Published:Updated:

இலக்கணப் பிழை - அ.முத்துலிங்கம்

இலக்கணப் பிழை - அ.முத்துலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
இலக்கணப் பிழை - அ.முத்துலிங்கம்

ஓவியங்கள் : ஆர்.பி.பாஸ்கரன்

இலக்கணப் பிழை - அ.முத்துலிங்கம்

ஓவியங்கள் : ஆர்.பி.பாஸ்கரன்

Published:Updated:
இலக்கணப் பிழை - அ.முத்துலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
இலக்கணப் பிழை - அ.முத்துலிங்கம்
இலக்கணப் பிழை - அ.முத்துலிங்கம்

ன்புள்ள செயலருக்கு,

‘இலக்கணப் பிழை திருத்தி’ என்னும் செயலி பற்றிய விளம்பரம் படித்தேன். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் எழுதவேண்டும் என்பது, சிறுவயது முதலான என் ஆசை; லட்சியம்; கொள்கை. அத்துடன் ஒரு முக்கியமான அம்சமும் இப்போது சேர்ந்துகொண்டது. நான் ஒரு பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்திருக்கிறேன். பெயர் உதவி ஆசிரியரே ஒழிய, அது கடைநிலை வேலைதான். இலக்கணச் சுத்தமாக எழுத வேண்டும் என, என்னைத் தெரிவுசெய்தபோதே சொல்லிவிட்டார்கள். ஆகவே, என் ஆசை இப்போது அவசரத் தேவையாகிவிட்டது. தயவுசெய்து எனக்கு ஒரு செயலியை உடனடியாக அனுப்பிவையுங்கள். கடன் அட்டையில் பணம் செலுத்திவிட்டேன். நன்றி.

கே.கேதாரநாதன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ன்புள்ள கே.கேதாரநாதன்,

உங்கள் பணம் கிடைத்தது. செயலி உங்களுக்கு உடனேயே அனுப்பிவைக்கப்படும். இலக்கணப் பிழை இல்லாத உலகத்துக்கு உங்களை வரவேற்கிறேன். நன்றி.

லாரா.

ன்புள்ள லாரா,

முழுதாக 139 டொலர்கள் அனுப்பி வைத்தேனே. செயலி எங்கே? செயலி எங்கே?

கே.கே.

ன்பான கே.கே.,

செயலி தபால் மூலம் வரும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள்போல இருக்கிறது. செயலி ஏற்கெனவே உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அதை இயக்கத் தேவையான கட்டளைகள் கீழ்க்காணும் கொழுவியில் (Link) இருக்கின்றன.

லாரா.

ன்புள்ள லாரா,

இலக்கணப் பிழை திருத்தியை அனுப்பிவிட்டதாகச் சொல்கிறீர்களே... அது எங்கே இருக்கிறது? 

கே.கே.

ன்புள்ள கே.கே.,

கீழே உள்ள கொழுவியைச் சொடுக்கவும்.

லாரா.

இலக்கணப் பிழை - அ.முத்துலிங்கம்

ன்புள்ள லாரா,

ஒரு கேள்வி கேட்டால், அதற்கு ஒரு கொழுவியை அனுப்புகிறீர்கள். அது இன்னொரு கொழுவியைத் திறக்கச் சொல்கிறது. அது இன்னொன்றைத் திறக்கச் சொல்கிறது. இப்படி காடு, மலை எல்லாம் சுற்றி அலைந்து, திரும்பி வரும் வழி தெரியாமல் போய்விடுகிறது. ஏற்கெனவே தயாரித்த 1,000 பதில்களில் ஒன்றை எனக்கு அனுப்பி, தப்பிவிடுகிறீர்கள். ஒரு மொக்கு ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குச் சொல்வதுபோல, ‘முதலில் இதைச் செய்; அடுத்து இதைச் செய்’ என்று எழுதினால், நான் கற்றுக்கொண்டிருப்பேனே. உங்கள் கொழுவிகள் நிறையச் சேர்ந்துவிட்டன. இதுவரை நீங்கள் அனுப்பிய கொழுவிகள் எல்லாவற்றையும் தொடுத்தால், அவற்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு நான் ஒன்ராறியோ வாவியைக் கடந்துவிடுவேன்.

