Published:Updated:

சோஷியல் மீடியா யுகத்திலும் சளைக்காமல் களத்தில் நிற்கும் நாடகக்கலை! #WorldTheatreDay

சோஷியல் மீடியா யுகத்திலும் சளைக்காமல் களத்தில் நிற்கும் நாடகக்கலை! #WorldTheatreDay
சோஷியல் மீடியா யுகத்திலும் சளைக்காமல் களத்தில் நிற்கும் நாடகக்கலை! #WorldTheatreDay

இன்றைய தமிழக அரசியலுக்கு, திராவிட சிந்தனைகளுக்கு நாடகங்களே முன்னோடி. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் பவர்ஃபுல் மீடியாவாக இருந்த நாடகக்கலை, சோஷியல் மீடியா யுகத்திலும் சளைக்காமல் களத்தில் நிற்கிறது. இன்று உலக நாடக தினம்!

ஆண்களைப் பார்த்து ஆண்கள் மேடைகளில் காதல் ரசம் சொட்ட பாடிக்கொண்டிருந்த காலகட்டம் ஒன்று இருந்தது. ஆம், அப்போது நாடகங்களில் பெண்கள் நடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட காலகட்டம். நீண்ட தலைமுடிகள் வளர்த்து ஆண் நடிகர்களே பெண் குரலில்  பேசி நடித்து வந்தனர். வெகுஜன மக்களுக்கான பொழுது போக்கு அம்சமாக அப்போது நாடகங்களே இருந்தன. ஆரம்பகால  சினிமாக்களில் கூட பெண் வேடத்தில் ஆண்கள் நடித்துள்ளனர். மெள்ள மெள்ளதான் பெண்களும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தனர். தமிழகத்தின் அரசியலுக்கு நாடகங்கள் பெரும் பங்காற்றியிருக்கின்றன. எம்.ஆர். ராதா. அண்ணா. கலைஞர், எம.ஜி.ஆர், எனப் பலரும் நாடகங்களின் வழியே மக்களுக்கு அறிமுகமானவர்கள்.

 நாடகங்கள் என்றவுடனே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பள்ளி நாடகங்களும், திருவிழாக்களின் நாடகங்களும்தான். பள்ளி ஆண்டு விழாக்களைக் கூட இன்று 'குறும்படங்கள்' ஆக்கிரமித்துவிட்டன. ஒருபுறம் நவீன நாடகங்களில் பல கலைஞர்கள் தங்கள் திறமைகளை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அத்தகைய நவீன நாடகங்கள் குறிப்பிட்ட அறிவுசார் தளங்களில் இயங்குபவர்களுக்கு மட்டுமேயான ஒன்றாக ஒரு பிம்பம் உருவாகியுள்ளது. உண்மையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நாடகம் கிராம மக்களுடன் இரண்டறக் கலந்த ஒன்றாகவே இருந்தது.

இன்றும் தமிழகத்தின் கிராமங்களில், ஊரின் மையப் பகுதியில் கோவிலுக்கு அருகில் நாடக மேடை ஒன்று வெறிச்சோடி காட்சியளிக்கும். கடந்த நிதியாண்டில் கட்டப்பட்டது என எம்.எல்.ஏ வின் பெயரை நீலநிறத்தில் கட்டம் போட்டு வெள்ளை பெயின்டில் எழுதப்பட்டிருக்கும்.  பலருக்கும், ஆடு-புலி ஆட்டமோ, சீட்டோ விளையாடும் களமாகியிருக்கும் அந்த மேடை,  தமிழக கிராமங்களின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்தது. அந்த மேடைகள்தான், தன் மகனையே தன் கைகளால் கொலை செய்ய நேர்கையில் கூட பொய் பேசாத அரிச்சந்திரனை , வள்ளியை முருகன் திருமணம் செய்ய பிள்ளையார் எப்படி தூது போனார் என்ற சுவாரஸ்யத்தை, மதுரைவீரன் ஏன் கடவுளானார் என்ற நிதர்சனத்தை, நல்லதங்காளின் வாழ்வை இன்னும் பல தெய்வங்களின் வரலாற்றை, ராஜ்பாட்களை, ஸ்த்ரிபாட்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது. சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில், விடுதலை உணர்வை கிராம மக்களிடையே உண்டாக்க பகத்சிங்கள் தோன்றிய மேடைகள் அதுதான். முற்போக்குக் கருத்துகளை, கம்யூனிச சிந்தாந்தங்களை மக்களிடையே கொண்டு சேர்த்த பங்கு அந்த மேடைகளுக்கு உண்டு. ஊர்த் திருவிழாக்களின்போது, குடும்பம் குடும்பமாக கோரைப் பாய்களை மைதானத்தில் விரித்து, முறுக்கு. கடுங்காப்பி சகிதம் பப்பூன்களை, மாரியம்மன்களைப் பார்த்து சிரித்து, சிலிர்த்து அதிகாலையில் வீடு திரும்பிய நினைவலைகளை அந்த நாடக மேடைகள் தாங்கி நிற்கின்றன. பிற்காலத்தில், ஒரு சாமி படமும், ரசிகர் மன்றங்களின் சார்பில் இரண்டு திரைப்படங்களும் கோவிலின் சுவரில் திரைகட்டி ஒலிபரப்ப ஆரம்பித்தனர். அப்போதே ராஜபாட்களும், ஸ்த்ரீபாட்களும் மீசை சகிதம் முழுக்க ஷேவிங் செய்த முகத்துடன், நீண்டு வளர்த்த தலைமுடியுடன் சமையல்காரர்களாகவும், கொத்தனார்களாகவும் மாறிப்போனார்கள். ப்ப்பூன்கள் அவ்வப்போது அரசியல் கூட்டங்களில் ஆரம்ப நேர கலகலப்பிற்கும், கரகாட்டத்தின் இரட்டை அர்த்த வசனத்திற்கும் தங்கள் திறமையை ஒப்புக்கொடுத்துவிட்டார்கள். அதனை விரும்பாத பலர் ஸ்பின்னிங் மில்களுக்குச் சாப்பாட்டுக் கூடையுடன் வேலைக்குச் செல்கிறார்கள்.

 தற்போது  நாடகக் கலை வளர்ச்சியடைந்துவிட்டது நவீன நாடகங்கள் வரத் தொடங்கிவிட்டன. பல மாத ஒத்திகை பார்த்து வித்தியாசமான ஒளி மற்றும் ஒலியமைப்புடன் நவீன நாடகங்கள் இன்று தலைநகர்களின் முக்கிய இடங்களில் அவ்வப்போது நடைபெறுகின்றன. எழுத்தாளர்களின் சிறுகதைகளை , சமூக விழிப்புஉணர்வு கருத்துகளை, தனிமனித அவலங்களை நேர்த்தியான உடல்மொழி, வசனங்கள், இசையுடன் மேடைகளில் அரங்கேற்றும் நாடகக் கலைஞர்கள் இன்றும் இருக்கிறார்கள். டெல்லி மற்றும் பாண்டிச்சேரியிலுள்ள பல்கலைக்கழகங்கள் உட்பட பல கல்லூரிகளில் நாடகக் கலை ஒரு படிப்பாக வைக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களின் தெருக்களையே மேடைகளாக்கி கலைஞர்கள் பலர் 'வீதி நாடகம் ' போடுவதை நாம் பார்த்திருப்போம். திரைப்படங்கள் மக்களின் அன்றாடங்களில் ஒன்றாகிப் போனதாலும், திரைத்துறையைப் போல பெரும் பணம் புலங்காததும் நாடகங்கள் இன்று வெகுஜன மக்களைவிட்டு சற்று விலகியிருக்கிறது என்பதே உண்மை. ஹாலிவுட்டில் இன்றும் திரைப்படங்களைப் போன்றே நாடகங்களும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. திரை நட்சத்திரங்களுக்கு நிகராக நாடகக் கலைஞர்களுக்கும் ரசிகர்பட்டாளம் இருக்கிறது. ஆனால், நமது சமூகத்தில் அப்படியான ஒரு சூழல் இல்லை. ஐ.டி துறைகளில், மார்க்கெட்டிங் துறைகளில் வேலை செய்யும் இளைஞர்கள் இன்று ஆர்வத்தின் பேரில், பகுதி நேர நாடகக் கலைஞர்களாகப் பயிற்சி பெற்று நடித்து வருகிறார்கள். நிகழ்த்து கலையான நாடகங்கள் அவ்வளவு எளிதான கலை இல்லை. கிரிக்கெட்டை போல தருணத்தைத் தவறவிடாமல் கவனமாகச் செயல்பட வேண்டிய ஒன்று. ஒலியமைப்பு, ஒளியமைப்பு , வசனம் , நடிப்பு என அனைத்துமே நேரடியாக மக்களுக்கு முன் அரங்கேறும்போது அது கடத்தும் அனுபவம் அலாதியானது. அதற்கான அதீத பொறுப்புணர்வு நாடகக் கலைஞர்களுக்குத் தேவை. சினிமா ஷீட்டிங்கைப் போல ரீ-டேக் களுக்கு வாய்பே இல்லை. நாடகங்கள் குறித்து ஒரு தட்டையான மதீப்பீடு ஒன்று பெருவாரியானவர்களிடம் உண்டு. அது, சினிமாவில் நடிக்கப் போவதற்கான ஒரு பயிற்சிக் களமாக நாடகம் பார்க்கப்படுவது. அதை முன்னணி நாடகக் கலைஞர்கள் பலரும் மறுத்துவருகிறார்கள்.

ஆரம்பகாலகட்டத்தில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், M.R. ராதா, சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள் பலரும் நாடக மேடைகளிலிருந்து திரைக்கு வந்தவர்கள் என்பதால், நாடகக் கலை சினிமாவிற்கான முதற்படி என்ற பொதுப் பார்வை தவறானது. நாடகம் சினிமாவைப் போல தனிக்கலை. சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் உள்ளிட்ட நாடகக் கலையின் முன்னோடிகள் பலர் வாழந்துள்ளனர். பல்வேறு சபாக்களில் நாடகங்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. கட்டணம் கொடுத்து விடிய விடிய நாடகங்கள் பார்த்த காலம் இன்று வழக்கொழிந்து விட்டது. இலவசமாக அரங்கேற்றப்படும் நாடகங்களுக்குக் கூட இன்று மக்கள் திரள் வருவதில்லை. வேஷம் தரித்த கலைஞர்கள் தங்களின் கலையைக் காப்பாற்ற, வானம் அதிர ஒலிக்கும் இசைக்கேற்ப தன் நடிப்பை காற்றில் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.