Published:Updated:

தண்டனை

சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

தண்டனை

சேஷகிரி ராவுக்கு பீதியில் நாக்கு குழறியது. முகத்தில் வியர்வை ஆறாகக் கொட்டியது. காக்கிச்சட்டையின் பின்புறம் நனைந்து, முதுகுடன் ஒட்டிக்கொண்டது. எதிரில் நின்றவன் ஆகாசத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்துகொண்டு போவதுபோல இருந்தான். யார் அவன்... எம தூதன்போல! அவன் கையில் இருப்பது அம்பா அல்லது ஈட்டியா? இது என்ன வகை மோதல்? `ஒரு தோட்டா போதும் உன்னை...’ பக்கென அடிவயிற்றில் ஜில்லிப்பு ஏற்பட்டது. கையில் இருந்த துப்பாக்கியைக் காணோம். எப்படி எனப் புரியவில்லை. அது அவன் கையில் இருக்கிறது. இது நிஜமா இல்லை ரஜினிகாந்த் சினிமாவா? அந்தப் பையன் - பொடியன் - சிரிக்கிறான், கிட்டத்தட்ட ரஜினி சாயலில். ஒரு கையில் சாட்டை வேறு. ஓ... அது புத்தகப் பை. தோளில் தொங்கும் பை. அதைச் சுழற்றிச் சுழற்றி வீசுகிறான். அது சாட்டையாகப் பாய்கிறது... சுழன்று சுழன்று. முதுகிலும் மார்பிலும் சாட்டையடி விடாமல்... அம்மா. சேஷகிரிக்கு தெலுங்குதான் வாயில் வந்தது ‘ரே... ரே... போரா, ஒத்துரா... ஒத்துரா... ஒத்து... ஒத்து...’

‘`நயினா... நயினா..!’’

சேஷகிரி, சடக்கென விழித்தான். கண்கள் திறந்தபோது பாபு நின்றிருந்தான்.

“என்ன, இந்த நேரத்துல தூங்குறீங்க...வேலைக்குப் போகலை?’’

சேஷகிரி கண்களை அழுத்தித் துடைத்துக் கொண்டான். கடிகாரத்தைப் பார்த்தான்.

மணி 9:30.

`‘என்னவோ அசந்துட்டேன், என்ன வேணும்?’’
 
‘`காலேஜுக்குக் கிளம்பறேன். கையில காசே இல்லை.’’

“டிபன் சாப்பிட்டியா?”

பாபுவின் பதிலுக்குக் காத்திராமல், எழுந்து பர்ஸை எடுத்து நூறு ரூபாய் நோட்டும் கொஞ்சம் சில்லறையும் கொடுத்தான்.

‘`சிக்கனமா செலவழி’’ என்றான் வழக்கம்போல. அப்பாவின் நினைவு வந்தது. அவர் சொல்லிக்கொடுத்த பாடங்களில் ஒன்று.

‘`பகல் நேரத்துல தூங்காதீங்க. கொள்ளை போனாலும் தெரியாது. `போலீஸ்காரன் வீட்டுல கொள்ளை’னு பேப்பர்ல வரும். நீங்க பேப்பர் பார்க்கிறதுக்கு முந்தி ஊரே படிச்சிடும்.”

சேஷகிரி சிரித்தபடி ‘`போரா... தொங்கா!’’ என்றான்.

பாபு பைக்கை அழுத்திக் கிளம்புவதைப் பார்த்தபடி கதவை மூடும்போது, ‘`இன்னிக்குப் பேப்பரைக்கூடப் படிக்கலைபோல?’’ என்று பாபு கேட்டது, லேசாகக் காதில் விழுந்தது.

‘`அதைப் படிச்சதும் எனக்கு தாத்தா ஞாபகம் வந்துச்சு.’’

`இல்லே... படிக்கலை’ என தனக்குள் சொல்லிக்கொண்டான் சேஷகிரி. நேற்று இரவு சரியாகத் தூங்காததன் விளைவு. அதுதான் காலை உணவு முடித்ததும் அந்தத் தூக்கம். அந்த அசட்டுப்பிசட்டுக் கனவு.

குளியலறைக்குச் சென்று குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினான். வாஷ்பேசின் மேல் இருந்த நிலைக்கண்ணாடியில் அந்த இளைஞனின் முகம் தெரிவதுபோல இருந்தது. அவன் சரசரவென முகத்தைத் துடைத்து வெளியே வந்தான்.

நடுக்கூடத்தின் சுவரில் இருந்த படம் கண்ணில்பட்டது. சந்தனமாலை தொங்க, நான்கு சட்டங்களுக்குள் இருந்தபடி அப்பா புன்னகைத்தார்... போலீஸ் உடுப்பில். அந்தப் புன்னகையைப் பார்க்கும்போதெல்லாம் சேஷகிரிக்குக் காரணம் புரியாமல் சங்கடம் ஏற்படும். அந்தப் புகைப்படத்தை எடுத்து பெட்டிக்குள் வைத்துவிடலாமா என்றுகூட யோசனை வரும். ஆனால், பாபுவின் கேள்விக்குப் பதில் சொல்லவேண்டியிருக்கும். தாத்தா செல்லம் அவன். ` `இன்னிக்கு தாத்தா நினைவு வந்தது’னு சொன்னானா என்ன? என்ன இருக்கு பேப்பர்ல? அப்பாவுக்கு ஜோடி அவன். எல்லாத்தையும் துருவித் துருவி கேக்கிறதைப் பார்த்தா, அப்பா அவனுக்குள்ள புகுந்துட்ட மாதிரி தோணுது.

 லே, உன் அம்மா நீ சின்னப்புள்ளையா இருந்தபோதே செத்துத்தொலைச்சா. நான் போலீஸ் டியூட்டியையும் பார்த்துகினு உன்னையும் எப்படி வளர்த்தேன்னு ஊரெல்லாம் அதிசயப்படும், தெரிஞ்சுக்க. `ஏன் லேட்டா வந்தே?’னு சூப்பரின்டெண்டென்ட் போடுற கூப்பாடு, காடு மேடுல டியூட்டினு, எவ்வளவு அலைக்கழிச்சிருப்பாங்க? எல்லாமா சேர்ந்துதான் சீக்கிரமே மூப்பு தட்டுது. இத்தனைக்கும் 48 வயசுதான் ஆகுது. ஏதோ ஒரு நாளைக்கு அசந்துட்டா தப்பா? உனக்காகத்தான்டா நான் இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கலை! அட, எதுக்கு இந்தப் பழங்கதை எல்லாம்?’ என்று தனக்குள் முணுமுணுத்தபடி, அவன் அவசரமாக அலுவலகத்துக்குச் செல்லத் தயாரானான்.

தொலைவில் ஜீப் வரும் சத்தம் கேட்டது. இந்த இருபத்தி மூன்று வருடங்களில் அந்தஸ்து உயர்ந்துவிட்டது. சப்-இன்ஸ்பெக்டரில் இருந்து சூப்பரின்டெண்டென்ட் நிலைக்கு வந்தாகிவிட்டது. உழைப்புக்கு ஏற்ற பலன். நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்கும்போது திருப்தியாக இருந்தது. சற்று தொப்பை போட்டுவிட்டது.

`ஆ, அதுவே தோரணையாத்தான் இருக்கு.’

வீட்டைப் பூட்டிக்கொண்டு அவன் கிளம்பினான். `யாரோ ஒரு மந்திரி வரப்போகிறார்... டெல்லியில் இருந்து. மந்திரி வருகைன்னாலே பேஜாருதான். சிவப்பு எச்சரிக்கை. பயங்கரவாதி மற்றும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்... மற்ற எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு பந்தோபஸ்து வேலைக்கு எல்லாரையும் விரட்டணும். இந்தக் காக்கி உடுப்பு உடம்பில் ஏறியதும் விரட்டும் குணம் ரத்தத்தில் கலந்த ஒன்றாகிவிடுகிறது. அந்த மிரட்டல்ல தப்பு செய்யாதவனும் `செஞ்சேன்'னு ஒப்புக்கிடுவான்ல!’

‘எலேய்... நினைவுவெச்சுக்க. மெள்ள பேசியே நிஜத்தை வரவழைக்கலாம். நம்ம காக்கிச்சட்டை ஒண்ணே போதும், வெலவெலத்துடுவாங்க. நாலாம் டிகிரி வழிக்கே போவக் கூடாதுடா சேஷூ.’
`அப்பா ஒரு பழங்காலம். இப்பல்லாம் எல்லாரும் எத்தணுங்க. பேச்சுல கில்லாடிங்க. எல்லாத்துக்கும் டக்கு டக்குனு பதில் வெச்சிருக்கான். நிஜம்போல கதை அளப்பான். அட, பொய் கண்டுபிடிக்கிற இயந்திரத்தையும் ஏமாத்துறான்னா பார்த்துக்க. அடி, உதை உதவற மாதிரி எதுவும் உதவாது. அது தெரியாத ஆளு இங்கே இல்லை. நம்ம முப்பாட்டன் காலத்தில இருந்து தெரியும்.’
அப்பா கூடக்கூட வந்தார்.

‘`அடிச்ச அடியில ஒப்புக்கிட்டான்.’’

‘`தப்பு செய்யாதவனை மிரட்டி உள்ளே தள்ளக் கூடாதுடா சேஷூ.’’

``உஷ், சித்த சும்மா இருங்க. தப்பு செய்யலைன்னா, வழக்கை விசாரிச்சு விடுவிக்கட்டுமே!’’

``ஏன்டா தெரிஞ்சுதான் பேசுறியா?’’

``உஷ்... போதும், சித்த சும்மா இருங்க.’’

வனைக் கண்டதும் ஏட்டுகள் சல்யூட் அடிக்க, சேஷகிரி மிடுக்காக அலுவலக அறைக்குள் நுழைந்தான். அவனது மேஜையில் அன்றைய நாளிதழ்கள் விரித்து வைக்கப்பட்டிருந்தன. மேலாக இருந்த நாளிதழின் முகப்புப் படம் யாரென குனிந்து பார்த்தான். யாரோ ஒரு கைதி விடுவிக்கப்பட்டிருக்கிறான்... நிரபராதி என 23 வருடங்கள் கழித்து. நடு வயது, தேவாங்குபோல கண்கள், வற்றிய முகம். அவனுடைய தாயை அணைத்துக்கொண்டு விம்மும் படம். இப்படிப்பட்ட செய்திகளில் சேஷகிரிக்கு சிரத்தை இல்லை. `போலீஸ் தன் கடமையைச் செய்யும். உடனுக்குடன் நீதிமன்றம் விசாரிக்கலைன்னா, யார் என்ன செய்ய முடியும்?’

மேலோட்டமாக அது என்ன கேஸ் என செய்திக்குறிப்பைப் பார்த்தபோதுதான் புரிந்தது... `பாபு பேப்பர் படிக்கலையா?’ என்று ஏன் கேட்டான் என்பது.

படிக்கப் படிக்க சேஷகிரிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. `போலீஸ்காரன், எனக்குத் தெரியறதுக்கு முந்தி பேப்பர்காரனுக்குத் தெரிஞ்சுடுது. ஆயிரக்கணக்குல கைதிங்க ஜெயில்ல இருக்கானுங்க. ஒருத்தன் வெளியிலே வந்ததும் பெரிய விஷயமாப் பூடுது. கிராமத்துல இருக்குற அவன் வீட்டுக்கு, ஒரு ரிப்போர்ட்டர் வேலை மெனக்கெட்டுப் போய், அவன் சொன்னாப்ல சினிமா படக்கதை மாதிரி எழுதியிருக்கான்.’

சேஷகிரி மீண்டும் நிதானமாக ஒவ்வொரு வரியாகப் படித்தான்.

‘என்னை சிறையில தள்ளியபோது எனக்கு இருபது வயதுகூட இல்லை. இப்ப எனக்கு வயசு 43. என்னுடைய வாலிபம் பூராவும் தொலைஞ்சுபோச்சு. என்னோட தங்கைக்கு அப்ப 12 வயசு. அவளுக்கு இன்னிக்கு 12 வயசு மக இருக்கா. என் ஒன்றுவிட்ட தங்கைக்கு அப்ப என்னைவிட ரெண்டு வயசு குறைவு. அவ இப்ப பாட்டியாகிட்டா. ஒரு தலைமுறை என்னைத் தாண்டிப்போயிடுச்சு. இப்ப நீங்க பார்க்கிறது ஒரு பிரேதம். நான் என்னிக்கோ செத்துப்போயிட்டேன். எனக்காக கோர்ட்டுக்கு நடையா நடந்து, செலவழிச்சு குடும்பமே உருக்குலைஞ்சுபோச்சு.’

`ஆஹா என்னமா டயலாக் பேசறான்!’ சேஷகிரி அந்த முகத்தை வெறித்துப் பார்த்தான். அடையாளமே தெரியவில்லை. பார்த்த நினைவே இல்லை. `இது யாரோவாக இருக்கணும். ஹூம்...’ என்று உதறிவிட்டு அழைப்பு மணியைத் தட்டி தாள்களை அப்புறப்படுத்தும்படி ஏட்டுக்குச் சொன்னான். மற்றவர்களைக் கூப்பிட்டு மந்திரி வருவதற்கான பந்தோபஸ்து விஷயங்களை விவரித்து, கட்டளையிட்டான்.

``மந்திரி பேசப்போற இடத்துக்குப் போய் இன்ஸ்பெக்ட் செய்யணும், ரெண்டு பேர் என்னோட  வாங்க’’ என்று சப் இன்ஸ்பெக்டர்களை அழைத்தான். `யுனிவர்சிட்டியில ஏதோ ரகளை. மத்திய அரசுக்கு எதிரா கொடி பிடிக்கிறானுங்க. பசங்க படிக்க வரானுங்களா... இல்ல போராட்டம் நடத்தன்னே வர்றானுங்களா? பாபு எந்த வம்புக்கும் போகலை. நல்லவேளை... ஒழுங்கா படிக்கிறான்.’

ஜீப்பில் ஏறி அமர்ந்ததும் மீண்டும் மீண்டும் குட்டையைக் குழப்பியதுபோல மனசு குழம்பியது.தினசரியில் பார்த்த முகம் நினைவுக்கு வந்தது. அடிவயிற்றை என்னவோ செய்தது. `இன்றைக்கு வந்த கனாவுக்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ? பட்டப்பகலில் கண்ட கனா?’ ஜீப் ஆமை வேகத்தில் போவதுபோல் இருந்தது.

‘`என்ன ராஜு... ஏன் இவ்வளவு ஸ்லோவா போறே? நாம இன்ஸ்பெக் ஷன் முடிக்கிறதுக்குள்ளே மந்திரி கார் வந்து போயிடும்!’’

‘`அறுபதுல போறேன் சார். இங்கே லிமிட் அதுதான்’’ என்றான் அந்த அதிகப்பிரசங்கி.

‘`சாருக்குக் கவலை டியூட்டியைப் பத்தி’’ என்றார்கள் மற்றவர்கள்.

‘`போயிரலாம் சார். செக்யூரிட்டிக்காக, கொஞ்சம் தள்ளி ஏற்பாடு செஞ்சிருக்கு.”

அவன் சற்று நிமிர்ந்து, சுற்றும் முற்றும் பார்த்தான். `எந்த ரோடு இது?’ கனவில் செல்வதுபோல் இருந்தது. குல்பர்கா செல்லும் பாதை இல்லையோ?

‘`இதுல நேரா போனா கர்நாடகா போயிருவோம்.’’

அவன் பேசவில்லை. `இவர்கள் வேண்டுமென்றே நோட்டம் பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை. இந்த டிபார்ட்மென்ட்டுல எவனையும் நம்ப முடியாது.’

‘`இந்தப் பக்கம் வந்திருக்கீங்களா சார்?’’

‘`எப்பவோ வந்திருப்பேன், இப்ப என்ன அதைப் பத்தி, மந்திரி ஆந்திராவுக்குத்தானே வர்றாங்க?’’

அவர்கள் அடங்கிப்போனார்கள்.

சேஷகிரிக்கு இன்னமும் காரணம் புரியாமல், படபடத்துக்கொண்டு வந்தது. `இன்னிக்கு விழிச்ச நேரம் சரியில்லை.’

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அவன் கண்களை மூடிக்கொண்டான். மூடிய கண்களுக்குள் ஆந்திரா போலீஸ் ஜீப் சென்றது.

தண்டனை

``கர்நாடகாவுக்குள்ள நுழைஞ்சிட்டமா?’’ என்று கேட்டான். ``குல்பர்கா போகணும்.’’

காலை ஒன்பது மணி. பள்ளிச் சிறுவர் சிறுமியர் சீருடையில் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார்கள். கலகலவென பட்சிகளின் சலசலப்பாகப் பேச்சு.

‘`இதுதான் குல்பர்கா.’’

``இங்கே வேண்டாம், கொஞ்சம் தள்ளி மெயின் ரோடு பக்கம் நிறுத்து.’’

`குல்பர்கா ஏன்... யாரு கண்டது? சேதி வந்திருக்கு. இங்கிருந்து ஒரு ஆளைப் பிடிச்சுக்கிட்டுப் போகணும். சுகன்யாவுக்குப் பிரசவ வலி எடுத்திருக்கு. அப்பா ஆஸ்பத்திரியில உட்காந்திருக்கார்.’

‘`நூவு போரா’’ என்றார் கண்டிப்பாக.

‘`டியூட்டிதான் முக்கியம். இங்கே நானிருக்கேன் இல்லே, போய்ட்டு வா.’’

`சூப்பரின்டெண்டென்டுக்கு டெல்லியில் இருந்து உத்தரவு. ஆளைப் பிடிச்சே ஆகணும்னு. யார் அந்த ஆள்? எவரிக்கி தெலுசு? அடையாளம் கண்டுபிடிக்க புகை படிந்ததுபோன்ற ஒரு கம்ப்யூட்டர் வரைபட முகம். கர்நாடகா போலீஸுக்குத் தெரிந்திராதா? `உஷ். அந்த போலீஸுக்கு ஏதும் சொல்லத் தேவையில்லை. அவங்க செய்யாததை ஆந்திரா போலீஸ் செஞ்சதுன்னு பேர் வரணும். இதோ பார்...
நீ என்ன செய்வியோ தெரியாது. ஒரு ஆளைப் பிடிச்சுக்கிட்டு வரணும்.’’

சேஷகிரிக்கு மண்டை விண் விண் என வலித்தது. `ஏதோ ஒரு பழைய மசூதியை ஒரு பைத்தியக்காரக் கும்பல் இடிச்சுதாம். அதுக்குத் தண்டனையா சரமாரியா பல ரயில்கள்ல குண்டு வெடிக்குது. எவன் வெச்சான்னு அலைஞ்சு தேடுறது போலீஸ் வேலை. நேற்று அவன் கம்ப்யூட்டர் வரைபடத்துடன் இங்கு அனுப்பியிருந்த கான்ஸ்டபிள் ஒரு தெருவைக் குறி வைத்திருந்தான். விசாரித்துப் பெயர் எழுதிக்கொண்டு வந்தான். இலக்கு, ஒரு கல்லூரி மாணவன். இந்த வழியாக வரணும்.’

சேஷகிரி பொறுமை இழக்க ஆரம்பித்தான். ஆஸ்பத்திரிக்கு போன் போட்டுப் பார்த்தான். லைன் கிடைக்கவே இல்லை.

‘`அதோ ஒருத்தன் வரான் சார்.’’

ஓர் இளைஞன், தோளில் ஒரு பையை மாட்டியபடி நடந்துகொண்டிருந்தான். இருபது வயதுகூட இருக்காது.

‘`கம்ப்யூட்டர் படம் மாதிரி இருக்கானோ?’’

‘`சும்மா இரு’’ என்று அதட்டினான் சேஷகிரி. கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, அந்த இளைஞனிடம் சென்றான்.

‘`ஃப்க்ருதின் அஹ்மத்தா?’’

“ஆமா.”

“வண்டியிலே ஏறு.”

அந்தப் பையனின் கண்கள் பயத்தில் விரிந்தன.

“எதுக்கு?” என்றான் கன்னடத்தில்.

மண்டையில் ஓர் அடிவைத்து, “ஏறுன்னா ஏறு!” என்று சேஷகிரி இந்தியில் அதட்டினான். அவன் அழ ஆரம்பித்தான்.

‘`என்னை விட்டுடுங்க. நான் காலேஜுக்குப் போய்கிட்டிருக்கேன். பரீட்சை வருது அடுத்த வாரம். எங்க பிரின்சிபாலைக் கேட்டுப்பாருங்க. நல்லா படிக்கிற மாணவன். ப்ளீஸ்... ப்ளீஸ்...”

“ரயில்ல குண்டு வெச்சப்ப அதெல்லாம் நினைவில்லையா?”

“ஐயய்யோ, எந்த ரயில்? எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை.”

 அவன் விசித்து விசித்து அழுதவண்ணம் இருந்தான். உருது மிகுந்த இந்தியில் புலம்பினான்.

``எனக்கு ஒண்ணுமே தெரியாது. படிச்சுக்கிட்டிருக்கேன். எந்த வம்புக்கும் போனது இல்லை. யாரை வேணா கேளுங்க...” பக்கத்தில் அமர்ந்து இருந்த ஏட்டு அவன் முதுகில் ஓர் அடிவைத்ததில் வாயை மூடிக்கொண்டு அந்தப் பிள்ளை விசும்பியது.

``அம்மி... அம்மி...’’

ஹைதராபாத்தில் பையனை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததும் சூப்பரின்டெண்டென்ட்டிடம் பெரிய பாராட்டு கிடைத்தது.

‘`அடிக்கிற அடியிலே ஒப்புக்கிடுவான்’’ ஆசுவாசப் பெருமூச்சுவிட்டபடி அவன் ஆஸ்பத்திரிக்கு ஓடினான். அப்பா பெஞ்சில் அமர்ந்திருந்தார். முகம் சுரத்தே இல்லாமல் இருந்தது. அவனைப் பார்த்துத் தலையாட்டினார்.

``எப்படி இருக்கா சுகன்யா?’’

“அவளுக்கு ஒண்ணும் இல்லை. குழந்தைதான் செத்துப் பிறந்தது.”

அவனுக்கு அடிவயிற்றை கப்பெனத் துயரம் கவ்வியது. அழுகை வந்தது. அப்பா, முதுகைத் தடவினார்.

‘`கவலைப்படாதே. மறுபடி பிறக்கும். சின்ன வயசுதானே.’’

அவன் சுகன்யாவைப் பார்க்கச் சென்றான். அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். `அப்பா சொன்னது சரிதான். சின்ன வயசு. மறுபடி பிறக்கும்.’

அவன் வெளியில் வந்தபோது அப்பா கேட்டார். ‘`போன காரியம் என்ன ஆச்சு?”

‘`முடிஞ்சுது. ஆளைப் பிடிச்சுட்டோம்.”

“சரியான ஆளுதான்னு தெரியுமா?”

அவனுக்குக் கோபம் வந்தது. ‘`சட்... உங்களுக்கு எப்பவும் என் திறமையில சந்தேகம். நீங்க என்னிக்காவது என்னைப் பாராட்டி இருக்கீங்களா?”

அவனுடைய கண்களில் துளிர்த்த நீரைக் கண்டு அப்பா அதிர்ந்துபோனவர்போல, `‘எந்துக்குரா இட்ல?’’ என்றார் வாஞ்சையுடன்.

“எனக்கு பெருமை இல்லையா? நானும் போலீஸ்ல இருந்தவன். தப்பான ஆளுன்னா அவன் வாழ்க்கையே போயிரும்கிற பயத்துல சொன்னேன்.”

‘`அந்தக் கேள்வி கேக்காம இருந்திருக்கலாம் இல்ல?”

அப்பா பதில் சொல்லவில்லை.

அதற்குப் பிறகு அந்த கேஸ் நினைவில் இருந்து கழன்றுபோனது. அது இழுத்துக்கொண்டு போகும். அதற்குள் ஓய்வுகாலம் வந்துவிடும். சூப்பரின்டெண்டென்டின் அடுத்த மிரட்டலில் இருந்து தப்பிக்கும் வழிகளைத் தேடும் பதற்றத்தில் நாட்கள் நகர்ந்தன.

ஆங்காங்கே குண்டுவெடிப்புகள்... யார் செய்யறது? பின்னாடி எவன் இருக்கான்? பிடி, பிடி... அவன்தான். எத்தனை கைதுகள்! `சரியான ஆள்தானா?’ என்ன கேள்வி இது? `வண்டியிலே ஏறு’ என்று அதட்டுவதில் ஒரு சுகம் இருந்தது. ஆட்டுக்குட்டி கணக்காகத் தலையைக் குனிஞ்சுக்கிட்டு வெலவெலத்துப்போனதுங்களை உள்ளே தள்ளும்போது, `என்னுடைய பவர் என்னான்னு தெரியுமா?’ என்றபோது மார்பு பல அங்குலம் விரிந்தது. அடிக்கிற அடியில் ‘ஆமாம் நாந்தான் செஞ்சேன்’ என்று கதறும்போது, `வெற்றி’ என்று மனசு எக்காளமிட்டது.

`சரியான ஆளுதானா?’

அப்பா தொடர்ந்து கேட்பார். ஒருமுறை பாபுவின் எதிரில் கேட்டார். அன்றைக்கு மகா கோபம் வந்தது அவனுக்கு. `ஒரு நாளைக்கு உங்களையும் உள்ளே தள்ளப்போறேன்’ என்று கத்தினான். அன்று பாபு சாப்பிட மறுத்தான்.

பாபுவுக்கு பத்து வயது வரை அப்பா இருந்தார். சுகன்யாவின் மரணத்துக்குப் பின் பாபுவை சீராட்டி வளர்த்தது அவர்தான். ஆனால் அவர் இறந்தபோது, குற்றஉணர்வில் அவன் குமுறி அழுதான். ஆனால், கூடவே ஒரு விடுதலை உணர்வு ஏற்பட்டது. அப்பாவுக்குத் தெரியாது... தப்பாக இருந்தாலும் அதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும் வழி அவனுக்குத் தெரியும் என்று. பாபுவை சமாதானப் படுத்துவதுதான் அசாத்தியமான காரியமாக இருந்தது.
 
ஜீப்பின் பாதையில் அப்பா நின்றார். அவன் உற்றுப்பார்த்தான் .

முகம் சோர்ந்து இருந்தது. ``சேஷூ!’'

``போங்க, போங்க. குறுக்க நிக்காதீங்க!'’

‘`என்ன சார்?’’

‘`ஒண்ணுமில்லை’’ என்று அவன் தன்னைச் சமாளித்துக்கொண்டான்.

 “சார், வந்துட்டோம்.’’

ஒரு நெடும் பயணம்செய்த அலுப்பு அவனை ஆட்கொண்டிருந்தது. உடம்பு வலித்தது. கையைத் தூக்கி, நெட்டி முறித்து. அவன் கீழே இறங்கினான்.

யுனிவர்சிட்டி, வளாகத்தில் இருந்து சற்று எட்டி இருந்தது. மத்திய மந்திரிக்கு பயம். லோக்கல் மந்திரிக்கு பயம். `சட்... என்ன ஆளுங்க. அந்தப் பொடியன்களைக் கண்டு என்ன பயம்? எல்லாரையும் போட்டு உள்ளே தள்ளி, சோறு தண்ணி இல்லாம நாலு நாள் வெச்சா தன்னால வழிக்கு வருவானுங்க.’

சேஷகிரிக்குப் பரபரத்தது. `நாளைக்கு மோப்ப நாய்களை அழைத்து வந்து ஒரு நோட்டம் விடணும்.’ இன்ஸ்பெக்‌ஷன் முடித்து, அலுவலகம் சென்று, நூறாயிரம் போன் கால்களுக்கு பதில் சொல்லி, வீட்டுக்குத் திரும்பும்போது நடு இரவு ஆகிவிட்டது.

வாசல் ரேழியில் சாய்வு நாற்காலியில் யார் அமர்ந்திருப்பது? அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அப்பா உட்கார்ந்திருந்தார்.

`அப்பாவா?’ அவர் முகத்தில் மிதமிஞ்சிய சோர்வு தெரிந்தது.

‘`சேஷூ!’’

`அழுகிறாரா என்ன?’

அவனுக்குத் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்போல் இருந்தது.

`‘யாரு?’’ என்றான் அதட்டலான குரலில்.

‘`அங்கே யாரும் இல்லை சார்” என்றான் டிரைவர் ராஜு.

‘ஓ, யாரோ இருக்கிற மாதிரி இருந்தது’ என முணுமுணுத்தபடி அவன் வீட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.

`பாபு பத்து மணிக்குப் படுத்துவிடுவான். அவனை காலையில் பார்த்துக்கொள்ளலாம்’ என்று சேஷகிரி படுக்கச் சென்றான்.

இரவு மூன்று மணிக்கு, காவல் நிலையத்தில் இருந்து போன் வந்தது.

‘`யுனிவர்சிட்டியில சதி மாதிரி... ஒரு குரூப் திட்டம் போட்டிருக்காம். மந்திரியோட உயிருக்கு ஆபத்து வரலாம்கிறாங்க. நிறைய துண்டுச்சீட்டு கிடைச்சிருக்கு.’’

அவனுக்கு, சுரீரென கோபம் வந்தது. `எத்தனைத் திமிர் இந்தப் பசங்களுக்கு?’

“எவன்டா அவன்? மந்திரியோட செக்யூரிட்டிதான் முக்கியம். இப்பவே வரேன்.’’

மிதமிஞ்சிய கோபத்துடன் அவன் வெளியில் வந்தான். `பாபுவை எழுப்பி, சொல்லத் தேவையில்லை’ என்று ஜீப்பில் ஏறிக் கிளப்பினான். ஒரு போலீஸ் படையுடன் யுனிவர்சிட்டி வளாகத்துள் நுழைவதற்கு முன்னர் அவனுக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் விவரம் சொன்னார்கள்... துண்டுச் சீட்டுகளுடன். சிவப்பு மையில் மந்திரியைத் திட்டிய வரிகள். இன்னும் என்னென்னவோ, அவனுக்கு வந்த ஆத்திரத்தில் தெளிவாகத் தெரியவில்லை. இடையில் பாகிஸ்தான் தேசக் கொடி ஒன்று இருந்தது.

‘வேற என்ன காரணம் வேணும்? பதுங்கி இருக்கிறவங்களை ரவுண்டப் செஞ்சு, `கொலை செய்ய சதி... தேசத்துரோகிகள்’னு உள்ளே தள்ளணும்!”

தண்டனை

யெஸ் சார்!”

திமுதிமுவென போலீஸ் அவர்களை இழுத்து வந்தது. முரண்டு பிடித்தவர்களின் மண்டையிலும் முதுகிலும் கழியால் அடித்தது. எல்லோரும் ஆட்டு மந்தைபோல போலீஸ் வண்டிக்குள் ஏறுவதை அவன் திருப்தியுடன் பார்த்தான். வண்டியில் ஏறுவதற்கு முன்னர் ஒரு பையன் நின்றான். அவனைத் திரும்பி தீர்க்கமாகப் பார்த்தான். சேஷகிரிக்குத் தலை சுற்றியது. `இது கனவா, நிஜமா?’ ஒரு மகா பெரிய படை தன்னைத் தாக்க வருவதுபோல இருந்தது. அதில் அந்த தேவாங்கும் இருந்தான்... புத்தகப் பையை சாட்டையாக வீசியபடி.

சேஷகிரி ராவுக்கு வியர்த்து நாக்கு குழறியது.

அந்தப் பையன் - பாபு, சிரித்தான், கிட்டத்தட்ட ரஜினி சாயலில். ஏட்டு, மண்டையில் அடிவைக்கவும் வண்டிக்குள் சென்று மறைந்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு