Published:Updated:

நானோ காட்டில் குமார்!

நானோ காட்டில் குமார்!

நானோ காட்டில் குமார்!

நானோ காட்டில் குமார்!

Published:Updated:
நானோ காட்டில் குமார்!

குமாரின் அப்பா ஒரு விஞ்ஞானி. அவனது வீட்டின் பின்பக்கம் ஒரு சிறிய கட்டடம் உள்ளது. அங்கே இருக்கும் ஒரு பாதாள அறைதான் அப்பாவின் ஆய்வுக்கூடம். அங்கே, அவர் அனுமதி இல்லாமல் யாரும் செல்ல முடியாது. ஏதாவது புதுமையான விஷயத்தைக் கண்டுபிடித்தால், அவரே அழைத்துச் சென்று காட்டுவார். ஒருநாள்... அப்பாவைத் தேடிக்கொண்டு குமார் அங்கே சென்றான்.

எப்போதும் பூட்டியே கிடக்கும் அறை திறந்திருந்தது. அருகே சென்றான். அங்கு குமார் கண்ட காட்சி... கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அவன் காண்பது உண்மையா? பொய்யா? ஒன்றும் புரியவில்லை.

##~##
அது பெரிய அறை. அறைக்குள்ளே ஒரு பெரிய மேசை. அந்த மேசை மேலே ஒரு மினியேச்சர் காடு. சின்னச் சின்ன மரங்கள், சின்னச் சின்ன செடிகள்... ஆலமரம், அரசமரம், மாமரம், இவை எல்லாம் ரொம்பச் சின்னதாக இருந்தன. குட்டியாக ஏதோ நகர்ந்தது. ஆகா... குட்டி குட்டியாக யானைகள்,  காட்டெருமைகள், புலி, சிங்கம்... வியப்பும், பயமும் கலந்து நின்றான் குமார்.

அப்போது யாரோ வரும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அவனது அப்பா புரஃபசர் சேதுராம்.  பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் உலகை திரும்பிப் பார்க்க வைத்தவர். ''குமார் இங்கே என்ன செய்றே? என் அனுமதி இல்லாம இங்க வரக்கூடாதுன்னு தெரியுமில்லே...'' என்றார் கோபத்துடன்.

''ஸாரிப்பா... எப்பவும் பூட்டியே இருந்த அறை திறந்திருந்தது, அதனால வந்துட்டேன். இதெல்லாம் என்னப்பா?'' என்று கேட்டான்.

''இது மக்கள் தொகைப் பிரச்னைக்குத் தீர்வு. என்னோட பத்து வருஷ உழைப்பு... நானோ காடு. ஒரே ஊசி மூலமா மரம், செடி, விலங்கு எல்லாத்தையும் சின்னதா மாத்திட்டேன். அதனோட கடைசிக் கட்டம்... மனிதன். இல்லையில்லை மினிதன்.'' என்றார்.

''சின்னதா மாறினா அறிவு குறைஞ்சிடாதா?'' என்று கேட்டான் குமார்.

''அதெல்லாம் குறையாது. இதைப் பத்தி யார்கிட்டேயும் சொல்லாதே. இன்னும் ஒரு மாசத்துல என்னோட ஆராய்ச்சி முடிஞ்சிடும்.'' என்றபடி அறையை விட்டு வெளியே அழைத்து வந்தார்.

படுக்கையில் படுத்த குமாருக்கு தூக்கமே வரவில்லை. ஏதேதோ நினைவில்... கடைசியில் தூங்கிப்போனான். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை. அப்பா தூங்கிக்கொண்டு இருந்தார். குமாருக்கு நானோ காட்டைப் பார்க்க ஆசையாக இருந்தது. அறைச் சாவியை கஷ்டப்பட்டுத் தேடி எடுத்தான்.

அறைக் கதவைத் திறந்து உள்ளே போனான். நானோ காட்டைப் பார்த்தான்.  அந்தக் காட்டில்... பொம்மையாக ஒரு உருவம். ஸ்கூல் யூனிபார்ஃமில் ஒரு பையன் ரொம்பச் சின்னதாக... அதிர்ச்சியில் உறைந்தான் குமார். அழுதுகொண்டிருந் தவனிடம் குனிந்து, ''நீ யார்?'' என்றான்.

அந்தச் சிறுவன், ''நான் யாருமில்லாத அனாதை. ஆசிரமத்தில் இருந்து பள்ளிக்கூடம் போகும்போது, ஒருத்தர் என்னை ஏமாற்றிக் கூட்டிவந்தார். ஒரு வாரமா ஒரு அறையில அடைச்சு சாப்பாடு போட்டார். நேத்து நைட் எனக்கு ஒரு ஊசி போட்டார். ஒரு மணி நேரத்துல நான் சின்னதா மாறிட்டேன். பயமாயிருக்கு'' என்று அழுதான்.

குமார் அவனுக்கு ஆறுதல் சொல்லி விட்டு, அப்பாவிடம் சென்றான்.  ''அப்பா, இது நியாயமா? ஒரு அனாதைப் பையனை உங்க பரிசோதனைக்குப் பயன் படுத்தியது சரியா? அவனுக்கு பழையபடி உருவம் கொடுங்க'' என்றான்.

''மனிதர்களைச்  சிறுசா மாத்தறதுக்குத்தான் மருந்து கண்டுபிடிச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் பழைய நிலைமைக்குத் திரும்பற மருந்தைக் கண்டுபிடிச்சு, அவனைப் பெரிசாக்குறேன்'' என்றபடி ஆராய்ச்சி அறைக்குச் சென்றார் சேதுராம்.

அடுத்த நாள் காலை... குமாரைக் காணவில்லை. வீடு முழுவதும் தேடியவருக்கு ஒரு கடிதம் கிடைத்தது.

அன்புள்ள அப்பா,

நீங்கள் செய்த செயல் என்னை மிகவும் வருந்த வைத்தது. அதனால், மனிதர்களை சிறிதாக்கும் ஊசியை நானே போட்டுக் கொண்டேன். அப்போதுதான் உங்கள் மகனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பில், சீக்கிரம் மருந்தைக் கண்டுபிடிப்பீர்கள். அதுவரை அம்மாவுக்கு விஷயம் தெரியவேண்டாம். சீக்கிரம் மருந்தைக் கண்டுபிடித்து, என்னையும் அந்தப் பையனையும் பழைய நிலைக்குக் கொண்டுவாருங்கள்.

நம்பிக்கையுடன் குமார்.

பதறிப்போய்... நானோ காட்டிற்குச் சென்று பார்த்தார் சேதுராம். அங்கே, குமாரும் அந்தப் பையனும்... ஒரு நூலை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.