Published:Updated:

உன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா

உன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா
பிரீமியம் ஸ்டோரி
உன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா

உன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா

உன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா

உன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா

Published:Updated:
உன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா
பிரீமியம் ஸ்டோரி
உன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா

மு.சுயம்புலிங்கத்தின் கவிதைகளை முன்வைத்து

`பாரதியிடம் இருந்து தொடங்கும் தமிழ் நவீனக் கவிதை...’ என இந்தக் கட்டுரையைத் தொடங்கினால், நீங்கள் வள்ளலாரையோ அன்றி வேறொருவரையோ நவீனக் கவிதையின் தொடக்கப் புள்ளி என மறுக்கலாம். அதற்கான நியாயங்களையும் நீங்கள் சொல்லக்கூடும். கவிதை குறித்த எந்த ஒரு வாக்கியமும் தனக்கான எதிர்வாக்கியத்தை உடன் அழைத்துவரும் இயல்பு கொண்டதாகவே உள்ளது. கவிதை குறித்த பேச்சில் தீர்க்கமான ஒரு வாக்கியத்தை உருவாக்குவது எளிது அல்ல. கவிதையைப் போலவே கவிதை குறித்த பேச்சும் வரையறைகளை அழித்தெழுதும்  குணம்கொண்டது.

பாரதிக்குப் பிந்தைய  தமிழ்க் கவிதைப் போக்கு பல்வேறு கருத்தியல்களால் கிளைத்து, சகல திசைகளிலும்

உன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா

வளர்ந்தது. பரஸ்பர முரண்களால் நிகழ்ந்த சண்டைகளும் சச்சரவுகளும் நவீனக் கவிதை விருட்சத்தின் அடியுரமாயின. வெக்கையான உரையாடல்களின் வழியேதான் தமிழ் நவீனக் கவிதை  தனது உக்கிரமான பயணத்தைத் தொடர்ந்தும் வருகிறது. அதற்காக கவிதை எனும் மொழியின் உச்சநிலை வினையை கவிதையியல்தான் நிகழ்த்துகிறது என்று நம்புவது அபத்தம். சில நேரங்களில் கவிதையியல், கசிந்து பெருகும் கவிதையின் ஊற்றைத் தூர்த்துவிடும் துர்காரியத்தைச் செய்யலாம். கவிதையியலை கவிதையின் படைப்புச் செயற்பாட்டிற்கான வினையூக்கி என்ற அளவில் பராமரித்துக் கொள்வது ஒரு படைப்பாளியின் முன்னுள்ள சவால்தான். இந்தப் புரிதலின் அடிப்படையில் ஆதியிலிருந்து காலாதிகாலமாய்த் தொடரும் கலை Vs அரசியல் என்ற தீராமுரணை அணுகலாம்.

நமது சாலையின் மருங்கில் இரண்டு காபி கடைகள் உள்ளன. வலப்பக்கமாய் உள்ள கடையின் முகப்பில் இப்படி எழுதிப் போட்டிருக்கிறார்கள்... `அரசியல் சிக்கரி கலக்காத தூய கலை காபி இங்கே கிடைக்கும்’. நம்மால் வலது பக்கம் திரும்ப முடியுமா என்ன? இடது பக்கக் கடையில் காபி குடிக்கலாம் என்றால், அங்கே... `காபித் தூள் கலக்காத தூய அரசியல் சிக்கரி பானம் கிடைக்கும்’ என்று பீதியூட்டுகிறார்கள். அரசியலும் கலையும் ஒன்றுடன் ஒன்று சேராத வஸ்துக்கள் அல்ல என்று நம்புகிறவர்கள் என்ன செய்யலாம்? இரண்டு கடைகளுக்கும் மத்தியில் நடுரோட்டில் புதிய கடை போடவேண்டியதுதான்.

தூய கலைக்கோஷ்டி சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த அதே காலத்தில்தான், கவிதை என்பதே அரசியல் செயல்பாடுதான் என்ற புரிதலுடன் திராவிட, மார்க்சியக் கருத்தியலாளர்கள் நம்பிக்கையோடு இயங்கிக்கொண்டிருந்தனர். இதில் நல்லதும் கெட்டதுமாக நிறைய நடந்தன. கவிதைவெளி ஜனநாயகமாக்கப்பட்டது. வானம்பாடிகளின் உச்சமான நற்செய்கை அதுதான்.

பிற்பாடு மிகையுணர்ச்சியும் பாசாங்கும் கொண்டதாக அரசியல் கவிதைகள் நீர்த்துப்போயின. `கவிதைகள் மட்டும்தானா... அதை எழுதியவர்கள்?’ என நீங்கள் எழுப்பும் கேள்வியைப் பொதுவில்வைத்துவிட்டு நான் மு.சுயம்புலிங்கம் கவிதைகள் பக்கம் நகர்கிறேன். அது எனக்கு ஆசுவாசம் அளிக்கிறது. 

சுயம்புலிங்கத்தின் கவிதைகள் வரிக்கு வரி அரசியல் பேசுபவைதான். அதுவும், தான் நம்புகிற இடதுசாரி அரசியலை. ஒளித்து, மறைத்துப்  பூடகமாக அல்ல, மிக வெளிப்படையாகப் பேசுபவை. தமிழ்ச் சூழலில் இடதுசாரி அரசியல் கவிதைகளை, நிறுவனம் சார் இடதுசாரிக் கவிதைகள் என்றும் நிறுவனம் சாராத இடதுசாரிக் கவிதைகள் என்றும் ஒரு வசதிக்காகப் பிரித்துக்கொள்ளலாம். இதில் முந்தைய வகைமைக் கவிதைகள் பொதுவாகக் கோஷத்தின் துடி கொண்டவை.

`எழு! நிமிர்! கரங்களை இணை! முஷ்டியை உயர்த்து!’ என்பன போன்ற கூட்டு உடற்பயிற்சிக்கான கட்டளை வாக்கியங்கள் இல்லாமல் இந்தக் கவிதைகளின் ஆன்மா சாந்தியடைவது இல்லை. `நான் தடைகளைத் தகர்ப்பேன்! எதிரிகளைப் பந்தாடுவேன்! பூமியைப் புரட்டுவேன்! முகமூடியைக் கிழிப்பேன்!’ என்பனபோன்ற செய்வினை வாக்கியங்களைச்  சில கவிதைகளில் பார்க்கலாம். `இவைபோன்று நமது கவிதைகளுக்கு நாமே செய்வினை வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று தோழமையோடு நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. இதில் விதிவிலக்காக நல்ல கவிதைகளும் இங்கேயிருந்து வந்திருக்கின்றன என்ற உண்மையை மறைத்தால், நமது வாயில் கொப்பளம் வந்துவிடும்.

இரண்டாவது வகைமையான நிறுவனம் சாராத இடதுசாரிக் கவிதைகள் ஒப்பீட்டளவில் வீரியமான கவிதைகளாக இருக்கின்றன. அவ்வாறான பல கவிதைகளை, பல கவிஞர்களைத் தமிழில் குறிப்பிட இயலும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா

இந்த வகைமைகளுக்கு வெளியே சுயம்புலிங்கத்தின் கவிதைகள் தனித்த இயல்பைக்கொண்டவையாக இருப்பதே அதன் சிறப்பு. தனது வாசிப்பின் வழியாகப் புரிந்துகொள்ளப்பட்ட மார்க்சிய ஞானத்தில் இருந்தோ அல்லது கட்சிக் கல்வி வாயிலாகப் பெறப்பட்ட நடைமுறை அரசியல் பார்வையில் இருந்தோ, சே குவேரா பனியன் அணியும் வேடிக்கை மனநிலையில் இருந்தோ உருவாகும் எழுத்து அல்ல சுயம்புலிங்கத்தின் எழுத்து. எளிய மக்களின் வாதை மிக்க வாழ்வில் இருந்து துயரத்தின் நீர்மையில் துளிர்ப்பவை இவரது கவிதைகள். அதனாலேயே 80-களின் மிகையுணர்ச்சி மற்றும் பாசாங்கின் துர் நிழலில் இருந்து தப்பிப் பிழைத்த கவிதைகளாக சுயம்புவின் கவிதைகள் இருக்கின்றன.

யதார்த்தத்தைக் கணக்கில் கொள்ளாது வெற்று நம்பிக்கையில் கரகரக்கும் கவிதைகள் அல்ல இவை. அதே சமயத்தில் அவநம்பிக்கையின் சூன்யத்தில் வாசிப்பவனைத் தள்ளிவிடும் கவிதைகளும் அல்ல. புறக்கணிக்கப்பட்ட மக்களது பிணிமிகு வாழ்வும் நோய்மையான அரசியல் சூழலும் அவநம்பிக்கையின் சித்திரங்களாகக் கவிதையில் தீட்டப்பட்டாலும் அந்தச் சித்திரத்தின் ஏதாவதொரு மூலையை நம்பிக்கையின் நிறம்கொண்டு ஒளிரப் பண்ணுகிறார். அவநம்பிக்கையின் சித்தரிப்புகள் வழி செயலற்றத் தன்மைக்கு  இட்டுச்செல்ல இந்தக் கவிதைகள் இடம் தருவதே இல்லை.
 
வயிறு எரிந்து
சொல்லுகிறான்
உழவன்
மழை பெய்தும் கெடுத்தது
மழை பெய்யாமலும் கெடுத்தது

எனத் தொடங்கும் ஒரு கவிதையைக்கூட சுயம்புலிங்கத்தால் இப்படித்தான் முடிக்க இயலுகிறது.

அவன்
நம்பிக்கையோடு விதைக்கிறான்
புழுதியில்.


அவநம்பிக்கையின் நிகழ்காலத்தை நம்பிக்கையின் எதிர்காலத்தை நோக்கி நகர்த்தும் விழைவுகொண்ட கவிதைகளாக இந்தக் கவிதைகளை அடையாளப் படுத்தலாம்.

`யாதும் ஊரே’ போன்ற கற்பிதங்களின் பொதுநீதி சார் பிடிமானங்களில் இருந்து விடுதலையாகி இயல்பில் தனது  நிலம், உணவு, மொழியின் தனித்துவத்தைக் கொண்டாடும் மனநிலையே வட்டாரக் கலைகளுக்கான ஆதாரம். அந்த வகையில் சுயம்புலிங்கத்துக்கு அத்தகு விடுதலையான கலைமனம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

எங்க ஊரு வானம்போல
எங்கேயும் நான் காங்கல
எங்க ஊரு தமிழைப்போல
எங்கேயும் நான் கேக்கல


என்ற வரிகளைச் சொந்த ஊரின் வெற்றுப் பெருமை என்று  ஒருவர் நிராகரிக்கலாம். ஆனால்,  `வேத்து ஊருத் தண்ணியில தாகம் அடங்கல’ என்று ஓர் எளிய உடலின் இயல்பான விழைவைப் பேசும் வரியில் மொத்தக் கவிதையும் வேறு ரூபங்கொள்கிறது. உண்மையில் இந்த இயல்பான எளிய மனநிலையே தமது வெளிப்பாட்டு மொழியாகக் கரிசல் மொழியைத் தேர்வுசெய்திருக்க வேண்டும். திட்டமிட்ட தேர்வு அல்ல இது. அந்த வகையில் கரிசல் மொழியே சுயம்புலிங்கத்துக்கும் அவரது கவிதைகளுக்குமான ஜீவ ஆதாரமாக இருக்கிறது. வட்டார மொழியை வம்பாகக் கையாளும், பாவனையான கவிதைகள் அரை பாடி லாரியில் ஏற்றும் அளவு  ஏராளமாகத் தமிழில் செய்யப்பட்டுள்ளன என்பதை இந்த நேரத்தில் சொல்லத்தான் வேண்டும்.

அறிவுஜீவித்தனமாக, பெண்ணியம் மற்றும் தலித்தியம் பேசுகிற கருத்தியலாளர்கள் பல சந்தர்ப்பங்களில் மார்க்சியத்தோடு முரண்படும் போக்கைக் காண இயலும். ஆனால், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் தலித்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அத்தனை உண்மையாக அத்தனை நேர்மையாக மார்க்சியத்தின் அறஉணர்வோடு அணுக முடிகிறது இந்தக் கவிதைகளால்.

கழிப்பிட வசதியற்று தண்டவாளத்தில் அமர நேர்கிற பெண்கள், ரயில் வருகையில் எழுந்து விலகிப் பின் அமரும் வேதனையை ‘மையிருட்டு’ எனும் கவிதை இவ்வாறு பேசுகிறது...

எதுக்கு எதுக்கு எல்லாம்

பெண்

அசிங்கப்படவேண்டியது இருக்கு.


பிணம் எரிகிற சுடுகாட்டுக்கு நேர் தெற்கே இருக்கும் ஒத்தை வீடு பற்றியும், ஊருக்கு வெளியே தள்ளிவைக்கப்பட்டிருக்கும் ஜனங்கள் குறித்தும் விசனம்கொள்ளும் ஒரு கவிதையில், `இந்த மக்களுக்குச் சொந்தமானது செத்த மாடுகள் மட்டுமே’ என்ற வரியின் வர்க்க அரசியலும் `இந்த ஜனங்களை இழிவுபடுத்த என்றே பிறப்பெடுத்தது கக்கூஸ்’ என்ற வரியின் தலித் விடுதலை அரசியலும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கும். அடக்குமுறைகளுக்கு எதிரான சகலவிதமான விடுதலை சக்திகளையும், மார்க்சியம் தனது செட்டைகளின் கீழ்வைத்துப் பேணவேண்டியது அவசியம்தானே.

ஏழ்மையில் உழலும் மக்களின் துயரத்தை, தேர்ந்த புகைப்படக்காரர் ஒருவரால் துல்லியமாகக்  காட்சிப்படுத்த இயலும். இதுபோன்ற வறுமையின் நிழற்படங்களையொத்த ஏராளமான கவிதைகள் சுயம்புலிங்கத்தால் எழுதப்பட்டுள்ளன. எதிரே இருப்பதை மொழியினூடாக வெறுமனே  காட்சிப்படுத்தக் கவிதை எதற்கு? கவிஞன் எதற்கு?

ஆனால், சுயம்புலிங்கத்தின் கவிதைகள் வழி விரியும் காட்சிகள் வாசிப்பவனைத் தொந்தரவுசெய்பவை. அவை நிச்சயமாக வெறும் காட்சிப் பதிவுகள் அல்ல என்பதை வாசிப்பவர் உணர முடியும். சன்னமான பகடியின் வழி, தமது ஆழமான துயரங்களை இறக்கிவைப்பது எளிய மனிதர்களின் வாழ்வியல் சாகசம் ஆகும். இந்தக் கவிதை அத்தகையது.

நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம் வாங்கிக்கொண்டு
ஓடிவிடுவார்கள்.


ஆயுதத்தை அன்பு செய்யும் 80-களின் இடது மனோபாவம் பல கவிதைகளில் காணக்கிடைக்கிறது. ருசிக்க ஒன்று தரலாம்தான்.

முருகனை எனக்குப் பிடிக்கும்
முருகன் சின்னக் குழந்தை
அவன் அழகாக இருக்கிறான்
ஆரோக்கியமாக இருக்கிறான்
ஆயுதத்தோடு இருக்கிறான்
ஆயத்தமாக இருக்கிறான்
முருகன் சின்னக் குழந்தை
முருகனை எனக்குப் பிடிக்கும்
முருகன் ஆர்வமாக இருக்கிறான்
ஆயுதத்தோடு இருக்கிறான்


தவிர ‘மகத்தான தவம்’ என்ற கவிதையில் காத்திருத்தல் வெறுப்பை ஏற்படுத்தினாலும், தான் புரட்சிக்காகக் காத்திருப்பதாக வாக்குமூலம் அளிக்கிறார். லட்சியவாதங்கள் தோற்றுப்போன இந்தத் துர்காலத்தில் இந்த வாக்கியம் பகடி செய்யப்படலாம். ஆனால், இந்த வாக்கியம் உச்சரிக்கப்பட்ட அதன் காலத்துக்கு நேர்மையாக இருந்தது என்பதை யாரும் சந்தேகிக்க இயலாது. காலம் தாண்டி நிற்க முடியவில்லை என்பது கவிதையின் பிரச்னையா என்ன.

கற்பிதங்களில் ஊதிப் பெருக்கப் பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் பிம்பம், துப்பு துலக்குவதில் தமிழகக் காவல் துறையின் பெருமிதம் குறித்த பிம்பம் எனப் பொதுப்புத்திப் பிம்பங்களை உடைக்கும் வேலையை ரசனையாகச் செய்கின்றன இந்தக் கவிதைகள்.

உன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா

கலையும் அரசியலும் இணைந்துவரும் இடங்களில் கவிதை தனது உச்சத்தை அடைகிறது. அப்படியான ஓர் இடம் பெரிய எழுத்து கவிதையில் வருகிறது. கதறக்கதற தனது குழந்தைகளைக் கிணற்றில் எறிந்து கொன்ற நல்லதங்காளின் மீது சினங்கொள்ளும் கவிதை இப்படி முடிகிறது.

தங்கச்சி
வெறுக்கிறேன் நான் உன்னை
உனக்கு இழைக்கப்பட்ட எல்லா அநீதிகளையும்.


கொள்கைகளைக் கைவிட்டு, வெறும் ஓட்டு  அரசியல் செய்யும் கட்சிகளையும் அதன் அரசியல் தலைவர்களையும்கூட விட்டுவைக்கவில்லை இக்கவிதைகள்.

விஷ முட்டைகள்
இலைகளில்
விஷ முட்டைகள்
இலைகளைக் கிள்ளு
ஆழத்தில் புதை.

சூரியனைப் புரட்டு
பார் பார்
சூரியன் பண்ணுகிற
திருட்டுத்தனத்தை
நம் குளத்தில் உள்ள
தண்ணீரையெல்லாம்
வற்றவைத்துக்கொண்டிருக்கிறது
அது

தண்ணீரை
விஞ்ஞான ரீதியில் திருடுகிறது
சூரியன்
விஞ்ஞானத்தை
கையில் எடுப்போம்
சூரியனை
அப்புறப்படுத்துவோம்.


இக்கவிதைகளை உரத்து வாசித்தால் எந்தக் கவிதை எந்தக் கட்சிக்கானது என்பதைப் பாமரனும் விளங்கிக்கொள்வான். மக்கள் கவிஞனுக்கான இடத்தை சுயம்புலிங்கம் இந்த எளிய மொழிதல் வழியாகவே வந்தடைகிறார்.

கவிதை ஆகாமல் வெறும் வாக்கியங்களாக எஞ்சியவை சிலவும் சுயம்புலிங்கத்திடம் இருக்கத்தான் செய்கின்றன. அவை பற்றிய கவலை அவருக்கு இல்லை என்றே தோன்றுகிறது. இங்கு ஒன்றைக் கவனப்படுத்த வேண்டியிருக்கிறது. சமகாலக் கவிதையின் போக்கை நுட்பமாகக் கவனித்து, அனல்பறக்கும் கவிதையியல் விவாதங்களைக் கணக்கில்கொண்டு கலையின் உச்சத்தை அடையும் பாவனையில் எழுதப்படும் கவிதைகள் அல்ல சுயம்புலிங்கத்தின் கவிதைகள். எளிய மனிதர்களின் பிரதிநிதியாக அவர்களது மொழியில், அவர்களது விடுதலைக்கான ஏக்கங்களை, தான் நம்பும் தத்துவத்தின் வழிநின்று பேசுபவையே இந்தக் கவிதைகள். கலைக்குறைவு கொண்டவை என இந்தக் கவிதைகளை யாரேனும் சொல்லலாம். அதற்கு முகாந்திரங்களும் உள்ளன. துயருற்று இருப்பவரிடத்தில் இருக்கவிரும்புகிற பாவனையற்ற கவிதைகள் கலை மதிப்பீடுகளின் எல்லைகளுக்கு வெளியே தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும். சுயம்புலிங்கத்தின் கவிதைகள் அப்படியானவை.

நாடு முழுக்க முதலாளிமார்கள் ஒரு தொண்டையில் பேசும்போது தொழிலாளிகள் நாம் ஏன் பிரிந்து நிற்கிறோம் என்று விசனங்கொள்ளும் இவர் இடதுசாரி இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்கிற அடிமட்டத் தோழனின் விழைவை, `அரசமரம்’ என்ற வேறு ஒரு கவிதையில் அழுத்தமாக முன்வைக்கிறார். தமது பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்க பிரயாசைப்படும் ஒரு தகப்பனின் பிரார்த்தனையை ஒத்த இந்தக் கவிதையோடு நிறைவு செய்யலாம். 
  
அரசமரம்


எங்கள் கிராமத்தில்
கம்யூனிஸ்டுகள்
எண்ணி ஐந்து பேர்
ஐந்து பேரும்
ஒருத்தர் முகத்தை ஒருத்தர்
பார்க்கிறது இல்லை
பேசுகிறது இல்லை
ஐந்து பேரும்
கிராமத்தில் யார்கிட்டேயும்
பேசுகிறது இல்லை
ஆளுக்கு ஒரு கட்சி
எல்லாரும் தலைவர்கள்
இந்த நல்ல பிள்ளைகள்
அரசமரத்து நிழலில் கூடி
யோசிக்க வேண்டும்
ஒரு தொண்டையில்
பேசவேண்டும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism