Published:Updated:

உழைப்பின் உன்னதம்!

உழைப்பின் உன்னதம்!
பிரீமியம் ஸ்டோரி
உழைப்பின் உன்னதம்!

எம்.லோகேஷ் மதன், ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

உழைப்பின் உன்னதம்!

எம்.லோகேஷ் மதன், ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

Published:Updated:
உழைப்பின் உன்னதம்!
பிரீமியம் ஸ்டோரி
உழைப்பின் உன்னதம்!
உழைப்பின் உன்னதம்!

த்தினபுரி நாட்டில், சந்திரன் என்ற இளைஞன் இருந்தான். உயரம் குறைவான அவனுக்குப் பாட்டி மட்டுமே இருந்தார். ஊரைவிட்டு ஒதுங்கி, தனியே இருந்தவாறு அவனுக்குத் தேவையானவற்றைப் பாட்டியே செய்துவந்தார்.

எத்தனை நாளைக்குத்தான் அப்படிச் செய்ய முடியும்? பாட்டிக்கு மிகவும் வயதாகி, படுக்கையில் விழுந்தார்.  பேரனை அழைத்து, "சந்திரா, ஊரார் கிண்டலால் உன் மனம் வருந்தக் கூடாது என இப்படி உன்னைத் தனியாகவே வளர்த்துவிட்டேன். அது, பெரிய தவறு என இப்போது புரிகிறது. என் உடம்பில் தெம்பு இல்லை. இனி, நீதான் உனக்கான வாழ்வைத் தேடிக்கொள்ள வேண்டும்'' என்றார்.

"கவலைப்படாதீங்க பாட்டி, உங்களையும் நான் காப்பாற்றுவேன்" எனச் சொல்லிவிட்டு, வேலை தேடிக் கிளம்பினான் சந்திரன்.

ஆனால், அவனது உருவத்தைப் பார்த்து யாரும் வேலை கொடுக்கவில்லை. மன்னனைக் கண்டு உதவிபெற நினைத்து அரண்மனைக்குச் சென்றவனை, காவலாளிகள் தடுத்தனர்.

"இங்கே உனக்கு என்ன வேலை கிடைக்கும்? எங்களைப் போல போர்ப் பயிற்சிபெற்று வீரனாக முடியாது. சமையல் செய்யும் இடத்தில் சேர்க்கலாம் என்றால், கரண்டி உயரம்கூட இல்லை. போ, போய்... வித்தைகாட்டும் கும்பலில் சேர்ந்துகொள். நாலு காசு கிடைக்கும்" எனக் கேலி பேசி விரட்டினார்கள்.

சந்திரன், சோகத்துடன் கிளம்பினான். வரும் வழியில்,  சந்தையில் ஒருவர் குதிரைகளை விற்றுக்கொண்டிருந்தார். அதில், ஒரு குள்ளமான குதிரையைப் பார்த்தான். "ஐயா, இது விற்பனைக்கா? எனக்குக் கொடுக்க முடியுமா? ஆனால், பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தர முடியும்'' என்றான்.

"ஒரு வருஷமாக இதைத் தினமும் இங்கே அழைத்து வருகிறேன். ஆனால், யாரும் வாங்குவதாக இல்லை. இதற்குத் தீனி போட்டும் மாளவில்லை. இன்று, கோயில் வாசலில் விட்டுவிடலாம் என இருந்தேன். நீ எடுத்துக்கொள், முடிந்தபோது பணத்தைக் கொடு" என்றார் குதிரைக்காரர்.

சந்திரன் சந்தோஷமாக அதைப் பெற்றுக்கொண்டான். அந்தக் குதிரையின் உயரத்துக்கு ஏற்ப ஒரு வண்டியையும் செய்துகொண்டான். பிறகு, பெரிய பெரிய பழத் தோட்டம் வைத்திருந்தவர்களிடம் சென்றான்.

"ஐயா, எனக்குக் கொஞ்சம் பழம் கொடுங்கள். அதைச் சந்தையில் விற்று வருகிறேன். லாபத்தில் ஒரு பங்கை எனக்குக் கொடுங்கள்'' என்றான்.

சிலர் கொடுத்தார்கள். சந்திரன், தினமும் பழங்களைத் தன் சிறிய வண்டியில் ஏற்றிக்கொண்டு சந்தைக்குச் செல்வான்.

"ஐயா பாருங்க அம்மா பாருங்க

அழகுப் பழங்களைப் பாருங்க

கொய்யா, வாழை, மாம்பழம் எல்லாம்

சுவையில் சொக்கவைக்கும் வாங்குங்க."

என்று ஆடிப்பாடி விற்க ஆரம்பித்தான். சந்திரனின் குரல் வளமும் உற்சாகமாகத் துள்ளி ஆடும் அழகையும் கண்டு மக்கள் அங்கே கூடினார்கள். குள்ளக் குதிரையும் அந்த வண்டியும் பல குழந்தைகளை ஈர்த்தன. அவன் சொன்ன விலைக்கு, அதிகப் பேரம் பேசாமல் வாங்கிச் சென்றார்கள். நிறைய லாபம் கிடைத்தது.

ஒரு நாள், அரசரின் சின்னஞ்சிறு மகள், பல்லக்கில் சென்றபோது இதைக் கவனித்தாள். சந்திரனிடம் பழங்களை வாங்கிக்கொண்டாள். அரண்மனைக்குச் சென்றவுடன் தந்தையிடம், "அந்த மனிதரும் குதிரையும் நம் அரண்மனையிலேயே இருந்தால், தினமும் அவர் ஆடிப்பாடுவதை ரசிக்கலாம்'' என்றாள்.

"யாருப்பா அந்தக் குள்ள மனிதர்? உடனே அழைத்து வாருங்கள்" எனக் காவலர்களிடம் கட்டளையிட்டார் அரசர்.

காவலர்கள் சந்திரனைத் தேடி சந்தைக்குச் சென்றார்கள். அவன், வீட்டுக்குச் சென்றுவிட்டான் என அறிந்து, அங்கே சென்றார்கள். தனது பாட்டிக்கு உணவு அளித்துக் கொண்டிருந்தவனிடம், "அரசர் உன்னை உடனே வரச் சொன்னார். கிளம்பு" என்றார்கள்.

"மன்னிக்கவும். என் பாட்டியைக் கவனித்துக்கொள்ள வேண்டும். காலையில் வேலைகளை முடித்துவிட்டு வருவதாக அரசரிடம் சொல்லுங்கள்'' என்றான் சந்திரன்.

காவலர்கள் அரசரிடம் சென்று சொல்ல, அவருக்குக் கோபம் உண்டானது. "அவனைக் கட்டி இழுத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார்.

இதைக் கேட்ட அவரது மகள், "அப்பா, அவரை கட்டாயப்படுத்தி இழுத்து வருவது தவறு. நாளையே வரட்டும்'' என்றாள்.

உழைப்பின் உன்னதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மறுநாள் அரண்மனைக்கு வந்த சந்திரனிடம், "இன்று முதல் நீ சந்தையில் ஆடிப்பாடி பழம் விற்று கஷ்டப்பட வேண்டாம். தினமும் என் மகள் முன் ஆடிப்பாடி அவளை சந்தோஷப்படுத்து. நீ அரண்மனையிலேயே தங்கிக்கொள்ளலாம். அனைத்து வசதிகளும் செய்து தருகிறேன்" என்றார்.

அதற்கு சந்திரன், "அரசே, தயவுசெய்து மன்னிக்கவும். உங்கள் மகளை மட்டுமல்ல, அவளைப் போன்ற எல்லாக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் ஆடிப்பாடவே விரும்புகிறேன். ஆனால், உழைப்பின் ஒரு பகுதியாகவே இதைச் செய்கிறேன். உங்கள் மகள் பாடலைக் கேட்க விரும்பினால், சந்தைக்கு வரச் சொல்லுங்கள். அல்லது நான் ஓய்வாக இருக்கும்போது இங்கே வருகிறேன். இதற்கு எந்தவிதச் சன்மானமும் வேண்டாம். உழைத்துப் பிழைப்பதையே நான் விரும்புகிறேன். உருவத்தில் குள்ளமாக இருப்பதால் என்னை ஒதுக்கியவர்கள், என்னாலும் உழைத்துப் பிழைக்க முடியும் என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும். அரண்மனையில் சொகுசான கோமாளியாக இருக்க விருப்பம் இல்லை'' என்றான்.

அதைக் கேட்ட அரசர், "சபாஷ் சந்திரா, உன்னைப் போலவே ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் இருந்தால், நாட்டில் வறுமை என்பதே இருக்காது. உன் பாடலைக் கேட்க நினைக்கும்போது, நாங்களே வருகிறோம். உனக்கு எப்போது என்ன உதவி தேவைப்பட்டாலும் நீ இங்கே வரலாம்'' என்றார்.

நன்றி சொல்லிவிட்டு, கம்பீரமாகக் கிளம்பினான் சந்திரன்.