கே.கே.

ன்புள்ள கே.கே.,

வாவியை ஒன்றும் தாண்டத் தேவை இல்லை. அறியாமைக் கடலைத் தாண்டினால் போதும். கொழுவிகளைப் பற்றி நீங்கள் படுகேவலமாக நினைக்கிறீர்கள். பல விஞ்ஞானிகளும் இலக்கண அறிஞர்களும் இணைந்து உருவாக்கியவை அவை. நீங்கள் அவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு பயன்படுத்துங்கள். அவை தொந்தரவானவை என்பது வருத்தத்துக்குரியது.

லாரா.

ன்புள்ள லாரா,

நீங்கள் என்னைக் கொடூரமானவன், கரைச்சல் தருபவன், மொக்கன் என்றெல்லாம் இதுவரை கற்பனை செய்திருப்பீர்கள். நான் கொடூரமானவன் அல்ல; கரைச்சல் தருபவனும் அல்ல. ஒருவேளை மொக்கன் என்பது சரியாக இருக்கலாம். நான் தலைகீழாகப் பிறந்ததால், மருத்துவச்சி என்னைக் குலுக்குக் குலுக்கென்று குலுக்கினார். அப்பொழுது ஒருவேளை மூளை பிசகியிருக்கலாம். அப்படி அம்மா அபிப்பிராயப்பட்டிருக்கிறார்.

நீங்கள் அனுப்பிய கொழுவியைப் பிரித்து ஆராய்ந்தேன். `உங்கள் கம்ப்யூட்டரின் வலது பக்கக் கீழ் மூலையில் ஒரு பச்சை பட்டன் தெரியும். அதை கிளிக் செய்தால், செயலி இயங்க ஆரம்பிக்கும்’ - இப்படி எழுதியிருக்கிறது. பிரச்னை என்ன என்றால், கம்ப்யூட்டரின் வலது பக்க கீழ் மூலையில் தேடினேன். அப்படி ஒரு பட்டனும் இல்லை. இடது பக்கத்திலும் இல்லை. கம்ப்யூட்டரின் பின்பக்கத்திலும் தேடினேன். நான் என்ன செய்வது? எப்படி இலக்கணச் சுத்தமாக எழுதுவது? என் எதிர்காலம் ஒரு பச்சை பட்டனில் வந்து நிற்கிறதே!

கே.கே.

ன்புள்ள கே.கே.,

நிச்சயமாக உங்கள் கம்ப்யூட்டரில் பச்சை பட்டன் ஏறிவிட்டது. திரையின் கீழே அது மினுங்கிக்கொண்டிருப்பதை எங்களால் பார்க்க முடிகிறது. கம்ப்யூட்டர் திரையைப் படம்பிடித்து அனுப்பவும்.

லாரா.

ன்புள்ள லாரா,

எத்தனை சுலபமாக, `படம்பிடித்து அனுப்புங்கள்’ என்று சொல்லிவிட்டீர்கள். நான் எப்படி எடுப்பது? அதைச் சொல்லவில்லையே!

பக்கத்து வீட்டில் ஒருவர் நல்ல கேமரா வைத்திருக்கிறார். சுண்ணாம்பு வெள்ளை அடிப்பவர்போல, ஒரு கண் கொஞ்சம் மூடியிருக்கும். வேறு குறை இல்லை. அவரிடம் கேமரா இரவல் வாங்கி, என்னால் படம் எடுக்க முடியும். பரோபகாரச் சிந்தை நிறைய அவருக்கு உண்டு. உங்கள் கையைப் பிடித்து குலுக்கிக்கொண்டு அவர் கதைக்கத் தொடங்கினார் என்றால், நிறுத்த மாட்டார். நன்கு காயவைத்தத் தடித்த தோலினால் செய்யப்பட்ட அவருடைய கை, உங்கள் கையை இறுக்கிக்கொண்டே இருக்கும்; விட மாட்டார். எப்படிப் பறித்துக்கொண்டு வருவது? போனமுறை இரவு நேரம், ஏணி கடன்வாங்கப் போனேன்... உயரத்தில் தொங்கிய பல்பை மாற்றுவதற்குத்தான். அவர் வானத்தில் தெரிந்த நட்சத்திரக் குவியலைக் காட்டி, ‘என்ன அற்புதம்?’ என்றார். அதிலே என்ன அற்புதம்? ‘முதல் நாளும் அதே குவியல் இருந்தது.

300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும் அது இருந்தது’ என்றேன். ‘ஆம்... ஆம்... யார் பார்க்கிறார்கள்? மனிதகுலம் வீணாகிக் கொண்டிருக்கிறது’ என்றார்.

இம்முறை பகல் நேரம். நட்சத்திரம் இல்லை. ஆகவே, துணிந்துபோனேன். ஆனால், அவரிடம் டீசேர்ட் இருந்தது. என் கையைப் பிடித்து, அவர் அணிந்திருந்த டீசேர்ட்டை தொட்டுக்காட்டிப் பேசத் தொடங்கினார். ‘இந்த டீசேர்ட்டைப் பார்த்தீர்களா? நியூசீலண்டில் இருந்து எடுப்பித்தது. ஆட்டு மயிரில் விசேடமாகத் தயாரிக்கப்படுவது. குளிர்காலத்திலும் போடலாம்; கோடைகாலத்திலும் அணியலாம். குளிர்காலத்தில் வெப்பமாக இருக்கும்; கோடைகாலத்தில் குளிராக இருக்கும். டீசேர்ட்டில் இருக்கும் நம்பரை இந்தக் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிந்து தேடினால், எந்த ஆட்டு மயிரில் இருந்து இதை உருவாக்கினார்கள் என்ற தகவல் கிடைக்கும்.’ நான் கையை விடுவிக்க முயன்றேன். அவர் ஐபாட் திறந்து, ‘இதோ இந்த ஆடுதான், பாருங்கள்’ என்றார். நானும் பார்த்தேன். அப்படியே டீசேர்ட்டின் முகச்சாடை அதற்கும் இருந்தது. அவரிடம் விடைபெற்று, கையையும் திரும்பப் பெற்றுக்கொண்டு கேமராவுக்காகக் காத்திருந்தேன். அதற்கு இடையில் அவர் மனைவி வந்துவிட்டதால், தொடர் ஓட்டத்தில் பின் கையால் தடியைத் தருவதுபோல கேமராவைத் தந்தார். நான் ஒருவாறு படம் எடுத்துவிட்டேன். எந்த முகவரிக்கு அனுப்புவது?

கே.கே.

ன்புள்ள கே.கே.,

பக்கத்து வீட்டுக்காரரிடம் கேமரா கடன் வாங்கினீர்களா? ஓ, கடவுளே! கம்ப்யூட்டர் திரையைப் படம்பிடித்து மின்னஞ்சலில் அனுப்புவதற்கு கேமரா ஒன்றும் தேவை இல்லை. கீழே அனுப்பியிருக்கும் கொழுவியில் எப்படிப் படம்பிடிப்பது என்ற விவரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி செய்யுங்கள்.

லாரா.

ன்புள்ள லாரா,

கடந்த நாலு நாட்களாக நான் பாடுபட்டேன். படுத்திருந்து பார்த்ததில் பச்சை பட்டனைக் கண்டுபிடித்துவிட்டேன்.  இலக்கணப் பிழை திருத்தியைச் சோதனை செய்வதற்காக தட்டச்சு செய்தேன். ஒருமுறை ‘செய்வினை’ என்று சொன்னது. இன்னொரு சமயம் ‘நிச்சயமற்ற பெயர்ச் சொற்குறி’ என்று சிவப்பு எழுத்தில் பெரிசாக எழுதியது. ஆனால், நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லவில்லை. இது சொல்வதை விளங்குவது இலக்கணப் புத்தகத்திலும் பார்க்கக் கடினமாக இருக்கிறது. இலக்கணப் புத்தகங்களை இன்னும் கொஞ்சம் ஊன்றிப் படித்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது.

கே.கே.

ன்புள்ள கே.கே.,

எங்கள் இலக்கணப் பிழை திருத்தி பற்றி நீங்கள் தவறாக விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள். இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டுவதுதான் செயலியின் வேலை. உங்களுக்காக அது கட்டுரை எல்லாம் எழுத முடியாது. தொடர்ந்து செயலியைப் பயன்படுத்துங்கள். உங்கள் எழுத்து துலக்கம் ஆகும். எதிர்காலம் பிரகாசமாக அமையும்.

லாரா.

ன்புள்ள லாரா,

நீங்கள் தீர்க்கதரிசி. இன்று என்ன நடந்தது என்று சொன்னால், நம்ப மாட்டீர்கள். பத்திரிகை ஆசிரியர் என்னைக் கூப்பிட்டார். ஆசிரியர், ஒருவரை தன் அறைக்கு அழைத்தால், அதன் பொருள் ஒன்றுதான். வேலை போகப்போகிறது. ஏற்கெனவே ஆசிரியர் என் எழுத்தில் இரு தடவை இலக்கணப் பிழை கண்டுபிடித்திருந்தார். ஆகவே, தயங்கியபடி அவர் அறைக்குள் நுழைந்தேன். என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்? அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார். எனக்கு நடுங்கியது. ‘வணக்கம்’ என்றார். அவர் குரலோ அறையிலும் பார்க்கப் பெரிது. சாப்பிட்டு முடித்த கோப்பையை நீட்டுவதுபோல ஒரு பேப்பரை நீட்டினார். நான் அதைப் படிப்பதற்காக உதடுகளைக் கூட்டினேன். அவை நடுங்கும் வேலையில் இருந்தன. ‘உனக்கு வேலை உயர்வு’ என்றார். என்னால் நம்ப முடியவில்லை. ‘நன்றி, நன்றி’ என்று பதினைந்து தடவை சொன்னேன். ஒரு முறைதான் சத்தம் வெளியே வந்தது. இவற்றை எல்லாம் ஏன் உங்களுக்கு எழுதுகிறேன்? இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. என்னுடன் வேலைசெய்யும் பெண்மணிக்கு இது பிடிக்கவில்லை. அவர் இலக்கணத்தில் ராணி. எப்படியும் என் வேலையில் பிழை பிடித்து, என்னை வெளியே அனுப்ப முயற்சிப்பார். உங்கள் இலக்கணப் பிழை திருத்தியை நம்பி வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். கைவிடமாட்டீர்கள் என்ற நம்பிக்கை.

கே.கே.

ன்புள்ள கே.கே.,

உங்கள் வேலை உயர்வுக்கு என் வாழ்த்துகள். இலக்கணப் பிழை திருத்தியைப் பயன்படுத்திய பலர், பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதிகள்கூட அதன் அருமையை உணர்ந்திருக்கிறார்கள். பில் கிளின்டன் தன் சுயசரிதையை எழுதுவதற்கு எங்கள் செயலியைத்தான் பாவித்தார். அது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மைக்கேல் ஜாக்ஸன் இலக்கணப் பிழை திருத்தி பற்றி ஒரு பாடல்கூடப் பாடியிருக்கிறாரே. ஆனால், அது வெளிவருமுன்னர் அவர் இறந்து விட்டார். இது ஆரம்பம் மட்டுமே. இன்னும் பல புகழ் மாலைகளுக்கும் பாராட்டுகளுக்கும் நீங்கள் தயாராக வேண்டும்.

லாரா.

ன்புள்ள லாரா,

கனடாவில் எல்லோருக்கும்  பனிக்காலம் எதிரி. எனக்கு அதனிலும் கூடிய எதிரி என்றால், அந்தப் பெண்தான். அவர் என் அறைக்கு வந்தார். அவர் நுழைந்ததும் அறையின் வெளிச்சம் மாறிவிடும். கோதுடைத்த அவித்த முட்டைபோல தளதளவென்று அவர் சருமம் மினுங்கியது. கன்னங்கள் சிவந்திருந்தன. குளிர்காலச் சிவப்பாக இருக்கலாம். கோபமோ தெரியாது. அவருடைய வேலை வாராவாரம் அழகுக் குறிப்பு எழுதுவது. பல்லைக்காட்டி சிரித்துக்கொண்டே அந்த வாரத்துக் கட்டுரையை நீட்டினார். அவருடைய பற்கள் சிரிப்பதற்காகப் படைக்கப்பட்டவை அல்ல; கடிப்பதற்காக ஆண்டவனால் கொடுக்கப்பட்டவை என்று எனக்கு அந்தக் கணத்தில் தோன்றியது. கட்டுரையில் என்ன எழுதியிருந்தார் தெரியுமா... அந்தக் காலத்து பிரபுக்களின் மனைவிமார் எப்படி நடக்கப் பழகினார்கள் என்று. `தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கக் கூடாது; நேராகவும் பார்க்கக் கூடாது. ஒரு கோழி முட்டையை எடுத்து தாடைக்கும் கழுத்துக்கும் இடையில் வைத்து, விழாமல் நடக்கப் பழக வேண்டும்’ என எழுதியிருந்தார். கண்பார்வை 20 அடி தூரத்தில் நிலத்தில் நிலைக்க வேண்டுமாம். என்ன கோழி முட்டை என எழுதவில்லை. சிவப்பா, வெள்ளையா, நாட்டுக்கோழியா என்ற விவரமும் கிடையாது. என்ன விழக் கூடாது... முட்டையா அல்லது நடப்பவரா? நான் அதைக் கேட்டபோது, அவர் பதில் சொல்லவில்லை. ஒரு கண்ணால் ஒரு மாதிரி சிரித்தார். மறு கண்ணை அவர் தலைமுடி மூடியிருந்தது.

இனி விஷயத்துக்கு வருவோம். நான் சென்ற வாரம் எழுதிய கட்டுரை பத்திரிகையில் வந்திருந்தது. அது இலக்கணப் பிழை திருத்தியால் திருத்தப்பட்டது. அந்தக் கட்டுரையில் ஒரு வசனத்தை அடிக்கோடிட்டு ‘இறந்தகாலத் தொடர்வினை’ என்று எழுதி, அந்தப் பேப்பரை எனக்கு முன்னே விசுக்குவதுபோல ஆட்டினார். செல்போன் உறுமுவதுபோல அடித்தொண்டையால் ஒரு சத்தம் செய்தார். கதவை அடித்துச் சாத்திவிட்டு வெளியேறினார். உறுமல் என்னுடனேயே நின்றது. என் வேலை போய்விடுமோ என்று பயம் பிடிக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?

கே.கே.

இலக்கணப் பிழை - அ.முத்துலிங்கம்

ன்புள்ள கே.கே.,

உங்கள் அலுவலகப் பிரச்னைகளை நாங்கள் தீர்த்துவைக்க முடியாது. இலக்கணப் பிழை திருத்தி சம்பந்தமாக மட்டுமே உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள்.

லாரா.

ன்புள்ள லாரா,

பத்திரிகை ஆசிரியரிடம்  முறைப்பாடு செய்தேன். அவர் சிரித்தார். ‘பொறுமை வேண்டும்’ என்றார். ‘ஆற்றங்கரையில் ஒருவன் பொறுமையுடன் நெடுநேரம் நின்றால், ஒருநாள் அவனுடைய எதிரியின் பிணம் மிதந்துபோவதைக் காணலாம்’ என்றார். இவர் என்ன சொல்கிறார்? நான் ஆற்றங்கரையில் போய் நிற்கவேண்டுமா? எந்த ஆறு?

எனக்கு பதவி உயர்வு கிடைத்த பின்னர், நான் ஒரு கார் வாங்கியிருந்தேன். புது கார் அல்ல; பழைய கார்தான். என் சொந்த கார் என்றபடியால், முழங்கையை வெளியே வைத்துக்கொண்டு ஓட்டினேன். எப்படியோ என் எதிரிக்கு அது தெரியவந்தது. ‘முழு காரும் வாங்கினீர்களா?’ என்று கேட்டார். இதன் அர்த்தம் என்ன? எனக்கு கோபம் வந்துவிட்டது. `இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரபுக்களின் மனைவிமார் எப்படி நடந்தால் என்ன... தவழ்ந்தால் என்ன... அதை இந்தக் காலத்தில் எழுதலாமா, எழுதினாலும் யார் படிப்பார்கள்? முட்டை விற்பனைதான் அதிகமாகும்’ என்றேன். கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையில் `செயப்படுபொருள் சுட்டுப்பெயர்’ பல இடங்களில் தவறாக வந்தது என்றும், இந்தப் பேப்பரில் பணிபுரிவது தனக்கு அவமானம் என்றும் சொன்னார்.

நான் வாயை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ‘அப்படியானால் நாட்டைக் காக்கப்போவதுதானே’ என்றேன். அவர் முகம் மாறியது. இரண்டு பற்கள் முளைத்து வெளியே நீண்டுவிடுமோ என்று பயமேற்பட்டது. `நான் பனி. உருள உருளப் பெரிசாவேன். நீரோ பாறாங்கல். உருள உருள என்ன நடக்கும் என உம்முடைய ஆமை மூளையால் யோசித்துப் பாரும். என் மாண்புகளும் மாட்சிமைகளும் இந்தச் சின்னப் பத்திரிகை அலுவலகத்துக்கு என்றைக்குமே புரியாது’ என்றார். அவர் மேல் உதடுகள் மடிந்தன. ரேடியோவில் விசையைத் திருகத் திருக, ஒலி மேலே மேலே போவதுபோல, அவருடைய புன்னகை கூடிக்கூடி முழுவட்டம் ஆகியது. ஏளனமான சிரிப்புத்தான். அவர் ஏதோ திட்டமிடுகிறார்.

உங்கள் செயலியில் நம்பிக்கை போய்விட்டது. எனக்கு இலக்கணப் பிழை திருத்தி தேவை இல்லை. அது இருப்பதும் ஒன்றுதான். இல்லாததும் ஒன்றுதான். 

கே.கே.

ன்புள்ள கே.கே.,

எங்கள் பிழை திருத்தியைப் பயன்படுத்தச் சொல்லி ஒருவரும் உங்களை நிர்ப்பந்திக்கவில்லை. ஆமை மூளை பற்றி நான் ஒன்றும் அபிப்பிராயம் சொல்ல முடியாது.

லாரா.

ன்பான லாரா,

தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள். இலக்கணப் பிழைகள் அழகானவை; இயற்கையானவை. சிந்தனை, மூளையில் தோன்றியவுடன் அவை எழுத்து வடிவம் பெறுகின்றன. இந்தச் செயல்பாட்டில் இலக்கணம் நுழைந்தவுடன் உங்கள் சிந்தனை சிதைக்கப்படுகிறது. குழந்தை பேச ஆரம்பிக்கும்போது இலக்கணத்துடனேயா பேசுகிறது. அதன் பேச்சு எத்தனை இனிமையாக இருக்கிறது. உங்களுக்கு சட்டென்று புரிந்துவிடுகிறது. படைப்பை அது ஊக்குவிப்பது இல்லை. இடைஞ்சலாகவே உள்ளது. 2,500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க அறிஞர் ஹெராக்லிட்டசுக்கு இலக்கணம் பிடிக்காது. அவர் சொன்னார், ‘மருத்துவர்களைத் தவிர்த்து, இலக்கணக்காரர்களைப்போல முட்டாள்களை இந்த உலகத்தில் காண முடியாது’. ஆகவே, இனிமேல் இலக்கணப் பிழைகளைச் சரிபார்க்காமல் எழுதுவது எனத் தீர்மானித்துவிட்டேன். செயலிக்கு நான் கட்டிய 139 டொலர்களை உடனேயே திருப்பி அனுப்பிவிடுங்கள். நான் வங்கிக்கு சென்று என் பணத்தை எண்ணி எண்ணி மகிழ்வேன். வாசகர்கள், பத்திரிகையில் என் இலக்கணப் பிழைகளை எண்ணி எண்ணி மகிழட்டும்.

கே.கே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism