Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை - 38

வசூல் ராஜாக்கள்! கா.பாலமுருகன் , படங்கள்: ரமேஷ் கந்தசாமி

பிரீமியம் ஸ்டோரி
நெடுஞ்சாலை வாழ்க்கை - 38

தான்கோட்டில் மாலை 6 மணிக்கு ஜம்மு நோக்கிப் புறப்பட்டபோது, சாலை நெறிப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தையும் ஜம்முவையும் பிரிக்கும் ரவி ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தில் வாகனங்கள் தேங்கி நின்றன. இன்ச் இன்ச்சாக முன்னேறி பாலத்தைக் கடந்ததும், லாரிகளை மட்டும் இடதுபக்கமாக இருந்த மைதானத்துக்குள் செல்லுமாறு கை காட்ட... ஜம்மு - காஷ்மீர் என்பதால், சோதனை இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், நினைப்பதற்கு மாறாகத்தான் எல்லாமே நடந்தது.

மைதானத்துக்குள் நுழைந்த லாரி, அங்கிருந்த லாரி அணிவகுப்பில் முன்னேறிச் சென்றது. அந்த அணிவகுப்பு மீண்டும் சாலையை நோக்கிச் சென்றதும் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கட்டடங்கள் இருந்த ஒரு மறைவான இடத்தில், ஒவ்வொரு லாரியிடமும் 400 ரூபாய் வீதம் வசூலித்தனர் போக்குவரத்துறையினர். மணி இதை எதிர்பார்க்கவே இல்லை. 400 ரூபாயைக் கொடுத்ததும் எந்தப் பேச்சும் இல்லாமல் லாரிக்கு வழிவிட, சாலையில் மீண்டும் ஏறியபோது, போலீஸ் மறித்தது. அங்கு 200 ரூபாய். அடுத்து சாலைக்கான டோல்பூத். அங்கு கொடுத்த 300 ரூபாய்க்கு ரசீது கிடைத்தது. இனி பிரச்னை இல்லை என லாரியை விரட்ட ஆரம்பித்தார் மணி. ஆனால், வசூல் அத்துடன் முடியவில்லை. மீண்டும் போலீஸ்; 200 ரூபாய். திரும்பவும் அதேபோல 200 ரூபாய் கொடுக்கும்போது, பொறுக்க முடியாமல் பரமேஸ்வரன் போலீஸிடம் கேட்டார். ‘‘ஐந்து கிலோ மீட்டருக்கு முன்புதான் போலீஸுக்குப் பணம் தந்தோம். திரும்பவும் கேட்கிறீர்களே?’’ என்றதும், ‘‘அது வேற டிவிஷன்; இது வேற டிவிஷன்’’ என வசூலுக்கான நியாயத்தைச் சொன்னார் அந்த போலீஸ்காரர்.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 38

முன்னால் சென்ற தமிழக லாரி, கத்வா எனும் ஊரில் ஓரங்கட்டியதும் பின்னாலேயே சென்று நிறுத்தினார் மணி. இறங்கி வந்த அந்த டிரைவரிடம், ‘‘இன்னும் எத்தனை இடத்துல பணம் கொடுக்க வேண்டியது இருக்கும்?’’ என்று விசாரித்தார். ‘பட்னி டாப் சென்று கீழே இறங்கும் வரை போலீஸுக்குக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஐம்பது, இருபதுன்னு சில்லறை மாத்தி வெச்சுக்கங்க, மொபைல் சிம் இங்கேயே ஐடி கொடுத்து வாங்கிக்கங்க... நாளைக்கு பிரதமர் ஸ்ரீநகர் வர்றாராம். மேல ஏற நம்மள விடுவானுங்களான்னு தெரியலை. சமையலுக்குத் தேவையானதை வாங்கி வெச்சுக்கங்க’’ என்றார், காஷ்மீர் அனுபவசாலி டிரைவரான பழனிவேலு.

ஈரோட்டைச் சேர்ந்த பழனிவேலு, லாரித் தொழிலில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஒவ்வொரு சீஸனுக்கும் ஸ்ரீநகருக்கு ஆப்பிள் லோடுக்கு வருபவர். ‘‘இந்தியாவிலேயே மோசமான போலீஸ்னா அது ஜம்மு போலீஸ்தான். காசு கொடுக்காம நகரவிட மாட்டாங்க. ஸ்ரீநகர்ல எந்தத் தொந்தரவும் இருக்காது. ஏற்கெனவே மேல ஏகப்பட்ட லாரிங்க லோடு இல்லாம மூணு நாளா நிக்குதாம். நமக்கு எப்ப லோடு கிடைக்கும்னு தெரியலை. பார்க்கலாம்’’ என்றவருடன் சேர்ந்து டீ குடித்தோம். ஒரு லாரியில் இத்தனை பேர் ஏன் என்ற கேள்வி அவருக்கும் வந்தது. விஷயத்தைச் சொன்னதும் உற்சாகமானார்.
 
‘‘ரொம்ப நல்ல விஷயம்’’ எனப் பாராட்டியவர், ‘‘நம்மகூட இன்னும் நாலு வண்டிங்க வருது. நீங்க எல்லார்கிட்டேயும் பேசுங்க.. ஸ்ரீநகர் போற வரைக்கும் எல்லா லாரியிலயும் மாறிக்குங்க’’ என்று ஐடியா தந்தார்.

சிம் கார்டுகள், சமையல் பொருட்கள் வாங்கிக்கொண்டு புறப்பட்டோம். மேலும் இரண்டு இடங்களில் பணம் கொடுத்துவிட்டு ஜம்மு நகர எல்லையை எட்டியபோது, இரவு 10 மணிக்கு மேல் ஆகியிருந்தது. நகருக்குள் செல்லும் சாலையில் செல்லாமல், வலதுபக்கம் ஸ்ரீநகருக்குச் செல்லும் பைபாஸ் சாலையில் திரும்பி சில கிலோ மீட்டர் தூரம் சென்றதும் மலைப் பாதை ஆரம்பித்தது. எல்லா லாரிகளும் பெரும்பாலும் காலியாக இருந்ததால், வேகமெடுத்துச் சென்றன. ஏறுமுகமாக இருந்த அந்தச் சாலை, சட்டென இறங்க ஆரம்பித்தது. ஜம்மு நகரின் ஒளிவெள்ளம் தெரிந்ததால், ஜம்முவின் பக்கவாட்டில் சென்றுகொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. சட்டென லாரிகள் மெதுவாகச் செல்லத் துவங்கின. மீண்டும் டிராஃபிக் பிரச்னை மட்டும் வந்துவிடக் கூடாது என்று வேண்டிக்கொண்டார் மணி. ஆனால், முன்னால் சென்ற லாரிகள் எல்லாம் சாலையில் ஓரங்கட்டப்பட்டு நிறுத்த ஆரம்பிக்க... என்னவென்று புரியாமல் மணியும் லாரியை ஓரங்கட்டினார். கொஞ்சம் கொஞ்சமாக லாரிகள் சேரத் துவங்கி, அந்த மலைப் பாதையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை லாரிகள் அணிவகுத்து நின்றன. இன்ஜினை ஆஃப் செய்துவிட்டு, முன்னால் நின்ற லாரியை நோக்கிச் சென்று திரும்பிய மணி, ‘’போலீஸ்தான் நிறுத்தி இருக்காங்களாம். எதுக்குன்னு தெரியலை...’’ என்றார். ‘‘சரி, அதற்குள் நாம் சாப்பிட்டுவிடலாம்...’’ என்று பாத்திரங்களை எடுத்தார் பரமேஸ்வரன்.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 38

இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. எதற்காக நிற்கிறோம் என்பது தெரியாமல் எல்லா லாரிகளும் நின்றுகொண்டிருந்தன. இரவு ஆக ஆக குளிர் உடலை நடுங்க வைத்துக்கொண்டிருந்தது.

நள்ளிரவு 2 மணிக்கு மேல் பைக்கில் வந்த போலீஸ் ஒருவர், ‘‘போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எப்போது திறப்போம் என்பது தெரியாது. தகவல் வந்தால் சொல்கிறோம்’’ என்று அறிவித்துக்கொண்டே சென்றார். முதல் நாள் பதான்கோட்டில் பகல் முழுக்கக் காத்திருந்தது பொறுமை இழக்க வைத்திருந்தது. இன்றிரவும் இங்கே காத்திருக்க வேண்டுமா என சலிப்பு ஏற்பட்டது. சரி, தூங்குவோம் என அனைவரும் ஆயத்தமானோம்.

இமயமலையின் அடிவாரம் அந்த இடம். காற்றில் பனிக் கட்டிகளைச் சிதைத்துத் தூவியதுபோல இருந்தது. ஆரவாரமாக மலையேறிய லாரிகள் அனைத்தும் அந்த நெடுஞ்சாலையில் ஓரமாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. விளக்குகள், இன்ஜின்கள் அணைக்கப்பட்டு நள்ளிரவின் நிசப்தத்துக்கு அந்த இடம் தயாராகிவிட்டிருந்தது. லாரியின் கேபின் போன்ற அற்புதமான கணப்பு அறை எதுவும் இல்லை என்று சொல்வேன். ஷட்டர்களை அடைத்து கம்பளியைப் போர்த்தியதும் அவ்வளவு கதகதப்பான தூக்கம். விடிந்ததும் பனிமலையை இங்கிருந்தே பார்க்கலாம்; எங்கே நமது பயணம் இரவிலேயே எதையும் பார்க்காமல் சென்றுவிடுமோ என நினைத்தற்கு மாறாகக் காத்திருக்க நேர்ந்தது மகிழ்ச்சியை அளித்தது.

சாலையோரம் வரை விரிந்திருந்த வெண் போர்வையில் கொஞ்சம் அள்ளி, தலைமீது தூவிக்கொண்டிருந்தபோது... பரமேஸ்வரன் என்னை உலுப்பி எழுப்பிவிட்டார். நல்ல வெளிச்சம்... ஆனால், வெயில் இல்லை.

(நெடுஞ்சாலை நீளும்)  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு