
ஆறுவதற்குள் காபியைக் குடி
நமக்கு மெல்ல அறிவுறுத்தப்படுகிறது
உண்மையில் அது காபியையா குறிக்கிறது
நம் அவசரப் பணியொன்றை
மறைமுகமாகத் துரிதப்படுத்துகிறது
ஆறுவதற்குள் காபியைக் குடி
வீட்டுப்பாடம் செய்கிற
சிறுமகளிடம் சொல்லும்போது
தலைகோதி முறுவலிக்கும்
ஓர் அன்பு
குதித்தோடிப் போய் அவள் முன் நிற்கிறது
ஆறுவதற்குள் காபியைக் குடி
மந்திரச் சொல்
ஒரு செல்வந்தன் முன் உச்சரிக்கப்படுகையில்
பிறகொருபோதும்
அள்ளக் குறையாச் செல்வம்
அவன் மீது கொட்டித் தீர்க்கிறது
ஆறுவதற்குள் காபியைக் குடி
ஒருவேளை
கண்டிப்பான ராணுவ உத்தரவெனில்
ஒரு துப்பாக்கிக் குழலின் முன்
சில வெற்றுடல்கள் சுருண்டு விழுகின்றன
ஆறுவதற்குள் காபியைக் குடி எனும் வாக்கியம்
ஒரு பைத்தியம் முன்பாக மட்டும்
எவராலும்
சொல்லப்படாமலே துண்டாகி விழுகிறது
கைத்த புன்னகையுடன்
தன் கலங்கிய நினைவின் மடியிலிட்டு
அவ் வாக்கியத்தை
திரும்பத் திரும்ப நீவிக் கொடுக்கின்றது
அப்பைத்தியம்...