Published:Updated:

நிலமதி - சிறுகதை

சிறுகதை: அகரமுதல்வன், ஓவியங்கள்: ஸ்யாம்

நிலமதி - சிறுகதை

நெடுநேரம் அவளோடு இருந்த நாளாக நேற்று இருந்தது. பருவத்தின் வசந்த நடை காற்றில் இருந்து கழன்று, எம் இருவரிலும் விழித்துக்கொண்டதாகக் கதைத்துக் கொண்டிருந்தோம். தான்தோன்றியாகவே மழைத்தூறலில் நனைவதைப்போல அவளது கண்கள் அசைந்தன. அவளின் ஜீவ ஆற்றல்மிக்க விரல்களை அளந்து கொண்டிருந்தேன். அந்தக் கணங்கள், என்னை இப்போதும் திகைக்கச் செய்கின்றன. அலங்கோலமான வாழ்வில் அசையும் ஆகாயத்தில் எழுந்து பறக்கும் சாம்பல் நிறப் புறாக்களைப்போல் அல்லவா இருந்திருக்கிறோம்.

கடைசிச் சந்திப்பின் இறுதியில், நிலமதி தந்த பொதிக்குள் பலகாரங்களும் இரண்டு ஷேர்ட்களும் இருந்தன. இருவரின் பிரிவுக் களைப்பு, அந்தப் பொதியில் அரூபமாகக் கனத்துக் கிடக்கிறது. நான் களத்தில் இருந்து விடுமுறையில் செல்கிறபோது எல்லாம் அவளைச் சந்திப்பேன். இந்தச் சந்திப்பு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. அவளின் கண்களில் வெளிச்சமிட்ட கண்ணீர், என்னை வதைக்கிறது.

நாம் பிரிந்திருக்க வேண்டும் என்பது காலத்தின் வதை. அது அவளுக்கு விளங்காமல் இல்லை. `எனது இறவாமை பற்றி எல்லாம் கடவுளிடம் கண்ணீர்விட்டுக் கேட்காதே' என எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். நாம் வாழும் நிலத்தில் இறப்பதற்கு அஞ்சுவது... வாழ்வதற்கு சலிப்பதுபோல. ``நிலமதி, நான் சண்டைக் களத்தில் நிற்கிறேன். நீ என்னை நினைத்து யோசியாதே. நான் களத்தில் வீரச்சாவு அடைந்துவிடுவேனோ என எண்ணும் நீ களைப்படைந்திருப்பது எனக்குக் கவலையாகவும் அவமதிப்பாகவும் இருக்கிறது. நான் இயக்கத்தில்தான் இருக்கிறேன். நீ போராளியை நேசிப்பவள். சாவையும் காயங்களையும் நினைத்து அழாதே'' எனச் சொன்னேன்.

``இப்பிடிக் கதைக்க வேண்டாம்'' என்று வாயில் அடித்தாள்.

நான் அவளின் கன்னங்களை முத்தமிட்டேன். கண்ணீர் நெரிந்தது. அது மோசமான வானிலைக் காலத்தில் மொட்டவிழும் பூவைப் போலானது. வெட்கத்தில் அவள் தலைமுடி கலைந்திருந்த சமயம் கடலின் அலை என்னை இழுத்ததுபோல இருந்தது. நாம் முத்தங்களை கன்னங்களில் பரிமாறிக்கொண்டிருக்கையில், போர் விமானங்கள் காற்றைக் கிழித்து இரைந்தன. சாவுக்கு எனத் தனியாக விடப்பட்ட போர் விமானங்கள், ஆளுயரக் குண்டுகளைக் காவிக்கொண்டு ஆகாயவெளியில் பட்சிகளைப்போலத் திரிந்தன. நிலமதி, சிதைவுற்ற உயிரியின் பிசுபிசுப்பைப்போல நடுங்கி என் கைகளைப் பற்றினாள்.
``முகிலன், எங்களுக்கு என்றொரு நிம்மதி இந்தப் பூமியில் இல்லையா? நாம் இப்படித்தான் எல்லாவற்றுக்கும் இடையில் வாழவேண்டுமா?'' நிலமதியின் அழுகை தோய்ந்த இந்தக் கேள்விகள், சபித்த வாழ்வின் மீதே கரைந்தன.

அவளை அரவணைத்தேன். பதில்கள் இல்லாத கேள்விகளுக்கு, அனுதாபம் நெருக்கமாகிவிடுகிறது. எனக்கும் நிலமதிக்கும் மேல் அந்தியில் அசைந்தபடி காலம் ஓட்டிய நிழல்கள் தீர்ந்துபோயின. என்னை வழியனுப்பும் நேரம் நிலமதியின் முன்னே காத்திருந்தது. இருளத் தொடங்கிய பூமியில் இன்னும் இருவரும் இருந்து கதைக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்.
``வெளிக்கிடுவம், நல்லாய் நேரம் போய்விட்டது.''

``இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்  முகிலன்.''

இருட்டிய வானத்தில் சிறுசிறு காயங்களைப்போல நட்சத்திரங்கள் முந்திக்கொண்டு மின்னின. நாம் இருந்த மரத்தின் கிளைகளில் பறவைகள் கூடின. பூமியின் படுமோசமான அமைதிச் சூழலை அச்சுறுத்துகிறது. இரவின் நெடுமூச்சு, விசித்திரமான சத்தத்தோடு காற்றில் கலக்கிறது. நிலமதியின் மூச்சுச் சுடரைப்போல என்னில் படர இந்த இரவை மேன்மைப்படுத்தும்விதமாக நான் அவளை முத்தமிட்டேன். கண்ணீர் ததும்பித் ததும்பி முத்தமிடும் நிலமதியை, இந்தப் பூமியின் இருட்டு உகுத்துக் கொண்டது.

நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் இருளுக்குள் நிலமதி என்னைச் சேமித்து வைக்கிறாள். ஒற்றையடிப் பாதையில் பாவாடையின் மணலைத் தட்டிவிட்டு என்னைச் சேர்த்து அணைத்தபடி நடந்தாள். இந்தச் சந்திப்பின் பின்னால் நிலமதியின் பாதங்களின் ஈரம் ஈச்சமரங்கள் நிறைந்து கிடந்த மணல்களில் பசலையாகப் பூத்திருக்கும். அவளின் கொஞ்சல் வழியும் கதைகளின் அசைவுகளும் என் அடிவயிற்றில் குளிர்ந்தன. அவளின் கன்னங்கள் மஞ்சள் பட்டைபோல மின்னியது. விழிகளை பெருமூச்சு பெருகிப் பரவி நிறைத்தது.

``நான் சின்னப்பிள்ளைபோல அடம்பிடிச்சுட்டேன் முகிலன். மன்னிச்சுக்கோங்க.''

``நிலமதி, உனக்கு எல்லாவற்றுக்கும் இடம் இருக்கிறது. இப்படி என்னை நீ ஆராதிக்கும் நினைவுகள், இனிய தோற்றத்தோடு என்னில் நிலைபெற்றிருக்கின்றன. நாம் இருந்து கதைத்த இடத்தில் காயாகிக்கிடக்கும் ஈச்சைகள் கனியாகிறபோது அதில் உனது முத்தங்கள் தேன்களாகக் கிடக்கும்.''

``முகிலன், அடுத்த விடுமுறை எப்ப வரும்?''

``என்ன கேள்வி இது. சண்டைக்களத்தில் இருந்து கிடைக்கும் விடுமுறையை திகதி குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? நான் வருகிறபொழுது சந்திக்கிறேன். என்னைப் பற்றி யோசியாதையும். நான் செத்தால் வீரச்சாவு!''

பிரியும் வேளையில் இருவர் கண்களிலும் இலையுதிர்காலம் காட்சியளித்தது. பெருமூச்செறிந்து ஒரு கானத்தை இசைக்கும் காட்டுக்குருவியின் சிறகைப்போல என் உள்ளத்தில் வேதனை. அவளின் பார்வை, துயரத்தின் திரளின் இடையே ஒரு கனவைக் காணும் குழந்தையைப்போல் இருந்தது. அது தனது கனவின் திடுக்கிடச் செய்யும் நிமிடங்களை என்னிடம் இருந்து மறைக்கிறது. நாம் சன்னங்களும் குண்டுகளும் வெடிக்கும் முற்றங்களில் பூக்களைப் பரிமாறும் காதலர்களானது கொடூரத்தின் நிழல் பதித்த விதி. நிலமதி நாம் புயல் காற்றின் வெளியில் தென்றலைத் தேடிக்கொள்கிறோம். வாழ்வின் அகமும் புறமும் ரத்தமும் காயமும் ஒளிர்கின்றன. எமது நித்தியத்தில் சாவு பூக்களைப்போல வள்ளலாகவே விளங்குகிறது.

``கோடைக்காலத்தின் சருகுகளைப்போல நான் போர்க்களத்தின் புகைக்குள் சுழண்டுகொண்டிருக்கிறேன். உனது சகல சஞ்சலங்களின் ஆழ்ந்த அச்சத்தை என்னால் உணர முடிகிறது. நான் இப்போது உன்னிடம் இருந்து வானத்தின் கீழே பிரிகிறேன். நாம் எல்லாவற்றுக்குமாக சாவோடு வாழவேண்டியவர்கள். நாளை விடியலின் வானத்தின் கீழே நான் போர்க்களத்தில் துவக்கோடு நிற்பேன்'' எனச் சொல்லிப் பிரிந்தேன்.

மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.

போர்க்களத்தின் அமைதியை ஒரு போராளி விரும்பாததைப்போலவே அவள் எனது பிரிவை விரும்ப மாட்டாள். தொடர்ந்து நான்கு தினங்களாக நடந்த சண்டையில், என்னோடு ஒரே காவலர் அணியில் நின்ற இரண்டு பேர் வீரச்சாவு. பூமியின் நித்திரைக்கு எமது மரணங்கள் கனவு. எனது கையைப் பற்றியிருந்த அவள் விரல்களில் கசிந்த அன்பின் சங்கதிகள், விரியன்பாம்பைப் போல என்னைக் கொத்துகின்றன. எனது விரல்கள், ஐந்தடி பதுங்குகுழிக்குள் துவக்கின் டிரிகரில் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. சன்னங்கள் வழியே நம் மானத்தையும் நிலத்தையும் தக்கவைத்துக்கொண்டிருக்கும் என்னை, அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள். நான் சாவுக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட உயிரைச் சுமக்கும் உடலைக் கொண்டவன். அவள் உயிரும் என்னிடமே இருக்கிறது. இவற்றை எல்லாம் சரிபார்க்கும் வகையில் ஒவ்வொரு விடியலிலும் வெடிகுண்டின் பேரோசை தன்னை நிலைப்படுத்துகிறது.

நேற்றைக்கு நள்ளிரவு கடுமையான மோதல். எமது தடுப்பணைகளை சுக்குநூறாக்கி, ராணுவம் ஒரு முன்நகர்வை மேற்கொண்டிருந்தது. போராளிகள் முன்னரங்கில் நின்று கடுமையாகச் சண்டை செய்தார்கள். நிலத்தின் வெளி முழுவதும் குண்டுகள் மின்மினிப்பூச்சி களாகப் பறந்துதிரிந்தன. நம்மைக் காப்பாற்றிய மரங்கள் முறிந்து வீழ்ந்தன. துவக்குகளைப்போல நள்ளிரவும் யுத்தத்துக்கானதே.

ஆயுதத்தின் சத்தம் வெறித்தனமான அத்தியாயங்களைக்கொண்டது. நிலமதியின் நினைவுகள் என்னைச் சுற்றிவளைப்பதைப்போல நள்ளிரவு எங்கும் குண்டுகள் சுற்றிவளைத்திருந்தன. சோவெனப் பெய்யும் மழையாய் எறிகணைகள். போராளிகளின் குருதிகள் வெள்ளம். பின்வாங்கத் தொடங்கினோம். நான், எனது பதுங்குகுழிக்குள் நிலமதி வாங்கித் தந்த ஆடைகளையும் சுட்டுத் தந்த பலகாரங்களையும் கைவிட்டு பின்வாங்கினேன். இது என்றென்றைக்கும் நான் வேதனைப்படப் போகிற இழப்பு. குருதி இழத்தல், உயிர் துறத்தல் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டிருக்கிறேன். ஆனால், இதைக் கைவிட்டிருக்கக் கூடாது. நாட்டைக் காப்பதைப்போல காதலின் பரிசுகளையும் போராளி காக்கவேண்டும்.

என்னிடம் இப்போது அசாத்தியமான கவலை குடிகொண்டுவிட்டது. நிலமதியின் கைகளைப் பற்றி முத்தமிட்டு, `நீ வாங்கித் தந்த ஆடைகளை நான் அணிந்துகொள்ளாமல் களத்தில் கைவிட்டுவிட்டேன்' எனச் சொல்லவேண்டும். முதலில் காய்ந்த தென்னம்பாளையைப்போல செல்லக் கோபத்தில் எரிந்து சிவப்புச் செம்பருத்தியாக விரிந்து என்னை முத்தமிடுகிற தருணத்தில்தான் பூமியின் எல்லா இழப்புகளும் ஈடுசெய்யப்படும்.

நான் விடுமுறையில் செல்ல வாய்ப்பு கிடைக்கும் எனில், அவளிடம் சொல்லிவிடலாம். சிலவேளைகளில் நான் வீரச்சாவு அடைந்துவிட்டால்? என்னை என்னால் உணர முடியவில்லை. சிதிலங்களின் சொற்றொடரைப்போல என் பெயரே எனக்குக் கேட்கிறது. நான் மரணத்தின் கடல் நடுவே நீச்சலற்ற உயிர். அடங்கிய யுத்தச் சத்தங்கள் தற்காலிகமானவை. மெளனத்துக்கு மகிமை உண்டு என நான் நம்புவதற்கு இல்லை. எனக்குள் எந்த மெளனங்களும் இல்லை. முறிந்து வீழ்ந்த மரங்களுக்குள் நசிபட்டுக் கீச்சிடும் குருவிக்குஞ்சுகளைப் போல என்னை எது இவ்வாறு நசிக்கிறது. என்னை நினைத்து அழுது வடியும் அவளின் திடுக்கிடும் கணங்கள் என்னை உலுக்குகின்றன. அவளின் பிம்பம் ஸ்னைப்பர் ஒளியைப்போல என் மீது படர்கிறது.

வானத்தில் சூரியன் சிவப்பாகச் சரிகிறான். நான் கிடைத்திருக்கும் ஓய்வில் எதையாவது உண்டு பசியாற வேண்டும். நாம் பின்வாங்கிவிட்டோம். இன்றைய இரவு மீண்டும் களத்தில் தணல் பறக்கும். இருளத் தொடங்குவது பூமிதானே தவிர, நம் வாழ்வு அல்ல. எதிரிகள் களத்தில் அணி மாறுகிறார்கள். உலங்குவானூர்தியின் சத்தம் அதைக் காட்டித் தருகிறது. யுத்தப் பேரிகையின் முன்னணி இசை இது. என்னோடு மூன்று போராளிகள் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் கண்களில் அவ்வளவும் வெளிச்சம் நிரம்பிக்கிடக்கிறது. இது துணிச்சலின் மினுமினுப்பு.

நிலமதி - சிறுகதை

``என்னோட பேர் முகிலன்.''

``உங்கட பேர் என்ன?''

``கருமுகிலன்.''

``வானரசன்.''

``கனல்மாறன்.''

``வேற சண்டையில நிண்டு இருக்கிறீங்களோ?''

``நான் மட்டும்தான் அண்ணா புதுசு. இவங்கள் இரண்டு பேரும் மன்னாரில் இருந்து சண்டையில்தான் நிக்கிறாங்கள்'' என்றான்  கனல்மாறன்.

``நான் சும்மாதான் கேட்டனான். தெரிஞ்சு வெச்சிருக்கிறது நல்லம்தானே. கருமுகிலன், நீங்கள் இறுக்கமாக நிண்டு சண்டை செய்விங்கள் எனக் கேள்விப்பட்டனான். ஆர்மி முன் நகர்வான் என்று தெரியுது. ஒரு சின்னச் சண்டையை இரவுக்கு செய்வான் என நினைக்கிறம். வேவுத் தகவல் அப்படித்தான் கிடைச்சிருக்குது. ஒரு அடி பின்னுக்குப் போகக் கூடாது. நிண்டு சண்டை செய்வம்'' எனச் சொன்னேன்.

அது அப்படித்தான் நிகழ்ந்தது. ஆனால் போர் விமானங்களில் இருந்து தொடங்கியது. முன்னணி அரங்கில் எம்மை இலக்குவைத்து நான்கு போர்விமானங்கள், ஆளுயரக் குண்டுகளால் தாக்குதல் நிகழ்த்தின. இரவு ஆயுதத்தின் அராஜகத்தில் பிளவுண்டு பிளவுண்டு பக்கங்களாகப் பறந்து சிதைந்தன. நிலத்தின் ஜீவிதம் விறைத்து இறக்கும்படியாய் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. பதுங்குகுழிக்குள் துவக்குகளை நெஞ்சோடு அணைத்தபடி நானும் எனது அணியினரும் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். போர் விமானங்களின் தாக்குதலில் இருந்து நாம் மீள்வதற்கும் நிலைகொள்வதற்கும் முன்னரே எதிரியின் துப்பாக்கிகள் இயங்கத்தொடங்கின. நேற்றைக்கு எமது பின்வாங்கல், எதிரிக்கு ஒரு வலிமையைத் தந்திருப்பதாக நான் உணர்ந்தேன். சன்னங்கள், காற்றின் வெளியில் மோதத் தொடங்கின. எமது துவக்குகள் ஒரு லயத்தோடு எப்போதும் இயங்கக்கூடியவை. பயத்தில் கண்களை மூடியபடி இரவில் நடந்து போகும் சிறுவனைப்போல துவக்கினை இயக்க முடியாது. தாக்குதல் வரும் திசை நோக்கி எமது ஒட்டுமொத்த சூடுகளும் செல்லும். எறிகணைகள் எரிந்தபடி நிலத்தில் வீழ்ந்தன. போராளிகள் காயமடைவது களத்தின் கிழக்கில் சூரிய உதயம். மோதல், தன் அகண்ட வாயைத் திறக்கத் தொடங்கியது. இருளின் எந்தத் தடயமும் பூமியில் இல்லாததைப்போல வெளிச்சம் குண்டுகளின் வெடிப்பில் இருந்து தெறித்தது.

போராளிகள், குருதி வழிய வழிய சண்டையிட்டபடியிருக்கிறார்கள். குருதியை மிதித்தபடி காயமடையாத போராளிகள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். நான் கட்டளைகளை இடுகிறேன். முன் நகர்கிறேன். மொட்டைக் கத்தியால் வெட்டப்பட்ட வாழைமரத்தைப்போல வானரசன் கழுத்தறுந்து களம் வீழ்ந்தான். அவனை, சாப்பாட்டுக் கோப்பை அளவிலான குண்டுச்சிதறல் கொன்றது. அவன் வீழவும் நான் நிமிர்ந்து பார்க்கவும் நடுவில் நிலமதியின் நடுக்கம் என்னைத் தொற்றியது. அவ்விடம் விட்டு முன் நகர்ந்தேன். இப்படித்தான் நம் வாழ்க்கை உடலங்களைக் கடக்கிறது. காயங்கள் நிரம்பிவிட்டன.

எதிரிகள் ஒரு பக்கம் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றனர். போராளிகள் களம் வீழ்ந்தபடியும் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். `இழத்தலின் வலி களத்தில் தெரியும். அடி அடி விடாதே!' என்ற கட்டளைகள் சன்னங்களைப் போல வந்துகொண்டிருக்கின்றன. யுத்தத்தின் பெருத்த கால்கள் தூக்கி நடக்கும் பாவனையோடு எதிரியின் டாங்கிகள் நகர்கின்றன. ஓயாத குண்டுமழை. மழை, இந்தப் பூமியை நனைக்கும் சொல்; எம்மைக் கொல்லும் சொல்.

எரியும் நிலத்தை தீயாகக் கடக்கிறோம். முன் நகர்கிறோம். கைவிடப்பட்டுப் பின்வாங்கிய இடத்தை அடைகிறோம். சொற்ப நேரத்தில் அதையும் தாண்டி இடங்களை மீட்கிறோம். `இதோ இதோ பின்வாங்கும் டாங்கிகளின் சத்தத்தைக் கேளுங்கள்' என, காற்று இதமாய் காதுக்குள் செல்கிறது. நான் களத்தில் முன்னேறுகிறேன். ஒரு மரத்தின் காப்போடு நின்று சண்டையிடுகிறேன். `கருமுகிலன், களம் வீழ்ந்தான்' என்கிற தகவல் கிடைக்கிறது. வாழ்வும் சாவும் தகவலால் நிரம்பியது.

கைவிடப்பட்ட பதுங்குகுழியை நோக்கி முன்னேறுகிறேன். அதற்குள்தான் நிலமதியின் கனத்துப்போன பிரிவு பலகாரமுமாய் சட்டையுமாய் கிடக்கிறது? அது எதிரிகளால் கைப்பற்றப்பட்டிருக்கும். என்னை இந்த நிலை அவமதிக்கிறது. நான் எனது காதலின் பரிசை எதிரியிடம் இழந்துவிட்டேன். யுத்தத்தின் தகிப்பு ஒன்றாய்க் கூடுகிறது. போர்விமானங்கள் திசை மீறி தாக்குதலைத் தொடுக்கின்றன.

நிலமதி - சிறுகதை

போராளிகளின் துவக்குகள், உதிரத்தின் பேரண்டத்தில் இயங்கிக் கொண்டேயிருந்தன. எதிரியின் சடலங்கள் கருகிக் கிடக்கின்றன. முன்னேறிக்கொண்டிருக்கும் எம் கால்கள் ரத்தத்துள் புதைகின்றன.

ஒரு மரத்தின் அருகே காப்பெடுத்து துவக்கை இயக்கியபடி இருக்கிறேன். என் வலது கண்ணின் பக்கவாட்டில் சிறு கல்லுப் பட்டதைப்போல உணர்ச்சி. மண் துகள்கள் பட்டிருக்கும். விறுவிறுத்தது. ரத்தமா... கண்ணீரா? கண்ணீர் சிவக்காது, ரத்தம்தான். பூமி, குண்டுகளால் பிரகாசித்து எரியும்போது இருட்டியது. என் கண்கள் மட்டும் இருள் குவித்தது. துவக்கை நெஞ்சோடு உயிராய் அணைத்தேன். என் கைகள் சோர்ந்து மூச்சு சிதையும் பொழுதில் ரத்தத்தில் தத்தளித்தேன். என்னை நிலமதியாய் மணல்கள் ஒட்டிக்கொண்டன. அவள் வாங்கித் தந்த ஆடைகளையும் சுட்டுத் தந்த பலகாரங்களையும் கைவிட்டதுபோலவே என்னையும் களத்தில் கைவிட்டேன். நிலமதியின் உருவம் பிறழ்ந்து அக்கினியாய் என் வித்துடலில் படர யுத்தம் உடைந்து பெருத்தது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு