ``இப்போதைக்கு வந்திருப்பதில், இது நம்பகத்தன்மையுடன் அதிக மிகையுணர்ச்சிகள் இல்லாமல், உபதேசங்கள் இல்லாமல் இருக்கிறது. அதனால் சொன்னேன்'' என்றாராம்.

இந்தப் பண்பு அவருடைய சிறுகதைகளுக்கும் பொருந்தும். ``சமையலுக்கும் நாவல்களுக்கும் அடுக்களையில் இருந்தே பாத்திரங்களை எடுக்கிறீர்களே?'' என்று பாராட்டுவாராம் அகிலன்.

``பாசாங்குத்தனமே இல்லாத, பொய்மை என்பதே அறியாத ஜீவனாக வாழ்ந்த அபூர்வ மனுஷி. அவரது எழுத்துக்கும் சொந்த வாழ்வுக்கும் எந்த பேதமும் இல்லை. ஆதர்சம் என்று எதை நம்பினாரோ அதன்படி வாழ்ந்தவர். குறைகள் இருந்திருக்காதா? நிறைய இருந்திருக்கும் சாமானியருக்கு. அவற்றின் நிழலே தன் மீது படியாமல் பார்த்துக்கொண்ட விவேகம் அவராகப் பழகிக்கொண்டதாகப்படுகிறது. பிரபஞ்சத்தின் தோன்றல்கள் அனைத்தையும் ஆத்மார்த்தமாக நேசித்ததாலேயே அவருக்கு அது சாத்தியமாயிற்று எனத் தோன்றுகிறது. அவரது பரந்த வாசிப்பும் தார்மிகப் பண்புகளில் அவருக்கு இருந்த ஆழ்ந்த நம்பிக்கையும் அவரைப் பதப்படுத்தியிருக்கலாம். தாமரை இலை நீர்போல வாழ்வது சுலபமல்ல. எழுத்தாளர்கள், சுலபத்தில் நொறுங்கிவிடும் இயல்பு உடையவர்களாக அறியப்படுபவர்கள். அதனாலேயே அநுத்தமா அபூர்வப்பிறவியாகத் தெரிகிறார்” என்று அநுத்தமாவைப் பற்றி எழுத்தாளர் வாஸந்தி கூறுகிறார்.

இராஜேஸ்வரி பத்மநாபன் (பூர்வீகம் வட ஆற்காடு மாவட்டம்), ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1922-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி பிறந்தார். ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே கல்யாணமாகிவிட்டது. மீண்டும் ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மெட்ரிகுலேஷன் வரை படித்த இவர், தனது சொந்த முயற்சியால் தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். 12-ம் வயதிலேயே பத்மநாபன் என்பவரை மணந்தார். புகுந்த வீட்டில் மாமனார் அவரை மகள்போல் நடத்தினார். தனது 22-வது வயதில் எழுதத் தொடங்கினார். தான் எழுதிய முதல் சிறுகதையான `ஒரே ஒரு வார்த்தை'யை மாமனாரிடம் படிக்கக் கொடுத்தார். அதைப் படித்துவிட்டு ``பலே'' என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி பாராட்டியவர், லலிதா சகஸ்ரநாமத்திலிருந்து `அநுத்தமா' என்ற பெயரைத் தெரிவுசெய்து, மகள்போல் இருந்த மருமகளுக்குப் புனைபெயராகச் சூட்டி மகிழ்ந்தார்.

மாமனார் புனைபெயர் சூட்டிய பிறகுதான் `அநுத்தமா' என்ற பெயரில் எழுதிக் குவிக்கத் தொடங்கினார் இராஜேஸ்வரி பத்மநாபன். இவருக்கு வாய்த்த கணவர் பத்மநாபன், அநுத்தமாவுக்கு உற்ற துணையாகவும் உதவும் கரமாகவும் விளங்கினார். 

இவரது முதல் படைப்பான `அங்கயற்கண்ணி', கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது `மணல் வீடு' புதினம் முதல் பரிசு பெற்றது. அதன் பிறகு பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. அநுத்தமா எழுதிய கதைகள் அனைத்தும் குடும்பக் கதைகள். ஒவ்வோர் இல்லத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகளைத்தான் அவை பிரதிபலித்தன.

ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்றிருந்தார் அநுத்தமா. மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். அவருடைய இத்தகைய புலமைக்கு கணவரே காரணம் என்றால் மிகையல்ல. கலைமகள் இதழின் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன் மீது அநுத்தமாவுக்கு அளவுகடந்த பக்தியும் மரியாதையும் இருந்தன. 

கி.வா.ஜ., எல்லோரிடமும் அநுத்தமாவை அறிமுகப்படுத்தும்போது ``எனது தங்கை" என்று சகோதரப் பாசத்துடனேயே அறிமுகப்படுத்துவாராம். ஒருமுறை கி.வா.ஜ., ``கலைமகள் இதழுக்கு ஒரு நாவல் எழுதித் தர முடியுமா?'' எனக் கேட்க, அநுத்தமாவும் உடனே ஒப்புக்கொண்டாராம்.

``எத்தனை நாள்களில் தர முடியும்?'' என்று கி.வா.ஜ கேட்க, ``பத்து நாள்களில்'' என்று அநுத்தமா வாய்தவறிச் சொல்லிவிட்டாராம்.

``அது எப்படி ஒரு முழு நாவலை பத்து நாள்களில் உன்னால் எழுத முடியும்?'' என்று கேட்டாராம். 

அன்றிரவே அநுத்தமா எழுதத் தொடங்கினார்.  எழுத எழுத, அந்தக் காகிதங்களிலேயே பிழை திருத்தி, கணவரிடம் கொடுப்பாராம். அநுத்தமா புதிய பக்கங்களை எழுதிக்கொண்டிருக்கும்போதே, ஏற்கெனவே எழுதித் திருத்திய பக்கங்களை, பத்மநாபன் திருத்தி பிரதியாக எடுப்பாராம்.

பெண்கள் எழுத்தாளராகப் பிரகாசிப்பது என்பது, நமது தமிழ்ச் சமுதாயத்தில் போராட்டம்தான். காரணம், சில பெண் எழுத்தாளர்களுக்கு அவரது குடும்பமே முதல் எதிரியாக இருந்துள்ளது. இன்றும் இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்திலேயே மனைவியின் குறிப்பறிந்து நடந்துகொண்ட கணவர் பத்மநாபனின் குணத்தையும், புனைபெயர் வைத்து ஊக்கப்படுத்திய மாமனாரின் பண்பையும் பாராட்டாமல் இருக்க முடியாது. கி.வா.ஜ-விடம் சொன்னபடி, சரியாக பத்தே நாள்களில் நாவலை முடித்துக் கொடுத்தபோது கி.வா.ஜ நிஜமாகவே அசந்துபோனாராம்.

1956-ம் ஆண்டில் இவர் படைத்த `பிரேம கீதம்' என்ற புதினம், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் விருதைப் பெற்றது. `ஒரே ஒரு வார்த்தை', `வேப்பமரத்து பங்களா' போன்ற புதினங்கள், கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புனைவுக் கதைகளைத் தவிர, பறவை இனங்களைப் பற்றி ஆராய்ந்து, நான்கு புதினங்களை குழந்தை இலக்கியத்துக்கு நல்கியுள்ளார். 

மோனிகா ஃபெல்டன் எழுதிய `இராஜாஜியின் வாழ்க்கை வரலாறு' என்ற ஆங்கில நூலை, தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 

``என் மாமியார் ராஜம்மாளும் எழுத்தாளர் அநுத்தமாவும் தோழிகள் என்பதால் அநுத்தமாவை நான் பல முறை சந்தித்திருக்கிறேன். என் மாமியார், அவரை உரிமையாக `ராஜேஸ்வரி' என்றே அழைப்பார். முதன்முறையாக அவரது வீட்டுக்குச் சென்றபோது என் மாமியார் அவரை `ராஜேஸ்வரி' என அழைப்பதைப் பார்த்து நான் அவர் யாரோ என நினைத்திருந்தேன். பிறகுதான் தெரியும் எங்களுடன் கதைகள் குறித்துப் பேசிக்கொண்டே சிற்றுண்டி செய்து கொடுத்த அந்த எளிய பெண்மணி பெரிய எழுத்தாளர் அநுத்தமா என்று. எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரண பெண்மணியைப்போல் இருப்பார்.

அவர்களுடையது கூட்டுக் குடும்பம். அதில் அனைவரும் அன்பாக ஒற்றுமையாக இருப்பார்கள். நான் ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, `அவர் ரஷ்யன் கல்சுரல் சென்டரில் பேசச் சென்றிருக்கிறார்' என்றார்கள். `சாதாரணப் பெண்மணியாக இருந்த அவருக்கு, அங்கு என்ன வேலை?' என நான் நினைத்தபோது என்னுடன் வந்திருந்த எழுத்தாளர் லஷ்மி, `அநுத்தமா, ரஷ்ய மொழியில் வல்லவர்' என்ற விஷயத்தை எனக்குத் தெரிவித்தபோது எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. அந்தக் காலகட்டத்தின் மிகப்பெரிய எழுத்தாளர் அநுத்தமா. அவரது கதைகள் பொதுமக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனால், தான் பெரிய ஆள் என்பதுபோல் அல்லாமல் எல்லாரிடமும் அன்பாக பழகுவார்'' என்பது எழுத்தாளர் உஷா சுப்பிரமணியனின் பதிவு.

ராஜம் கிருஷ்ணன், வாஸந்தி இவர்களைப்போல் அநுத்தமா கள ஆய்வுசெய்து கதைகள் எழுதியதில்லை. குடும்பம்தான் இவரது கதைகளின் பாடுபொருள். தனது எழுத்துகள், படிப்பவருக்கு நிம்மதி தர வேண்டும். அவர்களது மனதில் கீழ்த்தரமான எண்ணங்கள் இருந்தால் அவற்றை மாற்ற வேண்டும் என்று விரும்பினார்.

``வாழ்க்கையில் எழுத்தாளன் அடைந்த அநுபவத்தையும், அதையொட்டித் தோன்றும் மனோபாவங்களையும் கொண்டுதான் அவன் எழுதுகிறான் என்றாலும், ஓரளவுக்குக் கற்பனையும் அதனுடன் இணைந்துவிடுவது சகஜம். உண்மை, உணர்ச்சியை உந்திவிடுகிறது; கற்பனையைக் கிளறிவிடுகிறது. உண்மையிலிருந்துதான் கற்பனை பிறக்கிறது. அழகை அனுபவிக்கும்போது, துக்கத்தைக் கேட்கும்போது, மகிழ்ச்சியில் திளைக்கும்போது அவனது உடலும் மனமும் ஒருங்கே கவரப்படுகின்றன. அவன் மட்டும் அவற்றை அனுபவிப்பதில்லை; அவன் குழந்தைகளாகிய கதாபாத்திரங்களும் அந்த உண்மைச் சம்பவங்களில் தவழ்ந்து விளையாடுகின்றன. அதைத்தான் அவன் சித்திரிக்க முயல்கிறான்” என்பது அநுத்தமாவின் வார்த்தைகள்.

`தாயின் பரிசு’ என்கிற அவருடைய கதை, வசதியான வீடுகளில் வீட்டுவேலை செய்யும் பொன்னம்மாவைச் சுற்றிய கதை. மறுநாள் தீபாவளி. கையில் பணம் இல்லை. வீட்டில் கணவன் ஒரு குடிகாரன். மகன் உதிரிப் பாட்டாளி. மருமகள் கர்ப்பவதி. மகள் ஒருத்திதான் வீட்டுவேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வாள். தான் வேலைபார்க்கும் பணக்கார வீட்டின் தோட்டத்தில் வேலை இருக்கிறது என்று மகனை அழைப்பதில் கதை தொடங்குகிறது. அவன் வர மறுக்கிறான். இந்தச் சண்டையில் அவள் சாப்பிடாமலே வேலைக்குப் போகிறாள்.

தாமதமாக வந்ததற்காக அந்த வீட்டார் கோபித்துக்கொள்கிறார்கள். கொல்லைப்புறத்தில் குவிந்துகிடக்கும் பற்றுப்பாத்திரங்களைத் தேய்க்க ஆரம்பிக்கிறாள். நாள் முழுக்க `வேலை... வேலை' என ஓடுகிறாள். இடையில் அவளுடைய மகன் வருகிறான். தோட்டவேலைகள் செய்துவிட்டுப் போகிறான். அந்த வீட்டு கைக்கடிகாரத்தையும் திருடிக்கொண்டு போய்விடுகிறான். கைக்கடிகாரத்தைத் தேடி பொன்னம்மா வீட்டுக்கு பெரிய வீட்டுக்காரர்கள் வந்துவிடுகிறார்கள். அவள் ``தான் எடுக்கவில்லை'' என சத்தியம் செய்கிறாள். அவர்கள் போய்விடுகிறார்கள்.

ஒரு சந்தேகம் வந்து வீட்டின் பானை, சட்டிகளையெல்லாம் உருட்டித் தேடுகிறாள். கைக்கடிகாரம் கிடைத்துவிடுகிறது. அதைச் சேலை முந்தானையில் மறைத்து எடுத்துக்கொண்டு பெரிய வீட்டுக்கு ஓட கால் எடுத்து வைக்கும்போது, அந்த வீட்டார் மறுபடி இவள் குடிசைக்கே வந்துவிடுகிறார்கள். உடனே அவள் அவர்கள் கால்களில் விழுந்து ``தான்தான் புத்தி பிசகி எடுத்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்'' என்று கதறுகிறாள். குடிகாரப் புருஷன் எழுந்து வந்து ``திருட்டு நாயே!'' என்று அவளை விறகுக்கட்டையால் அடிக்கிறான்.

வந்தவர்கள் பதறிப்போய் ``சரி... சரி விடுங்க'' என்று தடுக்கிறார்கள். அவள் வாயில் ரத்தம் வழிகிறது. மனம் பொறுக்காமல் பொன்னம்மாவின் மகன் ``நான்தான் எடுத்தேன்'' என்று ஒப்புக்கொள்கிறான். ஆனால், பொன்னம்மா ``இல்லை, இல்லை. நான்தான் எடுத்தேன்'' என்று மகனைக் காப்பாற்ற முயல்கிறாள்.

``குற்றவாளியைக் காப்பாற்றலாமா?'' என்று வந்தவர்கள் கேட்கிறார்கள்.

``சாமி, உங்கள் மகனுக்கு நீங்கள் நினைத்தால் இந்தக் கடிகாரத்துக்குப் பதிலாக ஆயிரம் ரூபாயிலே ஒன்று வாங்கி தீபாவளிப் பரிசாகக் கொடுத்துவிடுவீர்கள். ஆனால் என் மகனுக்கு நான் என்ன கொடுக்க முடியும்? இந்தச் சரீரத்திலே முடிந்ததைத்தானே செய்ய முடியும். நான் திருட்டுப் பட்டம் கட்டிக்கொண்டாலும் ஜெயிலுக்குப் போனாலும், எப்படியோ என் மீதி ஆயுசைக் கழித்துவிடலாம். அவனுக்கு அவப்பெயர் வந்துவிட்டால், அவன் ஆயுசே இன்னும் தொடங்கவில்லையே. எப்படி தலைநிமிர்ந்து வாழ்ந்து, அதனால்தா...” மேலே பேச முடியாமல் தலைசுற்றி மயங்கி வீழ்ந்துவிட்டாள் பொன்னம்மா. ``அம்மா...'' என்று மகன் அலறுகிறான்.

``தவறு செய்வது இயற்கை. இதை இப்படியே மறந்துடுங்க'' என்று சொல்லிவிட்டு வந்தவர்கள் திரும்புகிறார்கள்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் எசமானர் தம் மகனிடம் கூறினார், ``பார்த்தியாடா, ஒரு தாயின் மனசை? இன்றைக்கு அவள் உயிர்கூடப் போய்விட்டிருக்கலாம்” என்றார்.

``சரிதான் அப்பா. ஆனாலும் அவர்களை நீங்கள் அப்படி விட்டிருக்கக் கூடாது” என்றான் மகன்.

``சே, சே! அப்படிச் சொல்லாதே. இன்று நரகசதுர்த்தி அல்லவா! பகவான் ஓர் அரக்கனுக்கே கருணையுள்ளம் காட்டவில்லையா? இன்றைக்கு பொன்னம்மாவை குடிசையில் பார்த்த மாதிரி இல்லை. தேவியின் சந்நிதானத்தில் இருப்பதுபோல இருந்தது. மயிர்க்கூச்செறிந்துவிட்டது. அன்னையைத் `தெய்வம்' என்று கூறுவதில் என்ன தவறு?'' என்றார் பெரியவர். அப்போது வானத்தில் அழகிய மின்னல் ஒன்று கோடிட்டது. அவர் மொழிகளை ஆமோதித்து முறுவலிப்பதுபோல இருந்தது. உடனே மழையும் தொடர்ந்து பெய்தது.

இப்படி முடியும் இந்தக் கதையில் குடிசைவாழ் உழைப்பாளி மக்களின் வாழ்க்கை வெகு யதார்த்தமாகச் சித்திரிக்கப்படுகிறது. பொன்னம்மாளின் மகளான எல்லம்மாவின் கதாபாத்திரம் அசலாகச் சித்திரிக்கப்பட்டுள்ள அபூர்வமான படைப்பு.

ஒவ்வொரு கதையிலும் ஒரு பெரிய சேதியைச் சொல்ல அநுத்தமா முயல்வதில்லை என்பதற்குச் சான்றாக `வழித்துணை' கதையைச் சொல்லலாம். மதுரை ரயில் நிலையத்தில் மகளையும் பேத்தியையும் தனியாக சென்னைக்கு வழியனுப்ப வரும் முதிய தாய்-தந்தையரும் அந்தப் பெண்ணும் சென்னை வரை வழித்துணையாக சகபயணிகள் யாரேனும் அமைவார்களா என்று ரயில்பெட்டியில் தேடிச் சலிக்கும் மனஉளைச்சலை நுட்பமாகப் பதிவுசெய்துள்ள கதை.

மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்வியலை எளிமையாக எழுத்துகளில் பதிவுசெய்தவர் அநுத்தமா. அவர் தன் எழுத்துகளில் பெண்ணியமோ, அரசியலோ பேசவில்லை. 1950-களின் வாழ்க்கையைப் பண்பாட்டை மிகைப்படுத்தாது சித்திரிப்பவை இவரது கதைகள். குடும்பம், வாழ்க்கை, முரண்கள், உறவுச்சிக்கல்கள் போன்ற அம்சங்களை அடிப்படையாகக்கொண்டதாகவே இவரது படைப்புகள் உள்ளன. கதைமாந்தர்களின் நுணுக்கமான உணர்ச்சி நிலைகளை இவரது கதைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. இவரது கதைகள் எளிமையானவை. குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகளையும், காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் பேசுபவை. அவருக்கென திட்டவட்டமான பண்பாட்டு மதிப்பீடுகள் இருந்தன. அந்த மதிப்பீடுகளுக்கு நூறு சதம் உண்மையாக எழுதியவர் அவர். `எழுத்தில் உண்டாகும் அனுபவம், பாவம் அப்படியே வாசகனுக்குப் போய்ச் சேர வேண்டும். அதுதான் சிறந்த எழுத்து' என உறுதியாக நம்பியவர் அநுத்தமா.

இவ்வளவு ஆதரவான ஒரு புகுந்த வீடு இன்றைக்கும்கூட நம் பெண்களுக்கு அமைவதில்லை. அமைந்தால் இன்னும் அற்புதமான எழுத்தாளர்கள் வருவார்கள் என்பதற்கு அநுத்தமாவின் வாழ்வே சாட்சி.

ஓயாமல் எழுதியதில் கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டு, அடிக்கடி நரம்புத் தளர்ச்சிக்கு ஆளானார் அநுத்தமா. 2010, டிசம்பர் 3-ம் தேதி தனது 88-வது வயதில் திடீரென ``மூச்சுவிட சிரமமாக இருக்கிறது'' எனச் சொல்ல, மருத்துவர் வந்து பார்த்துவிட்டு ``ஒருக்களித்துப் படுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார். கண்களை மூடி திரும்பிப் படுத்தவர்தான். அந்த நிமிடமே அவர் உயிர் துறந்தார். இப்படியான அமைதியான ஒரு மரணத்தையே அவர் விரும்பினார்.

`கேட்ட வரம்’ அவருக்குக் கிடைத்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு